Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, April 17, 2021

அல் குர்ஆன்

 "வன்முறையற்ற சமூகம் மலர்ந்து

நன்முறையில் வாழ்வதற்கு வழிகாட்ட வந்த‌

நான்மறைகள் தந்த வல்ல நாயனின் இறுதி

வான்மறைதான் இந்தத் திருக்குர்ஆன்"


"சட்ட விளக்கங்களும் 

திட்ட நுணுக்கங்களும் நிறைந்த 

பெட்டகம் எனினும் இது ஒரு

சட்டப் புத்தகமல்ல‌"


"இது போன்ற ஒரு அத்தியாயம்

இல்லையில்லை ஒரு வாக்கியம் 

அமைக்குமாறு அரபிக் கவிஞர்களுக்கு

அறைகூவல் விடுத்த அல்குர்ஆன் 

ஒரு கவிதைப் புத்தகமல்ல‌"


"வானம் பூமி அண்ட சராசரங்கள் மற்றும்

நிற்கும் பறக்கும் நடக்கும் ஊர்ந்தும் 

நீந்தியும் செல்லும் அனைத்து உயிர்களின்

படைப்பு பற்றி பறை சாற்றும் இது

விஞ்ஞானப் புத்தகமல்ல‌"


"முன்பே வாழ்ந்து மறைந்த‌

முன்னோர்களின் முடிவையும்

தூதர்களின் பணியையும் 

அவர்களின் துணிவையும்

சொல்லும் இம் மறை ஒரு

வரலாற்றுப் புத்தகமுமல்ல‌"


"பைத்தியத்திற்கும் வைத்தியம்

செய்யும் வார்த்தைகள் கொண்ட 

நோயையும் பேயையும் ஓட விரட்டும்

அற்புதங்கள் நிறைந்த அல்குர்ஆன்

மருத்துவப் புத்தகமுமல்ல‌"


"மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும்

புனிதப் படுத்திய நல்ல வம்சங்களாக 

இம்மையிலும் மறுமையிலும்

செம்மையாக வாழ்ந்து ஜெயிக்க‌

நன்மைகள் பெருக்கி திண்மைகள் போக்கி

நல்வாழ்வு நாம் காண நாயன் தந்த‌

திருமறைதான் அருள்மறை அல் குர்ஆன்"


"ஓதுக என்று உரத்துச் சொல்லி

ஒழுக்கம் போதிக்கும் அல்குர்ஆன்

மாக்களை மக்களாக்க 

மாட்டிலிருந்து ஆரம்பித்து 

மனிதர்களில் முடிகின்றன அம்

மாமறையின் அத்தியாயங்கள்"


"வஹீயின் பளுவை ..

மலைகூட‌த் தாங்காது 

என்கின்ற குர்ஆனை 

மனிதத் தலை வழியே 

நெஞ்சத்தில் இறக்கி வைத்த 

இறைவன் பரிசுத்தமானவன்"


Wednesday, July 05, 2017

போகுதே ... போகுதே ...



தனக்கென்று எதுவுமில்லாததாலோ ...
அல்லது
நிரந்தரமாக விட்டுச் செல்லாததாலோ ...

ம்மை விட்டு விரைந்தோடும்
எல்லாவற்றையும் ரசிக்கிறது மனசு

... இரயில் பயணங்களில் ...


உயிர் பிரியும் போதும் ..
இப்படித்தான் இருக்குமென‌
எப்படிச் சொல்ல முடியும்

கண்டதையும் நேசிக்கிறோம்
கொண்டதும் ஏராளம்

நம்மை விட்டுப் பிரிகின்றவற்றை
நேசிப்பதால் வலியும் வேதனையும்
தவிர்க்க முடியாது ...

                   ...என்றென்றும் ...

கூடவே இருப்பது எது என யோசி
மனமே ...  அதை மட்டும் நேசி

*        *         *

Tuesday, June 27, 2017

ஆயுதம் ஏந்தும் கால்நடைகள்



பசியில்லாவிடினும் ...

வெறுமனே வேட்டையாடச் சொல்லி
வெறியூட்டப்பட்ட விலங்குகள்
வெளியில் விடப்பட்டுள்ளன
விலங்கினக் காப்பகத்திலிருந்து

கொடூர முகமும் கொடிய பற்களும்
கூரிய நகங்களும் கொண்டவை அவை
கூடவே ஆயுதங்களும் கொடுக்கப்பட்டு
கால்நடைகளுடன் கலந்துள்ளன
பசுத்தோல் போர்த்திய புலிகளாக

ஆடு மாடுகளும் மான்களும்
ஆயுதம் ஏந்தத் தடையிருப்பதால்
தம்மைத் தற்காத்துக் கொள்ள முடியாமல்
தவித்துச் சாகின்றன இரயில்களிலும் பயணங்களிலும்

இளம் கன்றொன்றின் மறைவைக்
கண்ட தினத்தில் கவலை கொண்ட
முகத்துடன் பள்ளி நோக்கி விரைகையில்
மூன்று வரிகள் மனதில் மின்னி மறைந்தன


" மாடுகள் வெட்டிய கத்திகளுக்கு
ஓய்வு வேண்டாம் இனி அவை
அந்த மாக்களை வெட்டட்டும் "


பதிவுலகில் பதிந்து பரப்பஎண்ணிய தருணம்
பள்ளியின் மூலையிலிருந்து நபிமொழியொன்று
படிக்கப்படும் சப்தம் வந்தது


" துஆ என்னும் பிரார்த்தனைதான்
இறைநம்பிக்கையாளனின் ஆயுதம் "


வாருங்கள் சகோதரர்களே துஆ என்னும்
ஆயுதத்தைக் கையிலெடுப்போம்

*                                   *                               *




Tuesday, June 13, 2017

தொந்தி







ஊழலில் ஊறித் திளைத்த
உணவு அமைச்சகம்

பேன்ட்டும் லுங்கியும் சறுக்கி
விளையாடும் பலூன் மேடை

சைடு வாக்கில் சரிந்து கிடந்தால்
சாய்மான பஞ்சு மெத்தை

நோன்பு திறந்தாலே அரங்கு
நிறையும் பிர்லா கோளரங்கம் 


" என்று கரையும் இந்த தொந்திரவு பாகம் "


     UA
 
 






முதலாளி (தொந்தி) வளர வளர
தொழிலாளி நசுக்கப்படுகிறான்   :)

குழந்தைகள் கிராஸ் பண்ணும் இடம்
அருகில் இருப்பதால் இயற்கையாகவே
அமைந்து விட்ட வேகத்தடை      :)


தொந்தி உடையார் பிச்சை எடுக்கார்
அப்படியே எடுத்தாலும்
எது ஒன்றும் கிடைக்கா.
  

பேன்ட்டுக்குள் மாட்டித் தவிக்கும் வயிற்றுக் கழலை
ஸ்கூட்டி ஓட்டுகையில் முன் பார ஜோல்னா பை
ஜிம் போனாலும் ஜம்முன்னு நிக்குது - பயிற்சிகள்
பண்ணாலும் தொப்புள் விரிய சிரிக்குது


இன்னாதாம்பா செய்றது  :( 





     A
 
 









Thursday, June 08, 2017

அகர முதல எழுத்தெல்லாம் ஆங்கிலத்தில்

குல்லா போட்ட முல்லாவும் தலை நரைத்த அய்யரும் அப்படி என்ன அடிக்கடி 
சந்தித்துப் பேசி சிரித்துக் கொள்கிறீர்கள் என யாராவது என்னிடம் கேட்டால்
கற்றாரைக் கற்றோரே காமுறுவர்”  என்று சொல்லிக் கொள்வதுண்டு.

அய்யர் ஆங்கிலப் புலமை மிக்கவர். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் 
பணி புரிந்தவர். என்னை விட இருபது வருடம் மூத்தவர். திருக்குறள் மீது பேரன்பு 
கொண்டவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதனை புத்தகமாக 
வெளியிட எண்ணம் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 
இஸ்லாத்தின் மீதும் பற்றுள்ளவர். ஒருநாள், நான் அவரிடம் திருக்குறள் ஆங்கில 
மொழிபெயர்ப்பு இதற்கு முன் நிறைய வந்திருக்கணுமே என்று கேட்டபோது, நிறைய 
இருக்கிறது, நான் இன்னும் அதனை எளிமைப் படுத்த முயற்சி செய்கிறேன் என்றார். 
அவருடைய ஆக்கத்தைப் பார்வையிட்டபோது மிகவும் சாதாரணமாய் இருந்தது.

உதாரணமாக 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்பதை
‘We should not believe glittering things will always be gold’ 
என்று எழுதுவது போல, அதற்கு பதிலாய் 'All the glitters are not gold' 
என்று நறுக்கென்று / சுருக்கென்று / நச்சென்று கேட்சியாய் கவிதை மாதிரி இருந்தால் 
நன்றாய் இருக்குமே என்றேன். எனக்குத் தெரியவில்லை மாதிரிக்கு நீங்களே எழுதிக் 
காட்டுங்கள் என்றதால் ஒரு பத்து குறளுக்கு ஆங்கில மாதிரி எழுதிக் காண்பித்தேன். 
மேலும் இதுவல்ல, இதைவிட‌ இன்னும் எளிய சிறந்த வார்த்தைகளைக் கோர்த்து 
ஆங்கில இலக்கண, இலக்கிய விதிகளின் படி டிங்கரிங் செய்து தாங்களே எழுதலாமே 
என்றேன். எனது பத்து பாக்களையும் :)  தான் வழக்கமாகக் கூடும் குறள் மேவும் 
மண்டபத்திற்கு எடுத்துச் சென்று காண்பித்ததில் கீழ்க்காணும் மூன்றும் யாருக்கோ 
பிடித்ததாகச் சொல்லி திரும்பத் தந்து விட்டார். நல்லவேளை அடியோ திட்டோ
விழாததால் அடியேன் உலக மன்றமான ப்ளாக்கரில் அவற்றைச் சமர்ப்பிக்கின்றேன்.

நீங்களும் படித்து விட்டுத் திட்டாமல் சென்று விட்டால் இது போன்ற புலமைகள் 
மென்மேலும் வெளிக் கொணர ஏதுவாய் இருக்கும். J

1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

All the letters starting from A
Are originating through Adams Bay

2.
இனிய உளவாக இன்னாது கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

Avoid Talking fire coated rude scars
While have honey coated fruit words

3.
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

Though God says ‘No’  with
Thou effort  He will say ‘Lo’


என்ன நாஞ்சொல்றது சரியா இல்லை அய்யரை அப்படியே விட்டுடலாமா ?

:)

Monday, October 17, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம்

சாந்தியும் சமாதானமுமற்ற
சாக்கடைச்  சிறு சந்தில்
சதாகாலமும் உழன்ற பெரிதுவப்பு கூடி

சட்டென்று சிலிர்த்த சிலிர்ப்பில்
பட்டென்று தெரித்த
வளர்ப்பும் வன்மமும்
வார்த்தைகளினூடே
வடிந்து காய்ந்தும் விட்டது.

விட்டேனா பார் என்று
வீம்பு காட்டி அருகில் செல்ல‌
தெம்பு இல்லாமல் இல்லை
எனினும்
வம்புதும்பில்
நாட்டமுமில்லை
நம்பிக்கையுமில்லை

மனிதன்
தேறும்போது
வானவர் போல் ஆகிறான்

நாறும் போது
மிருகத்தை விடக் கீழாகிறான்.

மிருகங்களில் மூன்று வகை

பசிக்காகவும் தேவைக்காகவும்
அடுத்தவர்களின் பொருளைத் தின்னும்
ஆடு மாடு போன்றவை

பசிக்காகவும் தேவைக்காகவும்
அடுத்தவர்களையே தின்னும்
சிங்கம் புலி போன்றவை

எந்த விதப் பிரயோஜனமுமின்றி
சும்மாவே அரிப்பெடுத்து
அடுத்தவரைத் தீண்டும்
பாம்பு தேள் போன்றவை

இதில் இஸ்லாத்தை
அவ்வப்போது தீண்டும்
முஸ்லிம்களை சீண்டும்

வால் ராஜாக்களும்
பெயரில்லாக்களும்
எந்த ரகம் தெரியுமோ

ப..ப..பப்..பரப்..பார்ப்..
பாம்பு ரகமே

பொறாமையில் உழல்பவன்
முஸ்லிமைச் சீண்டுவான்

அழிவைத் தேடுபவன்
இஸ்லாத்தைச் சாடுவான்

ரெண்டுமே அழிவுதான்
எனவே
வேண்டாமே தீண்டாமை

சாந்தியும் சமாதானமும்
சங்கையான சகோதரிகள்

அவர்களோடு ஒரு நல்ல‌
சகோதரனாக வாழ முயல்வோம்.

வஸ்ஸலாம்


டிஸ்கி : அமெரிக்கா,இந்தியா போன்ற 'பெரிய' இடங்களில் இருந்து கொண்டு
'கொட்டுவதால்' பரமசிவன் கழுத்துப் பாம்பு என்று எழுதியிருந்தேன். ஆனால்
அது ஒரு சமூகத்தின் குறியீடு என்பதைக் கலையகம் (http://kalaiy.blogspot.com)
சென்று அறிந்து கொண்டதால் மாற்றி விட்டேன்.

Monday, October 03, 2011

அல்ஹம்துலில்லாஹ்

அடக்கியாளும் ஆற்றல் படைத்த
அல்லாஹ்வின் திருநாமத்தால்
ஆரம்பம் செய்கிறேன் எனச்

சொல்ல வைக்கும் வச‌தி இருந்தும் இறைவா !

அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்பாளனுமாகிய‌
அல்லாஹ்வின் திருநாமத்தால்
ஆரம்பம் செய்கிறேன் எனச்

சொல்லச் சொல்லும் சூட்சுமம் என்னவோ

உனது கோபத்தை உனது கருணை
முதல் வரியிலேயே வென்று விட்டதே !


சுப்ஹானல்லாஹ்

Monday, March 21, 2011

பலூன் மேடை

காற்று ஊதப்பட்ட‌
பலூன் மேடைகளில்
குதித்துச் சறுக்கி விளையாடும்
குழந்தைகளைக் கண்டு
மனம் ஏங்கியது
நமக்கும் இது போன்று
கிடைத்திருக்கவில்லையேயென

இதுவெல்லாம் இப்ப
எம்புள்ளைக்கு
எங்கே புரியப் போகிறது
சறுக்கப் பயந்து மேலேயே
நின்று கொண்டிருக்கிறான்

கொடுத்தக் காசும்
நேரமாய்க்
கரைந்து கொண்டிருக்கிறது

'டேய் சறுக்குடா'








=========================================

அடுத்தப் பதிவு சம்பந்தமான ஒரு அறிவிப்பு
-----------------------------------------------

தோழர் பார்வையாளன் 'தர்ஹாவைப் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை'
எழுதுமாறு என்னிடம் கேட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல நிறைய பேர் ஆவலுடன்
எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும்
அளவுக்கு நான் ஒரு நல்ல எழுத்தாளனோ அல்லது தட்டச்சனோ கிடையாது.

இதுவோ ஒரு குழப்பமான சப்ஜெக்ட். ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கும்
அறிஞர்கள் எழுதினால் தெளிவாக இருக்கும். இருந்தாலும் என் மீது பிரியம்
வைத்து எதிர்பார்ப்பதனால் இன்ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவாக அதை இட
நினைத்துள்ளேன். அநேகமாக இரண்டு பதிவுகளாக இட விருப்பம்.

முஸ்லிம் அன்பர்கள் தமது கருத்துக்களை அல்லது வாதத்தை
பின்னூட்டினால் 'தீர்ப்பு' சொல்ல வசதியாயிருக்கும் :))


வஸ்ஸலாம்.

Monday, March 07, 2011

வறுமையின் நிறம் சிவப்பு

அண்டை வீட்டான்
துபாயில் வேலை
குறைந்த சம்பளம் வங்கிக் கடன்
கடன்காரர் தொல்லையென‌
புலம்பி விட்டுச் சென்றதன் பின்
எனது செல்போன் ஒலித்தது

'ஏம்பா பக்கத்து வீட்டுக்காரன்
படிக்காதவன் ...
இங்கே சொத்துக்களாய்
வாங்கிப் போடுகிறான்
நீயோ படிச்ச புள்ள‌
வெவரமில்லாம இருக்கியே'

அடப்பாவி மக்கா,
இக்கரைச் சிவப்புக்கு
அக்கரைப் பச்சைதான் காரணமோ



-----*-----*-----*-----



நூறு திர்ஹத்திற்கு வாங்கிய
சட்டை அணிந்து வந்த அன்று

அதே நிறத்தில் அதே டிசைனில்
ஆஃபீஸ் பாயும் அணிந்திருந்தான்

நெருங்கிப் பார்த்ததில்
தரம் குறைந்திருந்தது தெரிந்தது

விலையை விசாரித்தேன்
பத்து திர்ஹம் என்றான்

அவனது சம்பளத்தை யோசித்தேன்
அதுவும் எனதை விடப் பத்து மடங்கு குறைவு

இப்படித்தான் விரலுக்கேத்த வீக்கமாய்
எல்லோருடைய பொழுதும் கழிகிறதோ



டிஸ்கி :
கவிதை உருவில் என்டர் தட்டி வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறேன். நறுக்கென்று
எழுதத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் டிங்கரிங் செய்து தந்தால் நலம். :)

இப்படியிருந்தா நல்லாயிருக்கும் இதைத் தவிர்த்தா நல்லாயிருக்கும்னு
புலவர் பெருமக்கள் சொல்லித்தந்தா எவ்ளோ நல்லாயிருக்கும். ஹூம் :(



வஸ்ஸலாம்.

Sunday, January 09, 2011

பொங்கல் தாத்தா

ஏதாவதொரு கவிதை எழுத வேண்டுமென‌ யோசித்து,
தலையைச் சொறிந்துப் பின் யோசித்து நாம் எழுதிய‌
கவிதைகள் ஓரிரண்டு வாசிப்பில் சலிப்புத் தட்டி விடும்.

ஆனாலும் சில நேரம் தாமாகவே சிலிர்த்துக் கிளம்பிய
வரிகள் எத்தனை முறை வாசித்தாலும் இன்பம் தரும்.

அதில் ஒன்று, சென்ற முறை பதித்த பயணங்களினூடே

மற்றொன்று இதோ இன்று

சூடு தர‌/பெற வந்து சூடு பட்ட க(வி)தை
------------

குளிர் ஜுரம் போல
நடுங்கத் தொடங்கியது தேகம்

மருந்திட்ட துணையின்
கைச்சூடு இதமாய்த் தெரியவே

முழு தேகம் முச் சூடும் பெற‌
தாகிக்கத் தொடங்கியது

இன்னும் சில நேரம்
இல்லாளை அருகில்

இருக்க‌ வைத்ததில் ..

இருந்த சூட்டையும்
இழந்ததுதான் மிச்சம்

சூடோ அல்லது மூடோ
ஏன் எல்லா ஆண்களும்
டோனாராகவே இருக்கிறோம் :)


********************************

சில நேரங்களில் சில பதிவர்களின் பதிவில் பின்னூட்டம்
இடும்போது அது கவிதையாக மலர்ந்து விடும்.

சகோ சாதிகாவின் பொங்கல் பதிவில்

ஜ‌னங்க‌ளின்
மனங்களைப் புரிந்து
ஜனவரியில்
ஜனங்களின் வரியில்
எல்லோர் வீட்டிலும்
பொங்கலைப்
பொங்க வைத்த
'பொங்கல் தாத்தா'வின்
புகழ் ஓங்குமா இல்லை வீங்குமா

*************************************

ரமீஸ் பிலாலியின் பதிவுகளில்

ராஜாவை உயர்த்தி ரஹ்மானைத் தாழ்த்திய‌ பதிவில்

சினி சித்தரைத் தூக்கும் வேளையில்
மினி சித்தரைத் தாக்கலாமோ
கனி முதிர்க்கும் தருணமிது
இனி தருவார் முக்கனி விருந்து :)

---------------------------------

பாங்கு கவிதைக்கு மறுமொழி


1400 ஆண்டுகள் பின்னோக்கிய
இரவொன்றில்
காலச் சக்கரத்தை நிறுத்தி
தொழுகையில் லயித்திருந்த வேளை
செல்பேசியின் சத்தத்தில்
சக்கரம் சுழல ஆரம்பித்து
இன்றைய தேதிக்கு
அழைத்து வந்து விட்டது :)

*********************************

வாழ்க கவிதை ; வளர்க கவிஞர்கள் :)

***********************************

Sunday, December 12, 2010

பய‌ணத்தினூடே ...

பயணக் களைப்பு மறந்து
விமானத்தின் ஏற்றத்தையும்
இறக்கத்தையும் வியந்து
பார்க்கும் பயணிகள்.

விமானம் நிலைக்கு வந்தவுடன்
பசி ஆற்றக் காத்திருக்கும்
தாக 'சாந்தி'கள்.

கூடவே

விமான சத்தத்திலும் தம்
குஞ்சுகளின் பசிச்சத்தம்
மறவாமல் பசி தீர்க்க
போட்டி போட்டு
ஏறி இறங்கும்
பாவப்பட்ட பறவைகள்

Monday, October 25, 2010

தூசி தட்டிச் சில கவிதைகள்

தமிழ்மண வானில் இன்று கவிதா நட்சத்திரத்தன்று கவிதையைப் பத்தி எழுதலன்னா, கவிதையார்வலர்கள் கோவிச்சுக்குவாங்க இல்லையா, அதனால‌ இந்தப் பதிவு.

சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதுதான் நாம் சாகசங்கள் புரிவதும் நமக்குள் ஒரு
சக்தி இருப்பது தெரிவதும் சாத்தியமாகிறது. இன்று தமிழ் வலைப்பூக்களின்
காரணத்தால் தமிழை மறக்காமல் 'தமிழோடு உறவாடி'ப் பொழுது போக்க முடிகிறது.

ஆனால் அன்று,

'இரவுத் தாரகை நிலாவே நீ
பகலில் வந்தால் என்னவோ
உன்னைக் கண்டால் சூரியனைக் காணோம்
சூரியனைக் கண்டால் உன்னைக் காணோம்
என்ன இருவரும் கண்ணா மூச்சி ஆடுகிறீர்களா' :)

இதுதாங்க நா வாழ்க்கையிலேயே முதன்முதலா எழுதுன கவிதை. ஸ்கூல்ல நடத்துன
கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக எழுதுனது. 'இயற்கை எழில்' தலைப்பில்
எழுதிய கவிதையின் தொடக்க வரிகள். அன்று முதல் பரிசும் கெடச்சதனால ஒரு
கவிஞன் உருவானான். :)

அதன் பிறகு சில குழுமங்கள் நடத்திய கவிதைப் போட்டிக்காக சில கவிதைகள்
எழுதி 'கவிஞன்'கிற நெனப்ப தக்க வச்சதுண்டு. அதில் ஒன்று 'தட்ஸ் தமிழில்'
கூட‌ வெளிவந்தது.

கவிதைகளில் 'ஹைக்கூ' வகை ரொம்பப் பிடிக்கும் என்பதால் அது மாதிரி எழுதிப்
பார்த்ததுண்டு. அவைகளில் சில,


வீட்டிற்குள் சண்டை
அங்கும் சாதிப் பிரச்னை
ஆண்சாதிக்கும் பெண்சாதிக்கும்

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

கத்தியின்றி ரத்தமின்றி
உள்குத்தும் உள்காயமும்
தமிழ் வலைப்பதிவர்கள்'

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

வறண்ட பிரதேசத்திலிருந்து
ஒரு வற்றாத ஜீவ நதி
இதயம் பிழிந்த கண்ணீர்


அதையேன் கேட்குறீங்க, 'வெண்பா' கூட முயற்சித்ததுண்டு.

கிட்டப் பார்வைக்கு எந்த லென்ஸ் என்பதைப் பரீட்சையில் ஞாபகம் வைப்பதற்காக
'கிட்டப்பா குழியில் விழுந்தார்' என்று ஸ்கூல்ல‌ சொல்லித் தந்தார்கள். அதையே
'வெண்பா'வாக எழுத நினைத்து,

எட்டப்பர் எழுதிக் குவித்த ஏட்டிலே
கிட்டப்பர் குழிவிழுந்தார் காண்

என்று எழுதியதுண்டு.

'இதெல்லாம் வெண்பா வா ...ன்னு' புலவர்கள் வையக்கூடாது.
ஒரு முயற்சிதான், பிறகு அதைத் தொட(ர)வில்லை. 'ஹைக்கூ' வகை
முயற்சிகள்தாம் இன்றும் தொடர்கிறது.

ஹைக்கூவில் மிக மிகப் பிடித்தது, கவிக்கோ எழுதிய,

கல்லின் மீது பூவை எறிந்து
பூஜை செய்து வந்த மக்கள் அன்று
ஒரு பூவின் மீது கல்லை எறிந்தார்கள்.

தாயிப் நகர சம்பவத்தை ஒரு சில வார்த்தைகளில் என்ன அழகாய்ப்
படம் பிடிக்கிறார் பாருங்கள்.

இடையில் சில வருடங்கள் வெறுமனே ஓடிவிட்டன.
இன்று கவிதை,கட்டுரை மூலம் உங்களுடனே. நாளை எப்படியோ.

இன்னும் எழுதலாம்தான் (கவிதையைச் சொல்லவில்லை, கவிதை பற்றி
எழுதுவதைச் சொன்னேன்).ஆனால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது.
இது பற்றி இன்னும் படிக்க நினைப்பவர்கள் இதற்கு முன் நான் எழுதியதையும்
படித்துப் பாருங்கள். இதை விட சுவாரசியமாய் இருக்கும். அது,
'நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை'

Wednesday, September 22, 2010

இடையில் சுவாசிக்க சில கவிதைகள்

நேசிக்க நேசிக்க
நெகிழ்ந்து போகும் சொந்தம்
நீர்த்துப் போகும் உள்ளம்

யோசிக்க யோசிக்க‌
மெல்லத் திறக்கும் வழிகள்
மெய் சுமக்கும் பழிகள்

யாசிக்க யாசிக்க‌
வீங்கிப் போகும் வரவு
வீழ்ந்து போகும் உறவு

வாசிக்க வாசிக்க‌
வளம‌டையும் அறிவு
வலுவிழக்கும் கண்கள்

சுவாசிக்க சுவாசிக்க‌
சுத்தமாகும் உடம்பு
பித்தமாகும் சூழல்

எப்பூடி ..... :)


'நேசிக்க நேசிக்க வலுவடையும் உறவு வலுவிழக்கும் உள்ளம்'
என்று 2007ல் ஒரு குழுமத்தில் நான் எழுதிய டிவிட் இன்று
கவிதையாக நீட்சி பெற்றது - அப்பவே Twitt ருக்கேனாக்கும் :‍)

Sunday, May 30, 2010

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை (இளகிய மனது No Please )

வல்லவன் வகுத்த வாய்க்கால் வரப்பின்
வேலியில் சிறு துளையிட்டு
வந்த‌தைக் கொண்டு
புல் எனும் ஆயுத்தத்தைத் தயார் செய்து
வல்லவனாகும் வல்லமை தாராயோ இறைவா







கூரிய நாவின் நவீன 'நவி'மொழி தாங்கி
விழுங்கியவன் வீரன் என்பது 'நபிமொழி'


டிஸ்கி : தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் (பதிவினால்) சுட்ட வடு

Sunday, May 16, 2010

உடுக்கை இழந்தவன் கை போல ..

எளிமையாய் ஒரு 'கதை' சொல்லப் போறேன் என்று
போன பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா.

ஆனால் 'வி'தி விளையாடி, கழன்று வந்து கதைக்குள்
புகுந்து கொண்டு க(வி)தை யாயிற்று, என் செய்வது !


* * * * *






காற்றடித்த பொழுதில்
பிரிகிறோமே மீண்டும்
சந்திக்க முடியுமாவெனத்
தேம்பிய என் மீது

தெம்பாக ஏறி அமர்ந்த‌
மண்ணாங்கட்டீ ...

மழை பொழிந்தால் என்ன ?

உன்னைக் கரைய விடாமல்
காக்கும் 'அரச'
இலையுடனல்லவா
உன் நட்பும்
இன்ன பிறவும்..

Thursday, May 06, 2010

நான் கவிஞனுமில்லை .. நல்ல ரசிகனுமில்லை..

எந்தவொரு விஷயத்தையும் வளவள வென்று எழுதுவதை விட நறுக்கென்று
அல்லது நச்சென்று சொல்வதற்கு 'கவிதை' வலிமை மிக்கது என்பது என் கருத்து.
(நீங்க என்ன சொல்றீங்க).

ஒரு காலத்தில் மரபுக்கவிதையா புதுக்கவிதையா என்ற விவாதங்கள் மட்டும்
இருந்தது போய் இப்போது எதுதான் கவிதை என்பது குழப்பமாயிருக்கிறது.

நண்பர்களிடத்தில் அரட்டையின் போது சினிமாப் பாடல்கள் தாம் சிறந்த கவிதை போல்
சிலாகிக்கப் பட்டன. கண்ணதாசன்,பட்டுக்கோட்டையாருக்குப் பிறகு வாலி,வைரமுத்துவின்
வரிகளும் அதன் பின்,

'எதுகை,மோனை,தொடை' தட்டி எழுதிய ராஜேந்தரின் பாடல்களும் விவரிக்கப்பட்டன.
இப்போது 'டீஆர் ' என்றாலே டெரராகிப் போன‌து மட்டுமல்ல‌ அவர் போல் எழுதினாலே பரிகசிக்க‌ப்படுகிறது :-)

கவிதை பற்றி எழுதும் போது கவிதை விற்பன்னர்கள், 'எழுத்தில் காட்சியைப் பதிவு செய்ய' வேண்டுமென்றும் ஹைக்கூ போன்ற கவிதைகளின் கடைசி வரியில் ஒரு 'அதிர்வு' இருக்க வேண்டும் என்கிறார்கள். பின் நவீனத்துவ பதி/கவிஞர்களின் கவிதைகள் 'கனத்தை'க் கொண்டிருந்தாலும் நினைவில் வைப்பது கடினமாயிருக்கிறது.


சில நகைச்சுவைக் கவிதைகள் நினைவை விட்டு நீங்காதவை (கீழே வருகின்ற இந்த இரண்டு கவிதைகளை எழுதிய விகடகவிகள் யார் என்பதை அறிய விரும்புகிறேன் :‍-) கலக்கல்ஸ் )


* * * * *

1.
மணப்பதால்,
மாலையிடுவதால்
மஞ்சத்தில் அல்லது கட்டிலில் பயன்படுவதால்
கட்டையெனப் படுவதால் - சமயத்தில்
கடத்தப் படுவதால்
தரம் பல உள்ளதால்
அனுமதியில்லாமல் 'வைத்திருப்பது'
சட்டப்படி குற்றம் என்பதால்
உரசினால் மட்டுமே பலன் பெற முடியும் என்பதால்
உயர் சந்தனமும் பெண்ணும் ஒப்பென்றுணர்!

* * * * *

2.
கூட்ட நெரிசல்; குழைவாய் நெருங்கியே
பாட்டத்தைத் தேய்த்திடும் பாவியே! -நாட்டமுடன்
அஞ்சா துரசும் அசுரனே! உன்னுடைய
சுஞ்சாவை வெட்ட அவா!

* * * * *



பொதுக் கழிவறைகளில் எழுதப்படும் அசிங்கமான வார்த்தைகளுக்கு மாற்றாக (!?!)
அங்கே வரும் வாடிக்கையாளர்களின் எழுத்துத்திறனை 'வெளி'க் கொணர :-) இது
போன்ற நகைச்சுவையுடன் கூடிய, பின்வரும் 'கக்கூஸ் கவிதைகள்' எழுத நினைத்து
முடியாமல் போனதுண்டு. இன்று இதனைப் பொது'வெளி'யில் எழுத‌ தைரியம் தந்தது
திரு மாதவராஜ் அவர்களின் இந்தப் பதிவு , நன்றி மாதவ் ஜீ.


" இங்கே கழுவப் படும் சப்தம் வெளியில் காத்திருப்போருக்கு இன்பம் "

* * * * *

"அசுத்தமாய் மிதப்பது கண்டு அங்கலாய்க்க வேண்டாம்
என்னை விட்டுச் சென்ற எதுவொன்றைப் பற்றியும்
என்னிடத்தில் அக்கறை இல்லை "

* * * * *

(எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக)
----------------------------

வரையின்றி உறையின்றி செய்யப்படும்
எச்சில்/எச்சிலை உறவால்தான் வருது
எய்ட்ஸ் என்னும் எமலோகப் பி(ரா)ணி


* * * * *



இப்போது என்னுடைய கேள்வி 'எந்த மாதிரி கவிதைக்கு ஆயுள் அதிகம்'.

நகுலன்/மனுஷ்ய புத்திரன் போல் அதிர்வு ஏற்படுத்தும் சமூக நல கவிதைகளா அல்லது கட்டுடைக்கப்பட்ட, பின்னவீன‌த்துவக் கவிதைகளா அல்லது மேலே குறிப்பிடப்பட்ட‌து
போன்ற‌ நகைச்சுவைக் கவிதைகளா அல்லது பெரும்பாலான‌ பெண் கவிஞர்களின் 'குறி'
சொல்லும் கவிதைகளா அல்லது வேறேதுமா.

கவிதை பயிலும் மாணவனாய்க் கேட்கிறேன் வேறொன்றும் உள்குத்தில்லை பராபரமே :-)

நீங்க என்னதான் சொன்னாலும் கீழே உள்ளதை மட்டும் தவிர்க்கவே முடியாது.

(இன்று ஒரு PENN தட்டச்சிய கவிதையைப் படிக்க நேரிட்டதாலும் அதற்கு
மக்கள்ஸ் ஆஹோ ஓஹோ என்றதாலும் தோன்றிய தத்துவம்)

'பெண் பேசும் எம் மொழியும் அழகு பெண் எழுதும் எதுவும் கவிதை
பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்ணுக்கும் அழகென்றே பேர்
என்பார் அப்பெண் தன் மனைவியாய் இல்லாத‌ பட்சத்தில்'.