Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Monday, July 18, 2011

ரெண்டாம் ஜாமத்துக் கனவு

(முந்தைய கனவின் தொடர்ச்சி)

கனவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இரவின் கடைசிப் பகுதியில் காணப்படும் கனவுதான்.
கனவு கண்ட நேரத்தைப் பொறுத்தும் அது பலிக்கும் நாட்கள் கணிக்கப் படுகின்றன. கனவில் இறைவனைத் தரிசிக்கலாம் (அதற்கானத் தகுதியை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில்).
நபியை, நபித்தோழரை மற்றும் நல்லோர்களையும் கனவில் காண முடியும்.
ஆனால் அது நம் கையில் இல்லை, இறைவன் அனுமதித்தாலே தவிர‌‌.

நல்லோர்கள் மட்டுமல்ல ஷைத்தான்களையும்,விலங்கினங்களையும் காண முடியும். ஜின், ஷைத்தானையோ அல்லது விலங்கினத்தையோ காண்பது நல்லதல்ல. ஆனால் அவற்றை
வெல்வது போல் கண்டால் நடக்கவிருந்த ஒரு தீமையை விட்டுத் தப்பித்தது போலாகும்.

-------------------------- * * * * * -------------------------

ஒருமுறை நண்பர்களைச் சந்திக்க துபாய் சென்றிருந்த சமயம். இரவுச் சாப்பாட்டை வழியில்
கண்ட ஒரு ரெஸ்டாரன்டில் சாப்பிட்டு விட்டு இருட்டுப் பகுதியான தொழில்பேட்டையில்
இருக்கும் அவர்களின் குடியிருப்பை நோக்கித் தனியனாகச் சென்று சேர்ந்தேன்.

அவர்களைச் சந்தித்து அளவளாவிய பின் அங்கேயே தங்கினேன். மற்றவர்கள் அவரவர்
கட்டிலில் சயனிக்க, எனக்குக் கிடைத்தது ஒரு மூலையில் தரை டிக்கெட்டு. படுக்கும்
போதே தலை சுற்றுவது போல் தெரிந்தாலும் நொடியில் உறங்கிப் போனேன்.

எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை, நடுச் சாமத்தில் திடீரென விழித்துக் கொண்டேன், கொஞ்சம் வேர்த்திருந்தது. மற்றெல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். இப்போது நினைவுக்கு வந்தது சற்றுமுன் நான் கனவில் கண்ட காட்சி. கைநகங்கள் நீண்ட,
கூரிய பற்கள் கொண்ட ஆண் மற்றும் பெண், இருவரும் கோபத்துடன் என்னை நெருங்க முயற்சிக்கும் தருணத்தில் திடுக்கிட்டு விழித்துள்ளேன். (பாவம் மூலையில் தமது
தேவைக்காக ஒதுங்கி இருந்தவர்களை டிஸ்டர்ப் செய்து விட்டேனோ :)

மாறிப் படுப்பதற்கும் மாற்று இடம் அங்கில்லாததால் வேறு வழியின்றி,
'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என்று ஓதி இடது பக்கம் மூன்று முறை
துப்பி விட்டு (நபிவழி), பின் ஆயத்துல் குர்ஸீ (குர்ஆன் 2:255) ஓதி உடம்பில் ஊதித்
தடவிய பின் மீண்டும் படுத்துக் கொண்டேன். என்ன ஆச்சர்யம், அரைமணிக்குப் பின்
தூங்கிய பொழுதில் மீண்டும் அதே காட்சி. இருவரும் என்னை நோக்கி நகர, இப்போது
என் கையில் மிகத் தடித்த கம்பு ஒன்று இருப்பதை உணர்ந்து அவைகளை நோக்கி
அடிக்க எத்தனித்தேன். அதற்குள் அவைகள் மறைந்து போயினர்...

-------------------------- * * * * * -------------------------

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின்
நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ
அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட
தவணை வரை (வாழ்வதற்காகத் திருப்பி) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும்
மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் ‍ 39:42)

-------------------------- * * * * * -------------------------

நாம் தூங்கும் போது நம்மை விட்டு எது விலகுகிறது (இறைவனால் கைப்பற்றப் படுகிறது)
என்று தெரியவில்லை. ஆன்மாவா அல்லது ஆத்மாவா அல்லது வேறெதுவுமா. தூங்கிய
பிறகு குறட்டை மற்றும் மூச்சுத்துடிப்பின் மூலம் உயிர் இருக்கிற‌து என்பது தெளிவாகத்
தெரிகிறது. பிறகு எதுதான் செல்கிறது. ஒளுவுடன் தூங்கியவர்கள் இறைவனைச் சந்தித்து
ஸஜ்தா செய்வதாகவும் மற்றவர்கள் (ஸஜ்தா செய்யாமல்) வெறுமனே சந்தித்து விட்டுத்
திரும்புவதாக அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தூங்குமுன் ஓத வேண்டிய துஆக்களில் பின்வரும் அர்த்தம் பொருந்திய துஆ ஒன்றும்
உண்டு. 'இறைவா ! நீ என் ஆத்மாவைப் பிடித்து வைத்துக் கொண்டால் அதன் மீது
இரக்கம் காட்டி கிருபை செய்வாயாக. இன்னும் அதைத் திருப்பி அனுப்புவதாக
இருந்தால் நல்லோர்களைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக
!'

அப்படிச் சென்று திரும்பி வரும்போது நாம் காணும் காட்சிகள்தாம் கனவாய்த் தெரிகிறதோ
என்றும் சிந்திக்கத் தோணுகிறது. நபியவர்கள் தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்
இன்று யாராவது கனவு கண்டீர்களா என்று தோழர்களிடம் விசாரித்து அதற்கான
பலன்களைச் சொல்லுபவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருதடவை தாம் கனவில் கண்ட
சொர்க்க, நரகக் காட்சிகளை விவரித்துள்ளார்கள்.எனவே எதிர்காலம் சம்பந்தப் பட்ட
விஷயங்கள் கூட இறைவன் அனுமதிக்கும் சிலருக்குக் கனவில் காட்டப் படுகின்றன‌.

'சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன'
என்று இறைவன் சொல்வதால் இது பற்றி இன்னும் சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

Wednesday, May 11, 2011

கனவொன்று கண்டாய்

கனவுகள் பற்றி நமக்கு இன்னும் தெளிவில்லை அதைக் கட்டுப் படுத்தும் ஆற்றலும்
நமக்கில்லை. கனவில் வரும் இடங்கள் நாம் முன்பே பார்த்ததாகவும் இருக்கலாம்
அல்லது இதுவரை பார்க்காத இடங்களையும் சஞ்சரிக்கலாம்.நாம் அசை போட்ட
விஷய‌ங்களும் வரலாம் அல்லது புதிதான விஷயங்களாகவும் இருக்கலாம்.
ஆனால் அசட்டையாக இருந்து விட வேண்டாம் கனவு விஷயத்தில்.

சில சமயங்களில் அது இறைவனின் புறத்திலிருந்து வரும் அறிவிப்பாக இருக்கும்.
நபிமார்களுக்கு அனுப்பப்படும் இறைச் செய்திகளில் கனவும் ஒன்று. அதாவது கனவின்
மூலமாக நபிமார்களுக்கும் இறையடியார்களுக்கும் செய்திகள் சொல்லப்பட்டன/படுகின்றன.
'கனவு' என்றாலே 'நினைவு'க்கு வருவது யூசுப் அலை (ஜோசப்) சம்பவம்.
(எல்லோருக்கும் தெரியும் என்பதால் இங்கு எழுதவில்லை)


இவ்வுலகம் பொதுவானது. ஆதலால் கனவின் வழி செய்தி இறையடியார்களுக்கு
மட்டுமல்ல எல்லோருக்கும் அனுப்பப் படுகிறது. மிகச் சிலரே கனவின் விளக்கம்
அறிந்து கொள்கிறார்கள். கனவிற்கான விளக்கம் ஒரு சில புத்தகங்களில்தான் காணக் கிடைக்கின்றன. அறிந்தவர்கள் மிகக் குறைந்து விட்டனர். கண்ட கனவின் விளக்கம்
தெரியுதோ அல்லது தெரியவில்லையோ முதலில் கனவை யாரிடமும் சொல்ல வேண்டாம்.

நல்ல கனவுகளை, நம்மீது பொறாமை கொள்ளாதவர்களுடனும் நம் முன்னேற்றத்தை நாடுபவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கெட்ட கனவுகளை வெளியில்
சொல்ல வேண்டாம். சொல்லப் படாத வரைக்கும் அவற்றின் தாக்கங்கள் ஏற்படாது
.

இவ்வுலக அழிவு நாள் நெருங்க நெருங்க 'அறிவு' குறைந்து கொண்டே போய் ஒருநாள்
சுத்தமாக எடுபட்டு போகும் என்று அருமை நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்.

விஞ்ஞான அறிவு பெருகிக்கொண்டே போகிறதே, 'அறிவு' எப்படிக் குறையும் எனச்
சந்தேகம் வருகிறதா ? வரட்டும் வரட்டும்.

வாழ்க்கை ஒரு வட்டம். எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பமும் உண்டு முடிவும் உண்டு.

அலங்காரக் கட்டில் வாங்குகிறோம் ; தூக்கத்தை வாங்க முடியவில்லை.

விதம் விதமா மருந்துகள் வாங்குகிறோம் ; நற்சுகத்தை வாங்க முடியவில்லை;

மருத்துவமனைகள் அதிகரிக்க அதிகரிக்க நோயுமல்லவா அதிகரித்து விட்டது.

புத்தகங்களும் கல்விக்கூடங்களும் பெருகி விட்டன ; ஆனால் அறிவு குறைந்து விட்டது.

முன்பு சதாவதானி,தசாவதானி என்று பலர் இருந்திருக்கிறார்கள். பல விஷயங்களை
ஒரே நேரத்தில் அறிவார்கள். நிறைய விஷயங்களைக் குறிப்பால் அறிந்து கொள்பவர்கள், அனுபவத்தால் அறிந்து கொள்பவர்கள்,கனவின் மூலம் அறிந்து கொள்பவர்கள் என்று பலர் இருந்தனர். நமக்கோ ஒரு விஷய‌த்தைக் கூட முழுதாக அறிய முடியவில்லை. விஷயம் அறிந்தவர்களைக் கேலி வேறு செய்கிறோம். இப்படியெல்லாம் அறிவு இருந்ததா/இருக்கிறதா
என்று கூட நம் அறிவுக்கு எட்டுவதில்லை.

எது உண்மையான கல்வி எது உண்மையான அறிவு என்பதைச் சொல்வதற்கே
நேரம் போய்விடும். அதனால இப்போ கனவைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

கனவை விளங்கிக் கொள்வதும் அறிவின் பாற்பட்டது. கனவின் விளக்கம் பெற்ற ஒரு
அறிஞரிடம், ஒரே கனவைக் கண்ட‌ இருவர் வந்தனர் ஆனால் வெவ்வேறு சமயங்களில்.

இருவருக்குமே வந்த கனவு 'தாம் படுத்த கட்டிலனடியில் நெருப்புக் கங்குகளைக்
கண்டதாகத்' தெரிவித்தனர். ஒருவனுக்குச் சொல்லப்பட்டது 'நீ படுத்த இடத்திற்குக்
கீழே புதையல் உண்டு' என்றும் இன்னொருவனுக்கு 'உடனே நீ உனது வீட்டிற்குச்
சென்று வீட்டிலுள்ளோரை வெளியே அழைத்து வந்து விடு, வீடு இடிந்து விழப் போகிறது'.

இரண்டு விளக்கங்களின் போதும் அருகிலிருந்தவர் கேட்டார். இருவரும் கண்டது ஒரே
விதமான கனவாயிற்றே, ஆனால் விளக்கம் வேறாக இருக்கிறதே என்று கேட்ட போது
'முன்னவர் கண்டது குளிர் காலத்தில் பின்னவர் கண்டது கோடைக் காலத்தில்'
என்று பதில் வந்தது.

மேலும் காணக்கூடிய நபரைப் பொறுத்தும் கனவின் விளக்கம் வேறுபடும்.


இ.அ. தொடரும்...