Tuesday, September 28, 2010

ஜின் பள்ளத்தாக்கில் இன்'ஜின்' ஓடிய அதிசயம்

'வாதியே ஜின்' (பேய் பள்ளத்தாக்கு) என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம்.
இது நம்ம‌ மக்கள்ஸ் வைத்த பெயர். சவூதி அரசாங்கம் வைத்த பெயரோ 'குலைல்'.
(குலை நடுக்கம் மறுவியதோ ? :)

மதீனாவிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில், மலைகளால் சூழப்பட்ட பகுதி. அந்தப்
பகுதியின் அதிசயம் என்னவென்றால் காரை நிறுத்தி 'நியூட்ரலில்' வைத்தால், அது
தானாக வேகமெடுத்து 120 கி.மீ. வேகத்தில் சுமார் பத்து கி.மீ. தூரம் வரை ஓடி
வேகம் படிப்படியாகக் குறைந்து பின் நின்று விடுகிறது. இத்தனைக்கும் அது
செங்குத்தான பகுதியும் அல்ல, சமதள ரோடுதான். அந்த இடத்தில் ஒரு
'ஆச்சர்யக்குறி' போர்டு வைக்கப் பட்டிருக்கிறது. அங்கேயுள்ள 'ஜின்கள்'
காரைத் தள்ளிவிடுவதாக நம்பப் படுகிறது.

உஹதில் லுஹர் தொழுதுவிட்டு அங்கு பயணமானோம். எங்களுக்கு அந்த இடம்
எதுவென்று சரியாகத் தெரியாததால் ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி 'சோதனை'
செய்து பார்த்தோம். ம்ஹூம். அது ரமலான் என்பதால் நான் சொன்னேன்,

'ஒரு வேளை ஜின்களெல்லாம் நோன்பு பிடித்து விட்டுத் தூங்குதோ என்னவோ?' :)

இப்படியாகச் செல்கையில் மெதுவாக வந்த ஒரு காரைக் கண்டோம், அவர்களும்
எங்களைப் போல் அங்கு வந்த 'ஆர்வக் கோளாறுகள்' என்பதை அறிந்து விசாரித்த
போது 'ஆச்சர்யக்குறி' போர்டிலிருந்து ஆரம்பிக்குமாறு சொன்னார்கள். அங்கே
சென்று வண்டியை 'நியூட்ரலில்' வைத்தபின் ஸ்டியரிங்கைப் பலமாகப் பிடித்துக்
கொண்டார் டிரைவிங் நண்பர். ஆஹா, மெதுவாக நகர ஆரம்பித்த வண்டி இப்போ
'ரெக்கை கட்டிப் பறந்தது'. நானும் ஜின்கள் தெரிகின்றனவா என்று பார்த்தேன்.
ம்ஹூம். வண்டியும் ஒரே சீரான வேகத்தில் சென்று ஒரு சிறிய அணை இருக்கும்
பகுதியில் வந்து நின்று விட்டது.

இப்படி வரும் ஒவ்வொரு வண்டியையும் 'வேலமெனக்கெட்டுத்' தள்ளிவிடுமா எந்த
ஜின்னும், ஒரு வேளை காந்தப் புலமாக இருக்குமோ என்னவோ. ஆனாலும் இது ஒரு
ஜாலி அனுபவம்தான். நம்ம ஊராக இருந்திருந்தால் ஒரு கோயிலோ அல்லது தர்காவோ
முளைத்து உண்டியல் வைத்து காசு பார்த்திருப்பார்கள்.ஆனால் சவூதியோ இது போன்ற
மூட நம்பிக்கைகளை ஒழிக்க நினைப்பதால், இப்பகுதியில் எந்த அறிவிப்பையும்
வைக்கவில்லை, ஆச்சர்யக்குறி பலகையைத் தவிர. அப்படிப்பட்ட ஒரு பகுதி இருப்பதே
அங்குள்ள நிறைய பேருக்குத் தெரியாது.

திரும்பி வந்து கதைக்கையில் ஒரு நண்பர் தாம் ஜின்னைப் பார்த்துள்ளதாகச் சொன்னார்.
அவர் ஒரு பெரிய வாகனத்தின் (டிரைலர்) டிரைவர். கம்பெனி பொருட்களை எடுத்துக்
கொண்டு 'தபூக்' மற்றும் 'யான்பு' போன்ற ஊர்களுக்கு அடிக்கடி சென்று வருபவர். அப்படி
ஒருநாள் நள்ளிரவில் திரும்பும் வழியில் தூக்கம் மிகைத்து ரோட்டோரம் வண்டியை
நிறுத்திவிட்டுத் தூங்கும் போது கதவு தட்டப் பட்டதை உணர்ந்து எழுந்து டார்ச் அடித்துப்
பார்த்து விட்டு யாருமில்லாததால் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்த போது வண்டி பலமாகக்
குலுங்கியது. அதிர்ந்து எழுந்த போது, வண்டியை பல பேர் சேர்ந்து உலுப்பியது போல்
இருந்தததால் வெளியே எட்டிப் பா......ர்த்தார். ஒன்றும் தெரியாததால் பயந்து போய்
இடத்தைக் காலி செய்து அடுத்து வந்த ஊரில் வண்டியை நிறுத்தி கதையைச் சொன்ன
போது ஆங்குள்ளோர் 'ஆம், அது ஜின்னோட வேலைதான், இது போல் பல பேருக்கு நேர்ந்திருக்கிறது' என்றனர். (என்னங்க, பார்த்தார்னு சொன்னீங்க, ஆனா அவர் பார்க்கவே இல்லையேன்னு கேக்க நெனக்கிறது தெரியுது, வெயிட் வெயிட், ஒரு சோடா ப்ளீஸ்).

இப்படித்தான் ஒருநாள் பயணத்தின் வழியில் மாலை மங்கும் நேரத்தில், சூரிய
அஸ்மனத்திற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன் 'கைபர்' எனும் இடத்தில்
வண்டியை நிறுத்தி அங்குள்ள கோட்டையைப் பார்த்து வரும் எண்ணத்தில் கீழிறங்கினார்.
நபி(ஸல்) காலத்தில் யூதர்கள் கைபரில்தான் வசித்தார்கள். நபியுடன் செய்த
உடன்படிக்கையை மீறியதால் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து யூதர்கள் அந்த
ஊரைக் காலிசெய்து விட்டு வேறிடம் சென்று விட்டாலும் வேறு யாரும் அங்கு சென்று
குடியேறாமல் பாழாகிப் போன இடம் அது. அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்லும்
பயணிகளுக்காக ஒரு மஸ்ஜித் ஹஜரத் அலீ (ரலி) பெயரில் கட்டப்பட்டது. அதுவும்
காடு மண்டிப் போய் சிதிலமடைந்து காணப் படுகிறது. அங்கு சென்ற நண்பர்,
கோட்டைக்குள் சென்றால் இரவாகி விடும் என்றெண்ணி பள்ளிக்குள் மட்டும் சென்று
வரும் எண்ணத்தில் உள்ளே நுழைந்து சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினார்.

அப்போது யாரோ இருப்பது போல் உணர்ந்து அனிச்சையாக ஸலாம் சொல்ல, பதிலேதும் கிடைக்காத‌தால் பார்வையை ஆளிருந்த பகுதியை நோக்கிச் செலுத்தும் போதுதான் கவனித்திருக்கிறார், அந்த ஆள் தரையில் இல்லை ... மாறாக ஒரு தூணின் உச்சியில்
சம்மணமிட்டு அமர்ந்து இவரை நோக்கி, சிவந்த பெரிய தமது கண்களை விரித்து கோபமாகப்
பார்த்த உருவத்தைக் கண்டவுடன்,முதலில் இவர் 'ஜின்'னென்று உணரவில்லை .. மாறாக,
திருடனாயிருக்கும் என்ற எண்ணமும் அதோடு தனது பாக்கெட்டில் கம்பெனியின் பணம் பதினைந்தாயிரம் ரியால் இருப்பதும் நினைவுக்கு வர நைசாகப் பள்ளியை விட்டு வெளியில்
வந்து ஓட்டம் பிடித்து மூச்சிரைக்க, வண்டிக்குள் ஏறி ஸ்டார்ட் செய்த பின் தான் போன உயிர்
திரும்ப வந்த‌தாம். வந்து கதையைச் சொல்லிக் கதைக்கும் போதுதான் 'திருடர்களெல்லாம்
கிடையாது, அங்கே ஜின்கள் உண்டென்ற விஷயம்' தெரிய வந்ததாம். இது நடந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டன. மீண்டும் நண்பர்களுடன் அங்கே சென்று பார்த்த போது, அங்கே பள்ளிக்குள்ளேயும் செல்லமுடியாதவாறு முற்செடிகளுடன் கூடிய பாதை அடைபட்டிருக்கிறது.

**************************************************************************************

'ஹயாத்துஸ் ஸ‌ஹாபா'வில் ஒரு சம்பவம் வருகிறது. இஸ்லாத்திற்கு முன் அரபியர்கள்
பயணம் செல்லும் வழியில் ஏதும் மலை சார்ந்த பள்ளத்தாக்கில் இரவு தங்குமாறு
நேரிட்டால், இவ்வாறு சத்தமாக அறிவித்து விட்டுத்தான் தங்குவார்களாம். 'இப்
பள்ளத்தாக்கின் தலைவருக்கு எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள். நாங்கள் எங்களின் பயணத்தினூடே இங்கு இரவைக் கழிக்க நேரிட்டு விட்டது. சிரமத்திற்கு மன்னிக்கவும்,
காலையில் இடத்தைக் காலி செய்து விடுவோம். அது வரை எங்களுக்கு எந்தத்
தொல்லையும் நேர விடாமல் பார்த்துக் கொள்ளவும்'. இப்படி அறிவிக்கா விட்டால்
அங்குள்ள ஜின்கள் தொல்லை கொடுக்குமாம். இப்படித்தான் ஒருநாள் மனிதர்களின் குழுத்
தலைவர் அறிவிக்கையில், இருட்டிலிருந்து சப்தம் வந்தது,

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ

"மனித‌, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து
செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால்,
(வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.(அல்குர்ஆன் 55:33)

என்ற குர்ஆன் வசனத்தைச் செவியுற்றனர். மேலும் தொடர்ந்த அச் சப்தம் 'நீங்கள் கவலைப்
படத் தேவையில்லை, இனி எங்களுடைய தொல்லைகள் இருக்காது. நாங்களெல்லாம் முஸ்லிம்களாகி விட்டோம், நீங்களும் மதீனா சென்று முகம்மத்(ஸல்) அவர்களின் கரம்
பற்றி இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுங்கள்'.

**************************************************************************************

ஓ! ஜின்களிலும் மத வேறுபாடுகள் இருக்கா என்று சிலர் யோசிப்பது தெரிகிறது. ஆம்.
அவைகளும் நம்மைப் போல்தான். ஆனால் மனிதனை விட்டு அகன்று மலை,காடு,தீவு
என்று வசிப்பவை. நாளை அவைகளுக்கும் கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம் எல்லாம் இருக்கின்றன. மனிதர்களும் ஜின்களும் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும். அதைப் பார்க்கும் இறைவனை நிராகரித்தோர், நாமும் மண்ணாகிப்
போகக் கூடாதா என்று கதறுவார்கள்.

"நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் -
மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - செயல்களை - அந்நாளில்
கண்டு கொள்வான் - மேலும் நிராகரித்தவன் 'அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப்
போயிருக்க வேண்டுமே!' என்று (பிரலாபித்துக்) கூறுவான்." (அல்குர்ஆன் 78:40)

வஸ்ஸலாம்.

Thursday, September 23, 2010

கூடவே ஒரு ஜோக்கும்

(Bald header No angry please)

இந்த ஜோக்கை சற்றுமுன்தான் எனது மேலாளர் சொன்னார்.
புதிதாகக் கேட்டதால் நிறைய சிரித்தேன்.

(உம்ராவிற்குப் பின் உண்டான என் மொட்டைத் தலையைப்
பார்த்த பின் இந்த ஜோக் ஞாபகம் வந்திருக்கலாம்) .



If you have bald head at your front portion
then 'you are thinking too much' ;

If you have bald head at your back portion
then 'you are knowledgeable' ;

If you have both,
then 'you always think that you are genius'
:))


**********************************************************


தமிழில் சிரிக்க நினைப்பவர்களுக்காக,
-----------------------------------

தலையில் முன் வழுக்கை விழுந்திருந்தால் 'சிந்திப்பவர்' என்று அர்த்தமாம்.

வழுக்கை பின் தலையில் விழுந்திருந்தால் 'அறிஞர்' என்று அர்த்தமாம்.

அப்போ ரெண்டு பக்கமும் வழுக்கையாய் இருந்தால்

'தான் ஒரு பெரிய மேதாவிங்கற நெனப்புல' இருக்குறவராம் :)



டிஸ்கி :

யாருக்காவது சிரிப்பு வரவில்லையென்றால் இந்த ஜோக்கை அவரவர்
த‌ம் மேலாளர் வாய் வழி கேட்டால் ஒருவேளை சிரிப்பு வரக்கூடும் :)

Wednesday, September 22, 2010

இடையில் சுவாசிக்க சில கவிதைகள்

நேசிக்க நேசிக்க
நெகிழ்ந்து போகும் சொந்தம்
நீர்த்துப் போகும் உள்ளம்

யோசிக்க யோசிக்க‌
மெல்லத் திறக்கும் வழிகள்
மெய் சுமக்கும் பழிகள்

யாசிக்க யாசிக்க‌
வீங்கிப் போகும் வரவு
வீழ்ந்து போகும் உறவு

வாசிக்க வாசிக்க‌
வளம‌டையும் அறிவு
வலுவிழக்கும் கண்கள்

சுவாசிக்க சுவாசிக்க‌
சுத்தமாகும் உடம்பு
பித்தமாகும் சூழல்

எப்பூடி ..... :)


'நேசிக்க நேசிக்க வலுவடையும் உறவு வலுவிழக்கும் உள்ளம்'
என்று 2007ல் ஒரு குழுமத்தில் நான் எழுதிய டிவிட் இன்று
கவிதையாக நீட்சி பெற்றது - அப்பவே Twitt ருக்கேனாக்கும் :‍)

Tuesday, September 21, 2010

பார்டர் தாண்டிய பல்லாடு

(சென்ற உம்ரா பதிவின் தொடர்ச்சி)

பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றின் கருத்து 'இந்த உம்மத்தின்
செல்வந்தர்கள் புகழுக்காகவும் பெருமைக்காகவும், ஏழைகள் பிச்சை எடுப்பதற்கும்
மத்திய வர்க்கத்தினர் வியாபாரம் செய்யும் நோக்கத்திலும் ஹஜ்/உம்ரா செய்வார்கள்.
(இம்மூன்று நோக்கங்களை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக,ஆமீன்).
அம்மூன்று தரப்பாரையும் காண நேரிட்டது ; அவர்களின் பேச்சும் நடத்தையும்
மேற்கண்ட நோக்கங்களைப் பறைசாற்றியது.

பார்டர் தாண்டியதும் மற்றுமொரு சாராரைக் காண நேரிட்டது. ஓமானிலிருந்து வந்த
பேமானிகள். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். டொயோட்டா Lexus ல் வந்து 'உம்ரா வந்த
வழியில் எல்லாம் தொலைந்து விட்டதாகக் கூறி' பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
காருக்குள் மனைவி, குழந்தைகளை வைத்துக் கொண்டு கேட்கும் போது யாருக்குத்தான்
கொடுக்க மனம் வராது. பார்டர் தாண்டியவுடன் வரும் பெட்ரோல் பம்புகள்தாம் இவர்களின்
வசூல் வேட்டைக் களம். இது போன்று இரண்டு மூன்று கார்களைக் கண்டவுடன் நாங்கள்
கார் நம்பர்களைக் குறிக்கலானோம், போலிஸில் புகார் செய்யும் நோக்கத்தில். அச்சம‌யம்
ஒரு கார் ரிவர்ஸில் வந்தது, நம்பரைக் குறிக்கும் நண்பரை லேசாக இடித்துச் செல்லும்
வண்ணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பாவம் பரிதாபத்திற்குரியவர்கள்,
பட்டதாரிகளாக்க வேண்டிய தம் மக்களுக்கு பிச்சைக்காரர்களாவதற்கான பயிற்சி
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நபியவர்கள் சத்தியமிட்டு சொன்ன விஷயங்களில் இதுவும் ஒன்று,
'யாசிப்பவர்களின் வறுமை ஒரு போதும் நீங்காது'.

மக்கா மதீனாவில் பிச்சை எடுக்கும் கறுப்பின மக்கள் சோமாலியா போன்ற ஆப்ரிக்க
நாடுகளிலிருந்து வந்தவர்களாயிருக்கும்; ஆண்டாண்டு காலமாக சவூதியில் வாழும்
ஹபஷிகள் கிடையாதென்பது என் எண்ணம். காரணம் இரண்டு ஹரம்களிலும் நோன்பு
திறக்க வைக்கப் போட்டி போட்டுக் கொண்டு லட்சக்கணக்கான மக்களுக்கும் பேரித்தம்பழம்,
தண்ணீர்,டீ,காபி,பன்,தயிர்,மோர் வைத்து உபசரிப்பவர்களாக ஹபஷிகளைக் கண்டோம்.

ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. மதீனா பள்ளியில் நோன்பு திறக்கச் செல்லும் போது அங்குள்ள சிறுவர்களும் பெரியவர்களும் தம்முடைய இடத்தில் நோன்பு திறக்குமாறு நம் கையைப்
பிடித்து இழுப்பார்கள். ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த ஒருவர் இன்று தம்மிடத்திலே நோன்பு
திறக்க வேண்டும் என்றும் வேறு யார் இழுத்தாலும் சென்று விட வேண்டாமென்றும்
சொன்னார். நானும் சரியென்று செருப்புக்களை பிளாஸ்டிக் பைக்குள் வைத்தவாறு
(வெளியே வைக்கப்படும் செருப்புக்கள் கிளீனிங் போன்றவைகளால் குப்பைக் கூடையில்
சென்று விடும்) பள்ளிக்குள் செல்லும் போது ஒருவர் என்னை அழைத்தார். நானும்
புன்னகைத்தவாறே 'இல்லை இன்று இவரிடம்' என்று சைகை செய்த வண்ணம் முன்
சென்றேன். இப்போது என் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தார், நானோ அதைத் தட்டி
விட்டு முன்னேறியவாறு திரும்பிப் பார்த்தேன். இப்போது அவர் கோபமாக வந்து என்
கையில் உள்ள பையைப் பிடுங்கி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விட்டு,
'ஙொப்புரானே!, இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?' என்கிற தொனியில் புன்னகைத்துத்
திரும்பத் தந்து விட்டார். நானும் 'அடடா, செக்யூரிட்டின்னு தெரியாமப் போச்சேன்னு அசடு
வழிந்து உள்ளே சென்றேன் (செக்யூரிட்டிகளும் நார்மல் டிரஸ்ஸில்தான் இருப்பார்கள்).

பார்டர் தாண்டி இஸ்லாத்திற்குள் நுழைவிக்கப்படும் யஹூதிகளின் சூழ்ச்சிகளில்
ஒன்றையும் எடுத்துச் சொல்ல மனம் நாடுகிறது. அதுதான் இஸ்லாமிக் டிஸைன்களில்
அவர்கள் புகுத்திய உருவ வெளிப்பாடு. அன்றைய முஸ்லிம் பேரரசின் தலைநகரான
துருக்கியில் புகுந்து விட்ட இந்த தந்திர நரிகள் கார்பெட்,முஸல்லா மற்றும் கட்டிடக்
கலையில் உருவம் வரும் வண்ணமாக இஸ்லாமிய டிஸைனை அமைத்தார்கள்.
(இன்றும் ஆப்கானிஸ்தானில் மிஞ்சியிருக்கும் யஹூதிகளின் தொழில் கார்பெட்).
துருக்கியர்கள் புனரமைத்த ஹரம்களின் தூண்களையும் தொழுவதற்காக நாம் நிற்கும் கார்பெட்டுகளையும் கூர்ந்து கவனித்தால் உருவங்கள் தெரிய வரும். இவ்வளவு ஏன்,
கஃபாவைப் போர்த்தியிருக்கும் கருப்புத்துணியில் கதவின் அருகாமையில் உள்ள தங்க
டிஸைனைப் பாருங்கள். கண்களைப் போல் இரண்டு வட்டங்கள், மூக்கின் வடிவில்
திரை லேசாக விலகியிருக்க,அத‌ன் அடியில் இரண்டு வளையங்கள். மீசையின் இரு
மருங்கிலும் கருப்பு நிறப் பின்னணி, பின் செவ்வக வாய் அளவுக்குத் திறந்த பகுதியில்
மூடிய கதவும் தெரிகிறது. (ஓவரா திங்க் பண்றேனோ !?)

ஆனாலும் அல்ஹம்துலில்லாஹ், சமீபத்தில் கட்டப்பட்ட ஸபா மர்வாவை ஒட்டிய
சுவர்களிலும் அதில் பொறுத்தப்பட்டுள்ள சன்னல்களிலும் உருவமற்ற, அழகான
இஸ்லாமிய டிசைன்கள், மக்கள் உஷாராகி விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
மேலும் தவாபின் எல்லையைக் கூட்ட, கஃபாவை ஒட்டிய் துருக்கியர்கள் கட்டிய
பகுதியும் விரைவில் இடிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியும் அறியக் கிடைத்தது.

(இ.அ. தொடரும்)

Wednesday, September 15, 2010

ஹரமைனும் இரண்டாயிரம் கி.மீ தரைவழி காருந்து மார்க்கப் பயணமும்

வாழ்வில் முதன்முறையாக ரமலானில் உம்ரா செய்யும் பாக்கியம்
கிடைத்தது. ரமலானில் உம்ரா செய்வது பெருமானாருடன் ஹஜ்
செய்வதற்க்குச் சமம் என்று சொன்னதுதான் போதும் மக்கள்
லட்சக்கணக்கில் குவிந்து விடுகிறார்கள் ஒவ்வொரு ரமலானிலும்.

நாங்கள் நால்வர் டொயோட்டா கேம்ரியில் முதலில் மதீனா முனவ்வரா
பின் மக்கா முகர்ரமா சென்று உம்ரா நிறைவேற்றி திரும்பும் வழியில்
ஜித்தா,ரியாத்,தமாம் சென்று உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து
விட்டுத் திரும்பியது வாழ்வின் உன்னதத் தருணங்களில் ஒன்றாகும்.

* * * * * * * * * * * * * * * *

ரமலான் உம்ரா அதீத திருப்தி தரக் காரணம் தராவீஹும் கடைசிப்பத்தின்
கியாமுல் லைல் மற்றும் அழுகையுடன் அமைந்த கூட்டு துஆக்களும்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நம் செவிகளுக்கு அமுதூட்டி வரும்
ஷேக் ஷ்ரைமும் ஷேக் சுதேஸும் கியாமுல்லைலில் விருந்து
படைத்தார்கள். தராவீஹில் ஷேக் மாஹிரும் இன்னொருவரும் மனதுக்கு
இதமாக கிராஅத் மழை பொழிந்தார்கள். இவர்களை மட்டும் அறிந்த எனக்கு
இம்முறை புதியதாக ஒருவரைக் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்,
மதீனாவின் ஷேக் ஸலாஹ் அல்புதைர். வாவ், எல்லோரையும் தூக்கிச்
சாப்பிட்டு விட்டார் மனுஷன். ஷ்ரைமுடைய Grand குரலும் சுதேஸுடைய
நளினமும் மாஹிருடைய மென்மையும் கலந்த குரல், மாத்திரமல்ல கல்
நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் துஆ செய்யக்கூடியவர். மதீனாவில்
இவருடைய துஆவின் போது அழுத அளவுக்கு மக்காவில் சுதேஸின்
துஆவின் போது அழவில்லை. (ஒரு வேளை முதலில் மக்கா சென்று பின்
மதீனா சென்றிருந்தால் vice versa வாக இருந்திருக்குமோ ?)

* * * * * * * * * * * * * * * *

பெண்களின் வருகை 50 சதவீதமா அல்லது ஆண்களை விட அதிகமோ
என்று எண்ணும் அளவுக்கு அதிகமாக வந்திருந்தனர். அது மட்டுமல்ல‌
ஹஜருல் அஸ்வதின் அருகில் செல்ல முண்டியடித்தவர்களில் 15 சதவீதம்
பெண்கள். அஸருக்குப் பின், நோன்பு திறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு
முன் எனது நண்பர் சொன்னார் 'கஃபாவைப் பார்த்துக் கொண்டிருப்பதும்
நன்மை தரக் கூடிய வணக்கமாகும், வாருங்கள் அதனருகில் சென்று
அமர்ந்து கொள்ளலாம்.' என்று.

ஆனால் கடுமையான கூட்டமும் அதனைக் கட்டுப்படுத்தும் காவலர்களின்
கெடுபிடிகளாலும் எங்களால் கஃபாவைக் காணும் வகையில் நிற்கவோ
உட்காரவோ முடியாமல் பின்னேறி நாங்கள் அமர்ந்த இடம் பெண்கள்
அதிகமாக இருந்த இடம். நண்பர் சொன்னார் 'என்னங்க இது, நன்மையை
நாடிச் சென்றோம், விதி பாவத்தின் பக்கம் இழுத்து வந்து விட்டதே.
அதுவும் நோன்பு திறக்கும் நேரம் பார்த்து.
திடீரென எனக்குள் ஒரு ஞானப் பொறி தட்ட :) , நான் சொன்னேன்.

'பாய், அதுவோ ஹரம்; அதனைப் பார்த்தால் நன்மை ,
இதுவோ ஹரீம் (பெண்) ; இவர்களைப் பார்க்காமல் இருந்தால் நன்மை.
எனவே இரண்டிலும் நன்மைகள்தாம், கவலைப்படாதீர்கள் :)

(பெண்களின் எதிரில் இருந்து கொண்டு அவர்களைப் பார்க்காமல் இருப்பதும்
நமக்குள் கட்டுப்பாடு வருவதற்கான பயிற்சிதான்).

ஹரம்(புனித பகுதி),ஹராம்/மஹ்ரம்(தடுக்கப்பட்ட),ஹரீம்/ஹுருமா(பெண்)
இவையெல்லாம் ஒரே எழுத்திலிருந்து வந்தவையென நினைக்கிறேன்.
(அரபி பண்டிதரின் ஒப்புதலையோ/மறுதலித்தலையோ எதிர் பார்க்கிறேன்)

பெண்களை இஸ்லாம் எந்தளவு கண்ணியப்படுத்த அல்லது பாதுகாக்க
நினைக்கிறது என்பதை மேற்கண்ட‌ சொற்களைச் சிந்திப்போருக்குத் தெரியவரும்.

* * * * * * * * * * * * * * * *

இங்கு இரக்கப்பட வேண்டியவர்கள் ஹரமிலும்,அதனைச் சுற்றியுள்ள்
ஹோட்டல்களிலும் கிளீனிங் வேலை பார்ப்பவர்கள். பாவம் மக்காவில்
வேலை மதீனாவில் வேலை என்று ஆர்வமாக வந்தவர்களுக்கு இங்குள்ள
வேலைப் பளுவில் பெண்டு நிமிர்ந்து விடுகிறது, அதுவும் வேலைப் பணிகள்
குறைக்கப் பட வேண்டிய ரமலான் மாதத்தில். மேலும் பெண்களை
அதிகமாகப் பார்த்து மனம் கெடுவதும் பயணிகளில் சிலர் இரக்கப் பட்டுக்
கொடுக்கும் டிப்ஸ்/ஸதகா வாங்கிப் பழகி, அதை எல்லோரிடமும்
எதிர்பார்த்து, பின் வாய் விட்டே கேட்கும் அளவுக்கு மாறிப் போகிறார்கள்.
புனிதப் பகுதியைக் கழுவிப் புண்ணியம் தேட வந்து மனம் குப்பையாய்
போனதை அறியாமல் வேண்டா வெறுப்பாக வேலை செய்து வரும்
இவர்களை நினைத்து இரக்கப் படாமல் என்ன செய்வது.

உச்சமாக‌, பெருநாள் இரவில் சுத்தம் செய்கிறோம் பேர்வழி என்று
ஆங்காங்கு மாட்டி வைக்க‌ப்பட்ட பைகளையும் பொதிகளையும் பிளாஸ்டிக்
கீஸ்களையும் பிய்த்தெடுத்து குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியே
சில மீட்டர் தூரம் கொண்டு சென்று ஒரு மூலையிலோ போட்டு விட்டதால்,
பயணிகள் தமது கடவுச்சீட்டு,பர்ஸ்,செல்போன்,புதிய/பழைய துணிமணிகள்,
உறவினர்களுக்காக வாங்கி வைத்திருந்த்த பொருட்கள் அனைத்தும் நிறைந்த
அல்லது இவற்றில் ஏதோ வைத்திருந்த பை காணாது தவித்து பின்
எடுத்தவர்களைச் சபித்து ..., வேண்டாம்பா,
இந்த சாபத்தை வாங்குவதை விட சம்பாதிக்காமலே இருந்து விடலாம்.

(தொடரும்)

Wednesday, August 11, 2010

பொன்னும் கெடச்சுது புதனும் கெடச்சுது

......................................................................
காலம் பொன் போன்றது (கடமை கண் போன்றது)
......................................................................

அதுவும் ரமலானின் காலம் 'தேடிக் கிடைக்காத தங்கம்' போல. கிடைத்து
விட்டால் அதுவே பெறும் பேறு. நபியவர்கள் இப்படி துஆ கேட்பார்களாம்.

"இறைவா ரஜப்,ஷஃபான் மாதங்களில் பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக,
ரமலானை அடையும் பாக்கியத்தைத் தருவாயாக"

அனுபவமா அல்லது ஐதீகமா தெரியாது, சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்,
ரமலானுக்கு முந்திய மாதமான ஷஃபானில் இறந்து போகும் வயதானவர்களின்
அல்லது நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று.

ஆதலால் ரமலானை அடைந்தவர்கள் பெறும் பாக்கிய சாலிகள்.
மட்டுமல்லாது இம் மாதத்தில் கிடைக்கும் நன்மைகளின் எண்ணிக்கை
மற்றும் மன்னிக்கப்படும் பாவங்களின் எண்ணிக்கை கணிணியில்
அடங்காது. இந்த மாதத்தில்தான் ஒரு நாள் இருக்கிறது, அந்த நாள்

எழுபது தாய்களின் பாசத்தை உடைய ஜனாதிபதியின்
கண்டிப்பு நிறைந்த தந்தை மனம் கொண்ட சர்வாதிகாரியின்
சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தி நிர்வகிக்கும் பிரதம மந்திரியின்
அரசர்க்கெல்லாம் அரசனான அந்த அல்லாஹ்வின்

ஆயிரம் மாதங்களுக்கு நிகரான ஒரு

'பொது மன்னிப்பு தினம்'.

இதுவும் கிடைத்து விட்டால் பொன் கிடைத்து, புதன் கிடைத்து,
புதையலும் கிடைத்த மாதிரி; முயற்சிப்போமா .

ரமலான் கரீம் !!

----------------------------------------------------------------------


சென்ற மாத ஜும்ஆ/குத்பா பேருரையில் கேட்ட/மனதில் தங்கிய
சில நல்ல கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.

வெற்றிக்கான மூன்று நல்ல விஷயங்கள் (முனஜ்ஜியாத்)
......................................................................

1.
கோபமான சமயத்திலும், மகிழ்ச்சியான தருணத்திலும்....நீதமாக நடத்தல்

2.
வறிய நிலையில் கஞ்சத்தனமோ அல்லது செல்வ நிலையில் வீண்
விரயமோ செய்யாது எல்லா நிலையிலும் ஒரே மாதிரியாகச் செலவழித்தல்

3.
ரகசியத்திலும் பரகசியத்திலும் (தனிமையிலோ / மற்றோரின் முன்னோ)
இறைவனுக்குக் கட்டுப்படும் தன்மையில் வித்தியாசமில்லாமல் இருப்பது



அழிவைத்தரும் மோசமான ஏழு விஷங்கள்.
.....................................................................

1. இறைவனுக்கு இணை வைப்பது

2. பில்லி சூனியம் செய்வினையில் ஈடுபடுவது

3. கொலை செய்வது

4. வட்டி வாங்கி சாப்பிடுவது

5. அனாதைகளின் பொருளைச் சாப்பிடுவது

6. போரில் புறமுதுகிட்டு ஓடுவது

7. பத்தினிப் பெண்ணை அவதூறு செய்வது


----------------------------------------------------------------------


ஹூம், ஏதோ ஒரு உந்துதலில் பதிவெழுத வந்து, வந்த வேகத்தில்
பன்னிரண்டு பதிவு போட்டுப் பின் குறைந்து தேய்ந்து ஒரே ஒரு
கட்டெறும்பாகியிருக்கிறது. பார்க்கலாம் இனி அடுத்தமாதம்
இந்தப் பிறை மீண்டும் வளருமா என்று.


இன்ஷா அல்லாஹ், ஒரு மாதத்திற்கு இந்தப் பக்கம் வர மாட்டேன்.
அதனால‌ போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த சொல்லிட்டு போறேன்,
.
.
.
.
.
.
.
.
.
v


'போயிட்டு வாறேன்' (இன்ஷா அல்லாஹ்) :-)



ரமலான் & ஈத் முபாரக்,
வஸ்ஸலாம்.

Wednesday, July 28, 2010

இறைவன் பற்றிய கேள்விகள் அன்றும் ... என்றும்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பொரு நாளில்,

இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)எனப்படும் ஆபிரகாமிடத்தில்
நம்ரூது மன்னன் கேட்டான் 'நீ கூறும் கடவுள் எத்தகையவன் ?'.

'என் இறைவன் தான் நாடியதைச் செய்கிறான். உயிரில்லாதவற்றிற்கு
உயிர் கொடுக்கிறான், உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்கிறான்.'

உடனே நம்ரூது, சிறையிலிருந்து இருவரை அழைத்து வரச் செய்து,
அவர்களில் மரண தண்டனைக் கைதியை விடுதலை செய்து சில நாட்களில்
விடுதலையாக இருந்தவனைக் கொல்லுமாறு ஆணையிடுகிறான்.

இப்போது இப்ராகீமை நோக்கி,'பார்த்தாயா! நான் நாடியதைச் செய்தேன்.
ஒருவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்தேன் இன்னொருவனின் உயிரை
எடுத்தேன். ஆதலால் நானும் கடவுள்தான் என்று நம்புகிறாயா'.

'என் இறைவன், சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்து மேற்கில்
மறையச் செய்கிறான், உமக்கு முடியுமானால் அதனை மாற்றிக் காட்டவும்'.

இதற்கு பதில் சொல்ல முடியாத நம்ரூது, இவரை நெருப்பிலிட்டுப்
பொசுக்குங்கள் என்று ஆணையிட்டான்.

ஆனால் நடந்தது என்ன ?
இப்ராகீம் நெருப்புக்குள் போடப்பட்டும் எரியாமல் தப்பித்து நீண்ட நாட்கள்
வாழ்ந்தார். நம்ரூது மன்னனோ செருப்படி வாங்கியே கேவலமாகச் செத்தான்.
செருப்பால் அடித்தால் மட்டுமே மண்டைக் குடைச்சலிருந்து சிறிது நேரம்
நிவாரணம் என்ற நிலை கண்டு செருப்பால் அடிப்பதற்காகவே சில
வேலைக்காரர்களை நியமித்திருந்தான்.

-------------------------------------------------------------------

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பொரு நாளில்,

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) என்கிற மோசஸிடம் 'நானல்லவா உனது
இறைவன் நீ வேறு யாரையோ இறைவன் என்றும் அவனுடைய தூதராக
உன்னைச் சொல்கிறாயே, அத‌ற்கு என்ன ஆதாரம்' என்று கேட்ட
பிர் அவுன் என்கிற பாரோ மன்னனுக்கு முன் தனது கைத்தடியை எறிந்த
போது அது பாம்பாக மாறிய்து. மேலும் மூஸாவின் கையிலிருந்து ஒரு
பிரகாசம் கிளம்பியது. இதைப் பார்த்த பிர்அவ்ன்,'பூ இவ்வளவுதானா,
மவனே உன்னை விட மேஜிக் தெரிந்தவர்கள் என்னிடத்தில்
ஆயிரக்கணக்கில் உண்டு' என்று எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தனக்கு
விசுவாசமான மந்திரவாதிகளை அழைத்து வரச் செய்தான்.

அவர்களும் மூஸா செய்தது போலவே தமது கைத்தடிகளை எறிந்து
பாம்பாக மாற்றிக் காட்டினார்கள். இப்போது மூஸா(அலை) தமது
கைத்தடியை எறிந்தார்கள். அது மிகமிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பாம்பாக
மாறி எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மந்திரவாதிகளின் பாம்புகளை
விழுங்கி கபகளீகரம் செய்தது. இதனைப் பார்த்த மாத்திரத்திலேயே
ஆயிரக்கணக்கான மந்திரவாதிகளும் மண்ணில் விழுந்து இறைவனைப்
போற்றி மூஸாவின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
கடுங்கோபம் கொண்ட பிர்அவ்ன் முஸ்லிம்களைத் துரத்திக் கொண்டு
செல்லும் போது லட்சக்கணக்கான படைவீரர்களோடு நைல் நதியில்
மூழ்கிப் போனான். மூஸாவும் அவரை நம்பியவர்களும் இறை அருளால்
நைல் நதியைக் கடந்து வேறிடம் சென்று நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

-------------------------------------------------------------------

ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பொரு நாளில்,

அதிகாரத்தில் இருந்த ஒருவன், இறைவன் இருப்பதை தன் புத்திக்கு
எட்டுமாறு நிருபிக்க வேண்டும் என்றும் ஆனால் குர்ஆனிலிருந்தோ
ஹதீஸிலிருந்தோ எதுவும் சொல்லக்கூடாதென்றும் விட்ட சவாலை நுஃமான்
என்னும் வாலிபர் ஏற்றுக்கொண்டார். நிரூபிக்க நாளும் குறிக்கப் பட்டது.
ஆனால் அந்த நாளன்று நுஃமான் வர மிக மிகத் தாமதாகியது. கடைசி
நேரத்தில் வந்த நுஃமானிடம், தாமதம் பற்றிக் கேட்கப் பட்டது.

"சபையோர் மன்னிக்க, நான் வரும் வழியில் நதி ஒன்று உண்டு. ஆனால்
அதனைக் கடந்து வர படகு போன்று எதுவும் அங்கிருக்கவில்லை. என்ன
செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அங்கிருந்த
மரத்திலிருந்து மரக்கிளைகள் ஒவ்வொன்றாகக் கீழிறங்கிப் பின் ஒன்றாகச்
சேர்ந்து படகாகியது. அதன் மூலமாக ஆற்றைக் கடந்து வந்தேன். படகு
உருவாவதில் மிக நீண்ட நேரம் பிடித்ததால் இங்கு வரத் தாமதமாகி விட்டது.

இந்தப் பதிலைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆகா, ஏதோ 'கிராக்'
அல்லவா வந்திருக்கிறது என்ற சந்தேகத்தோடு, 'ஏம்பா, உனக்கே இது
ஓவராத் தெரியலயா, எப்படி இதுவெல்லாம் தானா உருவாகும்? என்றார்கள்.
அதற்கு நுஃமான் புன்னகைத்தவாறே 'இதைத்தான் நானும் கேட்கிறேன்,
இந்தப் பூமி,வானம்,சூரியன்,சந்திரன்,கோள்கள்,நட்சத்திரங்கள்,மலைகள்,
கடல்கள்,மனிதர்கள்,விலங்குகள்,பறவைகள் இன்னும் எத்தனை
எத்தனையோ கண்ணுக்குத் தெரிந்த தெரியாத‌ ஜீவராசிகள் எப்படித் தாமாக
உருவாகியிருக்க முடியும். உங்களுக்கே இது ஓவராகத் தெரியவில்லையா !

இதற்குப் பதில‌ளிக்க முடியாமல் அடுத்தக் கேள்வியைக் கேட்டனர்.

'சரி, இறைவன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்,ஆனால் அவன் எங்கு
இருக்கிறான் ; எந்தப் பக்கம் அல்லது யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?"

இதற்குப் பதிலாக அனைவரையும் ஒரு இருட்டறைக்குள் அழைத்துச் சென்று,
விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, 'இப்போது சொல்லுங்கள்,
இந்த ஒளி அல்லது வெளிச்சம் எங்கிருக்கிறது ; அது எந்தப் பக்கம் பார்த்துக்
கொண்டிருக்கிறது ?. ம், ஒரளவு புரிந்தது விட்டது. இனி அடுத்த கேள்வி
'இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் ?.

"இதற்குப் பதில் தருவதற்கு முன் நீங்கள் என்னிடத்திற்கு இறங்கி வர
வேண்டும் ; நான் தங்களின் நாற்காலியில் அமர வேண்டும், சம்மதமா ?"

கேள்வி கேட்டவர் இறங்கி வர நுஃமான் நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
"இப்போது இறைவன் தங்க‌ளைப் பதவியிலிருந்து இறக்கி என்னை அந்தப்
பதவியில் அமர்த்தினான்".

பிறகு அனைவரும் மனம் (மதம்?) மாறியதைச் சொல்லவா வேண்டும்.

------------------------------------------------------------------

சில வருடங்களுக்கு முன் கம்யூனிஸம் தழைத்திருந்த நாளொன்றில்,

சவூதி அல்லது அதன் சகோதர நாட்டின் பள்ளிக்கூடம் ஒன்றின்
வகுப்பறையில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர், மாணவர்களிடம்
வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் சுட்டிக்காட்டி என்னவென்று
கேட்க, ஒவ்வொன்றின் பெயர்களையும் மாணவர்கள் சொல்லிக் கொண்டு
வந்தார்கள். கடைசியாக ஆசிரியர், "மாணவர்களே! இவையத்தனையும்
கண்ணால் காண்கிறோம்; அதன் பயன்களை அறிகிறோம். ஆனால்
இறைவன் என்று ஒன்றை நம்புகிறோமே அதனைக் கண்ணால் காண
முடிகிறதா அதன் பலன்களைப் பெற முடிகிறதா ? அத‌னால் இறைவன்
என்று ஒன்றும் கிடையாது; இதை யாராலும் மறுக்க முடியுமா ?" என்றார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்று "நம்ம வாத்தியாருக்கு மூளையே
கிடையாது; ஏனென்றால் அதனை நம்மால் காண முடியவில்லை".
இந்த பதிலால் வாத்தியும் மாணவர்களும் திகைத்துப் போனார்கள்.

--------------------------------------------------------------------

வரலாற்றின் ஏதோ ஒரு நாளில்,

மெத்தப் படித்த ஒருவன் தன்னிடம் 'இறையின் இருப்பை'ப் பற்றிய‌
மூன்று கேள்விகள் இருப்பதாகவும் அதற்குப் பதில் கிடைக்காத வரை
'இறை மறுப்பை'க் கைவிடப் போவதில்லை என்றும் எல்லா
அறிஞர்களிடமும் சென்று சவால் விட்டுக் கொண்டிருந்தான். அறிஞர்
ஒருவர் அவனிடம் அந்த மூன்று கேள்விகள் யாவை எனக் கேட்க,

1. இறைவன் உண்டா ? அப்படியிருந்தால் அவனை நீங்கள்
எனக்குக் காட்ட வேண்டும்.
2. 'விதி'யென்பது யாது ?
3. ஷைத்தான் நெருப்பால் படைக்கப் பட்டதாகவும் இறுதியில் நெருப்புக்
கங்குகளால் நிரப்பப்பட்ட நரகத்தைச் சென்றடைவான் என்றும்
இஸ்லாம் கூறுகிறதே ! நெருப்பு எப்படி நெருப்பால் படைக்கப்
பட்டவனுக்குத் தண்டனையாக அமையும் ?

சிறிது நேரம் யோசித்த அறிஞர், கேள்வி கேட்டவனுக்கு ஒரு அறை
கொடுத்தார். 'ஆ! என்று அலறியவனை நோக்கி 'வலிக்குதா!' என்று
கேட்க அவனும் கோபத்துடன் தலையசைக்க, 'வலிப்பது உண்மையானால்
அந்த வலியை எனக்குக் காட்டு' என்று அறிஞர் சொல்ல, 'அதெப்படி காட்ட
முடியும், வலியை உணரத்தான் முடியும்' என்றவுடன், 'இதுதானப்பா
உன்னுடைய முதல் கேள்விக்கு பதில், இவ்வுலகில் இறைவனைக்
காட்டவோ அல்லது பார்க்கவோ இயலாது; உணரத்தான் முடியும்.

'விதி' பற்றிய அடுத்த கேள்விக்கு, 'நான் உன்னை அடிக்கப் போவதை
முன்பே அறிவாயா' எனக்கேட்க அவன் இல்லையென்று தலையாட்டினான்.
"நீ மட்டுமல்ல, நான் உன்னை அடிக்கப் போகும் விஷயம் எனக்கும்
தெரியாது; ஆனால் இது இறைவனால் முன்பே எழுதப் பட்ட விஷயம்,
நாம் அறியாமலே நடந்தேறியிருக்கிறது, அது தான் 'விதி' என்பது.

அடுத்து என்னுடைய கையும் அடி வாங்கிய உன்னுடைய கன்னமும்
எதனால் ஆனவை. இரண்டுமே மண்ணால் படைக்கப் பட்டவை அல்லவா
இருந்தும் உனக்கு வலிக்கிறதே அது போலத்தான் ஷைத்தானுக்கும்
வலிக்கும், போதுமா :-‍) (இதற்கு மேல அவனால் என்ன சொல்ல முடியும்).

---------------------------------------------------------------------

இன்னும் எத்தனையோ சம்பவங்கள் கேள்வி பதில்களால்
நிரம்பியிருக்கின்றன. இருந்தும் இறை மறுப்பாளர்களாலும்
இணை வைப்போராலும் கேள்விகள் கேட்கப்பட்டுக்
கொண்டே.....யிருக்கின்றன. காரணம் 'தாம் நாடியவரை
நேர்வழியில் செலுத்துகின்றோம்' என்று அல்லாஹ் கூறுவதால்
'எல்லோருக்கும் நேர்வழி கிடைக்கும்' என்று எதிர்பார்க்க முடியாது.

டிஸ்கி 1 :
ஏண்ணா! அப்படீண்ணா கேள்வியே கேட்கக்கூடாதான்னு கேட்கப்படாது !

ஏன்னா, இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொல்லப் பட்ட இப்ராகீம் அவர்களே
கேள்வி கேட்டவர்கள்தாம், ஆனால் அறிந்து கொள்ள வேண்டி தம்மைத்
தாமே கேட்டுக் கொண்டார்கள், ஆராயும் விதத்தில். இரவில் நட்சத்திரம்
மின்னுவதைப் பார்த்து 'இது இறைவனாக இருக்குமோ ? அதன் பின் வந்த
நிலவைப் பார்த்து, இல்லையில்லை, இதுதான் இறைவனாக இருக்கும்
என்று நம்பினார். பின்னர்,காலையில் சூரியனைப் பார்த்து 'ஓ, இதுதான்
பெரியது, இதுதான் இறைவன், மற்றதெல்லாம் மறைந்து விட்டன. பிறகு
சூரியனும் மறைந்த போது,'இறைவா! நான் உன் பக்கம் திரும்புகிறேன்.
எனக்கு நேர்வழி காட்டுவாயாக! என்று இறை ஞானம் கிடைக்கும் வரை
தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

டிஸ்கி 2 :
இவ்வளவு சொல்லியும் மனம் சமாதானம் அடையவில்லையா இறை
மறுப்புச் சகோதரர்களே! உங்களுக்குள் பின்வருமாறு சொல்லிப் பாருங்கள்
'முஸ்லிம்கள் சொல்வது போல் அப்படி ஒரு நீண்ட முடிவில்லாத
வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது ? '

வஸ்ஸலாம்.

Tuesday, July 06, 2010

டாப் டென்னா இல்ல நூத்துல ஒண்ணா


இல்லையில்லை,
'மனித கோடிகளிலே'
நம்பர் ஒண்ணு, இதை
நம்பாதவன் வாயிலதான் மண்ணு.


====================================================================




=====================================================================

'முகம்மது'க்கு அர்த்தமே புகழப்பட்டவர்.

இகழ நினைப்ப‌வர்களே வேறு வழியின்றி புகழ்ந்ததும்
அதையும் மீறி
இகழ்ந்தவர்கள் வாழ வழியின்றி
இருந்ததையும் இழந்து இழிந்தவர்களாகிப் போனதும்
இன்றல்ல நேற்றல்ல அது எக்காலத்திற்குமுள்ள விதி
அதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது.

====================================================================

'உம்மி நபி' என்றாலே எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றுதான்
நினைத்தேன்/தோம். ஆனால் நாகூர் ஈ எம் ஹனீபா பாடியதைக்
கேளுங்கள்.

"பள்ளி சென்று படித்ததில்லை ; பாடம் ஏதும் கேட்டதில்லை
'சொல்லித்தரும் தகுதி' இந்த துன்யாவில் எவர்க்குமில்லை (பள்ளி)

'அல்லாஹ்வே ஆசிரியன்' ; அனைத்துமே ஆச்சர்யம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே
(ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா....)

(எழுதிக் கொடுத்த கவிஞருக்கு ஒரு ராயல் சல்யூட்)

====================================================================

தகுதி யாருக்கும் கிடையாது என்பதற்காக மட்டுமல்ல ; பிறபின்
இவருக்கு நான் தான் கற்றுக் கொடுத்தேன் என்று எவரும் உரிமை
கொண்டாடக் கூடாது என்பதற்காகவும் தான்.

நபியை ஏழு வானம் தாண்டி வரவழைத்தது கவுரவிப்பது மட்டும்
நோக்கமல்ல, எவனும் அல்லது எந்த விஞ்ஞானியும் விஞ்சக் கூடாது
என்பதற்காகவும் தான்.(இன்னும் இந்த அஞ்ஞானிகளால்
முதல் வானத்தையே கண்டு பிடிச்ச பாடில்லை)

நிலவுக்குள் காலடி வைத்தத‌ற்கே இந்தக் கொக்கரிப்பு எனில் தாம்
நின்ற இடத்திலிருந்தே நிலவைப் பிளந்து பின் சேர்த்தமைக்கு
என்ன சொல்றீங்கப்பூ !?.


சரி, சாதனைகளை விடுங்க, அதெல்லாம் நூத்துக் கணக்குல இருக்கு,
அவற்றைச் செய்து காட்ட நமக்கு மட்டுமல்ல எந்த மேஜிக்
வித்தைக்காரனாலும் முடியாது. ஆனா நாம கடைபிடிக்கத் தோதாக
எத்தனையோ நல்ல விஷயங்களை விட்டுச் சென்றுள்ளார்களே,
அதைப் பார்க்க வேணாமா.

ரெண்டு மூணு நல்ல கருத்துக்களைச் சொன்னதற்காக‌ பெர்னாட்ஷா
போன்ற அறிஞர்களைக் கொண்டாடுகிறோமே, நபிகள் நாயகத்தை நல்ல
மனதோடு (திறந்த மனதோடு) படிப்பதற்குத் தடையாக இருப்பது எது ?

PREJUDICE என்கிற, ஏற்கெனவே அவர்கள் மீதுள்ள வஞ்சமும்,கசடும்
அல்லது படித்தாலும் குறை காணும் நோக்கமேயன்றி வேறில்லை

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாறி தூற்றுவோர் தூற்றட்டும் என்று
இருக்க முடியவில்லை காரணம் மனம் தாங்க முடியவில்லை இந்த‌
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்.

புறக்கணிப்பும் புழுதி வாரி தூற்றுவதும்தான் நபிகளைப் பற்றிய நல்ல‌
விஷயங்கள் மாற்றாரிடத்தில் சென்றடைய‌வில்லை.

நபியுடைய மருமகன் ஹஜரத் அலீ (ரலி) அவர்களிடம் நாயகத்தைப் பற்றிக்
கேட்டபோது, 'முகம்மது(ஸல்)அவர்கள் கடுமையான தாகத்தின் ச‌மயத்தில்
கிடைத்த குளிர்ந்த நீரைப் போல் எங்களுக்குத் தெரிந்தார்கள்' என்று.

ஹஜரத் குபைப் (ரலி) அவர்களை இறை மறுப்பாளர்கள் தூக்கு மரத்தில்
ஏற்றி விட்டுக் கேட்டார்கள், தமது அரிப்பை அல்பத் தனமாகத் தீர்க்கும்
வண்ணம், 'உம்மை விட்டு விடுகிறோம், ஆனால் உமக்குப் ப‌திலாக
முகம்மதைக் கழுவிலேற்ற சம்மதிப்பீரா ? '.

குபைபிடமிருந்து உறுதியாக பதில் வந்தது. 'நான் வீட்டில் மனைவி
குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் நிலையிலும் நபியுடைய காலில்
முள் தைப்பதைக்கூட எங்களால் தாங்க முடியாது'.

----------------------------------------------

'ஹூம் ...

"என்று தெரியும் எங்கள், நபிகளின் தியாகம்
அன்று புரியும் இந்த அடிமையின் சோகம்"

நாயகத்தைப் புகழ்வதற்கு வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றி.

இந்த நேரத்தில் இது கூட எழுதலன்னா ...

வலைப்பூ வைத்திருப்பதே வேஸ்ட்டு.

Monday, June 28, 2010

மாத்தி யோசி, நல்லவிதமாய்

திரவியம் தேடி வெளியூர் செல்லுமுன் குருவிடம் ஆசி பெறச் சென்ற
சிஷ்யனிடம், சிறிது நேரம் தோட்டத்தில் சென்று அமர்ந்து விட்டு வருமாரு
பணித்தார். சில மணி நேரம் கழித்து சிஷ்யனை அழைத்து விசாரித்தார்.

'குருவே,குறிப்பை அறிந்து கொண்டேன்; நான் பயணம் செல்ல வில்லை'.

'பொறு சிஷ்யா, அப்படி அங்கு என்னதான் கண்டாய் ? '

'கண் தெரியாத ஒரு குருட்டுப் பாம்பிற்கு உணவு கொண்டு வந்த
வண்ணமாய் இருந்த ஒரு பறவையைப் பார்த்தேன். இறைவனின்
கருணையை எண்ணி என் கண்கள் கலங்கின. பாம்பிற்கே பழம்
வார்க்கும் இறைவன் எனக்கும் வழங்காமலா போய்விடுவான்
என்ற ஞானம் கிடைத்தது,அதனால் செல்வம் சேகரிக்கச் செல்லும்
எண்ணத்தைக் கைவிட்டேன்'.

இதற்கு குரு சொன்ன பதில் ரொம்ப முக்கியமானது.

குருட்டுப் பாம்பாய் இருக்க ஏன் ஆசைப்படுகிறாய். மாத்தி யோசி நண்பா,
குருவியாக இருப்பதில் பெருமிதம் கொள். உனக்காக மட்டும் சம்பாதிக்க
எண்ணாமல் உன்னைச் சார்ந்தவர்களுக்கும், உடல் நலிவுற்றவர்களுக்கும்
சேர்த்துச் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செல்வாயாக ; சென்று வென்று
வருவாயாக. இறைவனருள் எப்போதும் உனக்கு உண்டு.

வியந்தவாறு நன்றி கூறி விடைபெற்றான் சிஷ்யன்.

===============================================

நம்ம மக்கள்ஸே இப்படித்தான், தனக்குத் தோதாக எதையும் எடுத்துக்
கொள்வது அல்லது தோதாக வளைத்துக் கொள்வது.

ஒரு முறை 'குடியின் கெடுதி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக்
கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. SPIRIT அல்லது சாராயம் இருந்த
பாட்டிலுக்குள் ஒரு சில புழுக்கள் போடப்பட்டு, சில வினாடிகளில்
அப்புழுக்கள் துடிதுடித்து இறப்பதையும் காட்டப்பட்டு 'குடிப்பதால் சாவைச்
சந்திக்க நேரிடும்' என்றும் விளக்கப்பட்டது.

அப்போது கூட்டத்திலிருந்த 'குடிமகன்' ஒருவர் எழுந்து, 'ஏன் இப்படி
இருக்கக்கூடாது ? குடிப்பதால் வயிற்றினுள் தொல்லை கொடுக்கும்
புழு பூச்சிகளை அழிக்கலாமே ?

யே யப்பா என்னமா யோசிக்கிறாய்ங்க. :-)

===============================================

தத்து பித்துவம் அல்லது நகைத்துவம் ஒன்று
-----------------------------------------

"கடவுளை மற : மனிதனை நினை" என்று அன்று சொன்னவர்களுக்கு

இன்று

"தமிழை மற : தமிழனை நினை" என்று நினைவூட்டப்படுது பேஷ் பேஷ்

Wednesday, June 23, 2010

கண்டதும், கேட்டதும்

புரியாத பிரியம் ...
பிரியும் போது தான் புரியும்

* * * * * *

உதயக் குளியல் உத்தமம்
மதியக் குளியல் மத்யமம்
அந்திக் குளியல் அனத்தம்

* * * * * *

சுத்தம் சோறு போடும்
*அசுத்தம்* நாற்றம் தரும்

(* இந்த இடத்தில் எதுகை/மோனை விரும்பினால்
இலகுவாக‌ எதுவேணாலும் போட்டுக்கவும்)


* * * * * *

சயின்ஸ் கருத்தும்
சாக்கடை திறப்பும்
ச‌ட்டென‌
மூக்கில் விரல் வைக்க
வைத்தாலும்

சரித்திரத்தில்
சாகா வரம் பெற்றது
சமுத்திரத்தில் கலக்காத‌
சங்கதிகள்தாம்

* * * * * *

டிஸ்கி :
பிரபலம் ஆகா வரைக்கும் நல்ல வசதிதான் ;
இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருக்கலாம் :‍-)

Sunday, June 20, 2010

ஆக்டிவ் வாய்ஸும் பாஸ்ஸிவ் வாய்ஸும் சில பொச‌ஸிவ்னெஸ்ஸும்

என்னாங்கப்பூ ? கடுப்பு நீங்க தடுப்பூசி போட வலையுலகம் வந்தால்
வலையும் சேர்ந்து கடுப்பேத்துது. வியாழக்கிழமை ப்ளாக்கர் திறக்கல,
ஜீமெயில் திறக்கல, தமிழ்மணமோ எப்ப திறந்தாலும் கடந்த வாரப்
பக்கத்தையே இன்னும் காட்டுது, நம்ம கடைக்கு வெள்ளி சனி லீவு வேறயா,
கை அரிச்சு கவுஜை வேற எழுதியாச்சு என்ன செய்றது, சரி பரவாயில்ல,
ஆறிப் போனதை மீண்டும் சூடாக்கிக் கொட்டியிருக்கிறேன்.
தைரியமிருந்தா படிச்சுக்கோங்க.
(கடுப்பு ட்ரான்ஸ்ஃபர் ஆகி அங்கே வந்து விட்டால் கம்பெனி பொறுப்பல்ல)


* * * * *



ஆண் அவளை நோக்கினான்
அவள் நிலம் நோக்கினாள்

நகை புன்னகை
இருந்தால் ரிப்பீட்டு
இல்லையென்றால் ரிஜக்டு

அவன் அவளை மணந்தான்

அல்லது

அவள் அவனை மணந்தாள்

நகை புன்னகை இல்லையெனில்
புகை அல்லது பகை

ஆண் அவளை நோக்கினான்
அவளோ நிலம் நோக்கினாள்
சதுர அடி கணக்கில்

சாதா நிலத்தையும்
சஞ்சீவி மலை போல்
பெயர்த்துத் தரவில்லையெனில்
பொல பொல வெனப் பெய்யும் மழை

அவர்களைப் போல் இல்லை
இருந்தால்
உயரமில்லை
இருந்தால்
நுனிநாக்கில் சக்கரையில்லை
இருந்தால்
ஏதோ இல்லை

சே ஒரே தொல்லை

செய்வினை செயப்பாட்டு வினை
இரண்டும் எப்படி சமமாகும்

என்ன செய்ய..

எழுத்தறிவித்தது மட்டுமல்ல
இலக்கணம் வகுத்ததும் இறைவன் தான்

பொறுமை கடலினும் பெரிது.

Monday, June 14, 2010

பயணிகள் கவனத்திற்கு

விமானப் பயணிகள் என்று தலைப்பிட்டிருக்கலாம்தான், என்றாலும்
அனேகர் வீடுகளிலோ அல்லது சொந்தத்திலோ யாராவது விமானத்தில்
பயணிப்பவர்கள் இருப்பதால் அனைவருக்கும் விவரம் புரியட்டுமே.

* * * * * * *

சென்னையிலிருந்து அமீரகத்திற்கு எமிரேட்ஸில் வரும்போது அமீரகம்
செல்பவர்களுக்கு லக்கேஜ் 30+10 எனவும் யு.எஸ் செல்பவர்களுக்கு 44+7
எனவும் அனுமதிக்கப் பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதுவும் யு.எஸ்
லக்கேஜ் ஒரு Bag 22 அல்லது 23க்கு மிகாமல் இருக்க வேண்டுமென்பதில்
கண்டிப்பாக இருந்தார்கள்.

இது தெரியாமல் அதிகமாகக் கொண்டு வந்தவர்கள், சில பிரியமான
பொருட்களை இழக்க வேண்டியிருந்தது, 22+22 என்று சமமாகக் கட்டிக்
கொண்டு வராமல் ஒன்று பெரிய Bag லும் இன்னொன்று சிறிய Bag லும்
கொண்டு வந்தவர்கள் இரண்டையும் சமமாக்க மிக சிரமப் பட்டார்கள்.

* * * * * * *

வளைகுடா நாடுகளில் கோடை விடுமுறை ஜூலையில் ஆரம்பிப்பதால்,
விமானக் கட்டணம் ஜூனிலேயே டேக் ஆப் ஆயிடும் என்பது தெரிந்த
விசயம்தான் எனினும் தற்போது இன்னொரு அதிர்ச்சியும் அறிமுகப் படுத்த
இருக்கிறார்கள் (முன்பே வந்து விட்டதா என்று தெரியவில்லை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்). லக்கேஜ் வெயிட் 40+10 என்று இருந்ததை சீசன்
சமயத்தில் 30+7 ஆகக் குறைக்க இருக்கிறார்கள். எத்தனை பேருக்குத் தெரியும்
என்று தெரியவில்லை, பழைய நினைப்பிலே வருபவர்கள்,பாவம் பத்து
கிலோவுக்குக் குறையாமல் பணம் கட்ட வேண்டி வரும்.

* * * * * * *

பயணக்காரன் அரைப் பைத்தியக்காரன் என்பார்கள். விமானத்தில்
அமர்ந்தவுடன் அவனை ஆசுவாசப்படுத்துவது விமானப் பணிப்பெண்களின்
அன்பான உபசரிப்புகள்தாம். இன்று Budget Airlines என்கிற பேரிலே
Hospitality ஐச் சிதைத்து விட்டார்கள். Cost Cutting என்ற பேரிலே இந்த
மாதிரி ஐடியா கொடுப்பது ஆசியாக் கண்டத்தைச் சார்ந்தவர்கள்தாம். :-)

Customer Care,Value for Customer,Guarantee,Warranty,Utility,Hospitality
போன்றவற்றைச் செயல்படுத்தியவர்கள் மேற்குலகைச் சேர்ந்தவர்கள்.


* * * * * * *


Hospitality என்பது இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. Hospital களே
மாறிவிட்ட போது வேறு எங்கு எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் முன்பு
எல்லா விமானத்திலும் ஒரு மரபாகப் பேணப்பட்ட விசயம் இது.
Air Lanka ல் முன்பு கிடைத்து வந்தது. தற்போது Qatar Airways,Emirates
பரவாயில்லை என்று தெரிகிறது.

* * * * * * *

சென்ற முறை, என் இருக்கைக்கு முன்னால் இருந்தவர்,தனக்கு வசதியாக‌
இருக்கையை நன்றாகச் சாய்ந்து கொள்ளுமளவு பின்னுக்குத் தள்ளியதால்
என் முகத்திற்கு நேராகத் துருத்திக் கொண்டிருந்தது. நான் அவரிடம்
'சிரமமாக இருக்கிறது, கொஞ்சம் முன் இழுத்துக் கொள்ளுங்கள்' என்று
சொன்னதற்கு, முடியாது என்பதாக தலையாட்டி விட்டு 'சிரமமாயிருந்தால்
நீரும் இது போல் உம்முடைய இருக்கையைப் பின்னுக்குத் தள்ளிக்
கொள்ளவும்' என்றவுடன், நானோ பின்னுள்ளவரை சங்கடப்படுத்த
விரும்பாமல் சும்மாவே இருந்து விட்டேன்.

அடுத்து வந்தது பிரச்னை,நான் இருந்தது நடு இருக்கை, விண்டோ
பக்கத்தில் உள்ளவருக்கு வந்ததே ஆத்திரம் சே மூத்திரம், எழுந்து
அனுமதி கேட்டார். எனக்கு இடது பக்கத்தில் இருந்தவர் தூக்கத்தில்
இருந்ததால் எங்களிருவரையும் தாண்டிப் போகுமாறு அனுமதியளித்தாலும்
அவரைப் போக விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது முன்னிருக்கை. இப்போ
மூத்திரக்காரர் முன்னிருக்கைக்காரரை எழுப்ப, அவரோ என்னைப் பின்னுக்குப்
போகுமாறு சைகை செய்ய,எனக்குள் இருந்த புரூஸ்லீ தலை தூக்கி பிறகு
ஜாக்கி சானாக மாறி ஒரு வழியாக இருவரும் அட்ஜஸ்ட் செய்து
மேக தூதரை தூறலாய் வருஷிக்க அனுப்பி வைத்தோம்.


ஏன் ஏன் இப்படி இருக்கிறோம் ? விட்டுக்கொடுத்தல் மட்டும்
இல்லையென்றால் பயணம் மட்டுமல்ல ; வாழ்வே நரமாகி விடும்.

* * * * * * *

பதிவர்களும் வாசகர்களும் தங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும்
பகிர்ந்து கொண்டால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Thursday, June 10, 2010

ஆடியில் தெரிவது அகமா புறமா ?

காலை,

அலுவலக சகா : என்ன சார், வீட்ல பிரச்னையா ?
நான் : இல்லையே !!
சகா : பின்ன ஏன் சோகமா இருக்கீங்க‌ ?
நான் : ! ? !

------------------------------------------------------------------
மாலை,

நண்பன் : ஏம்பா கோபமா ! யார் மேலே ?
நான் : சே சே அப்படியெல்லாம் இல்லை !
நண்பன் : இல்லையே, உன் முகம் சொல்லுதே .
நான் : ! ? !


------------------------------------------------------------------
வீடு திரும்பிய பின்,

மனைவி : ஏன் இப்படி கடுகடுவென்று இருக்கீங்க
(மனதுக்குள் : எப்பப் பாரு மூஞ்சி, சிடுமூஞ்சியாவே இருக்கு)
நான் : ம். ஒண்ணுமில்லை. (மனதுக்குள் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
மனைவி : வெளியிலே இப்படி இருந்துக்குங்க, வீட்டுல கொஞ்சம்
'சிரித்த முகமும் சீதேவித் தனமுமா' இருங்களேன்.
நான் : அடிங்.. , ஆமா வெளிலே ஏன் அப்படி இருக்கணும் ?
மனைவி : அதுவா, அப்பத்தான் மற்றப் பொண்ணுங்க யாரும் உங்க‌
கிட்ட வரமாட்டாங்க :-)
நான் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........

------------------------------------------------------------------

உடனே கண்ணாடிக்கு முன் நின்று முகம் பார்த்தேன்.

டேய்! என்னாங்கடா எல்லோரும் என்னைப் போய் இப்படிச் சொல்றீங்க ..
அழகான முகத்தைப் போய் 'சிடுசிடுவென்று இருப்பதாகச் சொல்றாங்களே, (பொய்யோ,பொறைமையோ யார் கண்டா)
ஹூம், நாமும் சினிமாவில் நடித்திருந்தால் ஒரு Successful Hero வாக
வலம் வந்திருக்கலாம் ...

இப்படியாக எண்ணம் பயணிக்கையில் ஒரு சிறு பொறி தட்டியது ..

ஆம், கண்ணாடியில் நான் என் முகம் பார்க்க வில்லை, மாறாக
என்னையே பார்க்கிறேன். அதாவது தன்னை விரும்பாதவர் யாரும்
இருக்க முடியாது. தான் விரும்பும் 'தன்னை'ப் பார்க்கும் போது
மலர்ந்திருக்கும் முகம் (காதலன்/காதலி தவிர்த்து) வேறு யாரைப்
பார்த்தாலும் கவிழ்ந்து கொள்கிறதே ஏன் ?

அதனாலே மக்கா!

உங்க முகம் அழகா இருக்கணுமா ?

உள்ளத்தை அன்பால் நிரப்புங்கள்.

பிறரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


"மனம் என்னும் மேடை மேலே முகம் கொண்டு ஆடுது ... "

Monday, June 07, 2010

வேற்றுமையில் ஒற்றுமை

எந்தவொரு தன்மையும் அல்லது செயலும், 'Butterfly Effect' போல
அல்லது கல்லெறியப்பட்ட குளத்தில் அதிர்வலைகள் ஏற்படுவது போல
வாழ்க்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஓரு நல்ல
செயல் இன்னொரு நல்ல செயலுடன் இணைக்கப் பட்டுள்ளது. ஒரு தீய வினை
இன்னொரு தீய வினையுடன் தொடர்பில் இருக்கிறது. எதைத் தொடுகிறோமோ
அதனுடன் தொடர்புள்ள இன்னொன்றும் பின் தொடர்கிறது.

எல்லா விஷயங்களிலும் இரண்டு தன்மைதான் இருக்கும். ஒன்று நல்லது
இன்னொன்று கெட்டது. நன்மையான செயல்களின் முடிவு நன்மையாகவே
அமையும். தீய செயல்களின் முடிவு, அச் செயல்களின் தன்மைக்கேற்ப‌
தீமையாகவோ கொடூர ஆபத்தாகவோ முடியும்.


* * * * *

நன்மை பயப்பதில் 'ஒற்றுமை'க்குப் பெரிய பங்கு உண்டு.

நாம் அனைவரும் 'ஒரு தாய் மக்கள் மட்டுமல்ல' ஒரே தந்தையின்
பிள்ளைகள் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. நமக்குள் பிரிவினை
ஏற்பட்டது, பின்வரும்

1. இடம் (நாடு/மாநிலம்/ஊர்/வீடு)
2. இனம் (நிறம்/மதம்/சாதி)
3. மொழி
4. அறிவு (கொள்கை)
5. அந்தஸ்து (பணம்/பட்டம்/பதவி)

போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் இருக்கலாம்.

இடம்,நிறம் போன்றவை பிறப்பால் ஏற்பட்டவை.இதில் நமது திறமை
என்று எதுவும் கிடையாது, இதில் பெருமை காண்பவன் முட்டாள்
எனும் போது 'வெறி' கொள்பவனை என்ன சொல்வது.

'இனவெறி' பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது 'தன் இனத்தின்
மீது பாசம் கொள்வது இனவெறி ஆகாது, ஆனால் தவறு செய்தவன் தன்
இனத்தைச் சார்ந்தவன் என்பதால் அவனைத் தண்டிக்காது, துணை போவது
இனவெறியாகும் என்று சொன்னார்கள்.

மொழி,அறிவு,அந்தஸ்து போன்றவற்றை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாம்.

இவையன்றி மனிதனை இணைக்கக் கூடிய பாசமும் நேசமும் கூட அவன்
தனித்தனி குழுவாகப் பிரியக் காரணமாகின்றன.இன்னும் எத்தனையோ
சின்னச் சின்ன விஷயங்களும் பெரிய சண்டை சச்சரவுகளுக்குக்
காரணமாகின்றன, சிறு பொறி அல்லது சிறு உரசல்தான் பெரும்
நெருப்புக்குக் காரணமாகின்றன. அதனைக் காட்டுத்தீ போல பரவத்
துணை போகின்றன 'வசவு'களும்,'வதந்தி'களும்.

ஒற்றுமை, மிகக் கடினமான ஒன்றுதான். ஆனால் அதன் பலன் மற்றும்
பலம் நாம் அறிந்ததை விட அறியாதது அதிகம்.எல்லா நல்ல
விஷயங்களும் சுலபமாகக் கிடைப்பதில்லையே, சில சமயம் முயன்று
திருவினையானதாலும் பல சமயம் போராடியும் கிடைக்கப் பெறுகின்றன.

ஒற்றுமை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் துவங்க வேண்டும். கண‌வன் மனைவி
ஒற்றுமை வீட்டிற்கும் ஏன் நாட்டிற்கும் மிக இன்றியமையாதது.அனைத்து
உறவுகளுக்கும் அடிப்படையானது. எனவேதான் நபியவர்கள் பகர்ந்தார்கள்,
'ஷைத்தான்கள் தாம் செய்த அல்லது சாதித்த விஷயங்களை தினமும்
தலைவனிடம் சென்று எடுத்துரைத்து 'சபாஷ்' அல்லது ஆலோசனை
பெறுவார்கள். அவற்றில் தலைவன் மிக மகிழ்வது 'கண‌வன்
மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிளவின் செய்தியறிந்துதான்.

ஒற்றுமை ஏற்பட எல்லாம் ஒரே 'நிறத்தவராகவோ' அல்லது
'நிறமற்றவராகவோ' மாற வேண்டிய அவசியமில்லை. மாறாக‌,

'மனிதரில் இத்தனை நிறங்களா'வென்று ஆச்சர்யமும் ஆதங்கமும் படாமல்

'வேற்றுமையிலும் ஒற்றுமை' காண முயலவேண்டும்.

'ஜன கண மன அதி நாயக ஜயஹே ..'

அதற்காக‌

மனம் பண்படுத்தப் பட வேண்டும், பக்குவம் பெற வேண்டும்.

அதற்கான விடா முயற்சியும் விட்டுக் கொடுத்தலும் அவசியம்.



* * * * *


டிஸ்கி மனம் : ம்ஹூம்.

" சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "

புத்திமதியும் பஞ்ச் டயலாக்கும் ரொம்ப லேசுங்ணா ;
அதன்படி நடக்குற கஷ்டம் எனக்குல்ல தெரியும் :-)


* * * * *

Monday, May 31, 2010

நற்'சிம்' கார்டும் நம்பகமான நெட்வொர்க்கும்

நற்சிம் ?, நல்ல சிம் கார்டைச் சொன்னேன் :-)

ஓரிடத்திற்கு செல் பேச வேண்டும். அதற்கு செல்பேசியும் சிம் கார்டும்
தேவை அல்லவா ! பேசுவதற்கு முன் சார்ஜ் இருக்கா இல்லையா என்று
சோதித்தபின் தேவைப்பட்டால் சார்ஜ் செய்து கொள்வோம்.

பிறகும் பேச முடியவில்லை என்றால் நெட்வொர்க்கைச் சரிபார்ப்போம்.
இதற்குப் பிறகும் பேச முடியவில்லையென்றால் நம் கணக்கில் போதிய
பைசா இருக்கா என்று பார்த்து அதையும் நிரப்பிக் கொள்வோம்.

இப்போ லைன் கிளியர்.

அது போலத்தான் இறைவனோடு பேசுவதற்கு 'கல்பு' என்னும்
செல்லுக்குள் 'இறை நம்பிக்கை' என்ற சிம் கார்டு வேண்டும். அதனை
அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். அதாவது சார்ஜ் செய்ய வேண்டும்.
(உங்கள் ஈமானைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்-நபிமொழி).

பிறகு நெட்வொர்க்,

நமக்கும் இறைவனுக்குமிடையில் நல்லிணைப்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். (மன் அஸ்லஹ பய்னஹூ வ பய்னல்லாஹ் ‍-
யார் தமக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் தொடர்பைச் ச‌ரி செய்து
கொள்கிறார்களோ அவருக்கும் மற்ற படைப்பினங்களுக்குமிடையில்
சுமுகமான பிணைப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்-நபிமொழி)

பிறகு அக்கவுண்டில் பைசா Top Up , தொழுகை,தர்மம் மற்றும்
நற்கருமங்களைச் செய்து அனுப்பி வைத்த பின் பேசும் பேச்சுக்கு,
கேட்கும் தேவைக்கு ஒரு 'கெத்து' இருக்கும்.



"நம்பினார் கெடுவதில்லை ; நான்கு மறை தீர்ப்பு இது"

"கேளுங்கள் தரப்படும் : தட்டுங்கள் திறக்கப் படும்."

"கேட்பது நம் கடமை ; கொடுப்பது அவன் உரிமை"


ஆனா கேட்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் சரிபார்த்துக்
கொள்ளுங்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.


வஸ்ஸலாம்.
------------

Sunday, May 30, 2010

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை (இளகிய மனது No Please )

வல்லவன் வகுத்த வாய்க்கால் வரப்பின்
வேலியில் சிறு துளையிட்டு
வந்த‌தைக் கொண்டு
புல் எனும் ஆயுத்தத்தைத் தயார் செய்து
வல்லவனாகும் வல்லமை தாராயோ இறைவா







கூரிய நாவின் நவீன 'நவி'மொழி தாங்கி
விழுங்கியவன் வீரன் என்பது 'நபிமொழி'


டிஸ்கி : தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் (பதிவினால்) சுட்ட வடு

Tuesday, May 18, 2010

பூட்டனின் மாறாத விதியும் புனைவாக சில‌ நிஜங்களும்

ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு வீட்டை அமைத்தார். சிலரோடு
செல்லப் பிராணிகளையும் அவ்வீட்டில் குடியிருக்க வைத்து ஏதோ
ஒரு நோக்கத்திற்காக தான் மட்டும் தனியாக தூரத்திலிருந்து கொண்டு
அவ்வீட்டைக் கண்காணிக்கலானார். அவ்வப்போது அறிவுரை மற்றும்
அறவுரை தாங்கிய கடிதங்களைத் தூதுவர் மூலம் அனுப்பி வைத்தார்.
அவற்றில் சில‌ ஆங்காங்கு எழுதி வைக்கப் பட்டன.


" தர்மம் தலை காக்கும் "

" நீ வாழ பிறரைக் கெடுக்காதே "

"பிறர்கின்னா முற்பகல் செய்யின் ; தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"

"மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால்
கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின,
(தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள்
செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்)
அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.(அல்குர்ஆன் 30:41)"


* * * * *


எல்லோரும் ஒரு நாள் நகரத்திற்குத் திரும்ப வேண்டும், அங்கே கோர்ட்,கேஸ்,தண்டனை,பரிசளிப்பு உண்டு என்றாலும் தற்காலிகமாக
இங்கே வசிப்பதற்கான விதிகளும் எச்சரிக்கைகளும் விதிக்கப் பட்ட
நோக்கம் பிரச்னைகளில்லாத சுமுகமான வாழ்விற்காகவும்தான்.


வீட்டினரோ வீட்டு மிருகங்களோ காட்டிற்குள் செல்ல முடியாதவாறு
ஒரு வேலியிடப்பட்டது. அவ்வேலி எல்லோருக்கும் பொருந்தாது.
எனவே அவரவருக்குப் பொருந்தும் படியான வேலிகளை ஒன்றன் பின்
ஒன்றாக அமைக்கப் பட்டது.





அதே சமயம் காட்டிலிருந்து ஆபத்தான எதுவும் வந்து விடக்கூடாதென்று
கடைசி வேலி மிகக் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்க‌
கரண்ட் ஷாக் வைத்து அமைக்கப் பட்டது.





வேலிகளின் மறு பெயர் பிரச்னைகள். அவற்றிற்கு சுகக்குறைவு,தடை,தவிப்பு,எரிச்சல்,பசி,பட்டினி,பஞ்சம்,கஷ்டம்,
துன்பம்,சோகம்,வலி,வேதனை எனப் பெயரிடப்பட்டாலும்
கடைசி வேலியின் பெயர் 'ஆபத்து'.

"மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டு பெரிய
வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே
(இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச்
செய்வோம். (அல்குர்ஆன் 32:21)"


* * * * *


எல்லா வலிகளுக்கும் ஒரு காரணம் உண்டு. வலிக்கான காரணத்தைக்
கண்டறியாமல் வலிகள் மரத்துப் போகும் அளவுக்கு தோல் தடித்து
மனம் தொலைத்து 'வேலி தாண்டிய வெள்ளாடு' போல் போய்க்
கொண்டே இருந்தவர்களின் முடிவு மோசமாகவே இருந்தது.

'பட்டு'த் திருந்தியவர்களும் படும் முன்னே
'திரும்பி'யவர்களும் பிழைத்துக் கொண்டார்கள்.


காலச்சக்கரம் வடிவமைத்து வைத்தாற் போலவே சுழன்றது.
இந்நிலையில் வீட்டிலிருந்தோர் பலவாறாகப் பிரிந்தனர்.
தமக்குள் எல்லைகள் வகுத்துக் கொண்டனர்.


1)
அறவுரைகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தோர்

2)
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம்
கிடையாது என்று தன்னிச்சையாக இஷ்டப்படி வாழ்ந்தோர்

3)
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம்
கிடையாது என்றாலும் மனசாட்சியின் படி வாழ்ந்தோர்

4)
அறவுரைகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தோரை எள்ளி
நகையாடி அவர்களுக்கு அடிக்கடி ஊறு விளைவித்து
வாழ்ந்தோர்

5)
அறவுரைகளை மதித்தாலும் எச்சரிக்கைகளை
அலட்சியப்படுத்தி மனோ இச்சையின் வழிப்பட்டு
வாழ்ந்தோர்

6)
யாரால் அனுப்பப் பட்டோம் எதற்காக அனுப்பப் பட்டோம்
என்பது தெரியாமல் கதைகளையும் கற்பனைகளையும்
'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்று
அப்பாவித்தனமாகவும் அடாவடித் தனமாகவும் வாழ்ந்தோர்.


இவர்களுக்குள்

அடிக்கடி தகறாறு நிகழ்ந்து கொண்டிருந்த‌து,

'புனைவு நிஜமாகும் வரை'.

Sunday, May 16, 2010

உடுக்கை இழந்தவன் கை போல ..

எளிமையாய் ஒரு 'கதை' சொல்லப் போறேன் என்று
போன பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா.

ஆனால் 'வி'தி விளையாடி, கழன்று வந்து கதைக்குள்
புகுந்து கொண்டு க(வி)தை யாயிற்று, என் செய்வது !


* * * * *






காற்றடித்த பொழுதில்
பிரிகிறோமே மீண்டும்
சந்திக்க முடியுமாவெனத்
தேம்பிய என் மீது

தெம்பாக ஏறி அமர்ந்த‌
மண்ணாங்கட்டீ ...

மழை பொழிந்தால் என்ன ?

உன்னைக் கரைய விடாமல்
காக்கும் 'அரச'
இலையுடனல்லவா
உன் நட்பும்
இன்ன பிறவும்..

Thursday, May 13, 2010

சிலருக்கு அட்வைஸ்னா ரொம்பப் பிடிக்குமாமே

" கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் "

என்ற நாமக்கல்லாரின் வரிகள் இன்று வரை மனதில் இருக்கக் காரணம்
அதன் எளிமையான, புரியும் படியான வார்த்தைகளும் அது சொல்லும்
மென்மையான கருத்தும். எளிமையும் மென்மையும் ஒரு பெரிய
சக்தியை உள்ளடக்கி இருக்கிறது.

'எளிமையும்,மென்மையும்' இறை நம்பிக்கையாளனின் பண்புகள்
என்று எம் பெருமானார் (ஸல்) பகர்ந்திருக்கிறார்கள்.


உர்தூ அல்லது ஹிந்தி மொழியில் சொல்வார்கள்,

'சோட்டா பன்கர் கஹீ(ன்)பி ரஹ்சக்தா ஹே, பல்கே
படா பன்கர் அப்னே கர்மே பி ரஹ்னா முஷ்கில் ஹே'

( சிறியோனாக எங்கும் இருந்து விடலாம் எளிதில் ; ஆனால்
வலியோன் நினைப்பில் தம் வீட்டில் கூட வசிப்பது கடினம் )



பார்வை,கேள்வி,பேச்சு/எழுத்துக்களின் மூலம் சிந்தனை தூண்டப்பெற்று
உள்ளத்தில் பதிவாகிச் செயலாக உருவெடுத்து அதுவே பழக்கமாகிப்
படிப்படியாகப் பண்பாகப் பரிணமளிக்கிறது. அப் பண்புதான் இப் பூவுலகில்
சக வாசிகளோடு சமத்துவ சகோதரத்தோடு சமத்தாகவோ அல்லது சண்டைக்
கோழியாகவோ வாழ வழி வகுக்கிறது. (அப்பாடி..?)

எளிமையைப் பத்தி சொல்றதுக்கே கடினமாகத்தான் எழுத வருது.

என்ன சொல்ல வர்ரேண்ணா,

1) பண்பு ரொம்ப ரொம்ப‌ முக்கியம். அது கிடைக்கணும்னா,

எண்ணமும் எழுத்தும் பண்பென்னும் இலக்கை நோக்கியப் பயணமாக இருக்க வேண்டும்.

2) இப்பத்தான் முதல் வரிக்கு வருகிறேன்.

சமூக நலக் கருத்துக்களைத் ஏந்தி நாம் எழுதும் கவிதையோ அல்லது கட்டுரையோ

(பாராட்டைப் பெறும் நோக்கமில்லாமல்)

எளிமையாகவும் மென்மையாகவும் அமைந்தால் எல்லோரையும் எளிதில்
சென்றடையும் பயனுள்ள,பயிராகும் முறையில் .


டிஸ்கி : அடுத்த பதிவு எளிமையான முறையில் 'கதை' ஒண்ணு சொல்லப் போறேன்.
அதற்கான முன்னோட்டம்தான் இது. பின்னூட்டத்துல தாக்கிறாதீங்கப்பூ :-)

Monday, May 10, 2010

அபிஷ் two தருணங்கள்

இரண்டு முறை வானொலி நிலையம் சென்ற அனுபவம்
உண்டு. ஒன்று வினாடி வினாவில் கலந்து கொள்ள
இன்னொன்று வானொலி நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக.

இரண்டுமே மாணவப் பருவத்தில் நடந்தவை.
S.S.L.C.க்கு ஒரு வருடம் முன்பும் ஒரு வருடம் பின்பும்.
இரண்டு தடவையும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி
பெற்றவர்கள் மட்டும் அழைத்துச் செல்லப் பட்டோம்.

முதல் முறை நீண்ட பஸ் பிரயாணம். வாந்தி மற்றும்
களைப்போடு சென்று சேர்ந்தாலும் உற்சாகத்தில்
இவை எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

நாடக்த்தில் எனக்கு கதாநாயகன் வேடம்.
அதாவது சுதந்திரத்திற்காகப் போராடி மடியும்
'மாவீர மன்னன்' பாத்திரம்.

ஆனால் இது போன்ற‌ அரிதான இடங்களுக்குச்
செல்லும் அளவுக்கு அன்று எனக்கிருந்த ஆடைகளில்
எதுவும் பிடிக்காததால் நண்பன் ஒருவனிடமிருந்து
வாங்கி அணிந்து சென்றிருந்தேன்.

நாடகம் முடிந்த பிறகு அதனைப் பதிவு செய்தவர்
என்னைத் தனியாக அழைத்து,

'பேரு பெத்த பேரு, டப்பு கிப்பு லேது'
போன்றதொரு தொனியில்,

'ஏம்பா, வேடமோ சுதந்திரப் போராட்டத்
தியாகியின் வேடம் ஆனால் நீ அணிந்திருப்பதோ
அன்னிய தேசத்து ஆடை , இது எப்பூடி....? '

என்ற போது அது வரை இருந்த நாடக வீரம்
கரைந்து அசடாக வழிந்தது.

* * * * *

இரண்டாவது முறை வழிந்த அசடு
-------------------------------

இந்த முறை வினாடி வினா நிகழ்ச்சி. நாங்கள்
வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டோம்.

கேள்வி கேட்கப்பட்ட பின் ஒவ்வொருவரும்
மைக்கின் கிட்டத்தில் வந்து பதிலைச் சொல்ல
வேண்டும்.பதில் தெரியா விட்டால் 'தெரிய வில்லை'
என்று மைக்கில் சொல்ல வேண்டும்.

எனக்கென்னவோ தெரியவில்லை என்று சொல்வது
பிடிக்கவில்லை. அதற்கேற்றார் போல எல்லாவற்றிற்கும்
சரியான பதிலைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

ஒரு கட்டத்தில் பிரம்மபுத்திரா நதி எங்கிருந்து
புறப்படுகிறது என்ற கேள்வி. எல்லோரும்
தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு
வருகிறார்கள். எனக்கோ கேள்விக்கு பதில் உறுதியாக
ஞாபக‌த்திற்கு வரவில்லையென்றாலும் 'ம','ச','ர'
என்னும் மூன்றெழுக்களும் மின்னி மின்னி மறைந்தன.

எனது முறை வந்தவுடன் டென்ஷனுடன் கலந்து
வெளி வந்த பதில் 'மரோசரித்ரா'.

எல்லோருக்கும் ஷாக்.

மைக் அணைக்கப் பட்டு, விளக்கு எரிந்தது.
பதிவறையில் எல்லோரும் சிரித்தது தெரிந்தது.

எங்களைக் கேள்வி கேட்டவரும் சிரித்து
'எலே! அது ஒரு மலையாளப் படம் டோய்'.

அசடு வழிந்து சிரித்து சமாளித்துச் சொன்னேன்

'ஆங் Sorry, அது மானசரோவர்'.

வினாடி வினா பதிவு தொடர்ந்தது.

--------------------------------

இதுல ஒரு கொடுமை என்னன்னா, முதல் முறையாக வானொலி நிலையம்
சென்று நடித்த நாடகத்தைக் கேட்பதற்கு வீட்டில் ரேடியோ கிடையாது.

இரண்டாம் முறை, வினாடி வினா நிகழ்ச்சி கேட்க ரேடியோ இருந்தது,
ஆனா கரண்டு போய்டுச்சு. :-)


--------------------------------

டிஸ்கி: என்ன மக்கள்ஸ் ! கொஞ்சமேனும் புன்னகைப் பூ பூத்ததா ?
செல்லமாகத் திட்டப் பட்டதாக உணர்ந்ததால் இந்தத் தலைப்பூ.

நல்லாயிருங்கப்பூ :-)

Sunday, May 09, 2010

குற்றத் தீவிலிருந்து வராத கடிதம்

என்னதான் கூடு விட்டு கூடு பாய்ந்து யோசித்தாலும்
துயரத்தையே உணவாக உண்ணும் ச‌மூகத்தின்
சோகத்தை வார்த்தைகளில் வசப்படுத்த முடியவில்லை.

எழுத்தினால் ஏதோ அவர்களின் நினைவைச் சிறிது
நேரம் தருவிக்க முடிந்தாலும் சுயநல அலைகள்
அடுத்தடுத்து வந்து பறித்துச் சென்று விடுகின்றன
சமூகக் கடமையைச் சாதித்து விட்ட திருப்தியைக்
கால்களில் திணித்து விட்டு.

என்றாலும் என்றோ எழுத‌ப்பட்ட‌

'சமத்துவபுரம் ; ஆனால் இங்கேயும் மலம்
அள்ளுபவர்கள் அதே குப்பனும் சுப்பனும்தான்'

என்ற சமூகக் கோப வரிகளும்,

'நானும் பாபர் மசூதியும் ஒன்று ; எல்லோரும்
எங்களை இடிக்கத்தான் விரும்புகிறார்கள்.
யாரும் கட்ட நினைப்பதில்லை'

என்ற முதிர் கன்னியின் கோப வரிகளும்

இன்றும் மனதில் தங்கி ஏதோ செய்கின்றன.


அதனைப் போன்று

'என் எழுத்தும் எழுந்து ஏதாவது செய்யாதா'

என்று எழ/எழுத‌ முயற்சித்துக் கீழே விழுந்த கவிதை.


* * * * *

குற்றத் தீவிலிருந்து
----------------------

குவாண்டனாமோ பேய் ..
மற்றுமுள்ள‌ எல்லாக்
கொலைகாரக் கூடங்களிலும்

உயிர் வதை மற்றும் சாவு
மட்டுமே அறியும்
சித்ரவதைத் தீவுகளிலும்

மனிதம் காயடிக்கப் பட்டது
கண்டும் காணா
அக்கறைய‌ற்ற‌
அக்கரைச் சொந்தங்களே

எங்கள் நிலையைச் சிறிது நேரம்
நெஞ்சில் ஏந்தித்தான் பாருங்களேன்..

கொஞ்சம் கொஞ்சமாக‌
கொத்து கொத்தாக‌
உயிர் எடுக்க விரும்பும்
கொலைகாரர் கூட்டத்துடன்
கண் மூடப்பட்ட வாழ்க்கை

குளிர் நடுக்கத்திலும் குலை நடுக்கத்திலும்
நொடித்துளிகள் ஒவ்வொன்றும்
இரத்தத்துளிகளாய் ..

மாதங்கள் மறந்து போயின
சொந்தங்கள் சோர்ந்து போயினர்

உயிர் எடுக்கும்
மலக்குல் மவுத்
அடிக்கடி வந்து போகும்
அரவம் கேட்டு
துடித்துப் போகின்றன
உள்ளங்கள்

அவமானமும்
பலஹீனமும் தவிர
எதையும் காணாத‌
எங்களின்
ஏக்கங்களையும்
கனவுகளையும்

உறக்கத்தில் இருக்கும்
உங்களிடம்
எப்படிச் சொல்லிப்
புரிய வைப்பது

இப்படிக்கு

வல்லூறுகளின்
தோட்டத்துக் காவலில்

நியாயத் தீர்ப்பு நாளை
மட்டும் நம்பி
எதிர் நோக்கிக்
காத்திருக்கும்

நீங்கள் மறந்து போன‌
உங்கள் சொந்தங்கள்.

Thursday, May 06, 2010

நான் கவிஞனுமில்லை .. நல்ல ரசிகனுமில்லை..

எந்தவொரு விஷயத்தையும் வளவள வென்று எழுதுவதை விட நறுக்கென்று
அல்லது நச்சென்று சொல்வதற்கு 'கவிதை' வலிமை மிக்கது என்பது என் கருத்து.
(நீங்க என்ன சொல்றீங்க).

ஒரு காலத்தில் மரபுக்கவிதையா புதுக்கவிதையா என்ற விவாதங்கள் மட்டும்
இருந்தது போய் இப்போது எதுதான் கவிதை என்பது குழப்பமாயிருக்கிறது.

நண்பர்களிடத்தில் அரட்டையின் போது சினிமாப் பாடல்கள் தாம் சிறந்த கவிதை போல்
சிலாகிக்கப் பட்டன. கண்ணதாசன்,பட்டுக்கோட்டையாருக்குப் பிறகு வாலி,வைரமுத்துவின்
வரிகளும் அதன் பின்,

'எதுகை,மோனை,தொடை' தட்டி எழுதிய ராஜேந்தரின் பாடல்களும் விவரிக்கப்பட்டன.
இப்போது 'டீஆர் ' என்றாலே டெரராகிப் போன‌து மட்டுமல்ல‌ அவர் போல் எழுதினாலே பரிகசிக்க‌ப்படுகிறது :-)

கவிதை பற்றி எழுதும் போது கவிதை விற்பன்னர்கள், 'எழுத்தில் காட்சியைப் பதிவு செய்ய' வேண்டுமென்றும் ஹைக்கூ போன்ற கவிதைகளின் கடைசி வரியில் ஒரு 'அதிர்வு' இருக்க வேண்டும் என்கிறார்கள். பின் நவீனத்துவ பதி/கவிஞர்களின் கவிதைகள் 'கனத்தை'க் கொண்டிருந்தாலும் நினைவில் வைப்பது கடினமாயிருக்கிறது.


சில நகைச்சுவைக் கவிதைகள் நினைவை விட்டு நீங்காதவை (கீழே வருகின்ற இந்த இரண்டு கவிதைகளை எழுதிய விகடகவிகள் யார் என்பதை அறிய விரும்புகிறேன் :‍-) கலக்கல்ஸ் )


* * * * *

1.
மணப்பதால்,
மாலையிடுவதால்
மஞ்சத்தில் அல்லது கட்டிலில் பயன்படுவதால்
கட்டையெனப் படுவதால் - சமயத்தில்
கடத்தப் படுவதால்
தரம் பல உள்ளதால்
அனுமதியில்லாமல் 'வைத்திருப்பது'
சட்டப்படி குற்றம் என்பதால்
உரசினால் மட்டுமே பலன் பெற முடியும் என்பதால்
உயர் சந்தனமும் பெண்ணும் ஒப்பென்றுணர்!

* * * * *

2.
கூட்ட நெரிசல்; குழைவாய் நெருங்கியே
பாட்டத்தைத் தேய்த்திடும் பாவியே! -நாட்டமுடன்
அஞ்சா துரசும் அசுரனே! உன்னுடைய
சுஞ்சாவை வெட்ட அவா!

* * * * *



பொதுக் கழிவறைகளில் எழுதப்படும் அசிங்கமான வார்த்தைகளுக்கு மாற்றாக (!?!)
அங்கே வரும் வாடிக்கையாளர்களின் எழுத்துத்திறனை 'வெளி'க் கொணர :-) இது
போன்ற நகைச்சுவையுடன் கூடிய, பின்வரும் 'கக்கூஸ் கவிதைகள்' எழுத நினைத்து
முடியாமல் போனதுண்டு. இன்று இதனைப் பொது'வெளி'யில் எழுத‌ தைரியம் தந்தது
திரு மாதவராஜ் அவர்களின் இந்தப் பதிவு , நன்றி மாதவ் ஜீ.


" இங்கே கழுவப் படும் சப்தம் வெளியில் காத்திருப்போருக்கு இன்பம் "

* * * * *

"அசுத்தமாய் மிதப்பது கண்டு அங்கலாய்க்க வேண்டாம்
என்னை விட்டுச் சென்ற எதுவொன்றைப் பற்றியும்
என்னிடத்தில் அக்கறை இல்லை "

* * * * *

(எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக)
----------------------------

வரையின்றி உறையின்றி செய்யப்படும்
எச்சில்/எச்சிலை உறவால்தான் வருது
எய்ட்ஸ் என்னும் எமலோகப் பி(ரா)ணி


* * * * *



இப்போது என்னுடைய கேள்வி 'எந்த மாதிரி கவிதைக்கு ஆயுள் அதிகம்'.

நகுலன்/மனுஷ்ய புத்திரன் போல் அதிர்வு ஏற்படுத்தும் சமூக நல கவிதைகளா அல்லது கட்டுடைக்கப்பட்ட, பின்னவீன‌த்துவக் கவிதைகளா அல்லது மேலே குறிப்பிடப்பட்ட‌து
போன்ற‌ நகைச்சுவைக் கவிதைகளா அல்லது பெரும்பாலான‌ பெண் கவிஞர்களின் 'குறி'
சொல்லும் கவிதைகளா அல்லது வேறேதுமா.

கவிதை பயிலும் மாணவனாய்க் கேட்கிறேன் வேறொன்றும் உள்குத்தில்லை பராபரமே :-)

நீங்க என்னதான் சொன்னாலும் கீழே உள்ளதை மட்டும் தவிர்க்கவே முடியாது.

(இன்று ஒரு PENN தட்டச்சிய கவிதையைப் படிக்க நேரிட்டதாலும் அதற்கு
மக்கள்ஸ் ஆஹோ ஓஹோ என்றதாலும் தோன்றிய தத்துவம்)

'பெண் பேசும் எம் மொழியும் அழகு பெண் எழுதும் எதுவும் கவிதை
பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்ணுக்கும் அழகென்றே பேர்
என்பார் அப்பெண் தன் மனைவியாய் இல்லாத‌ பட்சத்தில்'.

Wednesday, May 05, 2010

எவரெடி உலகம் ஏன் எதற்கு ?

ஆன்ம உலகில் அலைந்து திரிந்தேன்
அவனிட்ட கட்டளையால்
அவணி பக்கம் தலைகாட்ட‌
அதோ உடம்பென்னும் குதிரை ரெடி

ஆறு மாதம் காத்திருந்து
அடுத்தடுத்து முழுமை பெற‌
அன்னதானக் கொடியும் ரெடி

தாயிடமிருந்து குதித்ததுமே
தொப்புள் கொடி துண்டிப்பால்
வீறிட்ட சோகம் காய்வதற்குள்
தாய்ப்பால் ரெடி

தாய்ப்பாலும் மறுக்கப் பட்டு
தரையிலே கிடத்தப் பட்டால்
தட்டேந்தி சோறூட்ட‌
தாயாதிகள் ரெடி

எழுந்து நடக்கையிலே
தாமாகவே உண்டு உடுத்திப்
பழகியதன் பின்
த‌மக்குக் கீழ் உள்ளோருக்கும்
திரவியம் தேட திசைகள் ரெடி

அடித்துப் பிடித்து
ஆலாய்ப் பறந்து
அனுபவித்து முடித்து
அடுத்த கட்டம்
தாவுவதற்குள்
தாவு தீருவதற்குள்
சாவும் சங்கும் ரெடி

இதெல்லாம்
பரிணாம வளர்ச்சியா
இல்லை படைத்தவனின்
பரிவுக்கு சாட்சியா

சொல்லுங்களேன்

Monday, May 03, 2010

ஏ.ஆர். ரஹ்மானுடன் நானும் சில மணித்துளி மனப் போராட்டமும்

சூபிஸம் பற்றிய ஆர்வமும் நல்ல அபிப்ராயமும் என்னிடத்தில் உண்டு.
ஒருமுறை டெல்லி சென்றிருந்த சமயம் ஹஜரத் நிஜாமுத்தீன் தர்காவுக்குப்
பக்கத்தில் உள்ள பள்ளி வாச‌லில் அதிகாலைத் தொழுகையை
நிறைவேற்றிவிட்டு அமர்ந்திருந்தேன். அப்பொழுது சுமார் ஐந்தரை அடி உயர,
கழுத்தில் சுருள் கேசம் புரள ஒருவர் பள்ளிக்குள் நுழைவதைக் கண்டேன்.
எங்கேயோ பார்த்த ஞாபகம் என்றெண்ணி அருகில் சென்றேன்.

அங்கே அண்ணனை அழகியக் கண்ணனை ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டேன்.

லவ்லி பெர்சனாலிட்டி. 'நீங்க ரஹ்மான்தானே' என்றதற்கு
ஆச்சர்யத்தோடும் சிறிது புன்னகையோடும் ஆமோதித்தார்.
ஆச்சர்யத்திற்குக் காரணம் ஆஸ்காரில் அவரால் மொழியப்பட்ட தமிழ்.
ஆம் அந்த சூழ‌லில் நான் மட்டும்தான் 'தமிழன்'.


'நீங்க எப்படி இங்க, டெல்லியில் ?!' என்றேன்.

'வந்தே மாதரம் ஷூட்டிங் விஷயமா டெல்லி வந்தேன், அதோடு ஹஜரத்
நிஜாமுத்தீன் தர்கா வந்தேன்' என்ற பின் என்னைப் பற்றியும் கொஞ்சம்
விசாரித்து விட்டுத் தொழுவதற்காக பள்ளிக்குள் சென்று விட்டார்.

எனக்கோ சந்தோஷமும் ரஹ்மான் வந்த விஷயத்தை யாரிடம் சொல்வது
என்ற தவிப்பும், ஏனென்றால் அவரைப் பற்றித் தெரிந்தவர் அப்போது அங்கு
யாரும் இல்லை, ஒரிவருவரிடம் சொல்லியும் பார்த்தேன், ம்ஹூம்.

பள்ளியின் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டு அவர் தொழுவதை
ரசித்தேன். தொழுது விட்டு சிறிது நேரம் திக்ரு தியானத்தில் அமர்ந்திருந்தார்.
எனக்குள் ஒரு போராட்டம் துவங்கியது.


* * * * *


சிறு வயதிலிருந்தே இசை,சினிமா ஆசை தலை தூக்கி வந்திருக்கிறது.
மிக நன்றாகப் பாடுவதால் அவ்வப்போது பலரும் சொல்லியிருக்கிறார்கள்,
சினிமாவில் பாடச் சொல்லி. இது நல்ல சந்தர்ப்பம், இதோ ரஹ்மானே
முன்னால் இருக்கிறார். கோல்டன் சான்ஸ். மிஸ் பண்ணாதே. இந்த வாய்ப்பு
எப்போதும் கிட்டாது.‍‍ - இது ஒரு மனசு.


'வேணாம், விட்டுரு, இறை வழியில் ஈடுபட ஆசைப்பட்டு, மீண்டும்
உலக ஆசைகளில் சிக்கி வீணாப் போயிடாதே' என்று அறிவுறுத்தியது
இன்னொரு மனசு.


இரண்டுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருக்கும் போது ரஹ்மான் எழுவது
தெரிந்தது. எனக்குள் இறை மனசுவின் கை ஓங்கியதால் அவரை விட்டுத்
தூரம் செல்ல முடிவெடுத்து நகரும் போது கவனித்தேன்,

அவர் என்னைத் தேடுவதை...


* * * * *


என்னைத் தேடுவது தெரிந்தவுடன் அவரை நோக்கி கையசைத்தேன்.
என்னருகில் அவரே வந்து (எளிமை) 'வந்தே மாதரம்' விஷயமாக
நிறைய வேலைகள் இருப்பதால் அவசரமாகக் கிளம்புகிறேன் என்றவாறு
விடை பெற்று சென்று விட்டார். நான் புன்னகையுடன் விடை கொடுத்து
விட்டு அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேனே ஒழிய வாசல்
வரை சென்று வழியனுப்பி வைக்க மறந்து விட்டேனா அல்லது இறை
மனசு மறுத்து விட்டதா என்று தெரியவில்லை.

(இன்று வரை அந்த வருத்தம் இருக்கிறது).


அவரை ஒரு சகாவாக‌ எண்ணாமல் கலையாகக் கொண்டாடப்படும்
கலாச்சார சீர்கேட்டில் உழலும் ஒரு அன்னியனாக நினைத்து விலகியது
அன்றிருந்த என்னுடைய தவறான அணுகுமுறை.

உண்மையில் ரஹ்மான் ஈஸ் க்ரேட்.

இன்று வரை சினிமாத் துறையில் இருப்பவர்களில் தனது
மனிதம்/புனிதம்/கற்பு/ஒழுக்கம் இத்யாதிகள் கெடாது காத்துக்
கொண்டவர்களில் ரஹ்மான் ஒரு துருவ நட்சத்திரம்.

இசை பட வாழும் ரஹ்மானே " வாழிய நின் புகழும் கொற்றமும் ".

Sunday, May 02, 2010

நல்லா இருங்கப்பூ

வலையுலகம் பரிச்சயமான சமயம் முன்னணி வீரர்களாய்

களத்தில் ஆடிக்கொண்டிருந்தவர்களில் நான் ரசித்த பதிவர்கள்

பால பாரதி,லக்கி லுக்,ஆசிப் மீரான், ஓசை செல்லா,

செந்தழல் ரவி, 'முயல்' ரத்னேஷ் மற்றும் குசும்பன்.

இவர்களில் மதிப்பிற்குரிய ரத்னேஷ் அவர்கள் இப்போதெல்லாம்

எழுதுவ‌தில்லை போல் தெரிகிறது (சார் எங்கே/எப்படி இருக்கீங்க?).

செல்லா தான் ஒரு இணைய நாடோடி என்று 'ஓசை'

விட்டுச் சென்று விட்டார். எனக்குப் பிடித்த முக்கனிகளில்

(ஆசிப் மா, பாலா பலா, லக்கி வாழை) லக்கி மட்டும்

அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார். மற்றிருவரும் எப்போதாவதுதான்

'தல' காட்டுகிறார்கள். மற்றபடி ரவியும் குசும்பனும் வழக்கம் போல

சூடான இடுகைகளில் (அ) சூடான ஓட்டுக்களில்.

இதுவரை பாடியது 'பழைய புராணம்'. இன்றோ அடேங்கப்பா,

எத்தனையெத்தனை திறன் மிகு பதிவுகள்/பதிவர்கள்.

அனைவரையும் ரசிக்கத்தான் நேரமில்லை.

'கடை மாறி கடல் ஆனது போல்

மடை திறந்த‌ மலையுச்சி வெள்ளம் போல்

வலையெல்லாம் பதிவுகள் மயம்'.