துயரத்தையே உணவாக உண்ணும் சமூகத்தின்
சோகத்தை வார்த்தைகளில் வசப்படுத்த முடியவில்லை.
எழுத்தினால் ஏதோ அவர்களின் நினைவைச் சிறிது
நேரம் தருவிக்க முடிந்தாலும் சுயநல அலைகள்
அடுத்தடுத்து வந்து பறித்துச் சென்று விடுகின்றன
சமூகக் கடமையைச் சாதித்து விட்ட திருப்தியைக்
கால்களில் திணித்து விட்டு.
என்றாலும் என்றோ எழுதப்பட்ட
'சமத்துவபுரம் ; ஆனால் இங்கேயும் மலம்
அள்ளுபவர்கள் அதே குப்பனும் சுப்பனும்தான்'
என்ற சமூகக் கோப வரிகளும்,
'நானும் பாபர் மசூதியும் ஒன்று ; எல்லோரும்
எங்களை இடிக்கத்தான் விரும்புகிறார்கள்.
யாரும் கட்ட நினைப்பதில்லை'
என்ற முதிர் கன்னியின் கோப வரிகளும்
இன்றும் மனதில் தங்கி ஏதோ செய்கின்றன.
அதனைப் போன்று
'என் எழுத்தும் எழுந்து ஏதாவது செய்யாதா'
என்று எழ/எழுத முயற்சித்துக் கீழே விழுந்த கவிதை.
* * * * *
குற்றத் தீவிலிருந்து
----------------------
குவாண்டனாமோ பேய் ..
மற்றுமுள்ள எல்லாக்
கொலைகாரக் கூடங்களிலும்
உயிர் வதை மற்றும் சாவு
மட்டுமே அறியும்
சித்ரவதைத் தீவுகளிலும்
மனிதம் காயடிக்கப் பட்டது
கண்டும் காணா
அக்கறையற்ற
அக்கரைச் சொந்தங்களே
எங்கள் நிலையைச் சிறிது நேரம்
நெஞ்சில் ஏந்தித்தான் பாருங்களேன்..
கொஞ்சம் கொஞ்சமாக
கொத்து கொத்தாக
உயிர் எடுக்க விரும்பும்
கொலைகாரர் கூட்டத்துடன்
கண் மூடப்பட்ட வாழ்க்கை
குளிர் நடுக்கத்திலும் குலை நடுக்கத்திலும்
நொடித்துளிகள் ஒவ்வொன்றும்
இரத்தத்துளிகளாய் ..
மாதங்கள் மறந்து போயின
சொந்தங்கள் சோர்ந்து போயினர்
உயிர் எடுக்கும்
மலக்குல் மவுத்
அடிக்கடி வந்து போகும்
அரவம் கேட்டு
துடித்துப் போகின்றன
உள்ளங்கள்
அவமானமும்
பலஹீனமும் தவிர
எதையும் காணாத
எங்களின்
ஏக்கங்களையும்
கனவுகளையும்
உறக்கத்தில் இருக்கும்
உங்களிடம்
எப்படிச் சொல்லிப்
புரிய வைப்பது
இப்படிக்கு
வல்லூறுகளின்
தோட்டத்துக் காவலில்
நியாயத் தீர்ப்பு நாளை
மட்டும் நம்பி
எதிர் நோக்கிக்
காத்திருக்கும்
நீங்கள் மறந்து போன
உங்கள் சொந்தங்கள்.
4 comments:
nice catchy, but to me it looks little long, probably you could have divided into 2
கரெக்ட் ராம் ஜீ,
இன்னும் சுருக்க/செதுக்கப் பழகணும்.
Thanks for your advise
கவிதைக்கு முன்னிய முன்னோட்டம் பிடிச்சிருக்கு :)
Monks, :-)
நிலைத்திருக்கும்
நல்ல கருத்துக்களை
செதுக்கும்
வல்லமை தாராயோ
...இறைவா ..
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)