Monday, March 28, 2011

தர்காவுக்குப் போகலாமா வேண்டாமா ‍- Part II

முதல் பகுதியின் தொடர்ச்சி ...

இஸ்லாத்தில் மூன்று பள்ளிகள் புனிதமானவை 1.கஃபத்துலாஹ் (மக்கா),
2.மஸ்ஜிதுன் நபவி (மதீனா), 3.பைத்துல் முகத்தஸ் (ஜெருசலம்). அதற்காக
மற்றப் பள்ளிகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. அவை மூன்றும் முதல்
அந்தஸ்த்தில் உள்ளவை. கஃபத்துலாஹ் ஆதம் நபியால் கட்டப்பட்டு
இப்ராஹீம் (Abraham) நபியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. மதீனாப் பள்ளி
முகம்மது (ஸல்) மற்றும் அவர்களது நபித்தோழர்களால் கட்டப்பட்டது.
ஜெருசலம் பள்ளி தாவுது (David), சுலைமான் (Solomon) நபிகளால் கட்டப்பட்டது.

மற்றப் பள்ளிகள் அவ்வப்போது தொழுபவர்களின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வந்தன,
இனியும் கட்டப்படும். ஆனால் தர்காக்கள் ஏன்,யாரால் கட்டப்பட்டன என்ற விவரம்
தெரியவில்லை. இனியும் கட்டப்படாது என்றே நினைக்கிறேன். அது தொழப்படும்
பள்ளியுமல்ல, இறைவனின் ஆலயமுமல்ல மாறாக அது வெறும் அடக்கஸ்தலம்தான்.
பிறகு ஏன் மக்கள் அங்கே செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இங்கேதான்
தவ்ஹீதுவாதிகளும் தரீக்காவாதிகளும் பிரிகிறார்கள். இருவரும் பேசிக்
கொள்வதைக் கேட்போமா.

தவ்ஹீது : நீங்கள் ஏன் தர்காவுக்குச் செல்கிறீர்கள், அது பாவமாச்சே.

தரீக்கா :
பாவமென்று யார் சொன்னது, மரணத்தை நினைவூட்டுவதால் அடக்கஸ்தலம்
செல்லுமாறு நபிகளே சொல்லியிருக்கிறார்களே.

தவ்ஹீது :
நீங்களெல்லாம் அதற்காகச் செல்வதில்லை, அங்கு அடங்கி இருப்பவரிடம்
உங்கள் தேவைகளைக் கேட்கச் செல்கிறீர்கள்.

தரீக்கா :
கேட்பதால் என்ன தவறு, டாக்டரிடம் சென்று காண்பிப்பது போலத்தான் இதுவும்.

தவ்ஹீது : டாக்டர் உயிரோடு உள்ளவர் அவரோ மரணித்தவர்.

தரீக்கா :
இறை நேசர்கள் உயிரோடு இருக்கிறார்கள் மரணிக்கவில்லை என்று இறைவன்
தன் திருமறையில் கூறியிருக்கின்றானே.

தவ்ஹீது :
அது நபிமார்களைப் பற்றிச் சொன்னது. மேலும் இறைவன் யாரை நேசிக்கிறான்
என்பது அவனுக்குத் தானே தெரியும்.

தரீக்கா :
அது இன்னொரு இறைநேசருக்கும் தெரியும், அவர் முலமாக எங்களுக்கும் தெரிய வரும்.

தவ்ஹீது :
அப்படிப்பட்ட இடைத்தரகர் எங்களுக்குத் தேவையில்லை. தன்னிடமே நேரடியாகக்
கேட்குமாறு இறைவன் சொல்கிறான்.

தரீக்கா :
தந்தையிடம் நேரடியாகக் கேட்க வெட்கப்பட்டோ அல்லது பயப்பட்டோ தாய்
மூலம் கேட்கும் பிள்ளையைப் போல் நாங்கள் அவ்லியா மூலம் கேட்கிறோம்.

தவ்ஹீது :
இந்த உதாரணமெல்லாம் இறைவனுக்கு ஒத்து வராது. அவ்லியாக்கள் எல்லாம்
இறைவனுக்கு மனைவியா. நீங்கள் பகிரங்கமாக இணை வைக்கிறீர்கள். பாவிகள்.
நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர் விளங்கிக் கொள்கிறாரா அதுவும் ஒரே
சமயத்தில் எல்லோருடைய தேவைகளையும் கேட்க முடிகிறதா. நிச்சயமாக நீங்கள்
இறைவனின் தன்மைகள் அவரிடமும் இருப்பதாகக் கருதுகிறீர்கள். உங்களின் இந்த
நிலை மக்கத்துக் காபிர்களின் நிலையை ஒத்திருக்கிறது. படைத்தது யார் என்று
கேட்டால் ‘அல்லாஹ்’ என்று சொன்னார்கள், பிறகு ஏன் இந்தச் சிலைகளை
வணங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ் ஒருவனால்
எல்லாவற்றையும் செய்ய முடியாது. அதனால்தான் அவைகளிடம்
எங்கள் தேவைகளைக் கேட்கிறோம் என்று சொன்னார்கள்.

தரீக்கா :
அடப்போங்கப்பா, வயதுக்கு வராதவனுக்கு தாம்பத்ய இன்பம் எப்படித் தெரியும்.
தர்காக்கள் பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு ஷைகிடம் (சூஃபி அறிஞர்)
முரீதாக (மாணவனாக) பைஅத் (ஒப்பந்தம்) செய்து கொண்டு பயிற்சி பெற்றால்தான்
தெரிய வரும். பைஅத் சம்பந்தமான ஹதீஸ்களைப் பாருங்கள். பைஅத் பெறாமல்
மோட்சம் கிடையாது என்பதை அறிவீர்கள்.

தவ்ஹீது : பைஅத்தாம், மோட்சமாம் போங்கய்யா நீங்களும் உங்க ....

இப்படிப் போகிறது இருவருக்குமிடையேயான சம்பாஷணைகள். இன்னும் லாஜிக்கலா
கிளைக் கேள்விகளும் கிளை பதில்களும் உண்டு. நாம் என்ன முடிவுக்கு வருவது :(.

-------------------------- * * * * * -------------------------

இணை வைத்தலில் பல வகைகள் உண்டு. சூரியன், சந்திரன், நட்சத்திரம் அடங்கிய
பிரபஞ்சங்களின் மீது நம்பிக்கை வைப்பது. உயிருள்ள மிருகங்கள், பறவைகள்,
மனிதர்கள், ஜின்கள் மீது நம்பிக்கை வைப்பது. உயிரற்றவர்களின் மீதும், கற்களின்
மீதும், நாடு, அரசாங்கம், இனம், குழு, எண்ணிக்கை, படை பலம், Technology,
கல்வி, அறிவு இன்னும் தன் மீதும் நம்பிக்கை வைப்பது அனைத்தும் இணை
வைத்தலில் கொண்டு போய்ச் சேர்க்கும். இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பெரிய ஷிர்க் மற்றும் சின்ன ஷிர்க். நபியவர்களுடைய ஒரு ஹதீஸின் கருத்தாவது,

‘எனது உம்மத்து (சமுதாயம்) சிலை வணக்கம் போன்ற பெரிய ஷிர்க்கில் விழுவார்கள்
என்பதை விடச் சிறிய ஷிர்க்கில் வீழ்ந்து கிடப்பார்களே என்றுதான் அஞ்சுகிறேன்’.
குர்ஆனிலும் இது பற்றி வந்திருக்கிறது.

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித்
தவிக்கும் சமயத்தில்) எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள்
அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?.
இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக்
காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே.

நபியே!) நீர் கூறும், உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய
கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும் அல்லது
உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை
அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள்
விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி)
விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (6: 63 - 65)

மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில்
வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை
(பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே)
இணை வைக்கின்றனர். (29:65)

யோசித்துப் பார்த்தால் நம்முடைய பேச்சிலும் செயலிலும் எத்தனை ஷிர்க்குகள் செய்து
வருகிறோம். மழை, காற்று, புயல், சுனாமிகளின் போதும், சம்பாத்தியம், வாழ்வாதாரம்,
பாதுகாப்பு, எதிர்காலம் பற்றிய பேச்சு,செயல்களின் போதும் நாம் எப்படி நடந்து
கொள்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

இறைவனின் கூற்று,"அடியான் என்னைப் பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே
நானும் நடந்து கொள்கிறேன்
" (பதிவைப் புரிந்து கொள்ள இதுவொன்றே போதும்).

-------------------------- * * * * * -------------------------

ஊரில் இருக்கும்போது ஒருமுறை எனது செல்ஃபோன் தொலைந்து விட்டது. எனது
உறவினர் பெண்மணி ஒருவர், எங்களூரில் வசித்து இறந்து போன ஒரு முதியவரின்
பெயரைச் சொல்லிக் கேட்டால் தொலைந்த பொருள் கிடைத்து விடும் என்று வேண்டிக்
கொண்டார். நானோ அந்த வம்பே வேண்டாம் என்று நபியவர்கள் காட்டித் தந்த இரண்டு
ரக்அத் தொழுது துஆ செய்தேன். செல்ஃபோன் கிடைத்தது. எனக்குத் தொழுகையின்,
துஆவின் மீது நம்பிக்கை பிறந்தது. அந்த உறவினருக்கும் அவரைச் சார்ந்த
பெண்களுக்கும் மறைந்த ‘அப்பாவின்’ மேல் நம்பிக்கை உயர்ந்தது. :)

ஒருமுறை மழை பெய்த போது நபியவர்கள், 'அல்லாஹ்வின் நாட்டத்தின் படி மழை
பொழிந்தது என்று சொன்னவர்கள் இறை நம்பிக்கையை அடைந்து கொண்டார்கள்,
மாறாக குறிப்பிட்ட நட்சத்திரத்தின் நகர்வின் காரணமாக மழை பொழிந்தது என்று
சொன்னவர்கள் இறை நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்' என்று சொன்னார்கள்.
ஆக உலகத்தில் நடைபெறும் அத்தனையும் இறைவனின் விதிப்படியே நடக்கின்றன.
இந்த நிகழ்வுகளிலிருந்து என்ன நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதைத்தான் நாம்
கவனிக்க வேண்டும். இது பரீட்சைக் கூடம், பலவிதமான சோதனைகள் இருக்கும்.

ஒருமுறை ஹஜரத் அலீ அவர்கள் போரிடுவதற்காகப் புறப்பட்டார்கள். இந்த நேரத்தில்
புறப்பட்டால் அலீ தோற்றுப் போவார், ஏனென்றால் நேரம் சரியில்லை என்று ஒரு குறி
சொல்லும் ஜோதிடன் சொன்ன விஷயம் அலீ(ரலி) அவர்களிடம் சொல்லப் பட்டது.
அதற்கவர்கள் ‘மஷ்வரா (ஆலோசனை) செய்து முடிவெடுத்த நேரத்தை மாற்ற
முடியாது, தோற்றாலும் பரவாயில்லை என்று கிளம்பினார்கள். அதாவது உலக
வெற்றி தேவையில்லை, மறுமையின் வெற்றிக்கான ஈமானைப் பாதுகாப்பதுதான்
முக்கியம் என்பது இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.

கஸ்ஸாலி என்றொரு அறிஞர் சொல்கிறார், சிலர் பாம்பைப் பிடித்து அதிலிருந்து
விஷத்தை எடுத்து விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிலர் பாம்பைப்
பிடிக்கும் வித்தையைக் கற்காமலே அதில் ஈடுபடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாய்
முடியும். அது போலவே உலக வாழ்வின் தத்துவம், தாத்பரியம், விஷம் அறியாது
அதனைச் சேகரிக்க நினைப்பவர்களின் ஈமான் ஆபத்தில் இருக்கிறது. உயிர் பெரிதா
ஈமான் பெரிதா, ஈமான் பெரிதென்று நினைப்பவர்கள் நிச்சயம் ஒவ்வொரு
ஸ்டெப்பையும் கவனமாகத்தான் வைப்பார்கள்
.

மரணச் சமயத்தில் ஈமானைப் பறிப்பதற்கு ஷைத்தானின் முயற்சி கடுமையாக
இருக்கும். தவ்ஹீதுவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு
தரீக்காவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு எனும்போது
பொதுமக்களின் நிலைமையை என்ன சொல்வது. காலமெல்லாம் ஈமானுக்காகப்
பாடுபட்டவர்களும் இறையச்சமுள்ள நல்லடியார்களும் அவனின் சூழ்ச்சியிலிருந்து
பாதுகாக்கப் படுவார்கள். ஆனால் பொதுமக்களோ ‘கண்டதே காட்சி கொண்டதே
கோலம்’, என்ற அறியாமையிலும் ‘நமக்கு வேண்டியது எங்கேர்ந்து கெடச்சா என்ன’
என்ற சுயநலத்திலும் உழன்று தம் உயிரினும் மேலான ஈமானை மரணத்திற்கு
முன்பே பறிகொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

-------------------------- * * * * * -------------------------

தரீக்காவாதிகள் ‘ஷைகு’ என்ற குருநாதரின் கண்காணிப்பில் இருப்பவர்கள். குர்ஆன்,
ஹதீஸை எப்படி அணுக வேண்டும் என்ற 'மெய்ஞ்ஞானம்' குருநாதரால் போதிக்கப்
படுபவர்கள். கஸ்ஸாலி என்ற அறிஞர் (சூஃபி) தரீக்காவாதியான பின்புதான் நல்ல
இஸ்லாமியத் தவ்ஹீது கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் படைத்தார் என்றும்
தரீக்காவில் இணைவதற்கு முன் தாம் எழுதிய புத்தகங்களெல்லாம் குப்பை என்று
உணர்ந்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவருடைய வரலாறு கூறுகிறது. அவருடைய‌
தவ்ஹீதுக் கருத்துக்கள் இன்றைய தவ்ஹீதுவாதிகளால் கூட புரிந்து கொள்ள முடியாத
அளவுக்கு நுணுக்கமானதாக இருக்கும். ஆனால் அக்காலத்தில் இருந்த ஷைகுகள்
போன்று இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஷைகிடம் பைஅத் செய்வது பாதுகாப்பாய்த் தெரிந்தாலும் தவறான ஷைகைத்
தேர்ந்தெடுத்து விட்டால் அதோ கதிதான். அதுபோல நாம் தேர்ந்தெடுத்த நல்லவர்
ஷைத்தானுக்கும் நல்லவராகி விட்டால் அவ்வளவுதான், ஓட்டு மொத்தக் கூட்டமும்
ஸீதா ஜஹன்னம்தான் (நேரா நரகம்தான் :). ஆதலால் தர்காவின் தாத்பர்யம் தெரிய வேண்டுமென்றால் யாராவது நல்ல ஷைகைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்
கிடைக்காத பட்சத்தில் தவ்ஹீதுவாதிகளாக இருங்கள். குறைந்த பட்சப் பாதுகாப்பாவது
கிடைக்கும். ஈமானியப் பாதுகாப்பு வளையமின்றி அங்கு செல்வது ஆபத்தானது.

தர்கா இஸ்லாத்தின் அம்சம் என்றால் அது இஸ்லாம் செல்லுமிடமெல்லாம்
அதுவும் செல்லவேண்டும். அனால் அது இணைவைப்பாளர்கள் வாழ்ந்த,வாழும்
இந்தியத் துணைக் கண்டத்தில்தான் அதிகம் காணப படுகின்றன. ஒருவேளை
இணை வைப்பாளர்களான மனிதன் மற்றும் ஜின்களால் வைக்கப்படும் மாந்திரீகத்
தொல்லைகளை முறியடிப்பதற்காகவே இவை அமைக்கப் பட்டதாக இருக்கலாம்.
அல்லது அல்லது பிஸினெஸ்ஸுக்காக உருவானதோ இல்லை இணைவைத்தலில் ஈடுபடுத்துவற்காகவே ஷைத்தான்களால் உருவாக்கப் பட்டதோ தெரியவில்லை.

அல்லது ஒரு இஸ்லாமிய அறிஞரை எவ்வாறு நாம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து
கொள்ள‌, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள அணுகுகின்றோமோ அது போலவே
ஜின்களும் அவர்களை அணுகிப் பாடங்கள் படிக்கின்றன, நாளடைவில் அவருக்குச்
சீடராகி மனமுவந்து சேவைகள் செய்கின்றன். அந்த அறிஞர் மரணித்த பின்னும்
அவரிடத்திலே தங்கி அங்கு வரும் மக்களுக்குச் சேவை செய்கின்றனவோ ..
இன்னும் எந்த‌ மூலிகையில் என்ன நிவாரணம் உண்டு என்பதை அறிந்து
வைத்துக் கொண்டு அங்கு வரும் புதிர் நோய்களைக் கொண்ட நோயாளிகளைக்
குணப்படுத்துகின்றனவோ .. அல்லது மறைந்த‌ இறைநேசர்கள் இறைவனின்
அனுமதியுடன் தமது சேவையை இன்னும் தொடர்கிறார்களோ என்றெல்லாம்
யோசிக்கத் தோன்றுகிறது. காரணம் ஆச்சர்யத்தக்க வகையில் மருத்துவ
ஆப்பரேஷன்கள் கனவிலும் மயக்க நிலையிலும் நடைபெறுவதாக அங்கு
சென்று சுகம் பெற்ற சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

இப்படி மர்மமாகவே இருக்கும் தர்காக்களைப் பற்றி என்னைப் போன்ற ரெண்டுங்
கெட்டான்களால் என்ன எழுதி இந்தச் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.
'இங்கு போவதால் என்ன தப்பு, ஏன் போகக் கூடாது' என்று சொல்பவர்கள்தாம் தர்கா
என்றால் என்ன அங்கு ஏன் போக வேண்டும் என்பது பற்றிச் சரியாக விளக்க முடியும்.
லாஜிக்கலா எதிர்கேள்விகள்தாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய சரியான
முறையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று சொல்வதில்லை. ஆதலால்
இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

தர்காவுக்குப் போகலாம் என்று சொல்லும் நீங்கள் 'எப்படிச் சென்றால் ஈமானுக்குக்
கேடு வராது என்று அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் சொல்லித் தர வேண்டிய பொறுப்பு'
உங்களுக்கு இருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்களோ இல்லையோ அவ்லியாக்களைப் பற்றி நன்றாகவே அறிந்து
நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

"பாவம் விட்டில் பூச்சிகளாய் அங்கு வந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது
இஸ்லாமியத் தேனீக்களின் இறைவன் பற்றிய நம்பிக்கை
"


வஸ்ஸலாம்

Wednesday, March 23, 2011

தர்கா - ஒரு குவிலென்ஸ் பார்வை – Part I

இது எந்த குரூப்பையும் சாராத ஒரு சாமானியனின் புரிதல்கள் :

------------------- 'அல்லாஹ்வே மிக அறிந்தவன்' -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை
அல்லாஹ்வைத்தவிர) என்ற கலிமா தய்யிபாவின், தலையாய மந்திரத்தின்,
பிரம்ம சூத்திரத்தின் நோக்கம் அல்லது உள் அர்த்தம் என்னவென்றால்,

‘யாரைக்கொண்டும் எதுவும் நடப்பதில்லை எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான்
நடக்கின்றன. அவனன்றி எதுவும் அசைவதில்லை. படைப்பினங்கள் படைத்தவனின்
உதவியின்றி எதுவும் செய்ய இயலாது. ஆனால் படைத்தவனோ படைப்பினங்களின்
உதவியின்றி எல்லாம் செய்யும் ஆற்றல் பெற்றவன். எனவே அவன்தான்
உண்மையில் வணங்கப்படுவதற்கு உரித்தானவன்’.

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.

இந்தத் தத்துவத்தை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். இவ்வுலகம்
சோதனைக்கூடம். இந்த நம்பிக்கையைக் கெடுப்பதற்கான சம்பவங்கள் அலைகள்
போல வாழ்க்கையில் வரும் போகும். ஆனாலும் இந்த நம்பிக்கையைக் கடைசி
வரையிலும் பாதுகாத்து அவனிடம் சென்று சேர்பவர்களுக்குப் பரிசாகச் சுவனம்
காத்திருக்கிறது. இதற்கு மாறாக நம்பிக்கையைப் பறிகொடுத்து, அவனுக்கு
இணைவைத்து, அவனது விருப்பத்திற்கு மாறாக வாழ்ந்து மறைந்தவர்களுக்குக்
கடும் தண்டனை காத்திருக்கிறது (முஸ்லிமாகப் பிறந்திருந்தாலும்).

சுப்யான் என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்கள்,
‘இறைத்தூதரே, தங்களுக்குப் பின் யாரிடமும் கேட்கத் தேவைப்படாத அளவு எனக்கு
ஒரு உபதேசம் செய்யுங்கள், நான் அதைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறேன் என்று நான்
கேட்டதற்கு நபியவர்கள் சொன்னார்கள்,

அல்லாஹ்தான் என் இறைவன் என்று சொல் பின் அதன் மீது நிலைத்திரு


-------------------------- * * * * * -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ்வை மனதார மொழிந்து இறைவனை ஏற்ற சில
நொடிகளில் மரணம் வரப்பெற்றவர்கள் அல்லது மனித சஞ்சாரமற்ற காட்டிலோ
தீவிலோ மலையிலோ வாழ்ந்து கலிமாவின் தத்துவப்படி மரணித்தவர்கள்
சுலபமாகச் சுவனம் சென்றடைவார்கள்.

ஆனால் மக்களோடு மக்களாய், குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்து வரும் இறை நம்பிக்கையாளர்களுக்குப் பலவிதமான சோதனைகள் காத்திருக்கின்றன.
(அதுபோல நன்மைகளும் முன்னவர்களை விட மிக அதிகமாகக் கிடைக்கும்)
வாழ்வில் அவர்கள் சந்திக்கும் தேவைகள்,பிரச்னைகள்,நோக்கங்கள் தீருவதற்குச்
செய்யப்படும் முயற்சிகளை வைத்து அவர்களின் நம்பிக்கை பரிசோதிக்கப்படுகிறது.
எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள், எதில் செலவழிக்கிறார்கள், நோய் போன்ற
பிரச்சனைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், பாதுகாப்புக்கு யாரை நாடுகிறார்கள்
போன்ற எல்லா விஷயங்களும் கண்காணிக்கப் படுகின்றன.

"நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்)
அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள்
எண்ணிக் கொண்டார்களா ? (அல்குர்ஆன் 29:2)

‘உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்
உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள்
எண்ணுகிறீர்களா’ (அல்குர்ஆன் 2:214)


-------------------------- * * * * * ----------------------------


PANADOL உபயோகித்தோம் தலைவலி பறந்து விட்டதென்றால் அதன் மீது
நம்பிக்கை வருவது இயல்பு. அடுத்தமுறை தலைவலி வந்தால் அனிச்சையாய்
அதனைத் தேடுகிறோம். குழந்தைக்குச் சுகம் கிடைத்து விட்டால் குழந்தை
மருத்துவரின் மீது நம்பிக்கையும் அன்பும் பிறக்கிறது. பிறருக்கும் அவரிடம்
செல்லுமாறு ஆலோசனை சொல்லவாரம்பித்து விடுவோம். இதுதான் மனித இயல்பு.

இஸ்லாம் என்ன சொல்கிறது, "நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக்
குணப்படுத்துகிறான்’ (அல்குர்ஆன் 26:80). ‘நோய் நிவாரணமின்றி எந்த நோயும்
இறங்குவது கிடையாது’ (ஹதீஸ்).

உடனே நமக்குள் ‘அப்ப நாம் ஏன் டாக்டரிடம் செல்ல வேண்டும்’ என்ற ஒரு
கேள்வி பிறக்கும். பதில், ‘டாக்டரிடம் போகத்தான் வேண்டும்’. காரணம்
இறைவன் இவ்வுலகத்தைக் காரண காரியங்களைக் கொண்டு படைத்துள்ளான்.

ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் அவனது சக்தி இருக்கிறது. மருத்துவரால்
அல்லது மருந்தால் குணம் ஏற்படுவது போல் தோன்றினாலும் இறைவன்தான்
குணப்படுத்தினான் என்று விளங்கி அவனுக்கு நன்றி செலுத்தும் போது ஈமான்
என்ற நம் நம்பிக்கை வலுப்பெறுகிறது, பாதுகாக்கப் படுகிறது.

படைக்கப் பட்டவை அனைத்தும் உடல் என்றால் அவற்றின் உயிர் அவனது
கட்டளை அல்லது சக்தியாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் நல்லதும் உண்டு
கெட்டதும் உண்டு. ஒரு பொருள் நமக்கு நன்மை தருவதும் தீமை தருவதும்
அவனது நாட்டப்படி அல்லது கட்டளைப் படி தான்.

நம்முடைய கடமை படைப்பினங்களை உபயோகிக்க வேண்டும் ஆனால் நம்பிக்கை
வைக்கக் கூடாது. மேலும் உபயோகிக்குமுன் அவனிடம் ஒரு வேண்டுதல் செய்வது
அவனுக்குப் பிடித்தமானது. கம்பெனி எம்.டி யிடம் வேலையாள் அனுமதி பெற்றுச்
செல்வது போல. ‘செருப்பின் வார் அருந்தாலும் அவனிடமே கேளுங்கள்
என்று நபியவர்கள் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு வினவுகிறான்.

“(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே
நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில்
உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக
(நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே
(அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(இப்பூமியில்) நீங்கள் விதைப்பதை கவனித்தீர்களா? அதனை நீங்கள்
முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால்
நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். "நிச்சயமாக நாம் கடன்
பட்டவர்களாகி விட்டோம். "மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற
முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா ? மேகத்திலிருந்து அதை
நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால்,
அதைக் (குடிக்க முடியாத அளவுக்குக்) கசப்பானதாக ஆக்கியிருப்போம்.
(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள்
உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை
நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்குப் பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு
அவனைத் துதிப்பீராக". அல்குர்ஆன் (56 : 58-74)


-------------------------- * * * * * ----------------------------


இவ்வுலகம் பரிட்சைக் கூடம். மனிதனுக்கும் ஜின்னிற்கும் தனது இஷ்டப்படி
நல்லதையோ கெட்டதையோ ‘தேர்ந்தெடுக்கும் அதிகாரம்’ (Deciding Authority)
தரப்பட்டுள்ளது. மற்றப் படைப்பினங்கள் அனைத்தும் மனிதனுக்குச் சேவை
செய்வதற்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளன.

இவ்வுலக வாழ்வில் நாம் வளர்த்துப் பாதுகாத்த நம்பிக்கையும் சேகரித்த
செயல்களும்தான் மறுவுலகில் பரிசீலிக்கப்படவிருக்கின்றன. இறை நம்பிக்கையில்
மிக உயர்ந்தது ‘ஒரு பிரேதத்தைப் போல் இறைவனிடம் தன்னை ஒப்படைப்பது,
தனக்கென்று எந்த விருப்போ அல்லது வெறுப்போ இல்லாமல் இறை விருப்பத்திற்குத்
தன்னைத் தயார்ப்படுத்துவது.

இப்ராஹீம் நபியவர்கள் நம்ரூத் என்ற அரசனால் நெருப்பில் போடப்பட்டபோது
அங்கு வருகை புரிந்த ஜிப்ரீல் எனும் வானவர் தலைவரின் உதவியையும் மறுத்து,
‘நான் நெருப்பில் இடப்படுவது இறைவனின் விருப்பமென்றால் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்’ என்ற பதிலால் திருப்தியுற்ற இறைவன் நெருப்பையே குளிரச்
செய்தான். ஆனாலும் இதைப் பின்பற்ற எல்லோராலும் முடியாது என்பதற்காகவே
முகம்மது நபி(ஸல்) அவர்கள் சாதாரண மக்களிலிருந்து சான்றோர்வரை பின்பற்ற
ஏதுவாகப் பலவிதமானத் தீர்வுகளைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு, நபியவர்களைக் கொல்வதற்கு மக்கத்துக் குறைஷிகள் சுமார்
நூறு பேர் ஆயுதம் தரித்து அவர் வீட்டு வாசலில் காத்திருக்கும் போது இறைவனின்
நேரடி உதவியுடன் எதிரிகளின் ஊடே நடந்து தப்பித்தார்கள். அதே சமயம் அபுபக்கர்
எனும் தோழருடன் செல்லும் போது சாதாரண மனிதர்களைப் போல் மலைப் பொதும்பில்
மூன்று நாட்கள் மறைந்திருந்து தப்பித்தார்கள். நபியவர்களின் சொல்லிலும் செயலிலும் சான்றோருக்கான படிப்பினையும் சாமானியனுக்கானப் படிப்பினையும் சேர்ந்தே
மறைந்திருக்கின்றன. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் நோக்கத்தை, சாராம்சத்தைச்
சான்றோர்கள்தாம் நன்கு அறிய முடியும். சிலருக்குக் கனவின் மூலமாகவும்
அறிவிக்கப் படுகிறது. சிலர் குர்ஆன் ஓதும்போது அதன் உள் அர்த்தத்தின் மூலம்
விளங்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சான்றோர்களுக்கு முன்பு ‘சஹாபாக்கள்’
(நபித் தோழர்கள்) என்று பெயர். அதற்குப் பின் வந்தவர்களுக்கு வலிமார்கள்
(இறை நேசர்கள்) என்று பெயர்.

இறைநேசம்,இறைகாதல் இவற்றிற்காகத் தம்மை, தம் விருப்பு வெறுப்புக்களைத்
தியாகம் செய்பவர்களுக்காகத்தான் இந்த அந்தஸ்து கிடைக்கும். ‘ரிஸ்க் எடுப்பவன்
ரஸ்க் சாப்பிடுவான்’. இவர்கள் நல்ல மீனவர்களைப் போன்றவர்கள். நமக்கு மீன்
சாப்பிட விருப்பம் என்றால் ஒன்று நாம் கடலுக்குச் செல்ல வேண்டும். அதற்குப்
போதிய பயிற்சி வேண்டும். நல்ல மீன்கள் எங்கே கிடைக்கும் என்று அறிவது
மட்டுமல்லாமல் எங்கே என்னென்ன ஆபத்துக்கள் உண்டு அவற்றைச் சமாளிப்பது
எப்படி என்றும் அறிந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் நேரமோ பொறுமையோ
இல்லையென்றால் நல்ல மீனவர்களை நாடுவோம். அவர்களிடமிருந்து சில சமயம்
முத்து பவளங்கள் கூடக் கிடைக்கும் வாய்ப்புண்டு.

இதைப் போன்றுதான் இஸ்லாத்திற்காகத் தம்முடைய உயிர்,பொருள்,ஆவி,நேரம்,
பணம் கொடுக்க இயலாதவர்களும், ஞானத்தைத் தேடி அலைபவர்களும் நாடுவது
இந்தச் சான்றோர்களைத்தாம். இன்று இது போன்ற அறிஞர்கள் கிடைப்பது
குதிரைக் கொம்பாக இருப்பதால் பழைய அறிஞர்களையே கொண்டாடி வருகின்றனர்
பெரும்போலோர். இவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் சில ‘தர்காவாகக்
கொண்டாடப் படுகின்றன’. சில போலி தர்காக்களும் காசு நோக்கத்தில் உருவாக்கப்
பட்டுள்ளன. இனி தர்கா என்றால் என்ன, அங்குப் போகலாமா வேண்டாமா,
அப்படிச் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தீமைகள் என்ன என்பதை
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரப் பதிவில் பார்ப்போம். :)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


டிஸ்கி : எனது இந்தப் புரிதலில் தவறு இருந்தால் அன்பர்கள் தயை கூர்ந்து திருத்தவும்

Monday, March 21, 2011

பலூன் மேடை

காற்று ஊதப்பட்ட‌
பலூன் மேடைகளில்
குதித்துச் சறுக்கி விளையாடும்
குழந்தைகளைக் கண்டு
மனம் ஏங்கியது
நமக்கும் இது போன்று
கிடைத்திருக்கவில்லையேயென

இதுவெல்லாம் இப்ப
எம்புள்ளைக்கு
எங்கே புரியப் போகிறது
சறுக்கப் பயந்து மேலேயே
நின்று கொண்டிருக்கிறான்

கொடுத்தக் காசும்
நேரமாய்க்
கரைந்து கொண்டிருக்கிறது

'டேய் சறுக்குடா'








=========================================

அடுத்தப் பதிவு சம்பந்தமான ஒரு அறிவிப்பு
-----------------------------------------------

தோழர் பார்வையாளன் 'தர்ஹாவைப் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை'
எழுதுமாறு என்னிடம் கேட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல நிறைய பேர் ஆவலுடன்
எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும்
அளவுக்கு நான் ஒரு நல்ல எழுத்தாளனோ அல்லது தட்டச்சனோ கிடையாது.

இதுவோ ஒரு குழப்பமான சப்ஜெக்ட். ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கும்
அறிஞர்கள் எழுதினால் தெளிவாக இருக்கும். இருந்தாலும் என் மீது பிரியம்
வைத்து எதிர்பார்ப்பதனால் இன்ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவாக அதை இட
நினைத்துள்ளேன். அநேகமாக இரண்டு பதிவுகளாக இட விருப்பம்.

முஸ்லிம் அன்பர்கள் தமது கருத்துக்களை அல்லது வாதத்தை
பின்னூட்டினால் 'தீர்ப்பு' சொல்ல வசதியாயிருக்கும் :))


வஸ்ஸலாம்.

Monday, March 14, 2011

பெண் ஒன்று கண்டேன் .. பெண் அங்கு இல்லை ...

விசிட் விசாவில் வந்த மனைவியையும் குழந்தையையும் ஊருக்கு
அனுப்பி விட்டு மீண்டும் பேச்சிலர் வாழ்க்கை வாழ ஒரு பழைய கட்டிடத்தில்
ஃப்ளாட் ஓனர் தங்கும் அறையில் ஒரு பெட் ஸ்பேஸ் எடுத்துத் தங்கினேன்.

அங்கே நான் மாறும் வரை அந்த பில்டிங் முன்பு மகப்பேறு மருத்துவமனையாக‌
இருந்த விவரம் எனக்குத் தெரிந்திருக்க‌வில்லை. பொருட்களை ஒவ்வொன்றாகத்
தூக்கிக் கொண்டு முதல் மாடியில் இருக்கும் எனது அறையில் படிகளின் வழியே
சென்று வைத்துக் கொண்டிருந்தேன்.(மெஸனைன், எனவே லிஃப்ட் கிடையாது)

கொஞ்சம் வெயிட்டான பேக்கேஜைப் படிகளின் வழியே தள்ளாடித் தள்ளாடி
எடுத்துச் சென்று உள்ளே நுழைந்ததுதான் தாமதம் 'சடக்'கென்று பிடித்துக்
கொண்டது முதுகெலும்பு சங்கமிக்கும் இடுப்புப் பகுதியில்.

தொடர்ந்து ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரங்களோ ஒரு மாதிரியாய்
கோணிக்கொண்டு அலுவலகம் சென்று வந்தேன். இதை விட ரொம்ப முக்கியமானது,
அங்கு சேர்ந்த முதல் ஒரு வாரம் வரை தூங்குவதற்குக் கஷ்டப்படவில்லை,
மாறாக‌த் தூங்கி எழுந்ததும் கஷ்டப்பட்டேன்.

காரணம் கைகள் நூலிழை போல் கடிக்கப்பட்டு இருந்தன. ஒருநாள் வலது கையும்
மறு நாள் இடது கையும் அங்கங்கே கடிக்கப்பட்டு சிறிதாய் தோல் கிழிந்திருந்தது.

என்ன காரணமென்று தெரியவில்லை, மூன்றாம் நாளிலிருந்து முழுக்கை
சட்டை அணிந்து தூங்கவாரம்பித்தேன். காலையில் எழுந்து பார்த்தால்
காதுகளின் மடல் ஓரங்கள் கடிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்துக் கொஞ்சம்
பயம் வர ஆரம்பித்தது.

இந்த நாட்டில் மூட்டைப் பூச்சிகளும்,சிறிய கரப்பான் பூச்சிகளும் இல்லாத‌
வீடுகள் இல்லையெனும் அளவுக்குச் சகஜமானவை. மூட்டைப் பூச்சியால்
கடிபட்ட இடம் தெரியும் ஆனால் கரப்பான் பூச்சி கடித்துப் பார்த்ததில்லை.
ஆதலால் அங்கங்கே உலாவிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிதான்
கடித்திருக்கும் என்ற முடிவுக்கு வந்த பின் பயம் போய் விட்டது.

ஃப்ளாட் ஓனரிடம் முறையிட்ட போது, நான் எத்தனை காலமாக இங்கே
தங்கி வருகிறேன், ஒருபோதும் நான் இந்த மாதிரி கடிபட்டதில்லையே'
என்று சொன்னார். ஒருவேளை நாம் மிக இனிப்பானவனாக இருக்கிறோமோ
என்று மகிழ்ந்த‌ வேளையில் 'அய்யய்யோ, சர்க்கரை வியாதி வந்து
தொலைத்து விட்டதோ' என்ற ஐயமும் வந்து பயமுறுத்தியது.
என்றாலும் நான்கைந்து நாட்களுக்குப் பின் எல்லாம் சுமுகமாகச்
சென்றது. காரணம் 'கடி'கள் நின்று விட்டன.

பிறிதொரு நாள் படிகளில் இறங்கும் போது கால்களை காற்றில்
பறக்குமாறு தட்டி விட்ட படிகளின் மேல் பிடறி முட்ட‌ இடறி விழுந்தேன் :)

தூங்கும் போது சில வேளைகளில் எங்களின் இரு கட்டில்களுக்கு இடையில்
நிற்கும் நிலைக்கண்ணாடியிலிருந்து ஒரு பெண் என்னை கோபமாக உற்று
பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். நல்ல வேளை அப்போதே ப்ளாக்
எழுதுபவனாயிருந்தால் 'கனவில் ஒரு கோப தேவதை'ங்கற தலைப்பில்
ஒரு பதிவு வந்திருக்கும் :)

இப்படியாகச் சில மாதங்கள் ஓடி விட்டன.

ஒருநாள் ஒரு பெரியவரைச் சந்தித்தேன். எனக்கு முன்பே அறிமுகமானவர்.
சூஃபிஸம் அல்லது தரீக்கா வழியில் புலமை பெற்றவர். தமக்குத் தங்குவதற்கு
ஒரு அறை கிடைக்குமாவென விசாரித்தார். அச்சமயம் நானும் ஊருக்குப்
போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்ததால் எனது அறையில் தங்கிக்
கொள்ளுமாறு சொல்லி ஃப்ளாட் ஓனரைச் சந்திக்க வைத்து அனுமதி பெற்று
அவரைத் தங்க வைத்து விட்டு நானும் ஊருக்குச் சென்று விட்டேன்.

ஊரிலிருந்து திரும்பிய பின் எனது அறைக்குச் சென்றேன். பெரியவரும்
ஊருக்கு கேன்சலில் சென்று விட்டதாக ஃப்ளாட் ஓனர் சொன்னார். அதோடு
இன்னொன்றையும் சொன்னார்,

'பாய், பெரியவர் ஒரு தினுசான ஆளாய் இருப்பார் போல, ஒரு நாள் இரவு
திடீரென்று ஏதோ அரவம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தேன். குடியரசு
தின விழாவில் கொடியேற்றுவார்களே அது போல ஏதோ சைகை செய்து
கீழே இறக்கிக் கொண்டிருந்தார், நேர்கீழே பாட்டில் ஒன்று வைக்கப் பட்டு
இருந்தது. அவரது வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது, கடைசியில்
பெருமிதத்தோடு சொன்னார்,'எங்கிட்டப் பலிக்குமா உன் பாச்சா'.

காலையில் அவரிடம் என்னவென்று விசாரித்தேன் ஒன்றுமே
சொல்லவில்லை புன்னகைத்ததைத் தவிர. எனக்கும் அவரோடு சரியாக ஒத்துப்
போகவில்லை, எனவே எனக்கெதிராக பில்லி சூனியம் ஏதும் செய்தாரா இல்லை
ஆளே லூசா, புரியவில்லையே பாய், உங்களுக்கு ஏதாவது புரிகிறதா.

நான் சொன்னேன் 'பயப்படாதீங்க பாய், உங்களுக்கெதிரானது அல்ல,
அந்தப் புன்னகையின் மூலம் எனக்குத்தான் தகவல் சொல்லியிருக்கிறார்,

'தம்பி, நீ தங்குவதற்கு வேறு இடம் பார்த்துக்கோ' :)

எஸ்கேப்பு

Monday, March 07, 2011

வறுமையின் நிறம் சிவப்பு

அண்டை வீட்டான்
துபாயில் வேலை
குறைந்த சம்பளம் வங்கிக் கடன்
கடன்காரர் தொல்லையென‌
புலம்பி விட்டுச் சென்றதன் பின்
எனது செல்போன் ஒலித்தது

'ஏம்பா பக்கத்து வீட்டுக்காரன்
படிக்காதவன் ...
இங்கே சொத்துக்களாய்
வாங்கிப் போடுகிறான்
நீயோ படிச்ச புள்ள‌
வெவரமில்லாம இருக்கியே'

அடப்பாவி மக்கா,
இக்கரைச் சிவப்புக்கு
அக்கரைப் பச்சைதான் காரணமோ



-----*-----*-----*-----



நூறு திர்ஹத்திற்கு வாங்கிய
சட்டை அணிந்து வந்த அன்று

அதே நிறத்தில் அதே டிசைனில்
ஆஃபீஸ் பாயும் அணிந்திருந்தான்

நெருங்கிப் பார்த்ததில்
தரம் குறைந்திருந்தது தெரிந்தது

விலையை விசாரித்தேன்
பத்து திர்ஹம் என்றான்

அவனது சம்பளத்தை யோசித்தேன்
அதுவும் எனதை விடப் பத்து மடங்கு குறைவு

இப்படித்தான் விரலுக்கேத்த வீக்கமாய்
எல்லோருடைய பொழுதும் கழிகிறதோ



டிஸ்கி :
கவிதை உருவில் என்டர் தட்டி வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறேன். நறுக்கென்று
எழுதத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் டிங்கரிங் செய்து தந்தால் நலம். :)

இப்படியிருந்தா நல்லாயிருக்கும் இதைத் தவிர்த்தா நல்லாயிருக்கும்னு
புலவர் பெருமக்கள் சொல்லித்தந்தா எவ்ளோ நல்லாயிருக்கும். ஹூம் :(



வஸ்ஸலாம்.

Wednesday, March 02, 2011

நீங்க எளிதில் கடத்தியா அல்ல அரிதிற் கடத்தியா

என்ன வேணுமின்னாலும் கடத்துங்க ஆனா நல்லதை மட்டும் கடத்துங்க.

ப்ளாக் எழுதுவதாயிருந்தாலும் சரி சினிமா எடுப்பதாயிருந்தாலும் சரி
அல்லது பேசுவதாயிருந்தாலும் சரி என்னுடைய இந்த எழுத்தால், பேச்சால்,
படைப்பால் ஏற்படும் விளைவுகள் என்ன, ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று
அறிந்து செய்வது நமக்கும் நல்லது நாம் சார்ந்த சமூகத்திற்கும் நல்லது.

நடப்பதை அல்லது நடந்தைத்தான் கூறுகின்றோம் என்றுதான் பறையறிவிக்கும்
பத்திரிக்கைகளும், நடுநிசி நாய்களும் மக்கள் மத்தியில் உலா வருகின்றன‌.

இன்னா நாற்பது,இனியவை நாற்பது போன்ற 'Do's and 'Dont's சொல்லப்பட்டது
ஒரு ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கிக் கட்டிக் காப்பதற்குத்தான்.

அடுத்தவனைப் பார்த்து நாம் மாறுவதை விட நம்மைப் பார்த்து அடுத்தவன்
மாறும் அளவுக்கு நாம் ஒரு மாடலாக முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

நம்மிலிருந்து என்ன வெளிப்படுமோ அதை வைத்துத்தான் கணிக்கப் படுகிறோம்.
இனி அந்த டைரக்டரைப் பார்க்கும் போதெல்லாம் நாய்கள் நினைவுக்கு வரும்.

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்று சொல்லப் படுவதுண்டு. அப்படித்தான்
இருக்கிறது கலையும் வலையும். நாளாக ஆக ஆத்ம நண்டு கொழுத்து திமிறவாரம்பிக்கிறது.

சினிமாவில் கவர்ச்சி,ஆபாசம்,குத்துப் பாட்டு மற்றும் சண்டை இருந்தால்தான் ஓடுகின்றன.
அதுபோல் பதிவுலகிலும் இவை கொண்ட பதிவுகள்தாம் பிரபலமாகின்றன். நாம் அல்லது
நம் படைப்புகள் பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கமிருந்தால் இந்தச் சகதியில் நாமும்
அகப்பட்டு விடுவோம். நம்முடைய நோக்கம் சமூகத்திற்கான சேவை என்றிருந்தால்
பிரபலம், ஓட்டு, ஹிட்ஸ் பற்றிக் கவலைப் படாமல் 'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்று தொய்வில்லாமல் தொடரும். இறுதியில் 'வாய்மையே வெல்லும்'.

அழகாகச் சொன்னார்கள் எம்பெருமானார்(ஸல்) அவர்கள்.
'நீ நல்லதிற்குச் சாவியாகவும் தீயதிற்குப் பூட்டாகவும் இரு' என்று.

நம்மிடத்தில் மின்னஞ்சலாய் வந்து சேரும் பெண் ஏஞ்சல்களின் படம் கண்டு ரசித்தோமோ
இல்லை ஏங்கிப் புசித்தோமோ இல்லை தலை கவிழ்த்துத் தவிர்த்தோமோ, உடனே தடைப்
பூட்டு போட வேண்டும் அரிதிற் கடத்தியாய், யாருக்கும் ஃபார்வர்டு செய்யாமலே.

அன்பு,ஆரோக்கியம்,சமூகம்,ஒற்றுமை,பாதுகாப்புச் செய்திகளை உடனுக்குடன்
பரவலாக்க வேண்டும் எளிதில் கடத்தியாய்.

ஈக்கள் எல்லாவற்றிலும் அமர்கின்றன. மணமோ பிணமோ சாக்கடையோ
எதுவும் பார்ப்பதில்லை. அவற்றிலிருந்து நோய்கள்தாம் பரவுகின்றன.மாறாக‌
தேனீக்கள், மலர்களோடு பாசம் உயர் மலைகளிலும் மரங்களிலும் வாசம்.
நமக்குத் தருகின்றன தேனென்னும் நோய் நிவாரண ரசம்.

நீங்கள் தேனீயாக வாழ விருப்பமா அல்லது ஈயாக நாற விருப்பமா.

தேனீயாக வாழ விரும்பினால் தீன்(நல்)வழி தேர்ந்தெடுங்கள்.

தீமைகளோடு புழங்காதீர். அவற்றின் ஆரம்பம் கவர்ச்சி முடிவு இழிவும் அழிவும்.

நன்மைகளை விரும்புங்கள், அவற்றின் ஆரம்பம் கொஞ்சம் சிரமம், ஆனால்
முடிவோ நிம்மதி,வெற்றி,சந்தோஷம்,ஆரோக்யம்,etc.,etc.



டிஸ்கி :
புத்திமதி உங்களுக்கென்று நினைக்க வேண்டாம். நான் எழுதுவதை
அதிகம் பார்வையிடும் என்னை முன்னிருத்திச் சொல்லப் பட்டது.

வஸ்ஸலாம்.

Monday, February 21, 2011

சாம்பல் பூத்த சன்மார்க்கச் சாதிகள்

இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது ஆனால் முஸ்லிம்களிடத்தில் வந்து
தொலைந்து விட்டன‌. நல்ல வேளை எல்லாமே கொள்கை சம்பந்தமான
பிரிவுகளே தவிர பிறப்பின் அடிப்படையில் அவை அமையவில்லை.

முஸ்லிம்களில் உள்ள பெரிய பிரிவுகளை மட்டும் கீழே உள்ள‌ படத்தில்
குறிப்பிட்டுள்ளேன். அதற்குள் இருக்கும் உட்பிரிவுகளைச் சொல்ல வில்லை.
அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட மற்றும்
தொழில் மூலம் உருவான‌ லெப்பை,மரைக்காயர்,மாலுமியர்,ராவுத்தர்,மோதினார்
போன்றவைகளும் மொழி அடிப்படையில் உருவான‌ உர்து முஸ்லிம் தமிழ் முஸ்லிம்
போன்ற பிரிவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக‌ மறைந்து கொண்டிருக்கின்றன.






இஸ்லாமிய உலகில் இப்பொழுது எஞ்சியிருப்பது,ஒன்றுக்கொன்று சேராது முரண் பிடித்து
முட்டிக் கொண்டிருப்பவை இந் நான்கு பெரும் பிரிவுகள்தாம். சாதிகள் என்ற பிரிவில்
இவைகளைச் சேர்க்க முடியாது. ஏனென்றால் எந்த நேரத்திலும் யாரும் எப்பிரிவிலும்
மாற முடியும். ஆனால் சாதி என்பது அப்படியல்ல, அது கடைசி வரை சாகடிக்கும் தீ.



மஹ்தி மற்றும் தஜ்ஜால்(Anti Christ) வருகைக்குப் பின் ...

மேற்கண்ட எல்லோரும் ஓரணியில், இன்ஷா அல்லாஹ்

*

*

*

ஈஸா (Jesus அலை) வருகைக்குப் பின் .........

மனித குலம் அனைத்தும் ஓரணியில் :-)

Wassalam

Tuesday, February 08, 2011

புதிய மனிதா ... ப்ளோகுக்கு வா

டீன் ஏஜ் ஜாக்கிரதைங்கற தலைப்பில் சக பதிவர் இந்திரா சில தினங்களுக்கு முன்
இன்றைய இளம் வயதினரைப் பற்றியக் கவலையான விஷயங்களை எழுதியிருந்தார்.

அதைப் படித்தவுடன் தோன்றிய தீர்வை அங்கேயே பின்னூட்டியிருந்தேன். அதனுடைய
தொடர்ச்சியான‌ சிந்தனையாக இங்கே கொஞ்சம் வார்த்தைகளினால் ஆன‌ நீள் பதிவு இது.

இன்றைய இளைய சமுதாயம் கெட்டுப் போவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம்.
நெட்,ஃபேஸ்புக்,சாட்டிங்,பலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று
இளமையைத் தின்னக்கூடிய காரணிகள் ஏராளமாகவும் சுலபமாகவும் கிடைக்கும்
இந்த நேரத்தில் இந்த வயதின் ஆர்வக்கோளாறுகளை அறிவுரை சொல்லித் திருத்துவது
கொஞ்சம் சிரமம்தான்.

நாம் சொல்லும் அறிவுரை செயல்பட வேண்டுமென்றால் அவர்களின் ஆசை,
திறமை,இளமை சரியான இலக்கில் திருப்பி விடப்பட வேண்டும். அதுவும்
அவர்களின் விருப்பத்தோடு. இதற்கு நான் சொன்ன தீர்வு,

(அவர்களை எப்படியும் கணிணியை விட்டோ அல்லது இணையத்தை விட்டோ
திருப்ப இயலாது. ஆகையால்) அவர்களை ப்ளாக்கர்களாக மாற்றுங்கள் :).

அடுத்த பதிவுக்கு என்னடா செய்யலாம், எங்கேர்ந்து தேத்தலாம் என்ற சிந்தனையில்
நாலு பதிவுகளை படிக்க நேரிடும். புதிய பதிவர்களுக்கான‌ போட்டிகள் அவ்வப்போது
திரட்டிகளால் நடத்தப் பட வேண்டும்.

Idle mind is devil's workshop.

எனவே சும்மாயிருக்காமல் நல்ல விஷயங்களில் பிசியா இருக்கணும்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________**********______________________


'ஆற்றலை அழிக்க முடியாது ஆனால் வேறெரு ஆற்றலாக மாற்றலாம்'.

'செய்ய வேண்டியதைச் செய்யலன்னா செய்யக் கூடாததையெல்லாம் செய்ய
வேண்டி வரும்' ; எங்கே செலவழிக்கணுமோ அங்கே செலவழிக்கன்னா
செலவழிக்கக் கூடாத இடங்களிலெல்லாம் செலவழிக்க வேண்டி வரும்'.

_________________________**********______________________


ஆதலினால் ஒரு பழக்கத்தைத் தவிர்க்க வேறு ஒரு நல்ல மாற்றுப் பழக்கத்தைத்
தேர்ந்தெடுங்கள். மிகச்சிறந்த மாற்றைக் கண்டு பிடியுங்கள் அது கிடைக்காத
பட்சத்தில் அதை விடக் குறைவான ஆபத்தைத் தேர்ந்தெடுங்கள்.

சிகரெட்டுக்கு மாற்று சுவிங்கமா,வெற்றிலையா இல்லை வேறேதுமா ?

குடிப்பழக்கத்திற்கு மாற்று கோக்கா,தேநீர் காப்பியா இல்லை வேறேதுமா ?

விபசாரம்,சுய இன்பத்திற்கு மாற்று நிச்சயம் திருமணம்தான்.

திருமணத்தைக் கஷ்டமாக்கி வைத்திருப்பதால்தான் விபசாரம் மலிவாகிப் போனது.
அதிலும் விபசாரத் தொழில் செய்பவர்கள் 'ரெண்டு ஜான் வயித்துக்காக‌,
பெத்த பிள்ளைக்காக, ஆதரவற்ற நிலைமைக்காக' என்று சொல்லி அனுதாபம்
தேடிப் பெற்று இழிநிலை என்று தெரிந்தும் அதனைத் தொடர்கிறார்கள். இதையே
திருடனும் கொள்ளையடிப்பவனும் இன்னும் எல்லாத் தவறுகள் செய்பவர்களும்
தன்னை நியாயப்படுத்திக் கொண்டால் என்ன செய்வது.

_________________________**********______________________


எது எப்படியோ, மனிதனைப் பற்றிய முழுமையான அறிவு அவனைப்
படைத்தவனுக்குத்தான் தெரியும். இறைவன் திருமறையில் கூறுவது,

'சத்தியம் வந்தது இன்னும் அசத்தியம் அழிந்தது'
(ஜாஅல் ஹக் வ zahaqqal பாத்தில்)

'நிச்சயமாக நன்மை(யான காரியங்)கள் தீமைகளைப் போக்கிவிடும்'
(இன்னல் ஹஸனாத் யுத்ஹிப்னஸ் ஸய்யிஆத்).
.
.
.
ஆதலினால் (நன்மைகளைக்) காதல் செய்வீர் :)


வஸ்ஸலாம்.

Monday, January 31, 2011

வாக்காளப் பெருமக்களே


நாடாளும் அரசினைத் தெரிவு செய்யவிருக்கும் நண்பர்களே !

அனைவரின் கோரிக்கைகளுக்கும் அரசியல் வியாதிகள் செவிமெடுக்கும்
பொன்னான சமயமிது.

இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இனி ஐந்தாண்டுகளுக்கு யாருக்கும்
சூடோ சொரணையோ இருக்காது.

நல்ல நல்ல கோரிக்கைகளைத் தயார் செய்யுங்கள்.

தயவு செய்து எந்தக் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்காதீர்.

நல்லவர்களையும் மனித நேயம் கொண்டவர்களையும் அடையாளம் காணுங்கள்.

அறிஞர்களையும் இளைஞர்களையும் தேர்தலில் நிறுத்துங்கள்.

கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்கள் நாட்டுக்கோ மக்களுக்கோ நல்லது செய்யும்
தகுதியில்லையெனில் நல்லவர்களை சுயேச்சையாக நிறுத்தி ஜெயிக்க வையுங்கள்.

சுயேச்சைகள் அதிகமாக ஜெயித்து அவர்களும் எந்தக் கட்சிக்கும் விலை போகாமல்
ஒரு புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்கலாம்.

மக்கள் எப்படியோ அப்படித்தான் அரசு அமையும்.

ஓட்டுப் போடுவதற்கு முன் இதெல்லாம் யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு
கட்சியை ஆதரித்தால், பின்னால் புலம்ப வேண்டி வரும்.

ஆதலால் நம் ஆண்மை மதிக்கப் பட‌ நாட்டின் இறையாண்மை காக்கப்பட‌,

ஓட்டு வாங்க வரும் வேட்பாளர்களிடம் கோரிக்கைகளைத் திறமையாய்த் திணியுங்கள்.
'ஒண்ணு ஏதாவது செய்யட்டும் இல்லண்ணா ஙொய்யால செத்து மடியட்டும்' :)

வாழ்க ஜனகனமன நாயகம்.

Wednesday, January 26, 2011

ஐம்பதிலும் ஆசை வரும் ஆனால் அதில் அந்தரங்கம் கிடையாது

இரவு நேரத் தொழுகையிலும் அன்றைய நிச்சயத்தின் நீட்சியாய் அடைப்புக்
குறிகளுடன் கூடிய‌ ஜன்னல் காட்சி தெரிந்தாலும் பிறகு அது தொடர்வதில்லை.
எனினும் இந்நேரம் அங்கு யாரும் இருக்கக் கூடுமோ என்ற தவிப்பும் இல்லாமலில்லை.

நல்ல வேளை கனவில் வருவதில்லை. அடுத்த நாள் அதிகாலைத் தொழுகைக்குப்
பின் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் சென்று இருப்பிடத்தில்
அமரும்போதுதான் மீண்டும் அந்த ஜன்னலின் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.

எனது இருப்பிடத்திலிருந்து பார்க்கும் போது வானத்தின் வர்ணம் சிதறடிக்கப்பட்ட வண்ணம்
ஜன்னலைச் சுற்றி வெளிர் நீல நிறம் படிந்திருக்கும். மற்றொரு அலுவலக சகாவின்
இருப்பிடத்திலிருந்து நோக்கினால் மரங்களடர்ந்த பச்சை வண்ணமாய்த் திகழும் அவ்வீடு.

கணிணித் திரையை நோக்கி அமர்ந்திருந்தாலும் இடது பக்கமாக இருக்கும் ஜன்னல்
திரையை நோக்கி அடிக்கடி திருப்புவதால் ஒரு பக்கமாக கழுத்தில் வலி தெரிகிறது.
என்றாலும் காட்சியின் சுவாரசியத்தில் இந்த வலி ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

முன்பெல்லாம் ஒரே ஒரு தலைதான் தெரியும், ஆர்வமாகப் பேச்சு கொடுக்க
ஆரம்பித்த பின் இன்று ஒன்றுக்கு மேல் தெரிய ஆரம்பித்து விட்டன. அதுவும்
காலையில் வந்ததும் வராததுமாக முக்காடிட்ட நான்கைந்து தலைகள் தெரியும் போது
அதுவும் எனக்காகவே காத்திருக்கும் போது எப்படி இருக்கும்.

முதலில் உதற ஆரம்பித்தது, இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
நாளடைவில் எல்லோரிடமும் பேசிப் பழகிவிட்டேன். மேலும் அவர்கள்
தனியாக என்னிடம் பேசினாலும் ஒரே நேரத்தில் பேசினாலும் தனித் தனியாகத்தான்
பதில் சொல்கிறேன். ஒட்டு மொத்தமாக எல்லோரிடமும் ஒரே நேரத்தில் சொல்லக் கூடிய,
அதுவும் எல்லோருக்கும் பொருத்தமான வாக்கியத்தைக் கண்டு பிடித்து விட்டால் போதும்
'மவனே எத்தனை பேர் வந்தாலும் சமாளித்து விடலாம்'.

'உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்' என்பது போன்ற பொதுவான
ஒரே பதில் சொல்லலாம்தான். ஆனால் அதில் நம்பகத்தன்மை குறைந்து நாளை
ஒருவருமே தென்படாமல் போகும் அபாயம் உண்டு.

எனவே என்ன செய்வதென்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.
இதில் அனுபவம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஆலோசனை
சொல்லுமாறு இந்த ஐம்பதாவது பதிவில் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்முறையாக ஒரே ஒரு தலை தென்பட்ட நேரத்தில் புகைப்படம் ஒன்று எடுத்து
வைத்திருந்தேன். அதை இப்போது உங்களின் பார்வைக்குத் தருகிறேன். அவ்வீட்டின்
பெயரும் அதில் பொறிக்கப் பட்டிருக்கும். பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

'அது நம்ம ஆளு'.
.


எல்லோருக்கும் இது போன்று வீடுகள் இருக்கலாம். ஆனால் அவைகளைப்
பார்க்காமலேயே தவிர்த்து விடலாம். ஆனால் அவ்வீட்டினருகில் ஒரு ப்ளாட்
வாங்கி வைத்திருப்பதால்தான் அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கிறது.

.
.
.
.
.
வீட்டுப் பெயருக்கு ஒரு க்ளூ கொடுக்கிறேன். 'மயிலோடு ஜீவிதம்'.
.
.
.
.
.
.
.
இந்த வாரத்திலிருந்து இன்னொரு ஜன்னலும் திறக்க ஆரம்பித்து விட்டது.
அதன் விவரத்தை டிஸ்கியில் சொல்கிறேன். நமக்கே இந்த கதின்னா,
ஒன்றுக்கு மேல் 'வைத்திருப்பவர்கள்' கதி என்னவாயிருக்கும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

சரி போனாப் போவுது இதுக்கு மேல உங்களைச் சோதிக்க மனமில்லை.
இதோ பார்த்துக் கொள்ளுங்கள். நான் ரசிக்கும் அவ்வீட்டையும்,முக்காடு
போர்த்திய பின்னூட்ட அழகியையும். ஆள் எப்பூடி :-)









டிஸ்கி 1 :
இரண்டாவது ஜன்னல் வேறு யாருமல்ல, கூகிள் ரீடர்தான். நாம் பின்பற்றும் பதிவர்கள்
பதிவிட்ட உடனேயே மெயிலைப் போல் அடைப்புக் குறிகளுக்குள் காட்டுகின்றது.

டிஸ்கி 2 :
இடது பக்க ஜன்னல்னு ஏன் சொன்னீர்கள் என்று கேட்க நினைப்பவர்களுக்கு,

ஆம், எங்கள் எல்லோருக்கும் ஒரு கணினியும் இரண்டு திரைகளும் தரப்பட்டுள்ளன‌.
ஒன்று அஃபீஷியல் ஒர்க்குக்காக இன்னொன்று பெர்சனுலுக்காக.

டிஸ்கி 3.
பதிவு எழுதுவதால் விளையும் நன்மை, தீமைகள் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும்.

...... சந்திப்போம் அடுத்தடுத்த பதிவுகளில். வஸ்ஸலாம்.

Monday, January 17, 2011

ஃபோன் ரிங்ங்... டேக் குக்கி சிங் 'ஙே'....

பண்பலை Cool 94.7 ல் தினமும் காலை 8.30 மணிக்கு இந்த லொள்ளு நடக்கும்.

அலுவலகம் போகும் வழியில் வாகனத்தின் வானொலியில் கேட்கும் தொலை பேசி
கலாய்த்தல் நிகழ்ச்சி. எட்டரைக்கு முன்பே அலுவலகத்தை எட்டியிருந்தாலும்
இந் நிகழ்ச்சியைக் கேட்டு விட்டுச் சிரித்த முகமும் சீதேவித்தனமுமாகத்தான்
தினமும் அலுவலகம் செல்வது வழக்கம்.

'ஹலோ, ஈஸ் திஸ் ஃபலான் கம்பெனி, டூ யு ஹேவ் வெப்ஸைட்,
ஐ வான்ட் டு விஸிட் யுவர் வெப்ஸைட், வேர் ஈஸ் இட், இன் துபாய் ஆர் அபுதாபி?'

'ஹலோ, ஈஸ் திஸ் ஜிம் கிளாஸ், ஐ வான்ட் டு டூ ஜிம், யுவர் கம்பெனி
இன் துபாய் பட் ஐ ஆம் இன் அபுதாபி, வில் யு ஸென்ட் மீ யுவர் கார்'

'ஹலோ, ஈஸ் திஸ் டான்ஸ் கிளாஸ், ஐ வான்ட் டு லேர்ன் டான்ஸ்,
வில் யூ டீச் மி 'டூயட்'.


போன்று எதிர்முனையை 'திகிலடித்து', ஃபோன் கட் செய்யப்படும் வரை
கலாய்த்தல் தொடரும்.

இதைச் செய்பவரின் பெயர் 'பிரின்ஸ்' என்றே நினைக்கிறேன்.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசித் திணறடித்து விடுவார்.

சட்டவிதிகள் பின்பற்றப் படும் இந்த நாட்டிலேயே இப்படிக் கலாய்க்கிறார்
என்றால் மற்ற நாடுகளிலெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் என்ன
பாடுபடுத்துவார்களோ தெரியாது.

ஒருநாள் இப்படித்தான், டான்ஸ் கிளாஸென்று நினைக்கிறேன், போன் பேசிய
அந்தப் பெண் கோபமாகக் கட் செய்து விட்டார். அன்று மாலை ரேடியோவை
ஆன் செய்தால் 'டொய்ங்க்' தான்.

'ஆஹா, அந்தப் பெண் தான் புகார் கொடுத்திருக்க வேண்டும். அதனால்தான்
கூல் பண்பலையைக் குலைத்து விட்டது அரசாங்கம் என்று நினைத்தேன்.

ஆனால் நான்காம் நாள் நன்றாகவே வேலை செய்தது மட்டுமல்ல அந்தப்
ப்ரோகிராமும் வழக்கம் போலவே நடந்தது. பிறகு ஏன் மூன்று நாட்களாக
எடுக்கவில்லையே. ஒருவேளை மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்து விட்டு
மீண்டும் அனுமதி கொடுத்திருப்பார்களோ. (பிறகு ஏன் தமிழ் பண்பலையான‌
'சக்தி', இழந்த சக்தியை மீண்டும் பெறவில்லை என்ற யோசனையும் எழாமல்
இல்லை). பின் விசாரித்துப் பார்த்ததில் ராஸ் அல் கைமாவின் மன்னர்
இறந்தற்கான மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு என்று தெரிந்தது.

ஒரு வழியாக எல்லாக் கம்பெனிகளையும் கலாய்த்து முடித்தாயிற்று,
இப்போ தனி நபரின் பக்கம் தாவி விட்டார்கள். யாரைக் கலாய்க்கணுமோ
அவரின் போன் நம்பரைக் கொடுத்தால் போதும். இங்கே உள்ளவர்களை
மட்டுமல்ல இப்போ கடல் கடந்தும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக பிறந்த நாளன்று, திருமண வருட முதல் நாளன்று, நண்பர்களால், காதலர்களால்,துணைவர்களால் தொலைபேசி எண் கொடுக்கப் பட்டு 'ஷாக்'
ட்ரீட்மென்ட் செய்யப்பட்டுப் பின் 'ஹேப்பி பர்த் டேஏஏஏஏஏஎ' என்று அலறப்படும்.

ஜாக்கிரதை, அடுத்து நீங்களாகவும் இருக்கக் கூடும். அப்படி வந்தால்
டென்ஷனாகாமல் கூலாகவே பேசவும்.

If நெக்ஸ்ட் டைம் ,
'ஃபோன் ரிங்ஸ், இட் மே பி குக்கி சிங்ஙே...ஏ பல்லே பல்லே.....' :)


Flash டிஸ்கி :
யாருங்க அது கண்ணு வச்சது, தினமும் இந்த நிகழ்ச்சியை ரசிக்கிறானே என்று.
8.30 என்பதை 9 மணிக்குப் பிறகு என்று ஆக்கி விட்டார்கள் :(

டிஸ்கி 1 :
Cool 94.7க்கு ஆசியாவிலேயே சிறந்த பண்பலை என்று மசாலா.காம்
அவார்டு கொடுத்திருக்கிறார்கள் சமீபத்தில்.
டிஸ்கி 2:
நம்ம ஆசிப் அண்ணாச்சியும் ஏதோவொரு வானொலியில்
அலை பேசினாராமே, இப்பவும் தொடர்கிறதா என்று தெரிய வில்லை.

Sunday, January 09, 2011

பொங்கல் தாத்தா

ஏதாவதொரு கவிதை எழுத வேண்டுமென‌ யோசித்து,
தலையைச் சொறிந்துப் பின் யோசித்து நாம் எழுதிய‌
கவிதைகள் ஓரிரண்டு வாசிப்பில் சலிப்புத் தட்டி விடும்.

ஆனாலும் சில நேரம் தாமாகவே சிலிர்த்துக் கிளம்பிய
வரிகள் எத்தனை முறை வாசித்தாலும் இன்பம் தரும்.

அதில் ஒன்று, சென்ற முறை பதித்த பயணங்களினூடே

மற்றொன்று இதோ இன்று

சூடு தர‌/பெற வந்து சூடு பட்ட க(வி)தை
------------

குளிர் ஜுரம் போல
நடுங்கத் தொடங்கியது தேகம்

மருந்திட்ட துணையின்
கைச்சூடு இதமாய்த் தெரியவே

முழு தேகம் முச் சூடும் பெற‌
தாகிக்கத் தொடங்கியது

இன்னும் சில நேரம்
இல்லாளை அருகில்

இருக்க‌ வைத்ததில் ..

இருந்த சூட்டையும்
இழந்ததுதான் மிச்சம்

சூடோ அல்லது மூடோ
ஏன் எல்லா ஆண்களும்
டோனாராகவே இருக்கிறோம் :)


********************************

சில நேரங்களில் சில பதிவர்களின் பதிவில் பின்னூட்டம்
இடும்போது அது கவிதையாக மலர்ந்து விடும்.

சகோ சாதிகாவின் பொங்கல் பதிவில்

ஜ‌னங்க‌ளின்
மனங்களைப் புரிந்து
ஜனவரியில்
ஜனங்களின் வரியில்
எல்லோர் வீட்டிலும்
பொங்கலைப்
பொங்க வைத்த
'பொங்கல் தாத்தா'வின்
புகழ் ஓங்குமா இல்லை வீங்குமா

*************************************

ரமீஸ் பிலாலியின் பதிவுகளில்

ராஜாவை உயர்த்தி ரஹ்மானைத் தாழ்த்திய‌ பதிவில்

சினி சித்தரைத் தூக்கும் வேளையில்
மினி சித்தரைத் தாக்கலாமோ
கனி முதிர்க்கும் தருணமிது
இனி தருவார் முக்கனி விருந்து :)

---------------------------------

பாங்கு கவிதைக்கு மறுமொழி


1400 ஆண்டுகள் பின்னோக்கிய
இரவொன்றில்
காலச் சக்கரத்தை நிறுத்தி
தொழுகையில் லயித்திருந்த வேளை
செல்பேசியின் சத்தத்தில்
சக்கரம் சுழல ஆரம்பித்து
இன்றைய தேதிக்கு
அழைத்து வந்து விட்டது :)

*********************************

வாழ்க கவிதை ; வளர்க கவிஞர்கள் :)

***********************************

Wednesday, December 29, 2010

இரண்டு விதமான‌ அப்ரோச்சும் ஆறாம் அறிவும் கூடவே நன்றியும்

நண்பர்கள் வைத்துக் கும்மியும் ஓட்டுக்களும் பெறும் இவ்வலையுலகில்
கேம்பெய்ன்,மார்க்கெட்டிங் டெக்னிக் ஏதும் செய்யாத நம்மையெல்லாம் எங்கே
கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல்
இருந்து வந்தேன். ஆனால் ஆச்சர்யம் எனது மூன்றில் இரண்டு இடுகைகள்
அடுத்த கட்டத்திற்குத் தாண்டியுள்ளன. ஓட்டுப் போட்டவங்க நல்லாயிருக்கணும்.

தமிழ்மணத்திற்கும், இதுவரை ஓட்டளித்தவர்களுக்கும் இனி ஓட்டளிக்க
இருப்பவர்களுக்கும் எனது மனமார நன்றியும் துஆக்களும்.

எனது பதிவுகள் ஆன்மீகம் பகுதியிலும், பொருளாதாரம் பகுதியிலும்
உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

அடுத்தக் கட்ட ஓட்டளிப்பிற்கான பூத் இங்கே

------------------------------------------------------

இனி பதிவுக்கு வருவோம்...

ஒரு நாட்டின் மன்னன் அன்று ஒரு அறிவிப்புச் செய்தான், அதாவது நாளை
அரண்மனைக்கு வருபவர்களுக்குப் பொற்கிழியும்,சன்மானமாமும்
தரப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அடுத்த நாள் மிக நீண்ட கியூ.
கியூவில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும் அரசரின் புன்சிரிப்பையையும்
மரியாதையையும் பார்த்த மன்னனின் மகன் தானும் போய் நின்று கொண்டான்.

அவனது முறை வந்ததும், அதுவரை புன்சிரித்து வந்த மன்னனின் முகம்
மாறியது. இங்கு வந்து நின்றதற்கானக் காரணம் கேட்டான்.

'கியூவில் நிற்பதால் தேவையானவை கிடைத்து மகிழ்ச்சியோடு திரும்பிச்
செல்லும் மக்களைப் பார்த்தவுடன் எனக்கும் ஆசை வந்தது'.

மகனின் இந்தப் பதிலைக் கேட்டுக் கோபப்படுவதா இல்லை வருத்தப் படுவதா
என்று குழம்பிய மன்னன் சொன்னான்,

'மகனே, இந்த நடைமுறை பொது மக்களுக்கானது. உனக்குரிய முறை
எதுவென்றால் உனக்கு எந்தத் தேவையாயினும் என்னிடம் நேரடியாகவே
கேட்பதுதான். அதுதான் எனக்கும் பிடித்தமானது'.

இந்தக் கதைக்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட்டு விடாதீர்கள் மக்களே :-)

இது கதையோ அல்லது உண்மையோ, நான் சொல்லப் போகும் சில
விஷயங்களுக்கு இதனை இங்கு உதாரணமாகப் பயன் படுத்தப் போகிறேன்.

இறைவன் என்னும் அரசனுக்குக் கீழுள்ள மக்களை இரண்டு விதமாகப்
பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக வாதிகள் (இளவரசன் போன்றவர்கள்)
மற்றொன்று நான்மீக வாதிகள் (பொது மக்கள்).

ஆன்மீகத்தில் நம்பிக்கையற்ற அனைவரையும் (அது முஸ்லிம்களாயினும் சரி)
நான்மீகவாதிகளில் சேர்த்துள்ளேன்.

ஆன்மீகவாதிகளில் இரு வகை, ஒருவர் சரியான இலக்கில் பயணித்து
இறைவனை அறிந்தவர்/அறிபவர். மற்றவர் ஆன்மீக வழியில் பயணப்பட்டுப்
பின் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து வழிகெட்டுப் போனவர்கள்.

ஷைத்தானின் மெயின் எதிரிகள் ஆன்மீக வாதிகள். அவர்களை வழிகெடச்
செய்வதுதான் அவனின் மிகப் பெரிய புராஜக்ட்,பிளானிங்,முயற்சி எல்லாம்.
நிற்க இது இப்படியே இருக்கட்டும்.

இறைவன் இளவரசனான ஆன்மீக வாதிகளிடம் எதிர் பார்ப்பது குழந்தைத்
தனத்தை. குழந்தை எப்படி எல்லாவற்றிற்கும் அம்மாவை அழைக்கிறதோ
அல்லது எதிர்பார்க்கிறதோ அது போல அடியார்கள் எல்லாத் தேவைகளுக்கும்
இறைவனின் பக்கம் முன்னோக்குதலையும் முடுகுதலையும் விரும்புகிறான்.

மன்னன் எங்ஙனம் இளவரசனுக்காக கஜானா அத்தனையும் திறந்து விடத்
தயாராக இருக்கிறானோ அது போல இறைவன் ஆன்மீக வாதிகளுக்காக
அத்தனையும் திறந்து தரக் காத்திருக்கிறான்.

போனில்லாமல் பேசலாம், டி.வி இல்லாமல் பார்க்கலாம், மக்களின் மனதைப்
படிக்கலாம், அடுத்து நடைபெறப் போகும் விஷயங்களை ஓரளவு விளங்கிக்
கொள்ளலாம், கனவின் விளக்கத்தை அறியலாம், நினைத்ததைப் பெறலாம்,
பிறருக்காகவும் பெற்றுத் தரலாம். ஆனால் வேடிக்கை என்னவென்றால்
உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு இறைவனைத் தவிர வேறு யாரின்
மீதும் அல்லது எதுவின் மீதும் ஆசையோ ஆர்வமோ இருக்காது. :-‍)

ஆறாம் அறிவு பற்றிய பிரணாவ் மிஸ்ட்ரியின் வீடியோ பார்த்திருப்பீர்கள்.
மவுஸ்லெஸ் ஆபரேஷனும் ஒரு பொருளை வாங்கலாமா வேண்டாமா
என்று அது தரும் சிக்னலை வைத்து முடிவு எடுப்பது இன்னும் என்னென்ன
விஷயங்கள். உண்மையில் அவரது முயற்சி வியக்க வைக்கிறது என்றாலும்
அது நான்மீக வாதிகளுக்குப் பிரயோசனம் தரும் கண்டு பிடிப்பென்றாலும் அது
பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானது. மட்டுமல்ல ஒவ்வொன்றுக்கும்
ஒரு கருவி என்று போனால் நாளை ஒவ்வொருவரும் (குப்)பைகள் தொங்கும்
மரம் போல கருவிகள் தாங்கிய மனிதனாகத் தான் அலைய வேண்டியிருக்கும்.

ஆன்மீக வாதிகளுக்கு முயற்சியின்றியே தேவைப்படும் பணம் கிடைக்கும்.
பணமின்றியே பொருள் கிடைக்கும். பொருளின்றியே தேவைகள் நிறைவேறும்.
பொதுமக்களைப் போல கஷ்டப்பட்டு உழைக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு
கண்டிஷன் அவர்கள் இளவரசனுக்குப் பின்னால் உள்ள பொறுப்பைப் போல
இறைவன் ஆன்மீகவாதிகளிடம் எதை விரும்புகிறான் என்பதை அறிந்து
அதனை நிறைவேற்ற வேண்டும்.

'அல்லாஹும்ம க்ஹிர்லீ வக்ஹ்தர்லீ (இறைவா எனக்கான‌ சிறந்ததை(நல்லதை)
நீயே தேர்ந்தெடுத்துத் தருவாயாக) என்ற துஆவே போதுமானது, அது பொருள்
வாங்குவதாய் இருந்தாலும் சரி, (ஜோசியம் பார்க்காமலேயே) சிறந்த துணை
தேடுவதாய் இருந்தாலும் சரி இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படும்
ஒரு அப்ளிகேஷன் அல்லது சப்ளிகேஷன்.

இதற்கான தேவை காசோ,பணமோ,திறமையோ அல்ல நம்பிக்கை மட்டுமே.




டிஸ்கி :

இதைப் படித்தவுடன் சரியென்று தோன்றினால் அல்லது மெலிதான புன்னகை
தோன்றினால் நீங்கள் ஆன்மீகவாதிகள். இதற்கு மாற்றமாக ஒரு ஏளனப்
புன்னகை,சிரிப்பு அல்லது கடுப்பு தோன்றினால் நீங்கள் நான்மீக வாதிகள் :)))

வஸ்ஸலாம்.

Wednesday, December 22, 2010

நாற்றம் பெற்ற மலர் போல

இந்தப் பதிவு பல் சம்பந்தப் பட்டது என்பதால் 'பல்'லாண்டு வாழ்கன்னுதான்
தலைப்பு வச்சேன் மொதல்ல. ஆமா இவருக்கு வேற வேலையில்லை,
நலம் வாழ, பல்லாண்டு வாழன்னு அறுக்குறான் மனுஷன் என்று யாரும்
பதிவப் பாக்காமப் போயிடுவாங்களோன்னு பயந்து இன்றையப் பதிவுலக
சாய்ஸ்க்கு ஏற்ற மாதிரி 'பல்ல ஒடச்சுப்புடுவேன் ஆமா' அப்படீன்னு
வச்சுப் பார்த்தேன். இருந்தாலும் மனசு கேக்காம, எப்போதும் போல
கவிதைத் தனமாவே இருக்கட்டும்னு இந்தத் தலைப்பு.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா.. வா.. வாவா.

பல்லொன்று போனால் சொல்லொன்று போகும்
அதற்கு முன்னாலே ஓ.. ஓ.. ஓது...

'ஹேப்பி நிவ் இயர்'.

பல்ல ஒடச்சுப் புடுவேன்னு ஈஸியாச் சொல்லிடுறோம், ஆனா அதைப்
பிடுங்குவதற்குள் நாம் படும் பாடு. மலைகள் எப்படி பூமியில் நாட்டப்
பட்டுள்ளதோ அதைப் போன்று பல்லின் பேஸ்மென்ட்டும் ரொம்ப
ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பூச்சி அல்லது காரை அதனை
எப்படி பலஹீனமா ஆக்கி விடுகிறதென்பது ஆச்சர்யம்தான்.

இனிப்பு போன்ற பலகாரங்கள் சாப்பிட்ட உடனேயே சிறிது வெந்நீர் குடித்து
விட்டால் பூச்சி பிடிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பல் விஷயத்தில் இன்னொரு தொந்தரவு, அதன் நாற்றம். மீன் மற்றும்
அசைவ உணவுகள் உண்ணும்போது அதன் மீதம் பற்களுக்கிடையில் தங்கி
விடுவது நாற்றத்திற்கான காரணம். உணவிற்குப்பின் பல் துலக்குவது,
பல் குத்தி சுத்தம் செய்வதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். சிலர் பேஸ்ட்
பிரஷ் ஆபிஸிற்கும் கொண்டு வந்து பல் துலக்கப் பார்த்திருக்கிறேன்.

கடல் உணவுக்கும் நாற்றத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. அது
காலைக் கடனிலும் சரி அதன் மீதத்தைக் கச்சடா(குப்பை)த் தொட்டியில்
எறியும் போதும் சரி நம் மூக்கைத் தாக்காமல் போகாது. மாதாந்திர
ருதுவின் போது பெண்கள் மீனைத் தவிர்த்தால்
'நாற்றம் (மணம்) பெற்ற மலர் போல்' திகழலாம். :-)

இதல்லாமல் சாராயம்,சிகரெட் குடிப்பவர்களுக்கும், குடலில் ப்ராப்ளம்
உள்ளவர்களுக்கும் வாய் நாற்றம் இருக்கும். வாய் நாற்றம் இல்லாமல்
பார்த்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய மதிப்பைக் கெடுத்து விடும்.
நல்ல 'மூடை' அவுட்டாக்கி விடும்.

கொடுமை என்னவென்றால் நமக்கு நாற்றம் இருக்கிறதா என்று ஊதிப்
பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நெருக்கத்தில் இருப்பவருக்குத்தான்
தெரிய வரும்.

'விக்ரோ வஜ்ரதந்தி' விளம்பரம் பார்த்திருப்பீர்கள், ஆசையாய் மணமகன்
தன் புது மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ பேச வர‌ (அண்ணல் அவளை
நோக்க) அவளோ வேறு பக்கம் தலையைத் திருப்புவாள்.

சரி வாய் நாற்றத்தை எப்படித்தான் கண்டு பிடிப்பது, ஒண்ணு கல்யாணம்
பண்ணிப் பாருங்க :‍-) (துணையை விட நம்முடைய குறையை வேறு
யாரால் கண்டு பிடிக்க முடியும்)

அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லின்னா, ஒரு ஆப்பிள் பழத்தையோ அல்லது வாழைப்பழத்தையோ ஒரு கடி கடித்த பின் மீதத்தை மோந்து பாருங்கள்,
உங்களின் 'லொள்ளு' தெரியவரும். அது போல் உமிழ்நீரை கையில்
தடவி அல்லது டைரக்டாவே கையை நக்கி மோந்து பாருங்கள்,
(சரி சுத்தத் தமிழிலேயே எழுதிவிடுகிறேன்) 'முகர்ந்து பாருங்கள்'.
உங்களின் 'ஜொள்ளு' தெரியவரும்.

அல்லது தும்மிப் பாருங்கள், சுற்றுப் புறச் சூழலையே கதறடித்து விடும்.
(இந்தப் பதிவே, நான் தொழுகையில் நிற்கும் போது ஒருவர் தும்மியதால்
வந்த வினைதான்). எனக்கும் தும்மியவருக்கும் இடையில் ஒரு அரபி.

நம் எல்லோருக்குமே ஒரு பழக்கம், யாரும் தும்மினால் 'நைசா'
தலையை வேறு பக்கம் திருப்பி விடுவோம். ஆனால் தொழுகையில்
நிற்கும் போது அப்படிச் செய்ய முடியாதே. அச்சமயம் நான் என்ன
செய்வேனென்றால் முடிந்த வரை 'தம்' கட்டிவிடுவேன். மீண்டும்
தும்மினால் என் கதி அதோ கதிதான் :-)

அப்படித்தான் அன்றும், தொழுது முடித்தவுடனேயே ஒருவர் ஒரு
தும்மு தும்மினார் பாருங்கள், நானும் முன்னெச்சரிக்கையாக
'தம்' கட்டித் திரும்பி விட்டேன். ஆனால் பக்கத்திலிருந்த அரபி
'லா ஹவ்ல வலா குவ்வத்த ..' என்று சொன்னார்.

ஆஹா! இது கோபத்தில் அரபிகள் சொல்லும் வார்த்தையல்லவா என்று
இந்தப் பக்கம் திரும்பி 'தம்'மைத் தளர்த்தினால் 'அம்..மாடி',
மயங்காத குறைதான். அவ்வளவு நாற்றம்.

சரி நாற்றத்தை எப்படி போக்குவது ? வழக்கமா தேய்ப்பதைக் கொஞ்சம்
நிறுத்தி விட்டு முரசிலிருந்து இரத்தம் வராமல் தடுக்கும் பேஸ்டை சில
காலத்திற்கு உபயோகிக்கவும். இதை விட பெட்டர், டாக்டரிடம் சென்று
பல்லைக் கிளீன் செய்வதுதான். என்ன, கொஞ்சம் .. கொஞ்சமல்ல,
நிறையவே கூசும், தலை கொஞ்சம் கிறுகிறுக்கும்.
(எத்தனை பேர் தலையைச் சுத்த வச்சிருப்பீங்க) :-)

அவ்வப்போது பயோரியா,கோபால் பல்பொடி போன்ற‌வைகளாலும்,
'மிஸ்வாக்' குச்சிகளாலும்,விரல்களாலும் பல் துலக்கிக் கொள்ளுங்கள்.

மிஸ்வாக் குச்சி ஃபிரெஷ்ஷாகக் கிடைத்தால் அதற்கு இணை வேறேதும்
கிடையாது. அதில் இருக்கும் காரத்திற்கு பூச்சியென்ன, நாற்றமென்ன
எந்தப் பேஸ்ட் கம்பெனியும் இருக்காது.

ஆனால் அதுவோ அரபிகளின் சொத்தாகி விட்டது. நம்ம நாட்டுல
இருக்கவே இருக்குது 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி'.

இவ்வளவு சொன்ன பிறகும் வாய் நாற்றத்தோட வந்து தும்முனீங்க‌ ..
'பல்ல ஒடச்சுப்புடுவேன் ஆமா' (அப்பாடா தலைப்புக்கு வந்தாச்சு) :-)

Sunday, December 12, 2010

பய‌ணத்தினூடே ...

பயணக் களைப்பு மறந்து
விமானத்தின் ஏற்றத்தையும்
இறக்கத்தையும் வியந்து
பார்க்கும் பயணிகள்.

விமானம் நிலைக்கு வந்தவுடன்
பசி ஆற்றக் காத்திருக்கும்
தாக 'சாந்தி'கள்.

கூடவே

விமான சத்தத்திலும் தம்
குஞ்சுகளின் பசிச்சத்தம்
மறவாமல் பசி தீர்க்க
போட்டி போட்டு
ஏறி இறங்கும்
பாவப்பட்ட பறவைகள்

Monday, December 06, 2010

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

உலகமே உன் வசம்தான்; போராட வேண்டிய அவசியமே இல்லை.

உலக வரைபடத்தைத் தாறுமாறாகக் கிழித்து ஒரு பள்ளி மாண்வனிடம் கொடுத்து
அதனை மீண்டும் சரியான முறையில் இணைக்குமாறு சொல்லப்பட்டபோது
முதலில் திகைத்துப் பின் சரியான முறையில் பொருத்தினான், எப்படித் தெரியுமா?.

கிழிக்கப்பட்ட ஒரு பகுதியின் பின்புறத்தில் மனித உறுப்பின் ஏதோவொரு பாகம்
தெரிய வர முதலில் மனித உருவத்தைச் சரியான முறையில் இணைத்து ஒட்டிய
பின் திருப்பினால் 'உலகம் மீண்டும் சீர் பெற்றது' :).

மனிதன் எப்படியோ உலகம் அப்படியே.
மனிதன் சீர்பெற்றால்தான் மற்றெல்லாம் சீர்பெறும். மனிதன் இந்த உலகத்தின்
உள்ளமாகும். மனிதன் திருந்த வேண்டுமென்றால் அவன் மனம் திருந்த வேண்டும்.
மனதை இயக்கும் நம்பிக்கை சரியாக வேண்டும். நம்பிக்கையில் உறுதி வேண்டும்.
உள்ளம் கெட்டுப் போன மனிதர்கள் வாழும் உலகம் குழப்பம்...அழிவு...பேரழிவுக்கு
உள்ளாகும்.

உள்ளமே உடலின் அரசாங்கத்தை ஆட்சி செய்யும் அரசனாகும். ஆசை, அரசனின்
துணைவி;அரசாங்கத்தின் ராணி. கோபம் படைத் தலைவராகும். ஆசை ராணியையோ
கோபப் படைத் தலைமையையோ அரசுக்கட்டிலில் அமர்த்தாமல் தாமும் 'குடி'முழுகிப்
போகாமல் அறிவு மந்திரியின் ஆலோசனைக் கேட்டு அன்பாகத் தாமே நடாத்தி வந்தால்
உடல் என்னும் நாடு உருப்படியாக வாழும்.

உள்ளத்தைத் திருத்துவதற்கு முன் அதன் இருப்பிடம்,தன்மை
பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஆமா மனசு எங்கேதான் இருக்கு ?

இதயம் என்பது இருதயம்தான் என்று நம்பி வந்தோம்,
இல்லை மூளைதான் என்கிறார்கள் இன்று வந்தோர்.
உறுதியாகச் சொல்ல யாரும் இல்லை சென்று வந்தோர்.

இதுவே இன்னும் சரியாகத் தெரியவில்லை, இன்னும் ஆத்மா,ஆன்மா,உயிர்,ஆவி,
கனவு,அறிவு,நுண்ணறிவு,பகுத்தறிவு என்று நமக்குள்ளே இருக்கும் ஆச்சர்யங்கள்
பற்றி எப்பொழுது தெளிவாக அறிவோமோ தெரியவில்லை.

'எவர் தம் ஆத்மாவை அறிந்தாரோ அவர்(தம்) இரட்சகனை அறிந்து விட்டார்'
என்றும்
'இறை நம்பிக்கையாளரின் உள்ளம் இறைவனின் ஆட்சிப் பீடம்'
என்றும் சொல்லப் படுகிறது.

உள்ளத்தின் சக்தியை அதன் Capacity ஐ இன்னும் நாம் உணரவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு Capacity/Limit உண்டு. இவ்வளவுதான் தாங்க முடியும் என்று.

ஆனால் உள்ளம் அப்படி கிடையாது. என்ன வேண்டுமானாலும் நினைக்க முடியும்
எங்கு வேண்டுமானாலும் துரிதமாகச் செல்ல முடியும் (மனோவேகம்). உதாரணமாக
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நான் உயிரோடு இருக்கும் வரைக்கும்
உணவளிப்பேன் என்று நினைத்துப் பாருங்கள்.

'சாரி இது டூ மச், நம்மால முடியாது'ன்னு உள்ளம் உடனே வெடித்து விடாது :)

உள்ளத்திற்கு உதாரணமாய் நிலத்தைச் சொல்லலாம் அல்லது குளத்தைச் சொல்லலாம்,
பார்வை,கேள்வி,பேச்சு,சிந்தனை ஆகிய ஆறுகளின் சங்கமம் என்றும் சொல்லலாம்.
கணிணி மொழியில் CPU வில் உள்ள control unit போல என்றும் சொல்லலாம்.

மனிதனை முன் மாதிரியாக வைத்துத்தான் கணிணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
Artificial Intelligence ஐ நோக்கி முன்னேறுவதும் மனிதனை அடிப்படையாக
வைத்துத்தான்.

உடலில் சதைத்துண்டு உண்டு அது சீர்பெற்றிருந்தால் முழு உடலும் நலம் பெறும்.
அது சீர்கெட்டுப் போனால் முழு உடம்பும் சீர்கெட்டுப் போகும். அது தான் உள்ளம்
என்று அருமை நபி(ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.

அந்த சதைத்துண்டு எதுவென்று உறுதியாகத் தெரியவில்லை. இதயமாகத்தான்
இருக்கும் என்பது எமது அபிப்ராயம், அதுதான் மனித பிறப்பின் உருவாக்கத்தில்
துடிக்கும் முதல் உறுப்பு. அதையே இன்றைக்கு மாற்றி விடுகிறார்களே
என்று சிலர் வாதிடும் போது இப்படியும் எண்ணத் தோன்றுகிறது.

தலைமைச் செயலகத்திற்கான பழைய கட்டிடத்தை இடித்துவிட்டுப் புதிய கட்டிடம்
கட்டினாலும் அங்கு மீண்டும் குடிவந்து ஆட்சி செய்யும் அரசைப் போல‌ இருதயத்தை
மாற்றினாலும் சக்தி மீண்டும் அங்கே அமர்ந்து ஆட்சி செய்கிறது.

'அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா?
(அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும்,
(நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்)
கண்கள் குருடாகவில்லை எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள்
(அகக் கண்கள்)தாம் குருடாகின்றன.' (அல் குர்ஆன் 17:46)

குர்ஆனிலும் 'நெஞ்சத்தில்' என்றுதான் வந்திருக்கு. அதனால‌ மனசு நெஞ்சுலதான்
இருக்கு. நாம் நம் எதிரில் இருக்கும் நபரிடம் 'உன்/உனது/உன்னை/உன்னிடம்'
என்று சொல்லும்போது ஆட்காட்டி விரலால் அவர் முகத்தை நோக்கிச் சுட்டுகிறோம்.
அதே சமயம் 'நான்/எனது/என்னை/என்னிடம்' என்று சொல்லும்போது மட்டும் நம்
நெஞ்சைக் குறி பார்க்கிறோமே அது ஏன் ?

'நெஞ்சுக்குள்ளே....நெஞ்சுக்குள்ளே..'

Tuesday, November 23, 2010

விஞ்ஞானம்..பரிமாணம்..பரிணாமம்..பரிதாபம்

முஸ்கி : (டிஸ்கியை முன்னாடியே போட்டா அது முஸ்கி தானே)

பரிணாமம் பற்றிய இஸ்லாமியக் கருத்துக்களை சீரியஸாத் தெரியணும்னா
கார்பன் கூட்டாளியையும்எதிர்க்குரலையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது கொஞ்சம் 'சிரியஸ்' பதிவு, மேலும் பதிவின் கடைசியில் காரத்திற்கு
எதிர்ப்பதமான 'இனிப்பு(16+)' கொஞ்சம் 'தூக்கலா' இருக்கும் :)))
அதனால் தயவு செய்து பெண்கள் படிக்க வேண்டாம் கடைசி வரியை.

கடைசியில் வரும் குரங்கு சம்பவத்தை நகைச்சுவையாக எழுத நினைத்து குரங்கின்
நிமித்தமான பரிணாமத்தைத் தொட்டுப் பின் விஞ்ஞானத்தைத் துவைக்குமாறு ஆகி
விட்டது. அதிபர் அப்துல் கலாம் மன்னிக்கவும்.

-----------------------------------------------------------------------

என் நண்பனொருவன் சொல்லுவான், மில்லியன் பில்லியன் கணக்கில் செலவழித்து
வான வெளிகளில் பயணித்து கல்லையும் மண்ணையும் கொண்டு வந்து கடைசியில்
பயணக் கட்டுரை எழுதுவதால் என்ன பிரயோஜனம். நாளை பெட்ரோல் போன்றவை
தீர்ந்து பழைய கற்காலம் போன்று ஆகிவிடும். இந்தப் பணத்தைப் பூமியில் போடலாமே,
அதாவது பூமியின் வளங்களை அறிந்து மனித சமுதாய முன்னேற்றத்திற்காகப்
பயன்படுத்தலாமே அல்லது மனிதனை ஆராய்ந்து மண்ணை வளப்படுத்தலாமே என்று.
(நீங்க என்ன சொல்றீங்க)

பணமும் மனித முயற்சியும் இப்படி விழலுக்கு இறைத்த நீராகப் போவதற்குக் காரணம்,
'மத' நம்பிக்கைக்குள் 'னி'ராகரிப்பைப் புகுத்தி 'மனித'னின் அறிவை மட்டும் நம்பும்
விந்தை ஞானமான விஞ்ஞானமே. எதையும் உருப்படியாகச் சொல்லாமலும் ஒரு
முடிவுக்கு வராமலும் சுற்றி வளைத்துக் குழப்புவதும், இன்று சொன்னதை நாளை
மறுப்பதும்தான் விஞ்ஞானம் என்ற பெயரில் உலா வரும் அஞ்ஞானம். உண்மையில்
விஞ்ஞானம் என்பது விந்தைகளுக்குப் பின்னாலுள்ள மர்மங்களின் முடிச்சை
அவிழ்த்து மெய்ஞ்ஞானம் போதிக்க வேண்டுமே ஒழிய அது ஒருபோதும்
அஞ்ஞானத்திற்கும் அழிவிற்கும் துணை போகக் கூடாது.

குர்ஆன் மற்றும் இஸ்லாமியக் கருத்துக்களில் பெரும்பாலான விஷயங்கள்
தெளிவாகவும் சில மறைமுகவாகவும் சில உங்களுக்குத் தெரியவே சான்ஸ்
இல்லை என்றும் கூறப்பட்டுள்ளன‌.

தெரியவே சான்ஸ் இல்லாத அல்லது மிகக் குறைவாகவே அறிய முடிகிற‌
விஷயங்களில் 'உயிரும்' ஒன்று. ஆனால் உயிரைப் பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சி
நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருநாள் உயிர் பற்றித் தெரிய வரும்,
அந்நாளில் உயிர் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 'லெனின்' போன்றோரின்
உடல் பாதுகாக்கப் பட்டு வருகிறது. இது நடக்கவே நடக்காது, இறந்த ஒருவருக்கு
தஜ்ஜாலால் (anti christ) ஒரே ஒரு முறை உயிர் கொடுக்கப் படும் அவ்வளவே தவிர‌.

வானத்தில் இரவு நேரங்களில் எரிந்து விழும் நட்சத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள்.
அது என்னவென்று குர்ஆன் சொல்லுகிறது, '(குறி சொல்லுபவர்களுக்காகச் செய்தி
சேகரிக்க மேலேறிச் செல்லும் பத்திரிக்கையாள :) ஜின்) ஷைத்தான்களை விரட்ட
வானவர்கள் எறியும் எரிகற்கள்'-'ருஜூமன் லிஷ்ஷயாத்தீன்' என. விஞ்ஞானிகள்
என்ன சொல்கிறார்கள், அறிவு பூர்வமா ஏதாவது சொல்ல வேண்டுமே என்று
வளி மண்டலம்,உரசல் புரசல் என்று எதையாவது சொல்வார்கள்.

'சுனாமி' ஏற்படுவதற்குக் காரணம் 'பூமிக்கடியில் ரெண்டு பிளேட் உரசிக் கொண்டதாம்',
அது ஏம்பா உரசுது அல்லது யார்யா ஒரச வைக்கிறது, அது இப்ப ஏன்யா ஒரசலைன்னு
கேட்டு பாருங்க, அதுக்கும் அவர்களால் மழுப்பத்தான் முடியும்.

கனவைப் பற்றிய‌ ஆராய்ச்சி எப்படியிருக்குதுனா பசி எப்படி ஏற்படுதுங்குற மாதிரித்தான்
போகுது. நரம்புகள் தூண்டப்பட்டு, நினைவுகள் தோண்டப்பட்டு அப்படீன்னு சொல்லி வைப்பார்கள்.ஒண்ணு பசி தீர வழி சொல், இல்லன்னா பசி போக்கும் உணவிற்கான
ஏற்பாட்டைச் செய்து கொடு விஞ்ஞானமே.(கனவுன்னா என்ன, கனவுக்கான பலன்
என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த ப‌திவில் பார்ப்போம்).

இப்படி எல்லா விஷயத்திலும் முடிவுக்கு வராமல் ஆராய்ந்து கொண்டே...யிருக்கும்
விஞ்ஞானிப் பயலுவ, 'குரங்கிலிருந்துதான் மனித இனம் தோன்றியது ' என்ற
தான் தோன்றித் தனமானத் தத்துவத்தை மட்டும் எப்படி பிடித்துக் கொண்டார்களோ.

உருவெளிக் களங்களில் பயணித்துப் பாருங்கள். இது சம்பந்தமாக இன்னும் நிறைய
தீனி கிடைக்கும். இப்ப நம்ம கதைக்கு வருவோம்.

சென்ற வாரம் பெருநாள் விடுமுறையில் துபாய் Zoo சென்றிருந்த நண்பர் சொன்னார்.
அங்கே ஒரு கொரில்லா உண்டு, அது ஒவ்வொரு முறையும் தண்ணீர்த் தொட்டியை
நோக்கி ஓடிச் சென்று தண்ணீரை வாயில் சேகரித்துக் கொண்டு கூண்டின் கம்பிக்கருகில்
வந்து நின்று கொள்கிறது. யாராவது அதனை போட்டோ எடுக்க அருகில் சென்றால்
போதும், முகத்தில் நீரைப் பீய்ச்சியடித்து விட்டு ஓடிச் சென்று நீரைச் சேகரித்து....
இப்படியே நிகழும் சேட்டையைக் குழந்தைகளோடு சென்றால் ரசிக்கலாம் என்றார்.
(என்ன குசும்பரே, இங்கே இன்னும் போக வில்லையா, அதன் சேட்டையை ரசித்து
உங்கள் நடையில் பதிவிக்கவும்.)

கேட்டுச் சிரித்துவிட்டு இன்னொரு நண்பர் சொன்னார். 'பார்த்தீங்களா பாய்,
அல்லாஹுத்தஆலா கணவன் மனைவி ஜோடியை அந்தந்த இனத்திலேயே ஆக்கி
வைத்துக் கிருபை செய்திருக்கிறான். 'அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே
மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்' என்று குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது (16:72).

சப்போஸ் மனித இனத்துக்குப் பதிலா மனைவி குரங்காய் இருந்திருந்தால் நம்ம கதி என்னவாகியிருக்கும். கோபித்துக் கொண்டு மரமேறிய குரங்கை ஸாரி மனைவியை
ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடியல்லவா கீழே இறக்க வேண்டி வந்திருக்கும் :)

அதைக்கேட்டு எங்க ஊர் நண்பன் சொன்னான்,
'அடப் போங்க பாய், புடவை,நகையென்று செலவழிக்க வேண்டிய அவசியமே
இருந்திருக்காது, ஒரு வாழைப்பழமே போதும், வாழ்க்கையே வசப்படும்.

இதைக்கேட்டு நான் சொன்னேன் .....

'அடேய், வசப்படுமா, வசமா நசுக்கப்படும்.
'ஒருநாள் வாழைப்பழம் கெடைக்காமப் போனாத் தெரியும் ...'
.
.
.
.
.
'ஒன்னோட வாழப்பழத்தோட கதி' :-)))

Wednesday, November 10, 2010

'அல்லாஹ்' எனும் ஆயுத எழுத்து, சில‌ Calligraphic சிந்தனைகள்



இது 'அல்லாஹ்' என்பதன் அரபி வார்த்தை எழுத்து. வலது பக்கத்திலிருந்து வாசிக்க
வேண்டும். முதல் எழுத்து அ(லிஃப்), இதை எடுத்து விட்டுப் படித்தால் 'லில்லாஹி'
(அல்லாஹ்விற்காக) என்று வாசிக்கப் படும். அலிஃபுக்கு அடுத்துள்ள ல(லாமை)
எடுத்தால் 'லஹூ' என்று வாசிப்பும் 'அவனுக்கே' என்ற அர்த்தமும் அமையும்.
பிறகு அடுத்த எழுத்தான ல(லாமை) எடுத்தால் 'ஹூ' (அவன்) என்றாகும்.

இப்படி ஒவ்வொரு எழுத்தும் 'அவனையே' குறிக்கிறது. இந்தச் சிறப்பு GOD க்கும்
கிடையாது கடவுளுக்கும் கிடையாது. மேலும் 'அல்லாஹ்' என்றால் அல் இலாஹ்
(வணக்கத்திற்குரியவன்) என்று அர்த்தம்.

'அல்லாஹ்' என்ற வார்த்தைக்கு பெண்பாலோ அல்லது பன்மையோ(Plural) கிடையாது.
இன்னொரு விந்தை அல்லாஹ் என்பதன் அரபி எழுத்து நம்ம கையிலேயே இருக்கு
(அப்ப நாம் எல்லாம் முஸ்லிம்கள்தானே)




இந்த எழுத்தைப் பலவிதமாக எழுதினால் எப்படியிருக்கும்.
இப்படி எழுதுவதற்குப் பெயர் காலிக்ராஃபி.





இதை இடதிலிருந்து வாசித்தால் ஆங்கிலம் வலதிலிருந்து வாசித்தால் அரபி எழுத்தும்
தெரிவது போல் வரைந்திருக்கிறார்கள்.

காலிக்ராஃபியில் 'அல்லாஹ்' என்ற எழுத்தைப் பலவிதமாகச் சித்தரிப்பது மட்டுமல்ல
சிதைப்பதும் நடந்து வருகிறது. உருவமில்லா இறைவனுக்கே இதன் மூலம் உருவம்
கொடுக்கப் பட்டுள்ளதைப் பாருங்கள்.



இப்படியே போய் ஆயுத எழுத்தாக மாறிப் போன விந்தை.





திரிசூலத்தின் திருமூலம் இதுவாக‌த்தான் இருக்கும் :)

அலிஃபும் ஹாவும் கீழே வாள்/பிடி/வேல் போலவும் மீதி திரிசூலமாகவும்.



எழுத்தைப் படுக்க வைத்துப் பார்த்தால் 'ஓம்' வருகிறது.

மேலும் பிஸ்மில்லாஹ்வைச் சுருக்கினாலும் 'ஓம்' வரும்.





மேலும் சில சிந்தனைகள்

ஆதம் நபியின் (இடது)பாதம் இலங்கையில் உள்ள மலையில் இருக்கிறது.
அதன் நீளத்தின் மீது சுமார் ஐந்தடி மனிதன் படுத்துறங்கலாம். நிமிர்ந்து படுத்து ஒரு கையை நீட்டிக் கொள்ளும் அளவு அகலம். இந்த பாதத்தை புத்தரின் பாதமென்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கௌதம புத்தருக்கு இந்த அளவு பாதம் இருந்திருக்காது. ஆனாலும் 'புத்தர்' என்றால் நபியையோ அல்லது மகானையோ குறிப்பதாக இருந்தால் அது முந்தைய புத்தரான‌ ஆதம் புத்தரின் பாதமே.

இவர்கள் இடது பாதத்தைத்தான் பூமியில் வைத்து இறங்கியிருக்கிறார்கள்.
நாமும் வாகனத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ இறங்கும் போது இடது காலை வைத்து இறங்குவது சுன்னத்து(நபிவழி) என்று அறிவோம். மேலும் கக்கூஸ் செல்லும் போது இடது காலை முதலில் வைத்து உள்ளே செல்ல வேண்டும் என்பதும் அறிவோம்.

சுவனத்தில் கக்கூஸ் உபாதை கிடையாது, தடுக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டதால் உபாதை எடுத்து இடம் தேடி இறைவனிடம் முறையிட்ட
போது 'சுவனத்தில் அதற்கு இடமில்லை', அதற்கான இடம் உலகம்தான்
என்று ஆதம் அனுப்பப் பட்டபோது 'இந்த உலகத்தைக்
கக்கூஸாகக் கருதி' இடது காலை வைத்தார்களோ தெரியாது.

இந்துக்கள் இந்த பாதத்தை 'சிவனடி பாதம்' என்கிறார்கள். மேலும் சிவனுடைய பிள்ளைகளான முருகனுக்கும் பிள்ளையாருக்கும் ஒரு பழத்தின் மீது சண்டை வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆதம் நபியின் இரு பிள்ளைகளுக்கும் ஒரு பழத்தினால் அல்ல  ஒரு பெண்ணால் சண்டை ஏற்பட்டு ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் மூலமாக இரண்டு பேரும் (ஆதமும் சிவனும்) ஒன்றா என எண்ணத் தோன்றுகிறது.

மேலும் ஆதமுக்கு அடுத்து வந்த நபிக்குப் பின் வந்த 'நூஹ்' நபி காலத்தில்
மக்கள் வத்து,சுவா,எகூஸ்,யஊக்,நஸ்ர் என்ற பெயர்கள் கொண்ட ஐந்து சிலைகளை வணங்கி வந்ததாக குர்ஆன் கூறுகிறது. இதில் இரண்டாவதான 'சுவா' மருவி 'சிவா'வானதோ என்னவோ. இந்த ஐந்து சிலைகளும் இறந்து போன நல்லோர்களின் ஞாபகார்த்தமாகத் தோன்றியவை.

மேலும் திருவிளையாடலில் வந்த 'பழத்தைத் தந்து நாடகத்தைத் துவக்குகிறீர்' என்ற வசனத்தை நாம் பார்த்து அல்லது கேட்டிருக்கிறோம். நாடகத்தைத் துவக்குகின்றவரான 'நாரதரின்' கலகம் நன்மையில் முடிவதாகச் சொல்லப்படும்.

இந்த நாரதரும் நாம் சொல்லும் 'கிள்ரு' நபியும், கிறித்தவர்கள் சொல்லும்
'பச்சைக் காவலாளியும்' ஒருவரே என இவர் குறிப்பிடுகிறார்.


கிருஷ்ணனின் கதையைப் பார்த்தால் மூஸா நபியின் சம்பவம் போலிருக்கும்.

ஆக இதுவெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் 'ஒரு மூலம் பல்கிப் பெருகி
குட்டி போட்டுக் கதையாகிக் கந்தலாகிப் பின் தைக்கப் பட்டுப் பின் நைந்து நூலாகிக் கடைசியில் இறுதிவரை உறுதியாக இருக்குமாறு இஸ்லாம் நெய்யப்பட்டு நீடூடி வாழ்ந்து வருவது தெரிய வரும்.

இந்த மனித சமுதாயம் குழந்தையா இருக்குறச்சே சின்ன சட்டை, வளர வளர
அதற்கேற்றவாறு அளவில் மாறி, பிறகு இறக்கும் வரை ஒரே அளவு கொண்ட
ஆடையாக‌ இஸ்லாம் தரப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது.
இஸ்லாத்திற்கேற்றவாறு நாம்தான் மாற வேண்டும். நான் ரெடி, நீங்க ரெடியா :)


Thursday, October 28, 2010

'மைன்ட் யுவர் பிசினெஸ்'

'எச்சொல் யார்யார் செவி சேர்ப்பினும்
அச்சொல்லில் தேன் சேர்ப்பதறிவு'

புத்திமதி சொல்லப் படும் போது பிடிக்கலன்னா, 'ஓ(ன்) வேலயப் பாத்துக்கிட்டு
போய்யா'ன்னு புரியிற மாதிரி தமிழ்ல சொல்லாம, நாகரிகமா,ஸ்டைலா
வெள்ளக்காரன் மாதிரி நம்ம மக்கள்ஸ் இப்படி சொன்னது ஒரு கா..ல..ம்.

இப்பல்லாம் அட்வைஸ் எங்க கிடைச்சாலும் பிடிக்காட்டிக் கூட காது கொடுத்து
கேட்பது மட்டுமல்ல தன்னுடைய கருத்தையும் அங்கே பதிவிக்க நினைக்கும்
பிளாக்கர் காலம் இது.

சென்ற உம்ராவின் போது எனக்கும் நண்பனுக்குமிடையில் நடைபெற்ற உரையாடல்.
கஃபாவை வலம் வருவதற்காகச் சென்ற நேரமது.கீழே ஆண்களும் பெண்களும் கலந்த
கடுமையான‌ கூட்டமாக இருந்ததால் மாடியில் தவாஃப் செய்ய நேரிட்டது.

மாடியில் தவாஃப் செய்யும்போது அங்கங்கே பெண்கள் பகுதியைக் கடக்க நேரிடும்
போது பெண்களின் பேச்சுக்குரலும், ஓதும் சப்தமும் அதிகமாகக் கேட்டது.
அப்போது நண்பன் கேட்டான்,

'சத்தத்துக்கு என்னா அரபியில‌'

'சவ்த்'னு சொல்வாங்க, எதுக்கு கேக்குற?

இல்ல, இங்க பெண்கள் சத்தம் அதிகமா இருக்கு, சத்தம் போடாதீங்கன்னு
அரபியில‌ சொல்லத்தான். 'south maafee'னு சொல்லவா ?

'south maafee'ன்னா 'சத்தமேயில்லை(இன்னும் நல்லா சத்த‌ம் போடுங்க)ன்னு அர்த்தம்'.

பின்ன எப்படி கேட்கிறது, 'சவ்த் லேஷ்' (ஏன் சத்தம்) என்று கேட்கவா அல்லது
'சவ்த் மா இரீது' (சத்தம் தேவையில்லை) என்று சொல்லலாமா ?

எனக்கும் சரியான சொல்லாடல் தெரியாததால், இங்க பாரு டைரக்டா சொல்றதா
இருந்தா, 'உஸ்குத்' (வாய மூடு)ன்னு சொல்லலாம், ஆனா அடுத்த நிமிஷம்
செருப்போ அல்லது போலிஸோ பறந்து வரும், எதுக்கு வம்ப வெலைக்கு வாங்குறே.

இல்லப்பா, யாராவது சொன்னாத்தானே, அவங்களுக்கும் புரியும்.

இங்க பாரு, இந்த மாதிரி சொல்றதுக்குன்னே 'முதவ்வா'க்களை அரசாங்கம் வச்சிருக்கு.
இது அவங்க வேலை. மாத்திரமல்ல, சட்டம் கொண்டு அல்லது சாட்டை கொண்டு
தகாதவைகளைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையதல்ல, மாறாக‌ அது இஸ்லாமிய
அரசாங்கத்தின் கடமை. தனி மனிதனுக்கு, அவனுக்குக் கீழுள்ளவர்களைச் சத்தம்
போட்டுத் திருத்த அனுமதி உண்டு. இருந்தாலும் மென்மையான முறையில்
செய்யப்படும் அறிவுரைகள் தாம் நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். காரணம்
'மென்மையில் பரக்கத்(அபிவிருத்தி) இருக்கிறது'.

உன் பேச்சு எடுபட வேண்டுமென்றால், 'இறைவனின் இல்லத்தில் சத்தமிடாமல்
இருப்பவருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக' என்கிற தொனியில்
உன் உபதேசம் இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தனி மனிதனிலிருந்து அரசாங்கம் வரைக்கும் ஒவ்வொருவரும்
எப்படி நடக்க வேண்டும் என்று காட்டித் தந்திருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள்.

ஒரு முறை நபியின் மீது கடும் வெறுப்பு கொண்ட நிராகரிப்பாளர் ஒருவர், நபியை
ஒரு முறை பார்த்து விடும் எண்ணத்தில் மதீனா நோக்கி வந்தார்.வரும் வழியில்,
இருவர் சத்தமாக உரையாடுவதைக் கண்டு என்னவென்று அறிய எட்டிப் பார்த்தார்.
ஒருவர் ஏதோ விற்றுக் கொண்டிருக்க இன்னொருவர் வாங்குவதற்காகப் பேரம்
பேசிக் கொண்டிருந்தார்.

இவர் எட்டிப் பார்க்கும் நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, 'இந்தாளைக்
கண்டிப்பவர் யாருமில்லையா' என வாங்குபவர் போவோர் வருவோரிடம் முறையிட,
நபியைக் காண வந்தவர், 'அநியாயம் செய்யும் இந்த விற்பனையாளன்தான் நபியாக
இருக்கும்' என்று கணித்து அவரோடு சண்டையிட நினைக்கும் சமயத்தில், மிக
அழகான ஒருவர் அவ்விருவரை நோக்கி நெருங்குவதைக் கவனித்தார்.

அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'யாரசூலுல்லாஹ், இந்த ஆள் அநியாய விலை
சொல்கிறான்' என்று புகார் செய்ய, வியாபாரியை நபியென்று தவறாக எண்ணியவர்,
இப்போது நபி என்ன செய்யப் போகிறார் என்றரிய அருகில் வந்து கவனிக்கலானார்.
நபி சொன்னார்கள்,

'நல்ல பண்போடு வியாபாரம் செய்பவர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'நல்ல பண்போடு பொருளை வாங்குபவ‌ர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'விற்பவரும் திருப்தி அடைந்து வாங்குபவரும் திருப்தி அடையும்
வியாபாரம்தான் மிகச் சிறந்த (பரக்கத்துகள் பொருந்திய) வியாபாரம்
'.

வந்தவர் அசந்து விட்டார். இவ்வளவு சிம்பிளா,மென்மையாய்,அன்பாய்
எவ்வளவு பெறுமதியான விஷயத்தைச் சொல்லி விட்டார். யாரையும் கண்டிக்க
வில்லை, ஆனால் இருவரையும் ஒற்றுமைப் படுத்தி விட்டது அல்லாமல் மனித
சமுதாயத்திற்கே 'நல்ல வியாபார உத்தி'யைக் கற்றுத் தந்து விட்டாரே,
இவரல்லவா மனிதர் என்றவாறு நபியின் கை பற்றி மன்னிப்புக் கேட்டு
இஸ்லாத்தைத் தழுவினார் (ஹயாத்துஸ்ஸஹாபா).

(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

Monday, October 25, 2010

தூசி தட்டிச் சில கவிதைகள்

தமிழ்மண வானில் இன்று கவிதா நட்சத்திரத்தன்று கவிதையைப் பத்தி எழுதலன்னா, கவிதையார்வலர்கள் கோவிச்சுக்குவாங்க இல்லையா, அதனால‌ இந்தப் பதிவு.

சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதுதான் நாம் சாகசங்கள் புரிவதும் நமக்குள் ஒரு
சக்தி இருப்பது தெரிவதும் சாத்தியமாகிறது. இன்று தமிழ் வலைப்பூக்களின்
காரணத்தால் தமிழை மறக்காமல் 'தமிழோடு உறவாடி'ப் பொழுது போக்க முடிகிறது.

ஆனால் அன்று,

'இரவுத் தாரகை நிலாவே நீ
பகலில் வந்தால் என்னவோ
உன்னைக் கண்டால் சூரியனைக் காணோம்
சூரியனைக் கண்டால் உன்னைக் காணோம்
என்ன இருவரும் கண்ணா மூச்சி ஆடுகிறீர்களா' :)

இதுதாங்க நா வாழ்க்கையிலேயே முதன்முதலா எழுதுன கவிதை. ஸ்கூல்ல நடத்துன
கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக எழுதுனது. 'இயற்கை எழில்' தலைப்பில்
எழுதிய கவிதையின் தொடக்க வரிகள். அன்று முதல் பரிசும் கெடச்சதனால ஒரு
கவிஞன் உருவானான். :)

அதன் பிறகு சில குழுமங்கள் நடத்திய கவிதைப் போட்டிக்காக சில கவிதைகள்
எழுதி 'கவிஞன்'கிற நெனப்ப தக்க வச்சதுண்டு. அதில் ஒன்று 'தட்ஸ் தமிழில்'
கூட‌ வெளிவந்தது.

கவிதைகளில் 'ஹைக்கூ' வகை ரொம்பப் பிடிக்கும் என்பதால் அது மாதிரி எழுதிப்
பார்த்ததுண்டு. அவைகளில் சில,


வீட்டிற்குள் சண்டை
அங்கும் சாதிப் பிரச்னை
ஆண்சாதிக்கும் பெண்சாதிக்கும்

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

கத்தியின்றி ரத்தமின்றி
உள்குத்தும் உள்காயமும்
தமிழ் வலைப்பதிவர்கள்'

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

வறண்ட பிரதேசத்திலிருந்து
ஒரு வற்றாத ஜீவ நதி
இதயம் பிழிந்த கண்ணீர்


அதையேன் கேட்குறீங்க, 'வெண்பா' கூட முயற்சித்ததுண்டு.

கிட்டப் பார்வைக்கு எந்த லென்ஸ் என்பதைப் பரீட்சையில் ஞாபகம் வைப்பதற்காக
'கிட்டப்பா குழியில் விழுந்தார்' என்று ஸ்கூல்ல‌ சொல்லித் தந்தார்கள். அதையே
'வெண்பா'வாக எழுத நினைத்து,

எட்டப்பர் எழுதிக் குவித்த ஏட்டிலே
கிட்டப்பர் குழிவிழுந்தார் காண்

என்று எழுதியதுண்டு.

'இதெல்லாம் வெண்பா வா ...ன்னு' புலவர்கள் வையக்கூடாது.
ஒரு முயற்சிதான், பிறகு அதைத் தொட(ர)வில்லை. 'ஹைக்கூ' வகை
முயற்சிகள்தாம் இன்றும் தொடர்கிறது.

ஹைக்கூவில் மிக மிகப் பிடித்தது, கவிக்கோ எழுதிய,

கல்லின் மீது பூவை எறிந்து
பூஜை செய்து வந்த மக்கள் அன்று
ஒரு பூவின் மீது கல்லை எறிந்தார்கள்.

தாயிப் நகர சம்பவத்தை ஒரு சில வார்த்தைகளில் என்ன அழகாய்ப்
படம் பிடிக்கிறார் பாருங்கள்.

இடையில் சில வருடங்கள் வெறுமனே ஓடிவிட்டன.
இன்று கவிதை,கட்டுரை மூலம் உங்களுடனே. நாளை எப்படியோ.

இன்னும் எழுதலாம்தான் (கவிதையைச் சொல்லவில்லை, கவிதை பற்றி
எழுதுவதைச் சொன்னேன்).ஆனால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது.
இது பற்றி இன்னும் படிக்க நினைப்பவர்கள் இதற்கு முன் நான் எழுதியதையும்
படித்துப் பாருங்கள். இதை விட சுவாரசியமாய் இருக்கும். அது,
'நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை'

Wednesday, October 20, 2010

சண்டையைத் தவிர்த்த சமயோசிதம்

அரேபியாவின் ஏதோவொரு வீட்டில் ஒருநாள் கூட்டம் கூடியிருந்தது. பயணத்தினூடே
அங்கு வந்து ஒரு பெரியவர் என்ன கூட்டம் என்று விசாரித்ததில் 'தகப்பனார் தனது
மூன்று பிள்ளைகளுக்கு பின்வருமாரு உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதாவது
சொத்தில் பாதி முதல் பிள்ளைக்கும், நாலில் ஒரு பகுதி இரண்டாவது பிள்ளைக்கும்,
மூன்றாவது பிள்ளைக்கு ஐந்தில் ஒரு பகுதியும் கொடுக்கப் பட வேண்டுமென்று
எழுதப்பட்டிருக்கிறது. எல்லாம் பிரச்னையின்றி பங்கு போட்டுக் கொடுத்தாகி விட்டது.

ஆனால் இந்த 19 குதிரைகளை மட்டும் பிரித்துக் கொடுக்க முடியவில்லை. குதிரையை வெட்டுவதற்கும் தயாரில்லை, என்ன செய்வதென்றே தெரிய வில்லை. இதனால்
மூவரும் அடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என்றனர். உடனே பெரியவர்,
'அவ்வளவுதானா, அப்ப என்னுடைய குதிரையையும் அதில் சேர்த்து விடுங்கள். இப்போ
20 குதிரைகள். முதல் பிள்ளைக்கு 10, இரண்டாவது பிள்ளைக்கு நாலில் ஒரு பகுதி 5,
மூன்றாவது பிள்ளைக்கு ஐந்தில் ஒரு பகுதி 4, ஆக மொத்தம் 19 முடிந்தது, என்னுடைய
குதிரையை எனக்குத் தந்து விடுங்கள் என்று சொல்லியவாறு நடையைக் கட்டினார்.

******************************************************************************

ஒருவன் ஒரு பெரியாரைத் திட்டிக் கொண்டிருந்தான், அவன் வலப்புறமாக வந்து
திட்டினால் அவர் இடப்புறம் திரும்பினார், அவன் இடப்புறம் வந்து திட்ட, அவர்
வலப் புறம் திரும்பினார். அவனும் கடுப்பாகி முகத்திற்கு நேராக வந்து 'ஏன்யா,
அப்பயிலிருந்து ஒன்னத் திட்டுறேனே ஒனக்குத் தெரியலயா, இல்ல திட்டுறது
ஒரைக்கலயான்னு கேட்க, பெரியவர் அழகாக பதில் சொன்னார்,
'நானும் அப்போதிலிருந்து உன்னை மன்னித்துக் கொண்டிருக்கிறேனே,
அது உனக்குத் தெரியவில்லையா?'. அடடா, இவரல்லவா மனிதர். இவர் போல்
யாவரும் இருந்தால், எத்துணை அழகும் அமைதியும் பெறும் இவ்வுலகம்.

******************************************************************************

சென்ற வாரம் நடைபெற்ற சம்பவம் இது. பள்ளியில் மக்ரிப் தொழுது விட்டு
வெளியில் வந்தேன். தெரிந்த ஒரு பையன் 'பாய் டீ சாப்பிடலாமா' எனக் கேட்க,
நான் 'வேணாந் தம்பி, இப்பத்தான் குடிச்சேன்' என்று சொல்லிவிட்டு நகர,
என்னை நோக்கி ஒரு பெங்காலி பையன் வேகமாக வந்து, கை கொடுத்த பின்
அவனை உமக்குத் தெரியுமாவெனக் கேட்க, ஆம் தெரிந்த பையன் தான் என நான்
சொல்ல, அவன் எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டான் எனச்
சொல்ல, நானும் 'அப்படியா, அவனைக் கூப்பிடு, நான் பேசி வாங்கித் தருகிறேன்'
என்று முந்தையவனின் பக்கம் திரும்ப, ஆள் எஸ்கேப்பு.

பெங்காலியும் தமிழ்ப் பையனைத் தொடர்ந்து சென்று கண்டு,பிடிக்க, அவன் கையைத்
தட்டி விட்டு ஓட, அதுவும் வேகமாக வரும் வாகனங்களைக் கூடத் துச்சமென மதித்து
ரோட்டைக் கிராஸ் செய்து ஓடுவதைப் பார்த்த எனக்குக் கோபம் வந்து நானும் துரத்த,
நான் ஓடுவதைப் பார்த்து என் நண்பனும் ஓடி வர ஒரு வழியாக அவனைப் பிடித்தோம்.

பிடித்த மாத்திரத்திலேயே நான் கேட்ட கேள்வி 'ஏண்டா ஒடுற'.
இதுவரை மரியாதையாகப் பழகிய நான் ஒருமையில் கேட்டதைச் சகிக்காத அவன்
கொஞ்சம் திகிலாகி, 'என்னது? என்னைய்யாக் கேட்டீங்க, நீங்க நம்மாளு அவன்
பெங்காலி, அவனுக்குப் போய் சப்போர்ட்டு பண்றீங்களே, இது நியாயமா?'.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. எதுக்கு ஓடுற, எவ்வளவு கொடுக்கணும் ,
எதுக்குக் கடன் வாங்குன ?. 'கடனா, இல்லண்ணே, நெட்டு போனு, அவன் கிட்ட
பேசுனேன். அதுல மீதி,அஞ்சு ரூவா கொடுக்கணும், ஆனா அவன் இருவது ரூவா
கேக்குறான். அதனால கோவத்துல நான் கொடுக்கவே கூடாதுன்னு இருந்தேன்'.

அடப்பாவிகளா, வெறும் அஞ்சு பத்துக்கு இப்படி உயிர மதிக்காம ஓட வச்சிட்டீங்களடா.
சரி, அஞ்சு ரூவாதானே, மொதல்ல அதக் கொடு, மத்ததப் பேசித் தீத்துக்கலாம்னு
சொல்லி, அவனும் அஞ்சு திர்ஹத்தைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டே
பெங்காலி சொன்னான், 'ஓக்கே, மன்னிச்சுட்டேன்'.

எனக்கோ கோபம் பெங்காலியின் மீது திரும்பி, 'டேய், இந்த சல்லிக்காசு பெறாத
விஷயத்தைப் பெருசாக்கிட்டீயே, அது மட்டுமல்ல, அஞ்சு ரூவாய்க்குப் பதிலா இவனை
இருவது ரூவாக் கேட்டு எதுக்குடா தொல்லை பண்ணினாய்'னு கத்த, பெங்காலியும் ஏதோ
சொல்ல வரும் போது, நண்பர் அவனைத் தடுத்து, என் தோள் மீது கை போட்டவாறு
கூட்டி வந்து விட்டார். பிறகு மெதுவாக அந்த உண்மையைச் சொன்னார்.

அதாவது காசு கொடுக்க வேண்டிய பையனை நான் சத்தம் போடும் நேரத்தில் இவர்
பெங்காலியிடம் 'உனக்கு எவ்வளவு தரணும்' எனக் கேட்டு இருபதையோ அல்லது பத்து திர்ஹத்தையோ கையில் தள்ளி 'உஸ்கு மாஃப் கர்தோ' (அவனை மன்னித்து விடு)
என்று சொல்லியிருக்கிறார்.

ஓ! அதுனாலதான் காட்சிகள் டக்கென்று மாறியதோ!

இந்த டெக்னிக்கு நமக்குத் தெரியாமப் போச்சே :)

அடுத்த நாள் நம்மாளைச் சந்தித்த போதும் இதைத்தான் மீண்டும் கேட்டான்.
'ஏம்பாய், நீங்க நம்மாளு, அவனுக்குப் போய் சப்போட்டு பண்ணீங்க'.
நான் சொன்னேன், 'இல்ல தம்பி, இனத்தின் மீது பாசம் இருக்க வேண்டும் தான்.
ஆனால் இனத்தைச் சார்ந்தவன் தவறு செய்யும் போது அதைத் தட்டிக் கேட்காமல்
அவனுக்கு சப்போர்ட் செய்தால் அவன் 'இனவெறி' பிடித்தவனாகிறான் என்று நம்ம
நபி சொல்லியிருக்காங்களே தெரியாதா ?

******************************************************************************

எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாலிப வயதில் நடைபெற்ற சம்பவம் ஒன்றும் நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நபியாவதற்கு முன்னொரு நாளில், இறையில்லமான கஃபத்துல்லாஹ்வைப் புனரமைத்த பின் மக்காவின் குரைஷிகள் அதில் 'ஹஜருல் அஸ்வத்'
கல்லைப் பதிப்பிக்கும் போது ஒரு பெரிய சண்டை ஏற்படும் சூழல் உண்டானது.

குரைஷிகளின் மூன்று குலத் தலைவர்களும் அந்தக் கல்லைப் பதிப்பிக்கும் வாய்ப்பு தம‌க்கே
தரப்பட வேண்டுமென்று வலியுறுத்த, நிலைமை மோசமாக, ஒருவர் சொன்னார், 'இந்தப்
பாக்கியம் யாருக்குக் கிடைக்க வேண்டுமென்பதை, இப்போது கஃபாவுக்குள் வரும் நபரே
முடிவு செய்யட்டும். இதனை ஆமோதித்த அனைவரும் ஆவலாய் கஃபாவுக்குள் நுழையும்
நபரை நோக்கி தமது பார்வையைச் செலுத்தினர்.

அங்கே வந்து கொண்டிருந்தது நமது கண்மணியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
மக்கள் அவர் மீது அன்பும் கண்ணியமும் வைத்திருந்த நேரம் அது.. அவரின் முடிவுக்குக்
கட்டுப் படுவதாக மனப் பூர்வமாக ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் செய்த தீர்ப்பு என்ன
தெரியுமா, தமது தோளில் அல்லது தலையில் இருந்த துண்டை எடுத்து கீழே வைத்து
அதன் மேல் 'ஹஜருல் அஸ்வத்' கல்லை வைக்குமாறு சொன்னார்கள். அவ்வாறு
வைக்கப் பட்டதும், துணியின் நான்கு மூலைகளில் ஆளுக்கு ஒரு மூலையைப்
பிடிக்குமாறு மூன்று தலைவர்களிடமும் சொல்ல நான்காவது மூலையைத் தாமே
பிடித்துக் கொண்டார்கள். ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டாடியே அவர்களும்
கல்லைப் பதித்தனர்.வாழ்க நபிக‌ளின் திருநாமம் ; வளர்க‌ அவர்களின் திருப்பணி.

ஆக இறைவன் நமக்குத் தந்த புத்தி சாதுர்யத்தின் உதவியால் சமுதாய
ஒற்றுமைக்குப் பாடுபடுங்கள் சகோதரர்களே.

வஸ்ஸலாம்.

Monday, October 18, 2010

சமாதானம் செய்து வைக்கும் வல்லமை தாராயோ இறைவா

ஒரு மனிதனைக் காப்பாற்றுவது முழு மனித சமுதாயத்தைக் காப்பதற்குச் சமம்.
ஒரு மனிதனைக் கொலை செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொல்வதற்குச் சமம்.
புத்தியோ சக்தியோ அது இந்த மனித சமுதாயத்திற்காகப் பயன்படவில்லையெனில்
அதனால் என்ன பிரயோஜனம். இறைவன் நமக்குத் தந்த திறமைகளை வைத்து உலக
ஒற்றுமைக்கு ஏதாவது செய்ய வேண்டும் தோழர்களே!.

கொஞ்சம் அன்பும் கொஞ்சம் சமயோசிதமும் கொஞ்சம் நகைச்சுவை உணர்வும்
இருந்தால் போதும் சண்டையை விலக்கி சமரசம் ஏற்படுத்தவோ அல்லது கோபத்தின்
கடுமையைக் குறைக்கவோ முடியும்.

'சண்டையைத் தவிர்த்த நகைச்சுவை உணர்வு' என்ற தலைப்பில் ஜாலியாக எழுத
ஆரம்பித்து இப்போ கொஞ்சம் சீரியஸ்னெஸ்ஸும் கலந்துடுச்சு.

மொதல்ல நகைச்சுவை எப்படி தடுத்த‌தென்று பார்க்கலாம்.

தமிழகத்தின் ஏதோவொரு ஓட்டலில்,வழக்கமாக வரும் வாடிக்கையாளர் அன்று
பசியோடு வந்து,'சர்வர், சூடா ஏதாவது கொண்டு வா' எனக்கேட்க,கேட்டவர் மீது
என்ன கோபமோ, சர்வரும் சூடான நெருப்புக் கங்குகளைத் தட்டில் ஏந்தி வர,
வந்த கோபத்தை அடக்கி, பந்தாவாக பீடியை அதில் பற்ற வைத்து வெளியில் வந்த
கதை எல்லோருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அது போன்று, சண்டை வராமல்
தடுக்க நகைச்சுவை உணர்வு ரொம்ப அவசியம்.

சென்னை பேச்சிலர் குடியிருப்பில், நாங்கள் தங்கியிருந்த காலம். ஒருநாள்,
எங்களிடையே இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டு ஒருவன் மற்றவனைத் திட்ட,
திட்டப்பட்டவன் (அபூ), திட்டியவனை நோக்கி, 'மவனே! அழகாயிருக்கியேன்னு
சும்மா விடுறேன்னு' சொல்ல, அதற்கு அவன் புன்னகைக்க, முடிவு சுபம்.

இன்னொரு நாள், காலைக்கடனை நிறைவேற்ற, கியூவில் நின்றோம். சுகப் பிரசவம்
முடிந்து வெளியில் அபூ வந்தவுடன், எனக்கு முன் நின்றவன் உள்ளே சென்றவுடனேயே
திரும்பி 'டேய் அபூ, ஒழுங்கா தண்ணி ஊத்துனா என்னடா'ன்னு சத்தம் போட,
அபூ சொன்னான் கூலா, 'ம்ஹூம், என்னை விட்டுப் போன எதப் பத்தியும் நான்
கண்டுக்கிறதே இல்லை'. :), எல்லோரும் சிரித்ததில் நெலமை கூல்.

அபுதாபி பெங்காலி டீக்கடையில், நானும் மற்ற இரு நண்பர்களும் டீ குடித்துக்
கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரில் ஒரு பாகிஸ்தானி பட்டானும் அமர்ந்திருந்தார்.
அச்சமயம் நண்பருக்கு போன் வந்தது. பேசிய பிறகு செல்போனை சட்டைப் பாக்கெட்டில்
வைப்பதைப் பார்த்த பட்டான் சொன்னார்,

'உதர் நை ரக்கோ, ஓ தில் கு கராப் கரேகா (அங்க வக்காதே,அது இதயத்தைப் பாதிக்கும்)'

பொதுவாக பட்டானின் பேச்சு கொஞ்சம் அழுத்தமாக இருக்கும். இதைக் கேட்டவுடன்
நண்பரின் முகத்தில் கோபத்தின் ரேகை படர, இதை கவனித்த நான் பட்டானைப் பார்த்துச் சொன்னேன், 'ஆப்கே பாக்கெட்மே ஜோ பைசா ஹே,உஸ்கு பி உதர் நஹீ ரக்னா,கியூன்கே
பைசா பி தில்கு கராப் கர்த்தாஹே'(உம்முடைய பாக்கெட்டிலே பைசா வைக்கப் பட்டிருக்கே,
அதையும் அங்கே வைக்க வேண்டாம், ஏனென்றால் பைசாவும் மனச கெடுக்கும் சமாச்சாரம்)

இதைக்கேட்டு கடையிலிருந்தோர் சிரிக்க, பட்டானும் பைசாவைப் பற்றி ஜாலியாக
விவரிக்க, நண்பர்களாகி வெளியே வந்தோம். ஆதலால் சகோதரர்களே, நகைச்சுவை
அன்பை வளர்க்கட்டும். சத்தமாகப் பிரியும் காற்றும் கூட‌ சகல‌ இறுக்கத்தையும் கலகலக்க வைக்கும்தான் ஆனால் அது அன்பை வளர்க்காது :-)))

அடுத்து, சமயோசிதம் எப்படி சண்டையைத் தவிர்த்தது என அடுத்த பதிவில் பார்ப்போம்.

Monday, October 11, 2010

திருவள்ளுவர் நபியா இல்லை கவிஞரா

‍‍‍
இது ஒரு ஆராய்ச்சிப் பதிவல்ல மாறாக ஒரு எண்ணவோட்டப் பதிவு.
மனிதர்கள் வாழ்ந்த எல்லாப் பகுதிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக தீர்க்கதரிசிகள்
அனுப்பப் பட்டுள்ளனர் என்பது இஸ்லாம் கூறும் உண்மை. இந்தியப் பகுதியின் மிகப்
பெரிய நபியாக 'மஹா நுவு' என்றழைக்கப்பட்ட நூஹ்(அலை) என்பது தெரிய வருகிறது.
இது பழைய வேதப் புத்தகங்கள் என அழைக்கப் படும் ரிக்,சாம‌,யஜூர் மற்றும் அதர்வண வேதங்களில் காணப்படும் 'வெள்ளப் பிரளயம்', பைபிள் மற்றும் குர்ஆனிலும் விவரிக்கப் பட்டுள்ளதன் மூலம் கிடைத்த ஒரு அனுமானம்.

பழைய வேதப் புத்தகங்களை 'சுஹுபுகள் (ஏடுகள்)' எனவும், மூசா (Moses),தாவூது (David),
ஈசா (Jesus),முகம்மது (அலை) நபிகளுக்குக்குக் கொடுக்கப் பட்டவை நான்கு வேதப் புத்தகங்களாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இவை பற்றிய ஆராய்ச்சிப் புத்தகங்கள்
'அபூ ஆசியா' போன்றோரால் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. எனினும் இந்தப் பதிவு எழுதத் தூண்டியது, இயல்பான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரரான 'இதயம் பேத்துகின்ற'
பதிவர் ஜவஹரின் முயற்சியில் உருவான 'உருப்படு' புத்தக அறிமுகப் பதிவுக்குக் கொடுக்கப் பட்ட தலைப்பு ஏற்படுத்திய சிந்தனை.

ஒழுக்க நெறி கருத்துக்களுக்காகவும் சீரிய சிந்தனைகளுக்காகவும் திருவள்ளுவரையும்,
புத்தரையும் நபியாகக் கருதுவோரும் மறுப்பவரும் நம்மிடமுண்டு. பள்ளிக்கூடங்களில்
மனப்பாடம் செய்த குறள்கள் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ சினிமாப் பாடல்களில்
வந்தவை மட்டும் சரியாக நினைவில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான்,
'பல்லாண்டு வாழ்க' வில் வரும் 'ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்' பாடலின் ஆரம்ப வரிகள்,

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்'
'என்பும் உரியர் பிறர்க்கு'

'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
'மெய்வருத்தக் கூலி தரும்'

திருவள்ளுவரை நபியாகக் கருதிய நான், 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
என்ற வரியைச் சிந்தித்த போது 'தெய்வத்தால் கூட செய்ய முடியாத காரியத்தை ஒரு
மனிதனின் முயற்சி செய்து விடும் என்ற அர்த்தம் தொனித்ததால் 'நிச்சய‌மாக இவர்
நபியாக இருக்க முடியாது' என்ற முடிவுக்கு வந்தேன். பின்னொருநாளில் இந்தக்
குறளுக்கு யாரோ ஒருவர் இப்படி கருத்துரை எழுதியிருந்த‌தைப் படித்த போது
'அட இது நல்லாருக்கே' எனத் தோணியது.

"தெய்வத்தின் விதியில் இவனால் முடியாது என்று எழுதப்பட்டு இருந்தாலும்,
இறையிடம் அழுது பிரலாபித்து விதியை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்",

இக் கருத்து நம் ஹதீஸ்களில் காணப்படும்,

'தர்மம் தலை காக்கும்' (சதகா ரத்துல் பலா)
'பிரார்த்தனை விதியை மாற்றும்' (துஆ ரத்துல் களா)

கருத்துக்களுக்கு ஒட்டி வருவதால் மேற்கண்ட குறளின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு வந்தது.
மேலும் 'அகர முதல‌ எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' எனும் குறளில் வரும்
ஆதி பகவன் என்பது ஆதம் நபியைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. எனவே திருவள்ளுவர்,
நபியாக இருக்கலாம் அல்லது 'வேதங்களை'த் தொகுத்த வியாச முனிவரைப் போல் ஒரு
அறிஞராக இருக்கலாம் அல்லது நல்ல கருத்துகளைத் தொகுத்து வெண்பா வடிவில் வழங்கிய கவிஞராக இருக்கலாம் அல்லது ... அல்லது ..... அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

'அபூ ஆசியா'வின் புத்தகத்தில் படித்த ஞாபகம், குர் ஆனில் 'துல் கிஃப்ல்' என்ற நபியின்
பெயர் வருகிறது. லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களில் வெறும் 25 நபிமார்கள் பெயர்
குர்ஆனில் வருகிறது, அவற்றுள் ஒன்று 'துல் கிஃப்ல்'. கபிலைச் சார்ந்தவர் என்று பொருள்.
இது 'கபில'வஸ்துவைச் சார்ந்த புத்தரைக் குறிப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆக இவர்கள் நபிமார்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை
(தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்). என்றாலும் தசாவதாரி சொன்னது மாதிரி,

'நபியாக இருந்தால் நன்றாயிருக்கும்' :)