Thursday, May 25, 2017

ஆடிய பாதமும் பாடிய வாயும் ...

சமீபத்தில் படித்த கதையின் சுருக்கம், இதற்கு முன் பலரும் படித்திருக்கலாம், காரணம் மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்ட ஆங்கில நாவல். 
(புத்தகத்தின் பெயரை யார் முதலில் சொல்லுகிறார்கள் எனப் பார்ப்போம்).

கதையின் நாயகன் ஒரு ஆட்டிடையன். ஒரு நாள் ஆடுகள் மேய்த்துவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு சிதிலமடைந்த சர்ச்சில் தங்க நேரிடுகிறது. அன்று ஒரு கனவு காண்கிறான், எகிப்திலுள்ள பிரமிடுக்குப் பக்கத்தில் அவனுக்கான புதையல் இருப்பதாக. இப்போது அந்தக் கனவை இரண்டாம் அல்லது மூன்றாம் முறை காண்கிறான். நீண்ட யோசனைக்குப் பிறகு கனவை நனவாக்க உறுதி பூண்டு புறப்படுகிறான் ஸ்பெயினிலிருந்து எகிப்து நோக்கி.

இரண்டு வருட பயணத்தில் சில சிரமங்களையும் சில முக்கியமான 
படிப்பினைகளையும் பெற்று இதோ இப்போது பிரமிடுக்கு முன்னால் 
நின்று கொண்டிருக்கிறான்.

கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிகிறது. 'பிரமிடுக்கு அருகில் உனது கண்ணீர்த் துளிகள் எங்கு விழுமோ அந்த இடத்தில்தான் புதையல் இருக்கிறது' என்று கனவில் சொல்லப் பட்டசெய்தியும் நினைவுக்கு வந்து மனம் துள்ளிக் குதித்தது. கண்ணீர் விழுந்த இடத்தைத் தோண்ட‌ ஆரம்பிக்கிறான்.

நீண்ட நேரம் தோண்டியும் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் பின்னால் அரவம் கேட்டுத் திரும்ப, அங்கே அவனை நோக்கி சில வீரர்கள் வந்து கொண்டிருந்தனர். கொண்டு வந்த செல்வத்தைப் புதைக்க முயற்சிப்பதாய்க் கூறி அவனை அடித்து உதைத்து இன்னும் தோண்டச் செய்தனர்.

எவ்வளவு தோண்டியும் எதுவும் இல்லாத்தைக் கண்டு மீண்டும் விசாரித்ததில் 
'புதையல் மற்றும் கனவு' பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகிறான்
இதைக் கேட்டதும் இடம் அதிர இடி போல சிரித்த கூட்டத்தலைவன்
'அட முட்டாளே, கனவை நம்பி கஷ்டப் பட்டு விட்டாயடா, இதே இந்த இடத்தில் இரண்டு வருடத்திற்கு முன் நானும்தான் கனவு கண்டேன்,  

'ஸ்பெயின் தேசத்துப் பெருவெளியின் ஒரு பாழடைந்த சர்ச் ஒன்றில், ஆட்டிடையர்கள் அசந்து ஓய்வெடுக்கும் கொட்டடியின் கீழ் மிகப் பெரும் புதையல் இருப்பதாக, நான் என்ன உன்னைப் போல் முட்டாளா இதற்காகக் கஷ்டப்பட்டு பயணம் செய்வதற்கு ?!

இதற்குப் பின் என்ன நடந்திருக்கும் ?

'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய்  ....     ஞான தங்கமே’ பாட்டு ஞாபகத்திற்கு வந்திருக்குமே.


                              *                      *                       *                     *                       *


இப்படித்தான் ஆனது என் கதையும். பிளாக்கில எழுதுறத விட்டுட்டு வாட்ஸ் ஆப், முகநூல் என்று அலைந்து திரிந்து, அங்கே வந்ததைப் படிக்கவே நேரம் போதவில்லை ;   எழுதுவதற்கு எங்கே நேரம்.

என்னதான் சுவாரசியமா இருந்தாலும் அவையெல்லாம் ஒரு நாள் கூத்துதான். மின்னி மறையும் நட்சத்திரங்கள் என்பதா இல்லை ஈசல்கள் என்பதா. ஆனால் BLOG அப்படியல்ல எத்தனை வருடங்கள் சென்றாலும் இன்றைக்கும் இங்கு வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியோ, தவறோ, சிரிப்போ, புலம்பலோ, முன்பு எழுதப் பட்டவைகள் இன்றும் படிக்கப் படுகின்றன.

ஆடிய பாதமும் பாடிய வாயும் தட்டச்சிய கைகளும் சும்மாவே இருக்காது. ஆகையால் அவ்வப்போது இங்கேயும் தலை காட்ட ஆவல்.

முன்பிருந்த ஆர்வம்,  திறமை குறைந்து விட்டாலும் பரவாயில்லை,  

" நமக்கான புதையல் இங்குதான் இருக்கிறது ".

Monday, January 23, 2012

பேசாமல் இருத்தல் நலம்

பேசுவது வெள்ளியென்றால்
பேசாமல் இருப்பது தங்கம்

நபிமொழியும் இந்தக் கருத்துப் பட,

நீ பேச வேண்டுமென்றால் நன்மையே பேசு
இல்லாவிட்டால் பேசாமல் இருத்தல் நலம்


என்றியம்புகிறது.

ஆதலினால் இந்த ப்ளோகுக்கு இன்னும்
லீவு நீட்டிக்கப் படுகிறது :))

Tuesday, November 01, 2011

ஹஜ் கமிட்டியின் கவனத்திற்கு !!

ஹஜ்ஜுக்குச் செல்வோர்களின் சிரமங்களைத் தவிர்க்க எல்லா வழிகளிலும்
உறுதுணையாக இருக்கும் ஹஜ் கமிட்டிக்கும், அவர்கள் தங்குவதற்கு
இலவசமாக இட வசதி வக்ஃப் செய்தவர்களுக்கும் இறைவன் அருள்பாலிப்பானாக.

ஹாஜிகளை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொள்ள சமீபத்தில் ஹஜ் கமிட்டி
சென்றிருந்தேன். தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றியவர்களுக்கும் இஹ்ராம் கட்டுவதற்கு
உதவுவதில் ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தவர்களுக்கும்
ரூம் மற்றும் பஸ் ஏற்பாடுகள் குழப்பமில்லாத வகையில் அமைத்துக் கொடுத்த‌
கமிட்டிக்கும் மனமார்ந்த நன்றிகளும் துஆக்களும் உரித்தாகட்டும்.

ஒரே ஒரு விஷயம் மனதை நெருடியது..

மஹரம் என்ற பெயரில் மஹரமில்லாதவர்கள் ஒரே ரூமில் தங்க வைப்பதால்
வரும் விளைவுகளை இன்னும் அறியவில்லையா. ஏன் இப்படி அங்கங்கே
ஆட்களைப் பிடித்து மஹரம் என்ற போர்வையில் குலுக்கல் செய்கிறீர்கள்.
அநேகர் வயதானவர்களாய் இருப்பதால் பெரிதாக ஒன்றும் ஏற்படவில்லை.
அறுபதுக்குள் இருந்து விட்டால் அபாயம் ஏற்பட நேரிடலாம்.

எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த விஷயத்தில் கொஞ்சம்
கறாராக இருக்க முயற்சி செய்யுங்களேன்.

ஒரு அன்னிய ஆணும் அன்னியப் பெண்ணும் தனியாக இருக்கும் பட்சத்தில்
மூன்றாவதாக ஷைத்தான் ஆஜராகி மனதில் ஊசலாட்டத்தைப் போடுவானே.

ஹலாலை ஹராமுடன் கலக்க விடலாமா ?

அடுத்த முறையிலிருந்தாவது தயவு செய்து கண்கொத்திப்பாம்பாக இருந்து
தடை செய்ய முயலுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்லுதவி புரிவானாக.

ஆமீன்! வஸ்ஸலாம்!

Monday, October 17, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம்

சாந்தியும் சமாதானமுமற்ற
சாக்கடைப் பெருவெளியில்
சதாகாலமும் உழன்ற பெரிதுவப்பு கூடி

சட்டென்று சிலிர்த்த சிலிர்ப்பில்
பட்டென்று தெரித்த
வளர்ப்பும் வன்மமும்
வார்த்தைகளினூடே
வடிந்து காய்ந்தும் விட்டது.

விட்டேனா பார் என்று
வீம்பு காட்டி அருகில் செல்ல‌
தெம்பு இல்லாமல் இல்லை
எனினும்
வம்புதும்பில்
நாட்டமுமில்லை
நம்பிக்கையுமில்லை

மனிதன்
தேறும்போது
வானவர் போல் ஆகிறான்

நாறும் போது
மிருகத்தை விடக் கீழாகிறான்.

மிருகங்களில் மூன்று வகை

பசிக்காகவும் தேவைக்காகவும்
அடுத்தவர்களின் பொருளைத் தின்னும்
ஆடு மாடு போன்றவை

பசிக்காகவும் தேவைக்காகவும்
அடுத்தவர்களையே தின்னும்
சிங்கம் புலி போன்றவை

எந்த விதப் பிரயோஜனமுமின்றி
சும்மாவே அரிப்பெடுத்து
அடுத்தவரைத் தீண்டும்
பாம்பு தேள் போன்றவை

இதில் இஸ்லாத்தை
அவ்வப்போது தீண்டும்
முஸ்லிம்களை சீண்டும்

வால் ராஜாக்களும்
பெயரில்லாக்களும்
எந்த ரகம் தெரியுமோ

ப..ப..பப்..பரப்..பார்ப்..
பாம்பு ரகமே

பொறாமையில் உழல்பவன்
முஸ்லிமைச் சீண்டுவான்

அழிவைத் தேடுபவன்
இஸ்லாத்தைச் சாடுவான்

ரெண்டுமே அழிவுதான்
எனவே
வேண்டாமே தீண்டாமை

சாந்தியும் சமாதானமும்
சங்கையான சகோதரிகள்

அவர்களோடு ஒரு நல்ல‌
சகோதரனாக வாழ முயல்வோம்.

வஸ்ஸலாம்


டிஸ்கி : அமெரிக்கா,இந்தியா போன்ற 'பெரிய' இடங்களில் இருந்து கொண்டு
'கொட்டுவதால்' பரமசிவன் கழுத்துப் பாம்பு என்று எழுதியிருந்தேன். ஆனால்
அது ஒரு சமூகத்தின் குறியீடு என்பதைக் கலையகம் (http://kalaiy.blogspot.com)
சென்று அறிந்து கொண்டதால் மாற்றி விட்டேன்.

Monday, October 03, 2011

அல்ஹம்துலில்லாஹ்

அடக்கியாளும் ஆற்றல் படைத்த
அல்லாஹ்வின் திருநாமத்தால்
ஆரம்பம் செய்கிறேன் எனச்

சொல்ல வைக்கும் வச‌தி இருந்தும் இறைவா !

அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்பாளனுமாகிய‌
அல்லாஹ்வின் திருநாமத்தால்
ஆரம்பம் செய்கிறேன் எனச்

சொல்லச் சொல்லும் சூட்சுமம் என்னவோ

உனது கோபத்தை உனது கருணை
முதல் வரியிலேயே வென்று விட்டதே !


சுப்ஹானல்லாஹ்

Monday, July 18, 2011

ரெண்டாம் ஜாமத்துக் கனவு

(முந்தைய கனவின் தொடர்ச்சி)

கனவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இரவின் கடைசிப் பகுதியில் காணப்படும் கனவுதான்.
கனவு கண்ட நேரத்தைப் பொறுத்தும் அது பலிக்கும் நாட்கள் கணிக்கப் படுகின்றன. கனவில் இறைவனைத் தரிசிக்கலாம் (அதற்கானத் தகுதியை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில்).
நபியை, நபித்தோழரை மற்றும் நல்லோர்களையும் கனவில் காண முடியும்.
ஆனால் அது நம் கையில் இல்லை, இறைவன் அனுமதித்தாலே தவிர‌‌.

நல்லோர்கள் மட்டுமல்ல ஷைத்தான்களையும்,விலங்கினங்களையும் காண முடியும். ஜின், ஷைத்தானையோ அல்லது விலங்கினத்தையோ காண்பது நல்லதல்ல. ஆனால் அவற்றை
வெல்வது போல் கண்டால் நடக்கவிருந்த ஒரு தீமையை விட்டுத் தப்பித்தது போலாகும்.

-------------------------- * * * * * -------------------------

ஒருமுறை நண்பர்களைச் சந்திக்க துபாய் சென்றிருந்த சமயம். இரவுச் சாப்பாட்டை வழியில்
கண்ட ஒரு ரெஸ்டாரன்டில் சாப்பிட்டு விட்டு இருட்டுப் பகுதியான தொழில்பேட்டையில்
இருக்கும் அவர்களின் குடியிருப்பை நோக்கித் தனியனாகச் சென்று சேர்ந்தேன்.

அவர்களைச் சந்தித்து அளவளாவிய பின் அங்கேயே தங்கினேன். மற்றவர்கள் அவரவர்
கட்டிலில் சயனிக்க, எனக்குக் கிடைத்தது ஒரு மூலையில் தரை டிக்கெட்டு. படுக்கும்
போதே தலை சுற்றுவது போல் தெரிந்தாலும் நொடியில் உறங்கிப் போனேன்.

எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை, நடுச் சாமத்தில் திடீரென விழித்துக் கொண்டேன், கொஞ்சம் வேர்த்திருந்தது. மற்றெல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். இப்போது நினைவுக்கு வந்தது சற்றுமுன் நான் கனவில் கண்ட காட்சி. கைநகங்கள் நீண்ட,
கூரிய பற்கள் கொண்ட ஆண் மற்றும் பெண், இருவரும் கோபத்துடன் என்னை நெருங்க முயற்சிக்கும் தருணத்தில் திடுக்கிட்டு விழித்துள்ளேன். (பாவம் மூலையில் தமது
தேவைக்காக ஒதுங்கி இருந்தவர்களை டிஸ்டர்ப் செய்து விட்டேனோ :)

மாறிப் படுப்பதற்கும் மாற்று இடம் அங்கில்லாததால் வேறு வழியின்றி,
'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என்று ஓதி இடது பக்கம் மூன்று முறை
துப்பி விட்டு (நபிவழி), பின் ஆயத்துல் குர்ஸீ (குர்ஆன் 2:255) ஓதி உடம்பில் ஊதித்
தடவிய பின் மீண்டும் படுத்துக் கொண்டேன். என்ன ஆச்சர்யம், அரைமணிக்குப் பின்
தூங்கிய பொழுதில் மீண்டும் அதே காட்சி. இருவரும் என்னை நோக்கி நகர, இப்போது
என் கையில் மிகத் தடித்த கம்பு ஒன்று இருப்பதை உணர்ந்து அவைகளை நோக்கி
அடிக்க எத்தனித்தேன். அதற்குள் அவைகள் மறைந்து போயினர்...

-------------------------- * * * * * -------------------------

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின்
நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ
அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட
தவணை வரை (வாழ்வதற்காகத் திருப்பி) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும்
மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் ‍ 39:42)

-------------------------- * * * * * -------------------------

நாம் தூங்கும் போது நம்மை விட்டு எது விலகுகிறது (இறைவனால் கைப்பற்றப் படுகிறது)
என்று தெரியவில்லை. ஆன்மாவா அல்லது ஆத்மாவா அல்லது வேறெதுவுமா. தூங்கிய
பிறகு குறட்டை மற்றும் மூச்சுத்துடிப்பின் மூலம் உயிர் இருக்கிற‌து என்பது தெளிவாகத்
தெரிகிறது. பிறகு எதுதான் செல்கிறது. ஒளுவுடன் தூங்கியவர்கள் இறைவனைச் சந்தித்து
ஸஜ்தா செய்வதாகவும் மற்றவர்கள் (ஸஜ்தா செய்யாமல்) வெறுமனே சந்தித்து விட்டுத்
திரும்புவதாக அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தூங்குமுன் ஓத வேண்டிய துஆக்களில் பின்வரும் அர்த்தம் பொருந்திய துஆ ஒன்றும்
உண்டு. 'இறைவா ! நீ என் ஆத்மாவைப் பிடித்து வைத்துக் கொண்டால் அதன் மீது
இரக்கம் காட்டி கிருபை செய்வாயாக. இன்னும் அதைத் திருப்பி அனுப்புவதாக
இருந்தால் நல்லோர்களைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக
!'

அப்படிச் சென்று திரும்பி வரும்போது நாம் காணும் காட்சிகள்தாம் கனவாய்த் தெரிகிறதோ
என்றும் சிந்திக்கத் தோணுகிறது. நபியவர்கள் தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்
இன்று யாராவது கனவு கண்டீர்களா என்று தோழர்களிடம் விசாரித்து அதற்கான
பலன்களைச் சொல்லுபவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருதடவை தாம் கனவில் கண்ட
சொர்க்க, நரகக் காட்சிகளை விவரித்துள்ளார்கள்.எனவே எதிர்காலம் சம்பந்தப் பட்ட
விஷயங்கள் கூட இறைவன் அனுமதிக்கும் சிலருக்குக் கனவில் காட்டப் படுகின்றன‌.

'சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன'
என்று இறைவன் சொல்வதால் இது பற்றி இன்னும் சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

Monday, July 11, 2011

கற்பனைக் காற்றில் கடை பரப்பி விற்பனை

வேலை கைவிட்டுப் போகலாம்
எனத் தெரிந்ததால்..

வியாபாரம் செய்யலாம் என இருக்கிறேன்
ஒரு நல்ல பிசினெஸ் ஐடியா கொடு என‌
நண்பனிடம் விசாரித்தேன்

வியாபாரம் எதுவாய் இருந்தாலும்
விற்பனைப் பொருள் கடையை விட்டு
உடனுக்குடன் காலியாகும்
பொருளைத் தேர்ந்தெடு என்றான்

மனைவியிடம் கேட்டதில்
ஜவுளிக்கடை என்றாள்
நல்லவேளை நகைக்கடை
ஞாபகம் வரவில்லை

குழந்தைகளிடம் விசாரித்தேன்
புத்தகக் கடை,ஸ்டேஷனரி,டாய்ஸ் கடை
என்று ஆவலாய் அடுக்கினார்கள்

எனக்குப் பிடித்ததோ
வாசனைத்திரவியம்

எல்லோருமே அவரவர்க்குப்
பிடித்ததைத்தான் பகிர்ந்தோமே
ஒழிய ஒருவரும்
கஸ்டமருக்குப் பிடிப்பதைப் பற்றி
யோசிக்கவில்லை

ஏது, எங்களின் ஆர்வத்தைப் பார்த்தால்
விற்பனைப் பொருள் ..

கடைக்கு வரும் முன்பே
காலியாகி விடும் போல் தெரிகிறதே :)
:)

Monday, July 04, 2011

பிரபல திரட்டிகளை முந்திய பிரபல பதிவர்கள்

தோழர் பிரபாகர் (http://prabhawineshop.blogspot.com/)

தோழர் பார்வையாளன் (http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com/)

பதிவர்கள் (http://pathivargal.blogspot.com/)

சகோ சாதிகா (http://shadiqah.blogspot.com/2011/06/blog-post_08.html)

ஆகிய நால்வருக்கும் நன்றியோ நன்றிகள்.

காரணம், கடந்த மாதத்தில் நான் எழுதியது ஒரு பதிவுதான், ஆனாலும்
மேலே குறிப்பிட்ட நண்பர்களின் வலைப்பூ மூலமாக இங்கே வந்து போனவர்களின்
எண்ணிக்கை பின்வருமாறு

தோழர் பிரபாகர் ‍(121)
அன்பு பதிவர்கள் (56)
தோழர் பார்வையாளன் (41)
தமிழ்மணம் (26)
சகோ.சாதிகா (12)

நானே சும்மாயிருந்தாலும் என்னை இப்படி உசுப்பேத்துபவர்களை என்ன‌ செய்வது.
இப்போதைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் எழுத வரும்போது
இவர்களை கவனித்துக் கொள்கிறேன் (கிர்ர்ர்.... :))


அன்புத் தோழர்களே உங்களின் அன்புக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.


வஸ்ஸலாம்.

Wednesday, June 08, 2011

என்ன உலகமடா இது !!

ஒரே வெறுப்பாக இருந்தது
பதிவெழுதவில்லை

பதிவெழுதாததால்
நிம்மதியாயிருந்தேன் !

என்ன உலகமடா இது

குளித்ததால் தலை ஈரமாய் இருந்தது
ஈரத்தின் காரணத்தால்
தலைக்கு எண்ணெய் இடாமல்
ஆஃபீஸ் சென்றேன்.
ஏன் இன்னைக்குக் குளிக்கலயா என்கிறார்கள்.
குளிக்காத அன்று எண்ணெய்
இட்டுச் செல்கிறேன். கேட்கிறார்கள்
என்ன இன்று ஃபிரஷ்ஷா இருக்கீங்க !


பதிவெழுதல்,பதிவுலக பவனி
என்றிருக்கும் போது
எப்பப்பாரு பிஸி என்பவர்கள்
பதிவுப்பக்கம் போகாமல்
அவர்களின் பேச்சுக்களில்
கலந்து கொண்டால்
என்ன வேலை வெட்டி
ஏதுமில்லையா என்கிறார்கள் !


வேலை பென்டிங் வைத்தாலும் திட்டு
வேலையத்தனையும் முடித்து வைத்தாலும் குட்டு
அடுத்தவேலை என்ன கொடுக்கலாம் என்று
ஆராய்ந்து திரியும் மேலாளன், அவன்
ராஜினாமா செய்தாலும் கொண்டாட முடியவில்லை
அடுத்து வருபவன் அதை விட மோசம் !


இந்தப் புரம் வந்தால் இவளது தொல்லை
நானே முடிவெடுத்தால்
அதிகாரம், அடிமை வாழ்க்கை என‌
போர்ப்பறையறிவிப்பு
சரி உன்னிஷ்டம் என்று விட்டு விட்டால்
உங்களுக்கு எதிலும்
முடிவெடுக்கத் திராணியில்லையென்ற‌
கேலி,கொக்கரிப்பு !


சே ஒரே வெறுப்பாய் இருக்கிறது
பதிவுலகுக்கு மீண்டும்
லீவு கொடுத்து விட வேண்டியதுதான் :)))டிஸ்கி : எழுதாமல் இருப்பதற்காக என்னென்னவெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது :)

Wednesday, May 11, 2011

கனவொன்று கண்டாய்

கனவுகள் பற்றி நமக்கு இன்னும் தெளிவில்லை அதைக் கட்டுப் படுத்தும் ஆற்றலும்
நமக்கில்லை. கனவில் வரும் இடங்கள் நாம் முன்பே பார்த்ததாகவும் இருக்கலாம்
அல்லது இதுவரை பார்க்காத இடங்களையும் சஞ்சரிக்கலாம்.நாம் அசை போட்ட
விஷய‌ங்களும் வரலாம் அல்லது புதிதான விஷயங்களாகவும் இருக்கலாம்.
ஆனால் அசட்டையாக இருந்து விட வேண்டாம் கனவு விஷயத்தில்.

சில சமயங்களில் அது இறைவனின் புறத்திலிருந்து வரும் அறிவிப்பாக இருக்கும்.
நபிமார்களுக்கு அனுப்பப்படும் இறைச் செய்திகளில் கனவும் ஒன்று. அதாவது கனவின்
மூலமாக நபிமார்களுக்கும் இறையடியார்களுக்கும் செய்திகள் சொல்லப்பட்டன/படுகின்றன.
'கனவு' என்றாலே 'நினைவு'க்கு வருவது யூசுப் அலை (ஜோசப்) சம்பவம்.
(எல்லோருக்கும் தெரியும் என்பதால் இங்கு எழுதவில்லை)


இவ்வுலகம் பொதுவானது. ஆதலால் கனவின் வழி செய்தி இறையடியார்களுக்கு
மட்டுமல்ல எல்லோருக்கும் அனுப்பப் படுகிறது. மிகச் சிலரே கனவின் விளக்கம்
அறிந்து கொள்கிறார்கள். கனவிற்கான விளக்கம் ஒரு சில புத்தகங்களில்தான் காணக் கிடைக்கின்றன. அறிந்தவர்கள் மிகக் குறைந்து விட்டனர். கண்ட கனவின் விளக்கம்
தெரியுதோ அல்லது தெரியவில்லையோ முதலில் கனவை யாரிடமும் சொல்ல வேண்டாம்.

நல்ல கனவுகளை, நம்மீது பொறாமை கொள்ளாதவர்களுடனும் நம் முன்னேற்றத்தை நாடுபவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கெட்ட கனவுகளை வெளியில்
சொல்ல வேண்டாம். சொல்லப் படாத வரைக்கும் அவற்றின் தாக்கங்கள் ஏற்படாது
.

இவ்வுலக அழிவு நாள் நெருங்க நெருங்க 'அறிவு' குறைந்து கொண்டே போய் ஒருநாள்
சுத்தமாக எடுபட்டு போகும் என்று அருமை நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்.

விஞ்ஞான அறிவு பெருகிக்கொண்டே போகிறதே, 'அறிவு' எப்படிக் குறையும் எனச்
சந்தேகம் வருகிறதா ? வரட்டும் வரட்டும்.

வாழ்க்கை ஒரு வட்டம். எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பமும் உண்டு முடிவும் உண்டு.

அலங்காரக் கட்டில் வாங்குகிறோம் ; தூக்கத்தை வாங்க முடியவில்லை.

விதம் விதமா மருந்துகள் வாங்குகிறோம் ; நற்சுகத்தை வாங்க முடியவில்லை;

மருத்துவமனைகள் அதிகரிக்க அதிகரிக்க நோயுமல்லவா அதிகரித்து விட்டது.

புத்தகங்களும் கல்விக்கூடங்களும் பெருகி விட்டன ; ஆனால் அறிவு குறைந்து விட்டது.

முன்பு சதாவதானி,தசாவதானி என்று பலர் இருந்திருக்கிறார்கள். பல விஷயங்களை
ஒரே நேரத்தில் அறிவார்கள். நிறைய விஷயங்களைக் குறிப்பால் அறிந்து கொள்பவர்கள், அனுபவத்தால் அறிந்து கொள்பவர்கள்,கனவின் மூலம் அறிந்து கொள்பவர்கள் என்று பலர் இருந்தனர். நமக்கோ ஒரு விஷய‌த்தைக் கூட முழுதாக அறிய முடியவில்லை. விஷயம் அறிந்தவர்களைக் கேலி வேறு செய்கிறோம். இப்படியெல்லாம் அறிவு இருந்ததா/இருக்கிறதா
என்று கூட நம் அறிவுக்கு எட்டுவதில்லை.

எது உண்மையான கல்வி எது உண்மையான அறிவு என்பதைச் சொல்வதற்கே
நேரம் போய்விடும். அதனால இப்போ கனவைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

கனவை விளங்கிக் கொள்வதும் அறிவின் பாற்பட்டது. கனவின் விளக்கம் பெற்ற ஒரு
அறிஞரிடம், ஒரே கனவைக் கண்ட‌ இருவர் வந்தனர் ஆனால் வெவ்வேறு சமயங்களில்.

இருவருக்குமே வந்த கனவு 'தாம் படுத்த கட்டிலனடியில் நெருப்புக் கங்குகளைக்
கண்டதாகத்' தெரிவித்தனர். ஒருவனுக்குச் சொல்லப்பட்டது 'நீ படுத்த இடத்திற்குக்
கீழே புதையல் உண்டு' என்றும் இன்னொருவனுக்கு 'உடனே நீ உனது வீட்டிற்குச்
சென்று வீட்டிலுள்ளோரை வெளியே அழைத்து வந்து விடு, வீடு இடிந்து விழப் போகிறது'.

இரண்டு விளக்கங்களின் போதும் அருகிலிருந்தவர் கேட்டார். இருவரும் கண்டது ஒரே
விதமான கனவாயிற்றே, ஆனால் விளக்கம் வேறாக இருக்கிறதே என்று கேட்ட போது
'முன்னவர் கண்டது குளிர் காலத்தில் பின்னவர் கண்டது கோடைக் காலத்தில்'
என்று பதில் வந்தது.

மேலும் காணக்கூடிய நபரைப் பொறுத்தும் கனவின் விளக்கம் வேறுபடும்.


இ.அ. தொடரும்...

Wednesday, May 04, 2011

அதிபர் ஒபாமாவுக்கு நன்றி

கொடூர டைரக்டர்களால்
ஆரம்பித்து வைக்கப் பட்ட‌
ஒரு மோசமான திகில் திரைப்படத்தை
முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு
நன்றியோ நன்றி

ஹீரோ, ஆன்டி ஹீரோ, வில்லன் என‌
ஒரு ஆளுக்கு இத்தனை கேரக்டரா
படம் முடிந்த பிறகுதான் தெரிந்தது
படத்தை முடித்து வைத்த
டைரக்டர்தான் ஹீரோ என்று

வில்லனைப் பெரிதாகக் காட்டினாலே போதும்
ஹீரோ பெரிதாகத் தெரிவார் என எங்கள்
வலையுலக சூப்பர் ஸ்டார்
லக்கிலுக் யுவகிருஷ்ணா
அன்றே சொல்லியிருக்கிறார்

நீங்கள்தான் ஹீரோ என்று
ஒத்துக் கொள்கிறோம்
தயவு செய்து மீண்டும் மீண்டும்
இது போன்று படமெடுத்து
ஹீரோயிசத்தைத் திணிக்காதீர்

உங்களுக்குப் பின் ..
கொடூர டைரக்டர் யாரும் வராத அளவுக்கு
ஏதாவது செய்ய முடியுமா (யா) ஒபாமா

நியாயத் தீர்ப்பு நாளென்று
ஒன்று இல்லையென்றால்
உலகில் நடக்கும்
குழப்பங்களையும் கொடூரங்களையும்
கண்டு இந்நேரம்
பைத்தியமாகி இருப்போம்

அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்

கடைசியில் ஒரு வேண்டுகோள்
தங்களின் பெயரில் ஒரு திருத்தம் வேண்டும்
நடு எழுத்து 'சா'க வேண்டாம்.
'மா'வின் பின் மறைந்திருக்கும் பெயர்
மீண்டும் உயிர் பெற வேண்டும்.

அந்த ஆசை கொஞ்சம் வந்தாலும் போதும்
வல்ல ரஹ்மான் நிறைவேற்றித் தருவான்.


வஸ்ஸலாம்.

Wednesday, April 27, 2011

எங்கே நான் சென்று தேடுவேன் :(

முன் பகுதியின் தொடர்ச்சி ....

அர‌ச‌ன் எங்களை மூன்று நாட்கள் தங்க வைத்து உபசரித்தான். ஒரு நாள் இரவில்
ஆளனுப்பி எங்களை அவனிடம் அழைத்து வரச் செய்தான்.....


----------------------------------------------------------------------------

அருகில் எங்களை அமர வைத்துச் சிறிது நேரம் அளவளாவிய பின் ஆளனுப்பி ஒரு
பெட்டியைக் கொண்டு வருமாறு செய்தான். தங்க வேலைப்பாடுடன் கூடிய‌
அப்பெட்டியைத் திறந்தான். அதற்குள் பல அடுக்குகள் காணப்பட்டன. ஒவ்வொரு
அடுக்கிலும் கருப்பு மற்றும் வெள்ளைத்துணிகளால் சுற்றப்பட்ட சதுர வடிவமான‌
பொருட்கள் காணப்பட்டன. முதல் அடுக்கிலிருந்து எடுத்து கருப்பு நிற சில்க் துணியால் போர்த்தப்பட்டதைப் பிரித்த போது செந்நிறமான ஓவியம் தெரிந்தது. மிக உயரமான,
பெரிய‌ கண்கள், தாடியில்லாத‌ நீண்ட கழுத்து கொண்ட மிக அழகான ஒரு
மனிதனின் உருவம் இருந்தது. அரசன் கேட்டான் 'இது யார் தெரியுமா'.

நாங்கள் தெரியவில்லை என்று சொன்னதும், 'இவர்தான் ஆதம்'. நாங்கள் வியந்து
பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னொன்றைப் பிரித்து 'இது யார் தெரியுமா' என்று
கேட்க நாங்கள் தெரியவில்லை என்று தலையாட்டினோம். இவர்தான் நோவா, நீங்கள்
சொல்லும் நூஹ் நபி. பெரிய தலையுடன் சுருண்ட முடிகளுடன், அடர்ந்த தாடியுடன்,
சிவந்த கண்களுடன் வெண்மை நிறத்துடன் காணப்பட்டார்.

அடுத்ததை எடுத்து 'இது யார் தெரியுதா' என்று கேட்க நாங்கள் இல்லை என்று
சொன்னோம். மிக வெண்மையான தோற்றம், நீண்ட கன்னங்கள், அழகான கண்கள்,
பரந்த நெற்றி, வெள்ளை தாடி, புன்னகை முகத்துடன் காணப்பட்ட‌ உருவத்தை
'இவர்தான் ஆப்ரஹாம்' என்றான்.

அடுத்ததைப் பிரித்து 'இவர் யார் தெரியுமா' என்று எங்களிடம் நீட்டியபோது
அதிர்ச்சியும் பரவசமும் அடைந்து உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. எங்களால்
கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுதவாறே சொன்னோம்,

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இது எங்களின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்'. இதைக் கேட்டதும் அரசன் உடனே எழுந்து நின்றான்.
சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் அமர்ந்து கொண்டு கேட்டான்.

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர் நீங்கள் சொல்லும் அதே முஹம்மதுதானா' ?

'சந்தேகமில்லை அவர்களேதான், அவர்களை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது' .

ஹெர்குலிஸ் நீண்ட நேரம் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


பிறகு மீண்டும் ஒவ்வொன்றாய் எடுத்துப் பிரித்து 'இது யார் தெரியுமா' என்று
கேட்க எங்களுக்கு யாரையும் தெரிந்திருக்க வில்லை. இவர்தான் மோசஸ் மற்றும்
அவரது சகோதரர் ஆரோன் பின் இம்ரான், இவர்தான் லூத், இவர்தான் இஸ்ஸாக்,
இவர்தான் ஜேக்கோப், இவர்தான் இஸ்மவேல், உங்கள் நபியின் பாட்டனார், இவர்தான்
டேவிட், இவர்தான் சாலமன் என்று சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் இவர்தான்
மர்யமின் மகன் ஜீசஸ் என்று முடித்த பின் எங்களை நோக்கி

'கடைசியில்தான் முஹம்மது நபியின் புகைப்படத்தைக் காட்டியிருக்க வேண்டும்,
ஆனால் வரிசைக் கிரமத்தை வைத்து நீங்கள் கடைசிப் படத்தை முகம்மதின் படம்
என்று கணித்துச் சொல்வீர்களோ என்று ஐயப்பட்டதால்தான் இடையிலேயே காட்டினேன்'.

நாங்கள் கேட்டோம், 'எங்கிருந்து தங்களுக்கு இப்படங்கள் கிடைத்தன' ?

'ஆதம் இறைவனிடம் தனக்குப் பிறகு வரும் இறைத்தூதர்களைக் காண்பித்துத்
த‌ருமாறு ஆவலுடன் கெஞ்சிக் கேட்டதால் இறைவன் அவருக்கு இவ் ஓவியங்களை
அனுப்பி வைத்தான். சூரியன் அஸ்தமாகும் பகுதியில் மறைந்து கிடந்த ஆதமுடையப்
பொக்கிஷப் பேழையில் இருந்து இப் பெட்டியை துல்கர்னைன் கொண்டு வந்து
தானியேலிடம் ஒப்படைத்தார்.'

பிறகு ஹெர்குலிஸ் தொடர்ந்து,
'கவனியுங்கள், இறைவன் மீது சத்தியமாக, இந்த என்னுடைய நாட்டை விட்டு
வெளியேறி, (இஸ்லாத்தை ஏற்று), உங்களில் மிக மிகத் தாழ்ந்த ஒருவ‌னின்
அடிமையாக என்னுடைய மீதிக் காலத்தைக் கழிக்க வேண்டாமா என்றுதான்
நானும் ஆசைப்படுகிறேன்' என்று பெருமூச்செறிந்தான்.

எங்களுக்கு நிறையப் பரிசுப் பொருட்களைத் தந்து மிக்க மரியாதையுடன் அனுப்பி
வைத்தான். நாங்கள் மதீனா திரும்பி வந்து நடந்ததையெல்லாம் அமீருல் முஃமினீன்
ஹஜரத் அபூபக்கரிடம் எடுத்துச் சொன்னபோது அவர்களும் அழுதார்கள் சுற்றியிருந்தவர்கள்
அனைவரும் அழுதனர். பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்,

(இந்த) ஹெர்குலிஸ் மிக நல்ல‌வன், இவன் விஷயத்தில் அல்லாஹ் நலவை
நாடினால் இவன் (இஸ்லாத்தை) அடைந்து கொள்வான்'.

மேலும் சொன்னார்கள்,

'ரசூலுல்லாஹ் நமக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள், கிறிஸ்தவர்களும்,
யூதர்களும், நபியவர்களின் அடையாளத்தை அவர்களுக்குக் கொடுக்கப்
பட்டவைகளிலிருந்து தெரிந்து கொள்வார்கள்'.
சம்பவத்தை அறிவிப்பவர் : ஹஜரத் 'ஹிஷாம் பின் ஆஸ் அமவி (ரலி)' அவர்கள்.


டிஸ்கி: அல்லாஹ் மன்னிக்க வேண்டும். இது ஹதீஸின் நேரடித் தமிழாக்கம்
இல்லை, ஞாபகத்தில் உள்ளதை எழுதியுள்ளேன். ஹதீஸில் ஒவ்வொரு நபியைப்
பற்றியும் வர்ணனை உண்டு. அல்லாஹ்வே மிக அறிந்தவன். வஸ்ஸலாம்.

Wednesday, April 20, 2011

அதிர வைத்த ஆன்மீகச் சொல்

நானும் இன்னொருவரும் பைஸான்டியப் பேரரசின் மன்னனான ஹிர்கலிடம்
அனுப்பப் பட்டோம். ப‌ய‌ண‌த்தினூடே சிரியாவின் ட‌மாஸ்க‌ஸில் உள்ள
'குத்தாஹ்'வின் ஆளுந‌ர் ஜ‌ப‌லா பின் அய்ஹாம் க‌ஸ்ஸானியை முத‌லில்
ச‌ந்தித்தோம். அவ‌ன் அரியாச‌ன‌த்தில் அம‌ர்ந்த‌வாறே சில‌ரை எங்க‌ளிட‌ம்
பேசுவ‌த‌ற்கு அனுப்பி வைத்தான். நாங்க‌ள் சொன்னோம்,

'இறைவ‌ன் மீது ஆணையாக‌, அர‌ச‌னிட‌ம் பேசுவ‌த‌ற்காக ம‌ட்டுமே அனுப்ப‌ப்
ப‌ட்டுள்ளோம். அவனிடம் அனும‌தித்தால் வ‌ந்த‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிப் பேசுவோம்.
அனும‌தி இல்லையென்றால் வ‌ந்த‌ வ‌ழி திரும்பி விடுவோம். இத‌னைய‌றிந்த‌ ஜ‌ப‌லா
த‌ன்னிட‌ம் வ‌ருவ‌த‌ற்கு அனும‌தி அளித்தான். அவ‌ன் அருகில் சென்ற‌ எங்க‌ளைப்
பார்த்து, 'ம்,சொல்லுங்க‌ள் என்ன‌ சொல்ல‌ப் போகிறீர்க‌ள்' என்றான்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜபலாவை அழைத்தேன். க‌றுப்பு நிற ஆடை
அணிந்திருந்த ஜபலா, 'நான் ஏன் கறுப்பு நிற ஆடை அணிந்திருக்கிறேன் என்று
தெரியுமா. முஸ்லிம்களாகிய உங்களையெல்லாம் இந்த சிரியாவை விட்டு
விரட்டியடிக்காதவரை க‌ருப்பு நிற ஆடையைத் துறக்கப் போவதில்லை என்று
சபதம் செய்திருக்கிறேன்' என்றான்.

அதற்கு நாங்கள் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த நகரம் மட்டுமல்ல‌ முழு நாடும்
எங்களுக்குக் கீழ் வரப் போகிறது இன்ஷா அல்லாஹ். இதைப் பற்றிய முன் அறிவிப்பை
எங்கள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்பே அறிவித்திருக்கிறார்கள். இத‌னைக் கேட்ட ஜபலா,

'நீங்களல்ல அம்மக்கள், எம் நாட்டை எவர்கள் கைப்பற்றுவார்கள் என்றால் அவர்கள்
பகலிலே நோன்பு வைத்து இரவிலே வணக்கம் புரிவார்கள். சரி உங்களின் வணக்க
முறைகளைச் சொல்லுங்கள்' என்றவனிடம் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளின்
முறைகளைச் சொல்லச் சொல்ல அவன் முகம் கறுத்துப் போனது.

பிறகு எங்களை மன்னனிடம் அனுப்பி வைத்தான். மன்னனை நெருங்கிய பொழுது
வாயிற்காவலர்கள் 'நீங்கள் ஒட்டகத்தில் செல்ல அனுமதி இல்லை. நாங்கள் தரும்
துருக்கிக் குதிரையில்தான் உள்ளே செல்ல வேண்டும்' என்றதற்கு 'அல்லாஹ்வின்
மீது ஆணையாக, நாங்கள் வந்த ஒட்டகத்தில்தாம் வருவோம்' என்றோம். இச் செய்தி
மன்னனுக்குத் தெரிந்தவுடன் ஒட்டகத்துடன் வர அனுமதி கிடைத்தது.

சபையோர் புடை சூழ மன்னன் செந்நிறமாய்க் காட்சியளித்தான். அங்கிருந்தோர்
அனைவரின் ஆடைகள்,அங்கிகள்,விரிப்புக்கள் என எல்லாமே சிவந்த நிறத்தில்
இருந்தன. நாங்கள் அவனருகில் சென்று அமர்ந்தபோது சிரித்தவாறே சொன்னான்,
'உங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் முகமனை எனக்குச் சொல்வதால் ஒன்றும்
பாதகமில்லையே'. நாங்கள் சொன்னோம், 'உம்முடைய முகமன் எங்களுக்கோ
எங்களது முகமன் உங்களுக்கோ ஒத்து வராது'.

'அப்படியாயின், உங்களின் முகமன் தான் என்ன ?'

'அஸ்ஸலாமு அலைக்கும் (உன் மீது ஸலாம் உண்டாகட்டும்)'

'உங்களின் அரசனுக்கு என்ன முகமன் கூறுவீர்கள்'

'அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முகமன் தான்'

'சரி, உங்களுடைய உயர்ந்த வார்த்தை (கலிமா) எது ?' என்று கேட்க

நாங்கள் உரத்த குரலில் 'லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று
சொன்னதுதான் தாமதம் அரண்மனையின் மேல் பகுதி ஒன்று இடிந்து விழுந்தது.

அதனைப் பார்த்த அதிர்ச்சியுடன் அரசன் கேட்டான் 'இந்த வார்த்தையை நீங்கள்
ஒவ்வொரு முறை கூறும்போதும் ஏதாவது இடிந்து விழுகிறதா'

'இல்லை இது போல் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை, உம்முடைய விஷயத்தில்தான்
இவ்வாறு நடைபெறக் கண்டோம். அதற்கு மன்னன், 'அடடா, ஒவ்வொறு முறையும்
இந்தக் கலிமாவை நீங்கள் மொழியும் போது உங்கள் அனைவரின் தலையிலும் ஏதாவது
விழுந்து நீங்களெல்லோரும் அழிந்து போக வேண்டாமா என்று ஆசைப் படுகிறேன்' என்று
சொன்னதன் பின் ஏதோ யோசித்தவனாக,

'சரி, உங்களின் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என்று
கேட்டான். நாங்களும் அவை பற்றி விளக்கிச் சொன்னோம். அவன் எங்களை மூன்று
நாட்கள் தங்க வைத்து உபசரித்தான். ஒரு நாள் இரவில் ஆளனுப்பி எங்களை அவனிடம்
அழைத்து வரச் செய்தான்.....

(இன்ஷா அல்லாஹ் தொடரும் )

டிஸ்கி :
நபியவர்களின் முன்னறிவிப்புக்களில் ஒன்று, தஜ்ஜால் (anti christ) வருவதற்கு முன்
முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இக் கலிமாவை மொழிவார்கள். இதன் காரணத்தால் யூதர்கள் ஒளிந்திருக்கும் கோட்டையின் சுவர் இடிந்து தரை மட்டமாகும்.

Wednesday, April 13, 2011

(சிறந்த) தலைமை தாராயோ தலைவா !

இறைவா !


நல்லதை

நல்லவர்களை

நடுநிலை நாயகர்களை

ந‌ற்சிறந்த ஆளுமைகளை

நட்புறவு பாராட்டுபவர்களை

நாட்டை வளப்படுத்துபவர்களை

நானிலம் சிறக்க நாடாளுபவர்களை

நாட்டு மக்களைக் கூறு போடாதவர்களை


இன்று எங்களுக்காகத் தெரிந்தெடுத்துத் தருவாயாக ! ஆமீன் !

Monday, March 28, 2011

தர்காவுக்குப் போகலாமா வேண்டாமா ‍- Part II

முதல் பகுதியின் தொடர்ச்சி ...

இஸ்லாத்தில் மூன்று பள்ளிகள் புனிதமானவை 1.கஃபத்துலாஹ் (மக்கா),
2.மஸ்ஜிதுன் நபவி (மதீனா), 3.பைத்துல் முகத்தஸ் (ஜெருசலம்). அதற்காக
மற்றப் பள்ளிகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. அவை மூன்றும் முதல்
அந்தஸ்த்தில் உள்ளவை. கஃபத்துலாஹ் ஆதம் நபியால் கட்டப்பட்டு
இப்ராஹீம் (Abraham) நபியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. மதீனாப் பள்ளி
முகம்மது (ஸல்) மற்றும் அவர்களது நபித்தோழர்களால் கட்டப்பட்டது.
ஜெருசலம் பள்ளி தாவுது (David), சுலைமான் (Solomon) நபிகளால் கட்டப்பட்டது.

மற்றப் பள்ளிகள் அவ்வப்போது தொழுபவர்களின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வந்தன,
இனியும் கட்டப்படும். ஆனால் தர்காக்கள் ஏன்,யாரால் கட்டப்பட்டன என்ற விவரம்
தெரியவில்லை. இனியும் கட்டப்படாது என்றே நினைக்கிறேன். அது தொழப்படும்
பள்ளியுமல்ல, இறைவனின் ஆலயமுமல்ல மாறாக அது வெறும் அடக்கஸ்தலம்தான்.
பிறகு ஏன் மக்கள் அங்கே செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இங்கேதான்
தவ்ஹீதுவாதிகளும் தரீக்காவாதிகளும் பிரிகிறார்கள். இருவரும் பேசிக்
கொள்வதைக் கேட்போமா.

தவ்ஹீது : நீங்கள் ஏன் தர்காவுக்குச் செல்கிறீர்கள், அது பாவமாச்சே.

தரீக்கா :
பாவமென்று யார் சொன்னது, மரணத்தை நினைவூட்டுவதால் அடக்கஸ்தலம்
செல்லுமாறு நபிகளே சொல்லியிருக்கிறார்களே.

தவ்ஹீது :
நீங்களெல்லாம் அதற்காகச் செல்வதில்லை, அங்கு அடங்கி இருப்பவரிடம்
உங்கள் தேவைகளைக் கேட்கச் செல்கிறீர்கள்.

தரீக்கா :
கேட்பதால் என்ன தவறு, டாக்டரிடம் சென்று காண்பிப்பது போலத்தான் இதுவும்.

தவ்ஹீது : டாக்டர் உயிரோடு உள்ளவர் அவரோ மரணித்தவர்.

தரீக்கா :
இறை நேசர்கள் உயிரோடு இருக்கிறார்கள் மரணிக்கவில்லை என்று இறைவன்
தன் திருமறையில் கூறியிருக்கின்றானே.

தவ்ஹீது :
அது நபிமார்களைப் பற்றிச் சொன்னது. மேலும் இறைவன் யாரை நேசிக்கிறான்
என்பது அவனுக்குத் தானே தெரியும்.

தரீக்கா :
அது இன்னொரு இறைநேசருக்கும் தெரியும், அவர் முலமாக எங்களுக்கும் தெரிய வரும்.

தவ்ஹீது :
அப்படிப்பட்ட இடைத்தரகர் எங்களுக்குத் தேவையில்லை. தன்னிடமே நேரடியாகக்
கேட்குமாறு இறைவன் சொல்கிறான்.

தரீக்கா :
தந்தையிடம் நேரடியாகக் கேட்க வெட்கப்பட்டோ அல்லது பயப்பட்டோ தாய்
மூலம் கேட்கும் பிள்ளையைப் போல் நாங்கள் அவ்லியா மூலம் கேட்கிறோம்.

தவ்ஹீது :
இந்த உதாரணமெல்லாம் இறைவனுக்கு ஒத்து வராது. அவ்லியாக்கள் எல்லாம்
இறைவனுக்கு மனைவியா. நீங்கள் பகிரங்கமாக இணை வைக்கிறீர்கள். பாவிகள்.
நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர் விளங்கிக் கொள்கிறாரா அதுவும் ஒரே
சமயத்தில் எல்லோருடைய தேவைகளையும் கேட்க முடிகிறதா. நிச்சயமாக நீங்கள்
இறைவனின் தன்மைகள் அவரிடமும் இருப்பதாகக் கருதுகிறீர்கள். உங்களின் இந்த
நிலை மக்கத்துக் காபிர்களின் நிலையை ஒத்திருக்கிறது. படைத்தது யார் என்று
கேட்டால் ‘அல்லாஹ்’ என்று சொன்னார்கள், பிறகு ஏன் இந்தச் சிலைகளை
வணங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ் ஒருவனால்
எல்லாவற்றையும் செய்ய முடியாது. அதனால்தான் அவைகளிடம்
எங்கள் தேவைகளைக் கேட்கிறோம் என்று சொன்னார்கள்.

தரீக்கா :
அடப்போங்கப்பா, வயதுக்கு வராதவனுக்கு தாம்பத்ய இன்பம் எப்படித் தெரியும்.
தர்காக்கள் பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு ஷைகிடம் (சூஃபி அறிஞர்)
முரீதாக (மாணவனாக) பைஅத் (ஒப்பந்தம்) செய்து கொண்டு பயிற்சி பெற்றால்தான்
தெரிய வரும். பைஅத் சம்பந்தமான ஹதீஸ்களைப் பாருங்கள். பைஅத் பெறாமல்
மோட்சம் கிடையாது என்பதை அறிவீர்கள்.

தவ்ஹீது : பைஅத்தாம், மோட்சமாம் போங்கய்யா நீங்களும் உங்க ....

இப்படிப் போகிறது இருவருக்குமிடையேயான சம்பாஷணைகள். இன்னும் லாஜிக்கலா
கிளைக் கேள்விகளும் கிளை பதில்களும் உண்டு. நாம் என்ன முடிவுக்கு வருவது :(.

-------------------------- * * * * * -------------------------

இணை வைத்தலில் பல வகைகள் உண்டு. சூரியன், சந்திரன், நட்சத்திரம் அடங்கிய
பிரபஞ்சங்களின் மீது நம்பிக்கை வைப்பது. உயிருள்ள மிருகங்கள், பறவைகள்,
மனிதர்கள், ஜின்கள் மீது நம்பிக்கை வைப்பது. உயிரற்றவர்களின் மீதும், கற்களின்
மீதும், நாடு, அரசாங்கம், இனம், குழு, எண்ணிக்கை, படை பலம், Technology,
கல்வி, அறிவு இன்னும் தன் மீதும் நம்பிக்கை வைப்பது அனைத்தும் இணை
வைத்தலில் கொண்டு போய்ச் சேர்க்கும். இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பெரிய ஷிர்க் மற்றும் சின்ன ஷிர்க். நபியவர்களுடைய ஒரு ஹதீஸின் கருத்தாவது,

‘எனது உம்மத்து (சமுதாயம்) சிலை வணக்கம் போன்ற பெரிய ஷிர்க்கில் விழுவார்கள்
என்பதை விடச் சிறிய ஷிர்க்கில் வீழ்ந்து கிடப்பார்களே என்றுதான் அஞ்சுகிறேன்’.
குர்ஆனிலும் இது பற்றி வந்திருக்கிறது.

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித்
தவிக்கும் சமயத்தில்) எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள்
அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?.
இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக்
காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே.

நபியே!) நீர் கூறும், உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய
கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும் அல்லது
உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை
அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள்
விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி)
விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (6: 63 - 65)

மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில்
வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை
(பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே)
இணை வைக்கின்றனர். (29:65)

யோசித்துப் பார்த்தால் நம்முடைய பேச்சிலும் செயலிலும் எத்தனை ஷிர்க்குகள் செய்து
வருகிறோம். மழை, காற்று, புயல், சுனாமிகளின் போதும், சம்பாத்தியம், வாழ்வாதாரம்,
பாதுகாப்பு, எதிர்காலம் பற்றிய பேச்சு,செயல்களின் போதும் நாம் எப்படி நடந்து
கொள்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

இறைவனின் கூற்று,"அடியான் என்னைப் பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே
நானும் நடந்து கொள்கிறேன்
" (பதிவைப் புரிந்து கொள்ள இதுவொன்றே போதும்).

-------------------------- * * * * * -------------------------

ஊரில் இருக்கும்போது ஒருமுறை எனது செல்ஃபோன் தொலைந்து விட்டது. எனது
உறவினர் பெண்மணி ஒருவர், எங்களூரில் வசித்து இறந்து போன ஒரு முதியவரின்
பெயரைச் சொல்லிக் கேட்டால் தொலைந்த பொருள் கிடைத்து விடும் என்று வேண்டிக்
கொண்டார். நானோ அந்த வம்பே வேண்டாம் என்று நபியவர்கள் காட்டித் தந்த இரண்டு
ரக்அத் தொழுது துஆ செய்தேன். செல்ஃபோன் கிடைத்தது. எனக்குத் தொழுகையின்,
துஆவின் மீது நம்பிக்கை பிறந்தது. அந்த உறவினருக்கும் அவரைச் சார்ந்த
பெண்களுக்கும் மறைந்த ‘அப்பாவின்’ மேல் நம்பிக்கை உயர்ந்தது. :)

ஒருமுறை மழை பெய்த போது நபியவர்கள், 'அல்லாஹ்வின் நாட்டத்தின் படி மழை
பொழிந்தது என்று சொன்னவர்கள் இறை நம்பிக்கையை அடைந்து கொண்டார்கள்,
மாறாக குறிப்பிட்ட நட்சத்திரத்தின் நகர்வின் காரணமாக மழை பொழிந்தது என்று
சொன்னவர்கள் இறை நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்' என்று சொன்னார்கள்.
ஆக உலகத்தில் நடைபெறும் அத்தனையும் இறைவனின் விதிப்படியே நடக்கின்றன.
இந்த நிகழ்வுகளிலிருந்து என்ன நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதைத்தான் நாம்
கவனிக்க வேண்டும். இது பரீட்சைக் கூடம், பலவிதமான சோதனைகள் இருக்கும்.

ஒருமுறை ஹஜரத் அலீ அவர்கள் போரிடுவதற்காகப் புறப்பட்டார்கள். இந்த நேரத்தில்
புறப்பட்டால் அலீ தோற்றுப் போவார், ஏனென்றால் நேரம் சரியில்லை என்று ஒரு குறி
சொல்லும் ஜோதிடன் சொன்ன விஷயம் அலீ(ரலி) அவர்களிடம் சொல்லப் பட்டது.
அதற்கவர்கள் ‘மஷ்வரா (ஆலோசனை) செய்து முடிவெடுத்த நேரத்தை மாற்ற
முடியாது, தோற்றாலும் பரவாயில்லை என்று கிளம்பினார்கள். அதாவது உலக
வெற்றி தேவையில்லை, மறுமையின் வெற்றிக்கான ஈமானைப் பாதுகாப்பதுதான்
முக்கியம் என்பது இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.

கஸ்ஸாலி என்றொரு அறிஞர் சொல்கிறார், சிலர் பாம்பைப் பிடித்து அதிலிருந்து
விஷத்தை எடுத்து விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிலர் பாம்பைப்
பிடிக்கும் வித்தையைக் கற்காமலே அதில் ஈடுபடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாய்
முடியும். அது போலவே உலக வாழ்வின் தத்துவம், தாத்பரியம், விஷம் அறியாது
அதனைச் சேகரிக்க நினைப்பவர்களின் ஈமான் ஆபத்தில் இருக்கிறது. உயிர் பெரிதா
ஈமான் பெரிதா, ஈமான் பெரிதென்று நினைப்பவர்கள் நிச்சயம் ஒவ்வொரு
ஸ்டெப்பையும் கவனமாகத்தான் வைப்பார்கள்
.

மரணச் சமயத்தில் ஈமானைப் பறிப்பதற்கு ஷைத்தானின் முயற்சி கடுமையாக
இருக்கும். தவ்ஹீதுவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு
தரீக்காவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு எனும்போது
பொதுமக்களின் நிலைமையை என்ன சொல்வது. காலமெல்லாம் ஈமானுக்காகப்
பாடுபட்டவர்களும் இறையச்சமுள்ள நல்லடியார்களும் அவனின் சூழ்ச்சியிலிருந்து
பாதுகாக்கப் படுவார்கள். ஆனால் பொதுமக்களோ ‘கண்டதே காட்சி கொண்டதே
கோலம்’, என்ற அறியாமையிலும் ‘நமக்கு வேண்டியது எங்கேர்ந்து கெடச்சா என்ன’
என்ற சுயநலத்திலும் உழன்று தம் உயிரினும் மேலான ஈமானை மரணத்திற்கு
முன்பே பறிகொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

-------------------------- * * * * * -------------------------

தரீக்காவாதிகள் ‘ஷைகு’ என்ற குருநாதரின் கண்காணிப்பில் இருப்பவர்கள். குர்ஆன்,
ஹதீஸை எப்படி அணுக வேண்டும் என்ற 'மெய்ஞ்ஞானம்' குருநாதரால் போதிக்கப்
படுபவர்கள். கஸ்ஸாலி என்ற அறிஞர் (சூஃபி) தரீக்காவாதியான பின்புதான் நல்ல
இஸ்லாமியத் தவ்ஹீது கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் படைத்தார் என்றும்
தரீக்காவில் இணைவதற்கு முன் தாம் எழுதிய புத்தகங்களெல்லாம் குப்பை என்று
உணர்ந்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவருடைய வரலாறு கூறுகிறது. அவருடைய‌
தவ்ஹீதுக் கருத்துக்கள் இன்றைய தவ்ஹீதுவாதிகளால் கூட புரிந்து கொள்ள முடியாத
அளவுக்கு நுணுக்கமானதாக இருக்கும். ஆனால் அக்காலத்தில் இருந்த ஷைகுகள்
போன்று இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஷைகிடம் பைஅத் செய்வது பாதுகாப்பாய்த் தெரிந்தாலும் தவறான ஷைகைத்
தேர்ந்தெடுத்து விட்டால் அதோ கதிதான். அதுபோல நாம் தேர்ந்தெடுத்த நல்லவர்
ஷைத்தானுக்கும் நல்லவராகி விட்டால் அவ்வளவுதான், ஓட்டு மொத்தக் கூட்டமும்
ஸீதா ஜஹன்னம்தான் (நேரா நரகம்தான் :). ஆதலால் தர்காவின் தாத்பர்யம் தெரிய வேண்டுமென்றால் யாராவது நல்ல ஷைகைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்
கிடைக்காத பட்சத்தில் தவ்ஹீதுவாதிகளாக இருங்கள். குறைந்த பட்சப் பாதுகாப்பாவது
கிடைக்கும். ஈமானியப் பாதுகாப்பு வளையமின்றி அங்கு செல்வது ஆபத்தானது.

தர்கா இஸ்லாத்தின் அம்சம் என்றால் அது இஸ்லாம் செல்லுமிடமெல்லாம்
அதுவும் செல்லவேண்டும். அனால் அது இணைவைப்பாளர்கள் வாழ்ந்த,வாழும்
இந்தியத் துணைக் கண்டத்தில்தான் அதிகம் காணப படுகின்றன. ஒருவேளை
இணை வைப்பாளர்களான மனிதன் மற்றும் ஜின்களால் வைக்கப்படும் மாந்திரீகத்
தொல்லைகளை முறியடிப்பதற்காகவே இவை அமைக்கப் பட்டதாக இருக்கலாம்.
அல்லது அல்லது பிஸினெஸ்ஸுக்காக உருவானதோ இல்லை இணைவைத்தலில் ஈடுபடுத்துவற்காகவே ஷைத்தான்களால் உருவாக்கப் பட்டதோ தெரியவில்லை.

அல்லது ஒரு இஸ்லாமிய அறிஞரை எவ்வாறு நாம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து
கொள்ள‌, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள அணுகுகின்றோமோ அது போலவே
ஜின்களும் அவர்களை அணுகிப் பாடங்கள் படிக்கின்றன, நாளடைவில் அவருக்குச்
சீடராகி மனமுவந்து சேவைகள் செய்கின்றன். அந்த அறிஞர் மரணித்த பின்னும்
அவரிடத்திலே தங்கி அங்கு வரும் மக்களுக்குச் சேவை செய்கின்றனவோ ..
இன்னும் எந்த‌ மூலிகையில் என்ன நிவாரணம் உண்டு என்பதை அறிந்து
வைத்துக் கொண்டு அங்கு வரும் புதிர் நோய்களைக் கொண்ட நோயாளிகளைக்
குணப்படுத்துகின்றனவோ .. அல்லது மறைந்த‌ இறைநேசர்கள் இறைவனின்
அனுமதியுடன் தமது சேவையை இன்னும் தொடர்கிறார்களோ என்றெல்லாம்
யோசிக்கத் தோன்றுகிறது. காரணம் ஆச்சர்யத்தக்க வகையில் மருத்துவ
ஆப்பரேஷன்கள் கனவிலும் மயக்க நிலையிலும் நடைபெறுவதாக அங்கு
சென்று சுகம் பெற்ற சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

இப்படி மர்மமாகவே இருக்கும் தர்காக்களைப் பற்றி என்னைப் போன்ற ரெண்டுங்
கெட்டான்களால் என்ன எழுதி இந்தச் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.
'இங்கு போவதால் என்ன தப்பு, ஏன் போகக் கூடாது' என்று சொல்பவர்கள்தாம் தர்கா
என்றால் என்ன அங்கு ஏன் போக வேண்டும் என்பது பற்றிச் சரியாக விளக்க முடியும்.
லாஜிக்கலா எதிர்கேள்விகள்தாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய சரியான
முறையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று சொல்வதில்லை. ஆதலால்
இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

தர்காவுக்குப் போகலாம் என்று சொல்லும் நீங்கள் 'எப்படிச் சென்றால் ஈமானுக்குக்
கேடு வராது என்று அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் சொல்லித் தர வேண்டிய பொறுப்பு'
உங்களுக்கு இருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்களோ இல்லையோ அவ்லியாக்களைப் பற்றி நன்றாகவே அறிந்து
நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

"பாவம் விட்டில் பூச்சிகளாய் அங்கு வந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது
இஸ்லாமியத் தேனீக்களின் இறைவன் பற்றிய நம்பிக்கை
"


வஸ்ஸலாம்

Wednesday, March 23, 2011

தர்கா - ஒரு குவிலென்ஸ் பார்வை – Part I

இது எந்த குரூப்பையும் சாராத ஒரு சாமானியனின் புரிதல்கள் :

------------------- 'அல்லாஹ்வே மிக அறிந்தவன்' -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை
அல்லாஹ்வைத்தவிர) என்ற கலிமா தய்யிபாவின், தலையாய மந்திரத்தின்,
பிரம்ம சூத்திரத்தின் நோக்கம் அல்லது உள் அர்த்தம் என்னவென்றால்,

‘யாரைக்கொண்டும் எதுவும் நடப்பதில்லை எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான்
நடக்கின்றன. அவனன்றி எதுவும் அசைவதில்லை. படைப்பினங்கள் படைத்தவனின்
உதவியின்றி எதுவும் செய்ய இயலாது. ஆனால் படைத்தவனோ படைப்பினங்களின்
உதவியின்றி எல்லாம் செய்யும் ஆற்றல் பெற்றவன். எனவே அவன்தான்
உண்மையில் வணங்கப்படுவதற்கு உரித்தானவன்’.

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.

இந்தத் தத்துவத்தை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். இவ்வுலகம்
சோதனைக்கூடம். இந்த நம்பிக்கையைக் கெடுப்பதற்கான சம்பவங்கள் அலைகள்
போல வாழ்க்கையில் வரும் போகும். ஆனாலும் இந்த நம்பிக்கையைக் கடைசி
வரையிலும் பாதுகாத்து அவனிடம் சென்று சேர்பவர்களுக்குப் பரிசாகச் சுவனம்
காத்திருக்கிறது. இதற்கு மாறாக நம்பிக்கையைப் பறிகொடுத்து, அவனுக்கு
இணைவைத்து, அவனது விருப்பத்திற்கு மாறாக வாழ்ந்து மறைந்தவர்களுக்குக்
கடும் தண்டனை காத்திருக்கிறது (முஸ்லிமாகப் பிறந்திருந்தாலும்).

சுப்யான் என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்கள்,
‘இறைத்தூதரே, தங்களுக்குப் பின் யாரிடமும் கேட்கத் தேவைப்படாத அளவு எனக்கு
ஒரு உபதேசம் செய்யுங்கள், நான் அதைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறேன் என்று நான்
கேட்டதற்கு நபியவர்கள் சொன்னார்கள்,

அல்லாஹ்தான் என் இறைவன் என்று சொல் பின் அதன் மீது நிலைத்திரு


-------------------------- * * * * * -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ்வை மனதார மொழிந்து இறைவனை ஏற்ற சில
நொடிகளில் மரணம் வரப்பெற்றவர்கள் அல்லது மனித சஞ்சாரமற்ற காட்டிலோ
தீவிலோ மலையிலோ வாழ்ந்து கலிமாவின் தத்துவப்படி மரணித்தவர்கள்
சுலபமாகச் சுவனம் சென்றடைவார்கள்.

ஆனால் மக்களோடு மக்களாய், குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்து வரும் இறை நம்பிக்கையாளர்களுக்குப் பலவிதமான சோதனைகள் காத்திருக்கின்றன.
(அதுபோல நன்மைகளும் முன்னவர்களை விட மிக அதிகமாகக் கிடைக்கும்)
வாழ்வில் அவர்கள் சந்திக்கும் தேவைகள்,பிரச்னைகள்,நோக்கங்கள் தீருவதற்குச்
செய்யப்படும் முயற்சிகளை வைத்து அவர்களின் நம்பிக்கை பரிசோதிக்கப்படுகிறது.
எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள், எதில் செலவழிக்கிறார்கள், நோய் போன்ற
பிரச்சனைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், பாதுகாப்புக்கு யாரை நாடுகிறார்கள்
போன்ற எல்லா விஷயங்களும் கண்காணிக்கப் படுகின்றன.

"நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்)
அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள்
எண்ணிக் கொண்டார்களா ? (அல்குர்ஆன் 29:2)

‘உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்
உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள்
எண்ணுகிறீர்களா’ (அல்குர்ஆன் 2:214)


-------------------------- * * * * * ----------------------------


PANADOL உபயோகித்தோம் தலைவலி பறந்து விட்டதென்றால் அதன் மீது
நம்பிக்கை வருவது இயல்பு. அடுத்தமுறை தலைவலி வந்தால் அனிச்சையாய்
அதனைத் தேடுகிறோம். குழந்தைக்குச் சுகம் கிடைத்து விட்டால் குழந்தை
மருத்துவரின் மீது நம்பிக்கையும் அன்பும் பிறக்கிறது. பிறருக்கும் அவரிடம்
செல்லுமாறு ஆலோசனை சொல்லவாரம்பித்து விடுவோம். இதுதான் மனித இயல்பு.

இஸ்லாம் என்ன சொல்கிறது, "நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக்
குணப்படுத்துகிறான்’ (அல்குர்ஆன் 26:80). ‘நோய் நிவாரணமின்றி எந்த நோயும்
இறங்குவது கிடையாது’ (ஹதீஸ்).

உடனே நமக்குள் ‘அப்ப நாம் ஏன் டாக்டரிடம் செல்ல வேண்டும்’ என்ற ஒரு
கேள்வி பிறக்கும். பதில், ‘டாக்டரிடம் போகத்தான் வேண்டும்’. காரணம்
இறைவன் இவ்வுலகத்தைக் காரண காரியங்களைக் கொண்டு படைத்துள்ளான்.

ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் அவனது சக்தி இருக்கிறது. மருத்துவரால்
அல்லது மருந்தால் குணம் ஏற்படுவது போல் தோன்றினாலும் இறைவன்தான்
குணப்படுத்தினான் என்று விளங்கி அவனுக்கு நன்றி செலுத்தும் போது ஈமான்
என்ற நம் நம்பிக்கை வலுப்பெறுகிறது, பாதுகாக்கப் படுகிறது.

படைக்கப் பட்டவை அனைத்தும் உடல் என்றால் அவற்றின் உயிர் அவனது
கட்டளை அல்லது சக்தியாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் நல்லதும் உண்டு
கெட்டதும் உண்டு. ஒரு பொருள் நமக்கு நன்மை தருவதும் தீமை தருவதும்
அவனது நாட்டப்படி அல்லது கட்டளைப் படி தான்.

நம்முடைய கடமை படைப்பினங்களை உபயோகிக்க வேண்டும் ஆனால் நம்பிக்கை
வைக்கக் கூடாது. மேலும் உபயோகிக்குமுன் அவனிடம் ஒரு வேண்டுதல் செய்வது
அவனுக்குப் பிடித்தமானது. கம்பெனி எம்.டி யிடம் வேலையாள் அனுமதி பெற்றுச்
செல்வது போல. ‘செருப்பின் வார் அருந்தாலும் அவனிடமே கேளுங்கள்
என்று நபியவர்கள் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு வினவுகிறான்.

“(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே
நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில்
உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக
(நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே
(அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(இப்பூமியில்) நீங்கள் விதைப்பதை கவனித்தீர்களா? அதனை நீங்கள்
முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால்
நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். "நிச்சயமாக நாம் கடன்
பட்டவர்களாகி விட்டோம். "மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற
முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா ? மேகத்திலிருந்து அதை
நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால்,
அதைக் (குடிக்க முடியாத அளவுக்குக்) கசப்பானதாக ஆக்கியிருப்போம்.
(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள்
உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை
நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்குப் பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு
அவனைத் துதிப்பீராக". அல்குர்ஆன் (56 : 58-74)


-------------------------- * * * * * ----------------------------


இவ்வுலகம் பரிட்சைக் கூடம். மனிதனுக்கும் ஜின்னிற்கும் தனது இஷ்டப்படி
நல்லதையோ கெட்டதையோ ‘தேர்ந்தெடுக்கும் அதிகாரம்’ (Deciding Authority)
தரப்பட்டுள்ளது. மற்றப் படைப்பினங்கள் அனைத்தும் மனிதனுக்குச் சேவை
செய்வதற்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளன.

இவ்வுலக வாழ்வில் நாம் வளர்த்துப் பாதுகாத்த நம்பிக்கையும் சேகரித்த
செயல்களும்தான் மறுவுலகில் பரிசீலிக்கப்படவிருக்கின்றன. இறை நம்பிக்கையில்
மிக உயர்ந்தது ‘ஒரு பிரேதத்தைப் போல் இறைவனிடம் தன்னை ஒப்படைப்பது,
தனக்கென்று எந்த விருப்போ அல்லது வெறுப்போ இல்லாமல் இறை விருப்பத்திற்குத்
தன்னைத் தயார்ப்படுத்துவது.

இப்ராஹீம் நபியவர்கள் நம்ரூத் என்ற அரசனால் நெருப்பில் போடப்பட்டபோது
அங்கு வருகை புரிந்த ஜிப்ரீல் எனும் வானவர் தலைவரின் உதவியையும் மறுத்து,
‘நான் நெருப்பில் இடப்படுவது இறைவனின் விருப்பமென்றால் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்’ என்ற பதிலால் திருப்தியுற்ற இறைவன் நெருப்பையே குளிரச்
செய்தான். ஆனாலும் இதைப் பின்பற்ற எல்லோராலும் முடியாது என்பதற்காகவே
முகம்மது நபி(ஸல்) அவர்கள் சாதாரண மக்களிலிருந்து சான்றோர்வரை பின்பற்ற
ஏதுவாகப் பலவிதமானத் தீர்வுகளைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு, நபியவர்களைக் கொல்வதற்கு மக்கத்துக் குறைஷிகள் சுமார்
நூறு பேர் ஆயுதம் தரித்து அவர் வீட்டு வாசலில் காத்திருக்கும் போது இறைவனின்
நேரடி உதவியுடன் எதிரிகளின் ஊடே நடந்து தப்பித்தார்கள். அதே சமயம் அபுபக்கர்
எனும் தோழருடன் செல்லும் போது சாதாரண மனிதர்களைப் போல் மலைப் பொதும்பில்
மூன்று நாட்கள் மறைந்திருந்து தப்பித்தார்கள். நபியவர்களின் சொல்லிலும் செயலிலும் சான்றோருக்கான படிப்பினையும் சாமானியனுக்கானப் படிப்பினையும் சேர்ந்தே
மறைந்திருக்கின்றன. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் நோக்கத்தை, சாராம்சத்தைச்
சான்றோர்கள்தாம் நன்கு அறிய முடியும். சிலருக்குக் கனவின் மூலமாகவும்
அறிவிக்கப் படுகிறது. சிலர் குர்ஆன் ஓதும்போது அதன் உள் அர்த்தத்தின் மூலம்
விளங்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சான்றோர்களுக்கு முன்பு ‘சஹாபாக்கள்’
(நபித் தோழர்கள்) என்று பெயர். அதற்குப் பின் வந்தவர்களுக்கு வலிமார்கள்
(இறை நேசர்கள்) என்று பெயர்.

இறைநேசம்,இறைகாதல் இவற்றிற்காகத் தம்மை, தம் விருப்பு வெறுப்புக்களைத்
தியாகம் செய்பவர்களுக்காகத்தான் இந்த அந்தஸ்து கிடைக்கும். ‘ரிஸ்க் எடுப்பவன்
ரஸ்க் சாப்பிடுவான்’. இவர்கள் நல்ல மீனவர்களைப் போன்றவர்கள். நமக்கு மீன்
சாப்பிட விருப்பம் என்றால் ஒன்று நாம் கடலுக்குச் செல்ல வேண்டும். அதற்குப்
போதிய பயிற்சி வேண்டும். நல்ல மீன்கள் எங்கே கிடைக்கும் என்று அறிவது
மட்டுமல்லாமல் எங்கே என்னென்ன ஆபத்துக்கள் உண்டு அவற்றைச் சமாளிப்பது
எப்படி என்றும் அறிந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் நேரமோ பொறுமையோ
இல்லையென்றால் நல்ல மீனவர்களை நாடுவோம். அவர்களிடமிருந்து சில சமயம்
முத்து பவளங்கள் கூடக் கிடைக்கும் வாய்ப்புண்டு.

இதைப் போன்றுதான் இஸ்லாத்திற்காகத் தம்முடைய உயிர்,பொருள்,ஆவி,நேரம்,
பணம் கொடுக்க இயலாதவர்களும், ஞானத்தைத் தேடி அலைபவர்களும் நாடுவது
இந்தச் சான்றோர்களைத்தாம். இன்று இது போன்ற அறிஞர்கள் கிடைப்பது
குதிரைக் கொம்பாக இருப்பதால் பழைய அறிஞர்களையே கொண்டாடி வருகின்றனர்
பெரும்போலோர். இவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் சில ‘தர்காவாகக்
கொண்டாடப் படுகின்றன’. சில போலி தர்காக்களும் காசு நோக்கத்தில் உருவாக்கப்
பட்டுள்ளன. இனி தர்கா என்றால் என்ன, அங்குப் போகலாமா வேண்டாமா,
அப்படிச் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தீமைகள் என்ன என்பதை
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரப் பதிவில் பார்ப்போம். :)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


டிஸ்கி : எனது இந்தப் புரிதலில் தவறு இருந்தால் அன்பர்கள் தயை கூர்ந்து திருத்தவும்

Monday, March 21, 2011

பலூன் மேடை

காற்று ஊதப்பட்ட‌
பலூன் மேடைகளில்
குதித்துச் சறுக்கி விளையாடும்
குழந்தைகளைக் கண்டு
மனம் ஏங்கியது
நமக்கும் இது போன்று
கிடைத்திருக்கவில்லையேயென

இதுவெல்லாம் இப்ப
எம்புள்ளைக்கு
எங்கே புரியப் போகிறது
சறுக்கப் பயந்து மேலேயே
நின்று கொண்டிருக்கிறான்

கொடுத்தக் காசும்
நேரமாய்க்
கரைந்து கொண்டிருக்கிறது

'டேய் சறுக்குடா'
=========================================

அடுத்தப் பதிவு சம்பந்தமான ஒரு அறிவிப்பு
-----------------------------------------------

தோழர் பார்வையாளன் 'தர்ஹாவைப் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை'
எழுதுமாறு என்னிடம் கேட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல நிறைய பேர் ஆவலுடன்
எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும்
அளவுக்கு நான் ஒரு நல்ல எழுத்தாளனோ அல்லது தட்டச்சனோ கிடையாது.

இதுவோ ஒரு குழப்பமான சப்ஜெக்ட். ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கும்
அறிஞர்கள் எழுதினால் தெளிவாக இருக்கும். இருந்தாலும் என் மீது பிரியம்
வைத்து எதிர்பார்ப்பதனால் இன்ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவாக அதை இட
நினைத்துள்ளேன். அநேகமாக இரண்டு பதிவுகளாக இட விருப்பம்.

முஸ்லிம் அன்பர்கள் தமது கருத்துக்களை அல்லது வாதத்தை
பின்னூட்டினால் 'தீர்ப்பு' சொல்ல வசதியாயிருக்கும் :))


வஸ்ஸலாம்.