Tuesday, September 28, 2010

ஜின் பள்ளத்தாக்கில் இன்'ஜின்' ஓடிய அதிசயம்

'வாதியே ஜின்' (பேய் பள்ளத்தாக்கு) என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம்.
இது நம்ம‌ மக்கள்ஸ் வைத்த பெயர். சவூதி அரசாங்கம் வைத்த பெயரோ 'குலைல்'.
(குலை நடுக்கம் மறுவியதோ ? :)

மதீனாவிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில், மலைகளால் சூழப்பட்ட பகுதி. அந்தப்
பகுதியின் அதிசயம் என்னவென்றால் காரை நிறுத்தி 'நியூட்ரலில்' வைத்தால், அது
தானாக வேகமெடுத்து 120 கி.மீ. வேகத்தில் சுமார் பத்து கி.மீ. தூரம் வரை ஓடி
வேகம் படிப்படியாகக் குறைந்து பின் நின்று விடுகிறது. இத்தனைக்கும் அது
செங்குத்தான பகுதியும் அல்ல, சமதள ரோடுதான். அந்த இடத்தில் ஒரு
'ஆச்சர்யக்குறி' போர்டு வைக்கப் பட்டிருக்கிறது. அங்கேயுள்ள 'ஜின்கள்'
காரைத் தள்ளிவிடுவதாக நம்பப் படுகிறது.

உஹதில் லுஹர் தொழுதுவிட்டு அங்கு பயணமானோம். எங்களுக்கு அந்த இடம்
எதுவென்று சரியாகத் தெரியாததால் ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி 'சோதனை'
செய்து பார்த்தோம். ம்ஹூம். அது ரமலான் என்பதால் நான் சொன்னேன்,

'ஒரு வேளை ஜின்களெல்லாம் நோன்பு பிடித்து விட்டுத் தூங்குதோ என்னவோ?' :)

இப்படியாகச் செல்கையில் மெதுவாக வந்த ஒரு காரைக் கண்டோம், அவர்களும்
எங்களைப் போல் அங்கு வந்த 'ஆர்வக் கோளாறுகள்' என்பதை அறிந்து விசாரித்த
போது 'ஆச்சர்யக்குறி' போர்டிலிருந்து ஆரம்பிக்குமாறு சொன்னார்கள். அங்கே
சென்று வண்டியை 'நியூட்ரலில்' வைத்தபின் ஸ்டியரிங்கைப் பலமாகப் பிடித்துக்
கொண்டார் டிரைவிங் நண்பர். ஆஹா, மெதுவாக நகர ஆரம்பித்த வண்டி இப்போ
'ரெக்கை கட்டிப் பறந்தது'. நானும் ஜின்கள் தெரிகின்றனவா என்று பார்த்தேன்.
ம்ஹூம். வண்டியும் ஒரே சீரான வேகத்தில் சென்று ஒரு சிறிய அணை இருக்கும்
பகுதியில் வந்து நின்று விட்டது.

இப்படி வரும் ஒவ்வொரு வண்டியையும் 'வேலமெனக்கெட்டுத்' தள்ளிவிடுமா எந்த
ஜின்னும், ஒரு வேளை காந்தப் புலமாக இருக்குமோ என்னவோ. ஆனாலும் இது ஒரு
ஜாலி அனுபவம்தான். நம்ம ஊராக இருந்திருந்தால் ஒரு கோயிலோ அல்லது தர்காவோ
முளைத்து உண்டியல் வைத்து காசு பார்த்திருப்பார்கள்.ஆனால் சவூதியோ இது போன்ற
மூட நம்பிக்கைகளை ஒழிக்க நினைப்பதால், இப்பகுதியில் எந்த அறிவிப்பையும்
வைக்கவில்லை, ஆச்சர்யக்குறி பலகையைத் தவிர. அப்படிப்பட்ட ஒரு பகுதி இருப்பதே
அங்குள்ள நிறைய பேருக்குத் தெரியாது.

திரும்பி வந்து கதைக்கையில் ஒரு நண்பர் தாம் ஜின்னைப் பார்த்துள்ளதாகச் சொன்னார்.
அவர் ஒரு பெரிய வாகனத்தின் (டிரைலர்) டிரைவர். கம்பெனி பொருட்களை எடுத்துக்
கொண்டு 'தபூக்' மற்றும் 'யான்பு' போன்ற ஊர்களுக்கு அடிக்கடி சென்று வருபவர். அப்படி
ஒருநாள் நள்ளிரவில் திரும்பும் வழியில் தூக்கம் மிகைத்து ரோட்டோரம் வண்டியை
நிறுத்திவிட்டுத் தூங்கும் போது கதவு தட்டப் பட்டதை உணர்ந்து எழுந்து டார்ச் அடித்துப்
பார்த்து விட்டு யாருமில்லாததால் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்த போது வண்டி பலமாகக்
குலுங்கியது. அதிர்ந்து எழுந்த போது, வண்டியை பல பேர் சேர்ந்து உலுப்பியது போல்
இருந்தததால் வெளியே எட்டிப் பா......ர்த்தார். ஒன்றும் தெரியாததால் பயந்து போய்
இடத்தைக் காலி செய்து அடுத்து வந்த ஊரில் வண்டியை நிறுத்தி கதையைச் சொன்ன
போது ஆங்குள்ளோர் 'ஆம், அது ஜின்னோட வேலைதான், இது போல் பல பேருக்கு நேர்ந்திருக்கிறது' என்றனர். (என்னங்க, பார்த்தார்னு சொன்னீங்க, ஆனா அவர் பார்க்கவே இல்லையேன்னு கேக்க நெனக்கிறது தெரியுது, வெயிட் வெயிட், ஒரு சோடா ப்ளீஸ்).

இப்படித்தான் ஒருநாள் பயணத்தின் வழியில் மாலை மங்கும் நேரத்தில், சூரிய
அஸ்மனத்திற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன் 'கைபர்' எனும் இடத்தில்
வண்டியை நிறுத்தி அங்குள்ள கோட்டையைப் பார்த்து வரும் எண்ணத்தில் கீழிறங்கினார்.
நபி(ஸல்) காலத்தில் யூதர்கள் கைபரில்தான் வசித்தார்கள். நபியுடன் செய்த
உடன்படிக்கையை மீறியதால் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து யூதர்கள் அந்த
ஊரைக் காலிசெய்து விட்டு வேறிடம் சென்று விட்டாலும் வேறு யாரும் அங்கு சென்று
குடியேறாமல் பாழாகிப் போன இடம் அது. அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்லும்
பயணிகளுக்காக ஒரு மஸ்ஜித் ஹஜரத் அலீ (ரலி) பெயரில் கட்டப்பட்டது. அதுவும்
காடு மண்டிப் போய் சிதிலமடைந்து காணப் படுகிறது. அங்கு சென்ற நண்பர்,
கோட்டைக்குள் சென்றால் இரவாகி விடும் என்றெண்ணி பள்ளிக்குள் மட்டும் சென்று
வரும் எண்ணத்தில் உள்ளே நுழைந்து சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினார்.

அப்போது யாரோ இருப்பது போல் உணர்ந்து அனிச்சையாக ஸலாம் சொல்ல, பதிலேதும் கிடைக்காத‌தால் பார்வையை ஆளிருந்த பகுதியை நோக்கிச் செலுத்தும் போதுதான் கவனித்திருக்கிறார், அந்த ஆள் தரையில் இல்லை ... மாறாக ஒரு தூணின் உச்சியில்
சம்மணமிட்டு அமர்ந்து இவரை நோக்கி, சிவந்த பெரிய தமது கண்களை விரித்து கோபமாகப்
பார்த்த உருவத்தைக் கண்டவுடன்,முதலில் இவர் 'ஜின்'னென்று உணரவில்லை .. மாறாக,
திருடனாயிருக்கும் என்ற எண்ணமும் அதோடு தனது பாக்கெட்டில் கம்பெனியின் பணம் பதினைந்தாயிரம் ரியால் இருப்பதும் நினைவுக்கு வர நைசாகப் பள்ளியை விட்டு வெளியில்
வந்து ஓட்டம் பிடித்து மூச்சிரைக்க, வண்டிக்குள் ஏறி ஸ்டார்ட் செய்த பின் தான் போன உயிர்
திரும்ப வந்த‌தாம். வந்து கதையைச் சொல்லிக் கதைக்கும் போதுதான் 'திருடர்களெல்லாம்
கிடையாது, அங்கே ஜின்கள் உண்டென்ற விஷயம்' தெரிய வந்ததாம். இது நடந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டன. மீண்டும் நண்பர்களுடன் அங்கே சென்று பார்த்த போது, அங்கே பள்ளிக்குள்ளேயும் செல்லமுடியாதவாறு முற்செடிகளுடன் கூடிய பாதை அடைபட்டிருக்கிறது.

**************************************************************************************

'ஹயாத்துஸ் ஸ‌ஹாபா'வில் ஒரு சம்பவம் வருகிறது. இஸ்லாத்திற்கு முன் அரபியர்கள்
பயணம் செல்லும் வழியில் ஏதும் மலை சார்ந்த பள்ளத்தாக்கில் இரவு தங்குமாறு
நேரிட்டால், இவ்வாறு சத்தமாக அறிவித்து விட்டுத்தான் தங்குவார்களாம். 'இப்
பள்ளத்தாக்கின் தலைவருக்கு எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள். நாங்கள் எங்களின் பயணத்தினூடே இங்கு இரவைக் கழிக்க நேரிட்டு விட்டது. சிரமத்திற்கு மன்னிக்கவும்,
காலையில் இடத்தைக் காலி செய்து விடுவோம். அது வரை எங்களுக்கு எந்தத்
தொல்லையும் நேர விடாமல் பார்த்துக் கொள்ளவும்'. இப்படி அறிவிக்கா விட்டால்
அங்குள்ள ஜின்கள் தொல்லை கொடுக்குமாம். இப்படித்தான் ஒருநாள் மனிதர்களின் குழுத்
தலைவர் அறிவிக்கையில், இருட்டிலிருந்து சப்தம் வந்தது,

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ

"மனித‌, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து
செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால்,
(வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.(அல்குர்ஆன் 55:33)

என்ற குர்ஆன் வசனத்தைச் செவியுற்றனர். மேலும் தொடர்ந்த அச் சப்தம் 'நீங்கள் கவலைப்
படத் தேவையில்லை, இனி எங்களுடைய தொல்லைகள் இருக்காது. நாங்களெல்லாம் முஸ்லிம்களாகி விட்டோம், நீங்களும் மதீனா சென்று முகம்மத்(ஸல்) அவர்களின் கரம்
பற்றி இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுங்கள்'.

**************************************************************************************

ஓ! ஜின்களிலும் மத வேறுபாடுகள் இருக்கா என்று சிலர் யோசிப்பது தெரிகிறது. ஆம்.
அவைகளும் நம்மைப் போல்தான். ஆனால் மனிதனை விட்டு அகன்று மலை,காடு,தீவு
என்று வசிப்பவை. நாளை அவைகளுக்கும் கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம் எல்லாம் இருக்கின்றன. மனிதர்களும் ஜின்களும் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும். அதைப் பார்க்கும் இறைவனை நிராகரித்தோர், நாமும் மண்ணாகிப்
போகக் கூடாதா என்று கதறுவார்கள்.

"நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் -
மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - செயல்களை - அந்நாளில்
கண்டு கொள்வான் - மேலும் நிராகரித்தவன் 'அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப்
போயிருக்க வேண்டுமே!' என்று (பிரலாபித்துக்) கூறுவான்." (அல்குர்ஆன் 78:40)

வஸ்ஸலாம்.

Thursday, September 23, 2010

கூடவே ஒரு ஜோக்கும்

(Bald header No angry please)

இந்த ஜோக்கை சற்றுமுன்தான் எனது மேலாளர் சொன்னார்.
புதிதாகக் கேட்டதால் நிறைய சிரித்தேன்.

(உம்ராவிற்குப் பின் உண்டான என் மொட்டைத் தலையைப்
பார்த்த பின் இந்த ஜோக் ஞாபகம் வந்திருக்கலாம்) .If you have bald head at your front portion
then 'you are thinking too much' ;

If you have bald head at your back portion
then 'you are knowledgeable' ;

If you have both,
then 'you always think that you are genius'
:))


**********************************************************


தமிழில் சிரிக்க நினைப்பவர்களுக்காக,
-----------------------------------

தலையில் முன் வழுக்கை விழுந்திருந்தால் 'சிந்திப்பவர்' என்று அர்த்தமாம்.

வழுக்கை பின் தலையில் விழுந்திருந்தால் 'அறிஞர்' என்று அர்த்தமாம்.

அப்போ ரெண்டு பக்கமும் வழுக்கையாய் இருந்தால்

'தான் ஒரு பெரிய மேதாவிங்கற நெனப்புல' இருக்குறவராம் :)டிஸ்கி :

யாருக்காவது சிரிப்பு வரவில்லையென்றால் இந்த ஜோக்கை அவரவர்
த‌ம் மேலாளர் வாய் வழி கேட்டால் ஒருவேளை சிரிப்பு வரக்கூடும் :)

Wednesday, September 22, 2010

இடையில் சுவாசிக்க சில கவிதைகள்

நேசிக்க நேசிக்க
நெகிழ்ந்து போகும் சொந்தம்
நீர்த்துப் போகும் உள்ளம்

யோசிக்க யோசிக்க‌
மெல்லத் திறக்கும் வழிகள்
மெய் சுமக்கும் பழிகள்

யாசிக்க யாசிக்க‌
வீங்கிப் போகும் வரவு
வீழ்ந்து போகும் உறவு

வாசிக்க வாசிக்க‌
வளம‌டையும் அறிவு
வலுவிழக்கும் கண்கள்

சுவாசிக்க சுவாசிக்க‌
சுத்தமாகும் உடம்பு
பித்தமாகும் சூழல்

எப்பூடி ..... :)


'நேசிக்க நேசிக்க வலுவடையும் உறவு வலுவிழக்கும் உள்ளம்'
என்று 2007ல் ஒரு குழுமத்தில் நான் எழுதிய டிவிட் இன்று
கவிதையாக நீட்சி பெற்றது - அப்பவே Twitt ருக்கேனாக்கும் :‍)

Tuesday, September 21, 2010

பார்டர் தாண்டிய பல்லாடு

(சென்ற உம்ரா பதிவின் தொடர்ச்சி)

பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றின் கருத்து 'இந்த உம்மத்தின்
செல்வந்தர்கள் புகழுக்காகவும் பெருமைக்காகவும், ஏழைகள் பிச்சை எடுப்பதற்கும்
மத்திய வர்க்கத்தினர் வியாபாரம் செய்யும் நோக்கத்திலும் ஹஜ்/உம்ரா செய்வார்கள்.
(இம்மூன்று நோக்கங்களை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக,ஆமீன்).
அம்மூன்று தரப்பாரையும் காண நேரிட்டது ; அவர்களின் பேச்சும் நடத்தையும்
மேற்கண்ட நோக்கங்களைப் பறைசாற்றியது.

பார்டர் தாண்டியதும் மற்றுமொரு சாராரைக் காண நேரிட்டது. ஓமானிலிருந்து வந்த
பேமானிகள். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். டொயோட்டா Lexus ல் வந்து 'உம்ரா வந்த
வழியில் எல்லாம் தொலைந்து விட்டதாகக் கூறி' பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
காருக்குள் மனைவி, குழந்தைகளை வைத்துக் கொண்டு கேட்கும் போது யாருக்குத்தான்
கொடுக்க மனம் வராது. பார்டர் தாண்டியவுடன் வரும் பெட்ரோல் பம்புகள்தாம் இவர்களின்
வசூல் வேட்டைக் களம். இது போன்று இரண்டு மூன்று கார்களைக் கண்டவுடன் நாங்கள்
கார் நம்பர்களைக் குறிக்கலானோம், போலிஸில் புகார் செய்யும் நோக்கத்தில். அச்சம‌யம்
ஒரு கார் ரிவர்ஸில் வந்தது, நம்பரைக் குறிக்கும் நண்பரை லேசாக இடித்துச் செல்லும்
வண்ணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பாவம் பரிதாபத்திற்குரியவர்கள்,
பட்டதாரிகளாக்க வேண்டிய தம் மக்களுக்கு பிச்சைக்காரர்களாவதற்கான பயிற்சி
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நபியவர்கள் சத்தியமிட்டு சொன்ன விஷயங்களில் இதுவும் ஒன்று,
'யாசிப்பவர்களின் வறுமை ஒரு போதும் நீங்காது'.

மக்கா மதீனாவில் பிச்சை எடுக்கும் கறுப்பின மக்கள் சோமாலியா போன்ற ஆப்ரிக்க
நாடுகளிலிருந்து வந்தவர்களாயிருக்கும்; ஆண்டாண்டு காலமாக சவூதியில் வாழும்
ஹபஷிகள் கிடையாதென்பது என் எண்ணம். காரணம் இரண்டு ஹரம்களிலும் நோன்பு
திறக்க வைக்கப் போட்டி போட்டுக் கொண்டு லட்சக்கணக்கான மக்களுக்கும் பேரித்தம்பழம்,
தண்ணீர்,டீ,காபி,பன்,தயிர்,மோர் வைத்து உபசரிப்பவர்களாக ஹபஷிகளைக் கண்டோம்.

ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. மதீனா பள்ளியில் நோன்பு திறக்கச் செல்லும் போது அங்குள்ள சிறுவர்களும் பெரியவர்களும் தம்முடைய இடத்தில் நோன்பு திறக்குமாறு நம் கையைப்
பிடித்து இழுப்பார்கள். ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த ஒருவர் இன்று தம்மிடத்திலே நோன்பு
திறக்க வேண்டும் என்றும் வேறு யார் இழுத்தாலும் சென்று விட வேண்டாமென்றும்
சொன்னார். நானும் சரியென்று செருப்புக்களை பிளாஸ்டிக் பைக்குள் வைத்தவாறு
(வெளியே வைக்கப்படும் செருப்புக்கள் கிளீனிங் போன்றவைகளால் குப்பைக் கூடையில்
சென்று விடும்) பள்ளிக்குள் செல்லும் போது ஒருவர் என்னை அழைத்தார். நானும்
புன்னகைத்தவாறே 'இல்லை இன்று இவரிடம்' என்று சைகை செய்த வண்ணம் முன்
சென்றேன். இப்போது என் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தார், நானோ அதைத் தட்டி
விட்டு முன்னேறியவாறு திரும்பிப் பார்த்தேன். இப்போது அவர் கோபமாக வந்து என்
கையில் உள்ள பையைப் பிடுங்கி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விட்டு,
'ஙொப்புரானே!, இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?' என்கிற தொனியில் புன்னகைத்துத்
திரும்பத் தந்து விட்டார். நானும் 'அடடா, செக்யூரிட்டின்னு தெரியாமப் போச்சேன்னு அசடு
வழிந்து உள்ளே சென்றேன் (செக்யூரிட்டிகளும் நார்மல் டிரஸ்ஸில்தான் இருப்பார்கள்).

பார்டர் தாண்டி இஸ்லாத்திற்குள் நுழைவிக்கப்படும் யஹூதிகளின் சூழ்ச்சிகளில்
ஒன்றையும் எடுத்துச் சொல்ல மனம் நாடுகிறது. அதுதான் இஸ்லாமிக் டிஸைன்களில்
அவர்கள் புகுத்திய உருவ வெளிப்பாடு. அன்றைய முஸ்லிம் பேரரசின் தலைநகரான
துருக்கியில் புகுந்து விட்ட இந்த தந்திர நரிகள் கார்பெட்,முஸல்லா மற்றும் கட்டிடக்
கலையில் உருவம் வரும் வண்ணமாக இஸ்லாமிய டிஸைனை அமைத்தார்கள்.
(இன்றும் ஆப்கானிஸ்தானில் மிஞ்சியிருக்கும் யஹூதிகளின் தொழில் கார்பெட்).
துருக்கியர்கள் புனரமைத்த ஹரம்களின் தூண்களையும் தொழுவதற்காக நாம் நிற்கும் கார்பெட்டுகளையும் கூர்ந்து கவனித்தால் உருவங்கள் தெரிய வரும். இவ்வளவு ஏன்,
கஃபாவைப் போர்த்தியிருக்கும் கருப்புத்துணியில் கதவின் அருகாமையில் உள்ள தங்க
டிஸைனைப் பாருங்கள். கண்களைப் போல் இரண்டு வட்டங்கள், மூக்கின் வடிவில்
திரை லேசாக விலகியிருக்க,அத‌ன் அடியில் இரண்டு வளையங்கள். மீசையின் இரு
மருங்கிலும் கருப்பு நிறப் பின்னணி, பின் செவ்வக வாய் அளவுக்குத் திறந்த பகுதியில்
மூடிய கதவும் தெரிகிறது. (ஓவரா திங்க் பண்றேனோ !?)

ஆனாலும் அல்ஹம்துலில்லாஹ், சமீபத்தில் கட்டப்பட்ட ஸபா மர்வாவை ஒட்டிய
சுவர்களிலும் அதில் பொறுத்தப்பட்டுள்ள சன்னல்களிலும் உருவமற்ற, அழகான
இஸ்லாமிய டிசைன்கள், மக்கள் உஷாராகி விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
மேலும் தவாபின் எல்லையைக் கூட்ட, கஃபாவை ஒட்டிய் துருக்கியர்கள் கட்டிய
பகுதியும் விரைவில் இடிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியும் அறியக் கிடைத்தது.

(இ.அ. தொடரும்)

Wednesday, September 15, 2010

ஹரமைனும் இரண்டாயிரம் கி.மீ தரைவழி காருந்து மார்க்கப் பயணமும்

வாழ்வில் முதன்முறையாக ரமலானில் உம்ரா செய்யும் பாக்கியம்
கிடைத்தது. ரமலானில் உம்ரா செய்வது பெருமானாருடன் ஹஜ்
செய்வதற்க்குச் சமம் என்று சொன்னதுதான் போதும் மக்கள்
லட்சக்கணக்கில் குவிந்து விடுகிறார்கள் ஒவ்வொரு ரமலானிலும்.

நாங்கள் நால்வர் டொயோட்டா கேம்ரியில் முதலில் மதீனா முனவ்வரா
பின் மக்கா முகர்ரமா சென்று உம்ரா நிறைவேற்றி திரும்பும் வழியில்
ஜித்தா,ரியாத்,தமாம் சென்று உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து
விட்டுத் திரும்பியது வாழ்வின் உன்னதத் தருணங்களில் ஒன்றாகும்.

* * * * * * * * * * * * * * * *

ரமலான் உம்ரா அதீத திருப்தி தரக் காரணம் தராவீஹும் கடைசிப்பத்தின்
கியாமுல் லைல் மற்றும் அழுகையுடன் அமைந்த கூட்டு துஆக்களும்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நம் செவிகளுக்கு அமுதூட்டி வரும்
ஷேக் ஷ்ரைமும் ஷேக் சுதேஸும் கியாமுல்லைலில் விருந்து
படைத்தார்கள். தராவீஹில் ஷேக் மாஹிரும் இன்னொருவரும் மனதுக்கு
இதமாக கிராஅத் மழை பொழிந்தார்கள். இவர்களை மட்டும் அறிந்த எனக்கு
இம்முறை புதியதாக ஒருவரைக் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்,
மதீனாவின் ஷேக் ஸலாஹ் அல்புதைர். வாவ், எல்லோரையும் தூக்கிச்
சாப்பிட்டு விட்டார் மனுஷன். ஷ்ரைமுடைய Grand குரலும் சுதேஸுடைய
நளினமும் மாஹிருடைய மென்மையும் கலந்த குரல், மாத்திரமல்ல கல்
நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் துஆ செய்யக்கூடியவர். மதீனாவில்
இவருடைய துஆவின் போது அழுத அளவுக்கு மக்காவில் சுதேஸின்
துஆவின் போது அழவில்லை. (ஒரு வேளை முதலில் மக்கா சென்று பின்
மதீனா சென்றிருந்தால் vice versa வாக இருந்திருக்குமோ ?)

* * * * * * * * * * * * * * * *

பெண்களின் வருகை 50 சதவீதமா அல்லது ஆண்களை விட அதிகமோ
என்று எண்ணும் அளவுக்கு அதிகமாக வந்திருந்தனர். அது மட்டுமல்ல‌
ஹஜருல் அஸ்வதின் அருகில் செல்ல முண்டியடித்தவர்களில் 15 சதவீதம்
பெண்கள். அஸருக்குப் பின், நோன்பு திறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு
முன் எனது நண்பர் சொன்னார் 'கஃபாவைப் பார்த்துக் கொண்டிருப்பதும்
நன்மை தரக் கூடிய வணக்கமாகும், வாருங்கள் அதனருகில் சென்று
அமர்ந்து கொள்ளலாம்.' என்று.

ஆனால் கடுமையான கூட்டமும் அதனைக் கட்டுப்படுத்தும் காவலர்களின்
கெடுபிடிகளாலும் எங்களால் கஃபாவைக் காணும் வகையில் நிற்கவோ
உட்காரவோ முடியாமல் பின்னேறி நாங்கள் அமர்ந்த இடம் பெண்கள்
அதிகமாக இருந்த இடம். நண்பர் சொன்னார் 'என்னங்க இது, நன்மையை
நாடிச் சென்றோம், விதி பாவத்தின் பக்கம் இழுத்து வந்து விட்டதே.
அதுவும் நோன்பு திறக்கும் நேரம் பார்த்து.
திடீரென எனக்குள் ஒரு ஞானப் பொறி தட்ட :) , நான் சொன்னேன்.

'பாய், அதுவோ ஹரம்; அதனைப் பார்த்தால் நன்மை ,
இதுவோ ஹரீம் (பெண்) ; இவர்களைப் பார்க்காமல் இருந்தால் நன்மை.
எனவே இரண்டிலும் நன்மைகள்தாம், கவலைப்படாதீர்கள் :)

(பெண்களின் எதிரில் இருந்து கொண்டு அவர்களைப் பார்க்காமல் இருப்பதும்
நமக்குள் கட்டுப்பாடு வருவதற்கான பயிற்சிதான்).

ஹரம்(புனித பகுதி),ஹராம்/மஹ்ரம்(தடுக்கப்பட்ட),ஹரீம்/ஹுருமா(பெண்)
இவையெல்லாம் ஒரே எழுத்திலிருந்து வந்தவையென நினைக்கிறேன்.
(அரபி பண்டிதரின் ஒப்புதலையோ/மறுதலித்தலையோ எதிர் பார்க்கிறேன்)

பெண்களை இஸ்லாம் எந்தளவு கண்ணியப்படுத்த அல்லது பாதுகாக்க
நினைக்கிறது என்பதை மேற்கண்ட‌ சொற்களைச் சிந்திப்போருக்குத் தெரியவரும்.

* * * * * * * * * * * * * * * *

இங்கு இரக்கப்பட வேண்டியவர்கள் ஹரமிலும்,அதனைச் சுற்றியுள்ள்
ஹோட்டல்களிலும் கிளீனிங் வேலை பார்ப்பவர்கள். பாவம் மக்காவில்
வேலை மதீனாவில் வேலை என்று ஆர்வமாக வந்தவர்களுக்கு இங்குள்ள
வேலைப் பளுவில் பெண்டு நிமிர்ந்து விடுகிறது, அதுவும் வேலைப் பணிகள்
குறைக்கப் பட வேண்டிய ரமலான் மாதத்தில். மேலும் பெண்களை
அதிகமாகப் பார்த்து மனம் கெடுவதும் பயணிகளில் சிலர் இரக்கப் பட்டுக்
கொடுக்கும் டிப்ஸ்/ஸதகா வாங்கிப் பழகி, அதை எல்லோரிடமும்
எதிர்பார்த்து, பின் வாய் விட்டே கேட்கும் அளவுக்கு மாறிப் போகிறார்கள்.
புனிதப் பகுதியைக் கழுவிப் புண்ணியம் தேட வந்து மனம் குப்பையாய்
போனதை அறியாமல் வேண்டா வெறுப்பாக வேலை செய்து வரும்
இவர்களை நினைத்து இரக்கப் படாமல் என்ன செய்வது.

உச்சமாக‌, பெருநாள் இரவில் சுத்தம் செய்கிறோம் பேர்வழி என்று
ஆங்காங்கு மாட்டி வைக்க‌ப்பட்ட பைகளையும் பொதிகளையும் பிளாஸ்டிக்
கீஸ்களையும் பிய்த்தெடுத்து குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியே
சில மீட்டர் தூரம் கொண்டு சென்று ஒரு மூலையிலோ போட்டு விட்டதால்,
பயணிகள் தமது கடவுச்சீட்டு,பர்ஸ்,செல்போன்,புதிய/பழைய துணிமணிகள்,
உறவினர்களுக்காக வாங்கி வைத்திருந்த்த பொருட்கள் அனைத்தும் நிறைந்த
அல்லது இவற்றில் ஏதோ வைத்திருந்த பை காணாது தவித்து பின்
எடுத்தவர்களைச் சபித்து ..., வேண்டாம்பா,
இந்த சாபத்தை வாங்குவதை விட சம்பாதிக்காமலே இருந்து விடலாம்.

(தொடரும்)