Saturday, April 17, 2021

அல் குர்ஆன்

 "வன்முறையற்ற சமூகம் மலர்ந்து

நன்முறையில் வாழ்வதற்கு வழிகாட்ட வந்த‌

நான்மறைகள் தந்த வல்ல நாயனின் இறுதி

வான்மறைதான் இந்தத் திருக்குர்ஆன்"


"சட்ட விளக்கங்களும் 

திட்ட நுணுக்கங்களும் நிறைந்த 

பெட்டகம் எனினும் இது ஒரு

சட்டப் புத்தகமல்ல‌"


"இது போன்ற ஒரு அத்தியாயம்

இல்லையில்லை ஒரு வாக்கியம் 

அமைக்குமாறு அரபிக் கவிஞர்களுக்கு

அறைகூவல் விடுத்த அல்குர்ஆன் 

ஒரு கவிதைப் புத்தகமல்ல‌"


"வானம் பூமி அண்ட சராசரங்கள் மற்றும்

நிற்கும் பறக்கும் நடக்கும் ஊர்ந்தும் 

நீந்தியும் செல்லும் அனைத்து உயிர்களின்

படைப்பு பற்றி பறை சாற்றும் இது

விஞ்ஞானப் புத்தகமல்ல‌"


"முன்பே வாழ்ந்து மறைந்த‌

முன்னோர்களின் முடிவையும்

தூதர்களின் பணியையும் 

அவர்களின் துணிவையும்

சொல்லும் இம் மறை ஒரு

வரலாற்றுப் புத்தகமுமல்ல‌"


"பைத்தியத்திற்கும் வைத்தியம்

செய்யும் வார்த்தைகள் கொண்ட 

நோயையும் பேயையும் ஓட விரட்டும்

அற்புதங்கள் நிறைந்த அல்குர்ஆன்

மருத்துவப் புத்தகமுமல்ல‌"


"மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும்

புனிதப் படுத்திய நல்ல வம்சங்களாக 

இம்மையிலும் மறுமையிலும்

செம்மையாக வாழ்ந்து ஜெயிக்க‌

நன்மைகள் பெருக்கி திண்மைகள் போக்கி

நல்வாழ்வு நாம் காண நாயன் தந்த‌

திருமறைதான் அருள்மறை அல் குர்ஆன்"


"ஓதுக என்று உரத்துச் சொல்லி

ஒழுக்கம் போதிக்கும் அல்குர்ஆன்

மாக்களை மக்களாக்க 

மாட்டிலிருந்து ஆரம்பித்து 

மனிதர்களில் முடிகின்றன அம்

மாமறையின் அத்தியாயங்கள்"


"வஹீயின் பளுவை ..

மலைகூட‌த் தாங்காது 

என்கின்ற குர்ஆனை 

மனிதத் தலை வழியே 

நெஞ்சத்தில் இறக்கி வைத்த 

இறைவன் பரிசுத்தமானவன்"


0 comments:

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)