Wednesday, April 27, 2011

எங்கே நான் சென்று தேடுவேன்

முன் பகுதியின் தொடர்ச்சி ....

அர‌ச‌ன் எங்களை மூன்று நாட்கள் தங்க வைத்து உபசரித்தான். ஒரு நாள் இரவில்
ஆளனுப்பி எங்களை அவனிடம் அழைத்து வரச் செய்தான்.....


----------------------------------------------------------------------------

அருகில் எங்களை அமர வைத்துச் சிறிது நேரம் அளவளாவிய பின் ஆளனுப்பி ஒரு
பெட்டியைக் கொண்டு வருமாறு செய்தான். தங்க வேலைப்பாடுடன் கூடிய‌
அப்பெட்டியைத் திறந்தான். அதற்குள் பல அடுக்குகள் காணப்பட்டன. ஒவ்வொரு
அடுக்கிலும் கருப்பு மற்றும் வெள்ளைத்துணிகளால் சுற்றப்பட்ட சதுர வடிவமான‌
பொருட்கள் காணப்பட்டன. முதல் அடுக்கிலிருந்து எடுத்து கருப்பு நிற சில்க் துணியால் போர்த்தப்பட்டதைப் பிரித்த போது செந்நிறமான ஓவியம் தெரிந்தது. மிக உயரமான,
பெரிய‌ கண்கள், தாடியில்லாத‌ நீண்ட கழுத்து கொண்ட மிக அழகான ஒரு
மனிதனின் உருவம் இருந்தது. அரசன் கேட்டான் 'இது யார் தெரியுமா'.

நாங்கள் தெரியவில்லை என்று சொன்னதும், 'இவர்தான் ஆதம்'. நாங்கள் வியந்து
பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னொன்றைப் பிரித்து 'இது யார் தெரியுமா' என்று
கேட்க நாங்கள் தெரியவில்லை என்று தலையாட்டினோம். இவர்தான் நோவா, நீங்கள்
சொல்லும் நூஹ் நபி. பெரிய தலையுடன் சுருண்ட முடிகளுடன், அடர்ந்த தாடியுடன்,
சிவந்த கண்களுடன் வெண்மை நிறத்துடன் காணப்பட்டார்.

அடுத்ததை எடுத்து 'இது யார் தெரியுதா' என்று கேட்க நாங்கள் இல்லை என்று
சொன்னோம். மிக வெண்மையான தோற்றம், நீண்ட கன்னங்கள், அழகான கண்கள்,
பரந்த நெற்றி, வெள்ளை தாடி, புன்னகை முகத்துடன் காணப்பட்ட‌ உருவத்தை
'இவர்தான் ஆப்ரஹாம்' என்றான்.

அடுத்ததைப் பிரித்து 'இவர் யார் தெரியுமா' என்று எங்களிடம் நீட்டியபோது
அதிர்ச்சியும் பரவசமும் அடைந்து உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. எங்களால்
கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுதவாறே சொன்னோம்,

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இது எங்களின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்'. இதைக் கேட்டதும் அரசன் உடனே எழுந்து நின்றான்.
சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் அமர்ந்து கொண்டு கேட்டான்.

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர் நீங்கள் சொல்லும் அதே முஹம்மதுதானா' ?

'சந்தேகமில்லை அவர்களேதான், அவர்களை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது' .

ஹெர்குலிஸ் நீண்ட நேரம் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


பிறகு மீண்டும் ஒவ்வொன்றாய் எடுத்துப் பிரித்து 'இது யார் தெரியுமா' என்று
கேட்க எங்களுக்கு யாரையும் தெரிந்திருக்க வில்லை. இவர்தான் மோசஸ் மற்றும்
அவரது சகோதரர் ஆரோன் பின் இம்ரான், இவர்தான் லூத், இவர்தான் இஸ்ஸாக்,
இவர்தான் ஜேக்கோப், இவர்தான் இஸ்மவேல், உங்கள் நபியின் பாட்டனார், இவர்தான்
டேவிட், இவர்தான் சாலமன் என்று சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் இவர்தான்
மர்யமின் மகன் ஜீசஸ் என்று முடித்த பின் எங்களை நோக்கி

'கடைசியில்தான் முஹம்மது நபியின் புகைப்படத்தைக் காட்டியிருக்க வேண்டும்,
ஆனால் வரிசைக் கிரமத்தை வைத்து நீங்கள் கடைசிப் படத்தை முகம்மதின் படம்
என்று கணித்துச் சொல்வீர்களோ என்று ஐயப்பட்டதால்தான் இடையிலேயே காட்டினேன்'.

நாங்கள் கேட்டோம், 'எங்கிருந்து தங்களுக்கு இப்படங்கள் கிடைத்தன' ?

'ஆதம் இறைவனிடம் தனக்குப் பிறகு வரும் இறைத்தூதர்களைக் காண்பித்துத்
த‌ருமாறு ஆவலுடன் கெஞ்சிக் கேட்டதால் இறைவன் அவருக்கு இவ் ஓவியங்களை
அனுப்பி வைத்தான். சூரியன் அஸ்தமாகும் பகுதியில் மறைந்து கிடந்த ஆதமுடையப்
பொக்கிஷப் பேழையில் இருந்து இப் பெட்டியை துல்கர்னைன் கொண்டு வந்து
தானியேலிடம் ஒப்படைத்தார்.'

பிறகு ஹெர்குலிஸ் தொடர்ந்து,
'கவனியுங்கள், இறைவன் மீது சத்தியமாக, இந்த என்னுடைய நாட்டை விட்டு
வெளியேறி, (இஸ்லாத்தை ஏற்று), உங்களில் மிக மிகத் தாழ்ந்த ஒருவ‌னின்
அடிமையாக என்னுடைய மீதிக் காலத்தைக் கழிக்க வேண்டாமா என்றுதான்
நானும் ஆசைப்படுகிறேன்' என்று பெருமூச்செறிந்தான்.

எங்களுக்கு நிறையப் பரிசுப் பொருட்களைத் தந்து மிக்க மரியாதையுடன் அனுப்பி
வைத்தான். நாங்கள் மதீனா திரும்பி வந்து நடந்ததையெல்லாம் அமீருல் முஃமினீன்
ஹஜரத் அபூபக்கரிடம் எடுத்துச் சொன்னபோது அவர்களும் அழுதார்கள் சுற்றியிருந்தவர்கள்
அனைவரும் அழுதனர். பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்,

(இந்த) ஹெர்குலிஸ் மிக நல்ல‌வன், இவன் விஷயத்தில் அல்லாஹ் நலவை
நாடினால் இவன் (இஸ்லாத்தை) அடைந்து கொள்வான்'.

மேலும் சொன்னார்கள்,

'ரசூலுல்லாஹ் நமக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள், கிறிஸ்தவர்களும்,
யூதர்களும், நபியவர்களின் அடையாளத்தை அவர்களுக்குக் கொடுக்கப்
பட்டவைகளிலிருந்து தெரிந்து கொள்வார்கள்'.
சம்பவத்தை அறிவிப்பவர் : ஹஜரத் 'ஹிஷாம் பின் ஆஸ் அமவி (ரலி)' அவர்கள்.


டிஸ்கி: அல்லாஹ் மன்னிக்க வேண்டும். இது ஹதீஸின் நேரடித் தமிழாக்கம்
இல்லை, ஞாபகத்தில் உள்ளதை எழுதியுள்ளேன். ஹதீஸில் ஒவ்வொரு நபியைப்
பற்றியும் வர்ணனை உண்டு. அல்லாஹ்வே மிக அறிந்தவன். வஸ்ஸலாம்.

Wednesday, April 20, 2011

அதிர வைத்த ஆன்மீகச் சொல்

நானும் இன்னொருவரும் பைஸான்டியப் பேரரசின் மன்னனான ஹிர்கலிடம்
அனுப்பப் பட்டோம். ப‌ய‌ண‌த்தினூடே சிரியாவின் ட‌மாஸ்க‌ஸில் உள்ள
'குத்தாஹ்'வின் ஆளுந‌ர் ஜ‌ப‌லா பின் அய்ஹாம் க‌ஸ்ஸானியை முத‌லில்
ச‌ந்தித்தோம். அவ‌ன் அரியாச‌ன‌த்தில் அம‌ர்ந்த‌வாறே சில‌ரை எங்க‌ளிட‌ம்
பேசுவ‌த‌ற்கு அனுப்பி வைத்தான். நாங்க‌ள் சொன்னோம்,

'இறைவ‌ன் மீது ஆணையாக‌, அர‌ச‌னிட‌ம் பேசுவ‌த‌ற்காக ம‌ட்டுமே அனுப்ப‌ப்
ப‌ட்டுள்ளோம். அவனிடம் அனும‌தித்தால் வ‌ந்த‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிப் பேசுவோம்.
அனும‌தி இல்லையென்றால் வ‌ந்த‌ வ‌ழி திரும்பி விடுவோம். இத‌னைய‌றிந்த‌ ஜ‌ப‌லா
த‌ன்னிட‌ம் வ‌ருவ‌த‌ற்கு அனும‌தி அளித்தான். அவ‌ன் அருகில் சென்ற‌ எங்க‌ளைப்
பார்த்து, 'ம்,சொல்லுங்க‌ள் என்ன‌ சொல்ல‌ப் போகிறீர்க‌ள்' என்றான்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜபலாவை அழைத்தேன். க‌றுப்பு நிற ஆடை
அணிந்திருந்த ஜபலா, 'நான் ஏன் கறுப்பு நிற ஆடை அணிந்திருக்கிறேன் என்று
தெரியுமா. முஸ்லிம்களாகிய உங்களையெல்லாம் இந்த சிரியாவை விட்டு
விரட்டியடிக்காதவரை க‌ருப்பு நிற ஆடையைத் துறக்கப் போவதில்லை என்று
சபதம் செய்திருக்கிறேன்' என்றான்.

அதற்கு நாங்கள் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த நகரம் மட்டுமல்ல‌ முழு நாடும்
எங்களுக்குக் கீழ் வரப் போகிறது இன்ஷா அல்லாஹ். இதைப் பற்றிய முன் அறிவிப்பை
எங்கள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்பே அறிவித்திருக்கிறார்கள். இத‌னைக் கேட்ட ஜபலா,

'நீங்களல்ல அம்மக்கள், எம் நாட்டை எவர்கள் கைப்பற்றுவார்கள் என்றால் அவர்கள்
பகலிலே நோன்பு வைத்து இரவிலே வணக்கம் புரிவார்கள். சரி உங்களின் வணக்க
முறைகளைச் சொல்லுங்கள்' என்றவனிடம் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளின்
முறைகளைச் சொல்லச் சொல்ல அவன் முகம் கறுத்துப் போனது.

பிறகு எங்களை மன்னனிடம் அனுப்பி வைத்தான். மன்னனை நெருங்கிய பொழுது
வாயிற்காவலர்கள் 'நீங்கள் ஒட்டகத்தில் செல்ல அனுமதி இல்லை. நாங்கள் தரும்
துருக்கிக் குதிரையில்தான் உள்ளே செல்ல வேண்டும்' என்றதற்கு 'அல்லாஹ்வின்
மீது ஆணையாக, நாங்கள் வந்த ஒட்டகத்தில்தாம் வருவோம்' என்றோம். இச் செய்தி
மன்னனுக்குத் தெரிந்தவுடன் ஒட்டகத்துடன் வர அனுமதி கிடைத்தது.

சபையோர் புடை சூழ மன்னன் செந்நிறமாய்க் காட்சியளித்தான். அங்கிருந்தோர்
அனைவரின் ஆடைகள்,அங்கிகள்,விரிப்புக்கள் என எல்லாமே சிவந்த நிறத்தில்
இருந்தன. நாங்கள் அவனருகில் சென்று அமர்ந்தபோது சிரித்தவாறே சொன்னான்,
'உங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் முகமனை எனக்குச் சொல்வதால் ஒன்றும்
பாதகமில்லையே'. நாங்கள் சொன்னோம், 'உம்முடைய முகமன் எங்களுக்கோ
எங்களது முகமன் உங்களுக்கோ ஒத்து வராது'.

'அப்படியாயின், உங்களின் முகமன் தான் என்ன ?'

'அஸ்ஸலாமு அலைக்கும் (உன் மீது ஸலாம் உண்டாகட்டும்)'

'உங்களின் அரசனுக்கு என்ன முகமன் கூறுவீர்கள்'

'அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முகமன் தான்'

'சரி, உங்களுடைய உயர்ந்த வார்த்தை (கலிமா) எது ?' என்று கேட்க

நாங்கள் உரத்த குரலில் 'லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று
சொன்னதுதான் தாமதம் அரண்மனையின் மேல் பகுதி ஒன்று இடிந்து விழுந்தது.

அதனைப் பார்த்த அதிர்ச்சியுடன் அரசன் கேட்டான் 'இந்த வார்த்தையை நீங்கள்
ஒவ்வொரு முறை கூறும்போதும் ஏதாவது இடிந்து விழுகிறதா'

'இல்லை இது போல் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை, உம்முடைய விஷயத்தில்தான்
இவ்வாறு நடைபெறக் கண்டோம். அதற்கு மன்னன், 'அடடா, ஒவ்வொறு முறையும்
இந்தக் கலிமாவை நீங்கள் மொழியும் போது உங்கள் அனைவரின் தலையிலும் ஏதாவது
விழுந்து நீங்களெல்லோரும் அழிந்து போக வேண்டாமா என்று ஆசைப் படுகிறேன்' என்று
சொன்னதன் பின் ஏதோ யோசித்தவனாக,

'சரி, உங்களின் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என்று
கேட்டான். நாங்களும் அவை பற்றி விளக்கிச் சொன்னோம். அவன் எங்களை மூன்று
நாட்கள் தங்க வைத்து உபசரித்தான். ஒரு நாள் இரவில் ஆளனுப்பி எங்களை அவனிடம்
அழைத்து வரச் செய்தான்.....

(இன்ஷா அல்லாஹ் தொடரும் )

டிஸ்கி :
நபியவர்களின் முன்னறிவிப்புக்களில் ஒன்று, தஜ்ஜால் (anti christ) வருவதற்கு முன்
முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இக் கலிமாவை மொழிவார்கள். இதன் காரணத்தால் யூதர்கள் ஒளிந்திருக்கும் கோட்டையின் சுவர் இடிந்து தரை மட்டமாகும்.

Wednesday, April 13, 2011

(சிறந்த) தலைமை தாராயோ தலைவா !

இறைவா !


நல்லதை

நல்லவர்களை

நடுநிலை நாயகர்களை

ந‌ற்சிறந்த ஆளுமைகளை

நட்புறவு பாராட்டுபவர்களை

நாட்டை வளப்படுத்துபவர்களை

நானிலம் சிறக்க நாடாளுபவர்களை

நாட்டு மக்களைக் கூறு போடாதவர்களை


இன்று எங்களுக்காகத் தெரிந்தெடுத்துத் தருவாயாக ! ஆமீன் !