Monday, June 07, 2010

வேற்றுமையில் ஒற்றுமை

எந்தவொரு தன்மையும் அல்லது செயலும், 'Butterfly Effect' போல
அல்லது கல்லெறியப்பட்ட குளத்தில் அதிர்வலைகள் ஏற்படுவது போல
வாழ்க்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஓரு நல்ல
செயல் இன்னொரு நல்ல செயலுடன் இணைக்கப் பட்டுள்ளது. ஒரு தீய வினை
இன்னொரு தீய வினையுடன் தொடர்பில் இருக்கிறது. எதைத் தொடுகிறோமோ
அதனுடன் தொடர்புள்ள இன்னொன்றும் பின் தொடர்கிறது.

எல்லா விஷயங்களிலும் இரண்டு தன்மைதான் இருக்கும். ஒன்று நல்லது
இன்னொன்று கெட்டது. நன்மையான செயல்களின் முடிவு நன்மையாகவே
அமையும். தீய செயல்களின் முடிவு, அச் செயல்களின் தன்மைக்கேற்ப‌
தீமையாகவோ கொடூர ஆபத்தாகவோ முடியும்.


* * * * *

நன்மை பயப்பதில் 'ஒற்றுமை'க்குப் பெரிய பங்கு உண்டு.

நாம் அனைவரும் 'ஒரு தாய் மக்கள் மட்டுமல்ல' ஒரே தந்தையின்
பிள்ளைகள் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. நமக்குள் பிரிவினை
ஏற்பட்டது, பின்வரும்

1. இடம் (நாடு/மாநிலம்/ஊர்/வீடு)
2. இனம் (நிறம்/மதம்/சாதி)
3. மொழி
4. அறிவு (கொள்கை)
5. அந்தஸ்து (பணம்/பட்டம்/பதவி)

போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் இருக்கலாம்.

இடம்,நிறம் போன்றவை பிறப்பால் ஏற்பட்டவை.இதில் நமது திறமை
என்று எதுவும் கிடையாது, இதில் பெருமை காண்பவன் முட்டாள்
எனும் போது 'வெறி' கொள்பவனை என்ன சொல்வது.

'இனவெறி' பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது 'தன் இனத்தின்
மீது பாசம் கொள்வது இனவெறி ஆகாது, ஆனால் தவறு செய்தவன் தன்
இனத்தைச் சார்ந்தவன் என்பதால் அவனைத் தண்டிக்காது, துணை போவது
இனவெறியாகும் என்று சொன்னார்கள்.

மொழி,அறிவு,அந்தஸ்து போன்றவற்றை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாம்.

இவையன்றி மனிதனை இணைக்கக் கூடிய பாசமும் நேசமும் கூட அவன்
தனித்தனி குழுவாகப் பிரியக் காரணமாகின்றன.இன்னும் எத்தனையோ
சின்னச் சின்ன விஷயங்களும் பெரிய சண்டை சச்சரவுகளுக்குக்
காரணமாகின்றன, சிறு பொறி அல்லது சிறு உரசல்தான் பெரும்
நெருப்புக்குக் காரணமாகின்றன. அதனைக் காட்டுத்தீ போல பரவத்
துணை போகின்றன 'வசவு'களும்,'வதந்தி'களும்.

ஒற்றுமை, மிகக் கடினமான ஒன்றுதான். ஆனால் அதன் பலன் மற்றும்
பலம் நாம் அறிந்ததை விட அறியாதது அதிகம்.எல்லா நல்ல
விஷயங்களும் சுலபமாகக் கிடைப்பதில்லையே, சில சமயம் முயன்று
திருவினையானதாலும் பல சமயம் போராடியும் கிடைக்கப் பெறுகின்றன.

ஒற்றுமை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் துவங்க வேண்டும். கண‌வன் மனைவி
ஒற்றுமை வீட்டிற்கும் ஏன் நாட்டிற்கும் மிக இன்றியமையாதது.அனைத்து
உறவுகளுக்கும் அடிப்படையானது. எனவேதான் நபியவர்கள் பகர்ந்தார்கள்,
'ஷைத்தான்கள் தாம் செய்த அல்லது சாதித்த விஷயங்களை தினமும்
தலைவனிடம் சென்று எடுத்துரைத்து 'சபாஷ்' அல்லது ஆலோசனை
பெறுவார்கள். அவற்றில் தலைவன் மிக மகிழ்வது 'கண‌வன்
மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிளவின் செய்தியறிந்துதான்.

ஒற்றுமை ஏற்பட எல்லாம் ஒரே 'நிறத்தவராகவோ' அல்லது
'நிறமற்றவராகவோ' மாற வேண்டிய அவசியமில்லை. மாறாக‌,

'மனிதரில் இத்தனை நிறங்களா'வென்று ஆச்சர்யமும் ஆதங்கமும் படாமல்

'வேற்றுமையிலும் ஒற்றுமை' காண முயலவேண்டும்.

'ஜன கண மன அதி நாயக ஜயஹே ..'

அதற்காக‌

மனம் பண்படுத்தப் பட வேண்டும், பக்குவம் பெற வேண்டும்.

அதற்கான விடா முயற்சியும் விட்டுக் கொடுத்தலும் அவசியம்.* * * * *


டிஸ்கி மனம் : ம்ஹூம்.

" சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "

புத்திமதியும் பஞ்ச் டயலாக்கும் ரொம்ப லேசுங்ணா ;
அதன்படி நடக்குற கஷ்டம் எனக்குல்ல தெரியும் :-)


* * * * *

3 comments:

Riyas said...

நல்லா எழுதிரிக்கிங்க.. தொடருங்கள் நண்பரே

ஹுஸைனம்மா said...

//அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்//

:-)))))))

அரபுத்தமிழன் said...

நன்றி ரியாஸ், தொடர்வதற்கு.

நன்றி ஹுசைனம்மா, தெய்வீக சிரிப்புக்கு :-)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)