Monday, January 31, 2011

வாக்காளப் பெருமக்களே


நாடாளும் அரசினைத் தெரிவு செய்யவிருக்கும் நண்பர்களே !

அனைவரின் கோரிக்கைகளுக்கும் அரசியல் வியாதிகள் செவிமெடுக்கும்
பொன்னான சமயமிது.

இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இனி ஐந்தாண்டுகளுக்கு யாருக்கும்
சூடோ சொரணையோ இருக்காது.

நல்ல நல்ல கோரிக்கைகளைத் தயார் செய்யுங்கள்.

தயவு செய்து எந்தக் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்காதீர்.

நல்லவர்களையும் மனித நேயம் கொண்டவர்களையும் அடையாளம் காணுங்கள்.

அறிஞர்களையும் இளைஞர்களையும் தேர்தலில் நிறுத்துங்கள்.

கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்கள் நாட்டுக்கோ மக்களுக்கோ நல்லது செய்யும்
தகுதியில்லையெனில் நல்லவர்களை சுயேச்சையாக நிறுத்தி ஜெயிக்க வையுங்கள்.

சுயேச்சைகள் அதிகமாக ஜெயித்து அவர்களும் எந்தக் கட்சிக்கும் விலை போகாமல்
ஒரு புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்கலாம்.

மக்கள் எப்படியோ அப்படித்தான் அரசு அமையும்.

ஓட்டுப் போடுவதற்கு முன் இதெல்லாம் யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு
கட்சியை ஆதரித்தால், பின்னால் புலம்ப வேண்டி வரும்.

ஆதலால் நம் ஆண்மை மதிக்கப் பட‌ நாட்டின் இறையாண்மை காக்கப்பட‌,

ஓட்டு வாங்க வரும் வேட்பாளர்களிடம் கோரிக்கைகளைத் திறமையாய்த் திணியுங்கள்.
'ஒண்ணு ஏதாவது செய்யட்டும் இல்லண்ணா ஙொய்யால செத்து மடியட்டும்' :)

வாழ்க ஜனகனமன நாயகம்.

Wednesday, January 26, 2011

ஐம்பதிலும் ஆசை வரும் ஆனால் அதில் அந்தரங்கம் கிடையாது

இரவு நேரத் தொழுகையிலும் அன்றைய நிச்சயத்தின் நீட்சியாய் அடைப்புக்
குறிகளுடன் கூடிய‌ ஜன்னல் காட்சி தெரிந்தாலும் பிறகு அது தொடர்வதில்லை.
எனினும் இந்நேரம் அங்கு யாரும் இருக்கக் கூடுமோ என்ற தவிப்பும் இல்லாமலில்லை.

நல்ல வேளை கனவில் வருவதில்லை. அடுத்த நாள் அதிகாலைத் தொழுகைக்குப்
பின் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் சென்று இருப்பிடத்தில்
அமரும்போதுதான் மீண்டும் அந்த ஜன்னலின் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.

எனது இருப்பிடத்திலிருந்து பார்க்கும் போது வானத்தின் வர்ணம் சிதறடிக்கப்பட்ட வண்ணம்
ஜன்னலைச் சுற்றி வெளிர் நீல நிறம் படிந்திருக்கும். மற்றொரு அலுவலக சகாவின்
இருப்பிடத்திலிருந்து நோக்கினால் மரங்களடர்ந்த பச்சை வண்ணமாய்த் திகழும் அவ்வீடு.

கணிணித் திரையை நோக்கி அமர்ந்திருந்தாலும் இடது பக்கமாக இருக்கும் ஜன்னல்
திரையை நோக்கி அடிக்கடி திருப்புவதால் ஒரு பக்கமாக கழுத்தில் வலி தெரிகிறது.
என்றாலும் காட்சியின் சுவாரசியத்தில் இந்த வலி ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

முன்பெல்லாம் ஒரே ஒரு தலைதான் தெரியும், ஆர்வமாகப் பேச்சு கொடுக்க
ஆரம்பித்த பின் இன்று ஒன்றுக்கு மேல் தெரிய ஆரம்பித்து விட்டன. அதுவும்
காலையில் வந்ததும் வராததுமாக முக்காடிட்ட நான்கைந்து தலைகள் தெரியும் போது
அதுவும் எனக்காகவே காத்திருக்கும் போது எப்படி இருக்கும்.

முதலில் உதற ஆரம்பித்தது, இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
நாளடைவில் எல்லோரிடமும் பேசிப் பழகிவிட்டேன். மேலும் அவர்கள்
தனியாக என்னிடம் பேசினாலும் ஒரே நேரத்தில் பேசினாலும் தனித் தனியாகத்தான்
பதில் சொல்கிறேன். ஒட்டு மொத்தமாக எல்லோரிடமும் ஒரே நேரத்தில் சொல்லக் கூடிய,
அதுவும் எல்லோருக்கும் பொருத்தமான வாக்கியத்தைக் கண்டு பிடித்து விட்டால் போதும்
'மவனே எத்தனை பேர் வந்தாலும் சமாளித்து விடலாம்'.

'உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்' என்பது போன்ற பொதுவான
ஒரே பதில் சொல்லலாம்தான். ஆனால் அதில் நம்பகத்தன்மை குறைந்து நாளை
ஒருவருமே தென்படாமல் போகும் அபாயம் உண்டு.

எனவே என்ன செய்வதென்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.
இதில் அனுபவம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஆலோசனை
சொல்லுமாறு இந்த ஐம்பதாவது பதிவில் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்முறையாக ஒரே ஒரு தலை தென்பட்ட நேரத்தில் புகைப்படம் ஒன்று எடுத்து
வைத்திருந்தேன். அதை இப்போது உங்களின் பார்வைக்குத் தருகிறேன். அவ்வீட்டின்
பெயரும் அதில் பொறிக்கப் பட்டிருக்கும். பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

'அது நம்ம ஆளு'.
.


எல்லோருக்கும் இது போன்று வீடுகள் இருக்கலாம். ஆனால் அவைகளைப்
பார்க்காமலேயே தவிர்த்து விடலாம். ஆனால் அவ்வீட்டினருகில் ஒரு ப்ளாட்
வாங்கி வைத்திருப்பதால்தான் அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கிறது.

.
.
.
.
.
வீட்டுப் பெயருக்கு ஒரு க்ளூ கொடுக்கிறேன். 'மயிலோடு ஜீவிதம்'.
.
.
.
.
.
.
.
இந்த வாரத்திலிருந்து இன்னொரு ஜன்னலும் திறக்க ஆரம்பித்து விட்டது.
அதன் விவரத்தை டிஸ்கியில் சொல்கிறேன். நமக்கே இந்த கதின்னா,
ஒன்றுக்கு மேல் 'வைத்திருப்பவர்கள்' கதி என்னவாயிருக்கும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

சரி போனாப் போவுது இதுக்கு மேல உங்களைச் சோதிக்க மனமில்லை.
இதோ பார்த்துக் கொள்ளுங்கள். நான் ரசிக்கும் அவ்வீட்டையும்,முக்காடு
போர்த்திய பின்னூட்ட அழகியையும். ஆள் எப்பூடி :-)

டிஸ்கி 1 :
இரண்டாவது ஜன்னல் வேறு யாருமல்ல, கூகிள் ரீடர்தான். நாம் பின்பற்றும் பதிவர்கள்
பதிவிட்ட உடனேயே மெயிலைப் போல் அடைப்புக் குறிகளுக்குள் காட்டுகின்றது.

டிஸ்கி 2 :
இடது பக்க ஜன்னல்னு ஏன் சொன்னீர்கள் என்று கேட்க நினைப்பவர்களுக்கு,

ஆம், எங்கள் எல்லோருக்கும் ஒரு கணினியும் இரண்டு திரைகளும் தரப்பட்டுள்ளன‌.
ஒன்று அஃபீஷியல் ஒர்க்குக்காக இன்னொன்று பெர்சனுலுக்காக.

டிஸ்கி 3.
பதிவு எழுதுவதால் விளையும் நன்மை, தீமைகள் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும்.

...... சந்திப்போம் அடுத்தடுத்த பதிவுகளில். வஸ்ஸலாம்.

Monday, January 17, 2011

ஃபோன் ரிங்ங்... டேக் குக்கி சிங் 'ஙே'....

பண்பலை Cool 94.7 ல் தினமும் காலை 8.30 மணிக்கு இந்த லொள்ளு நடக்கும்.

அலுவலகம் போகும் வழியில் வாகனத்தின் வானொலியில் கேட்கும் தொலை பேசி
கலாய்த்தல் நிகழ்ச்சி. எட்டரைக்கு முன்பே அலுவலகத்தை எட்டியிருந்தாலும்
இந் நிகழ்ச்சியைக் கேட்டு விட்டுச் சிரித்த முகமும் சீதேவித்தனமுமாகத்தான்
தினமும் அலுவலகம் செல்வது வழக்கம்.

'ஹலோ, ஈஸ் திஸ் ஃபலான் கம்பெனி, டூ யு ஹேவ் வெப்ஸைட்,
ஐ வான்ட் டு விஸிட் யுவர் வெப்ஸைட், வேர் ஈஸ் இட், இன் துபாய் ஆர் அபுதாபி?'

'ஹலோ, ஈஸ் திஸ் ஜிம் கிளாஸ், ஐ வான்ட் டு டூ ஜிம், யுவர் கம்பெனி
இன் துபாய் பட் ஐ ஆம் இன் அபுதாபி, வில் யு ஸென்ட் மீ யுவர் கார்'

'ஹலோ, ஈஸ் திஸ் டான்ஸ் கிளாஸ், ஐ வான்ட் டு லேர்ன் டான்ஸ்,
வில் யூ டீச் மி 'டூயட்'.


போன்று எதிர்முனையை 'திகிலடித்து', ஃபோன் கட் செய்யப்படும் வரை
கலாய்த்தல் தொடரும்.

இதைச் செய்பவரின் பெயர் 'பிரின்ஸ்' என்றே நினைக்கிறேன்.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசித் திணறடித்து விடுவார்.

சட்டவிதிகள் பின்பற்றப் படும் இந்த நாட்டிலேயே இப்படிக் கலாய்க்கிறார்
என்றால் மற்ற நாடுகளிலெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் என்ன
பாடுபடுத்துவார்களோ தெரியாது.

ஒருநாள் இப்படித்தான், டான்ஸ் கிளாஸென்று நினைக்கிறேன், போன் பேசிய
அந்தப் பெண் கோபமாகக் கட் செய்து விட்டார். அன்று மாலை ரேடியோவை
ஆன் செய்தால் 'டொய்ங்க்' தான்.

'ஆஹா, அந்தப் பெண் தான் புகார் கொடுத்திருக்க வேண்டும். அதனால்தான்
கூல் பண்பலையைக் குலைத்து விட்டது அரசாங்கம் என்று நினைத்தேன்.

ஆனால் நான்காம் நாள் நன்றாகவே வேலை செய்தது மட்டுமல்ல அந்தப்
ப்ரோகிராமும் வழக்கம் போலவே நடந்தது. பிறகு ஏன் மூன்று நாட்களாக
எடுக்கவில்லையே. ஒருவேளை மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்து விட்டு
மீண்டும் அனுமதி கொடுத்திருப்பார்களோ. (பிறகு ஏன் தமிழ் பண்பலையான‌
'சக்தி', இழந்த சக்தியை மீண்டும் பெறவில்லை என்ற யோசனையும் எழாமல்
இல்லை). பின் விசாரித்துப் பார்த்ததில் ராஸ் அல் கைமாவின் மன்னர்
இறந்தற்கான மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு என்று தெரிந்தது.

ஒரு வழியாக எல்லாக் கம்பெனிகளையும் கலாய்த்து முடித்தாயிற்று,
இப்போ தனி நபரின் பக்கம் தாவி விட்டார்கள். யாரைக் கலாய்க்கணுமோ
அவரின் போன் நம்பரைக் கொடுத்தால் போதும். இங்கே உள்ளவர்களை
மட்டுமல்ல இப்போ கடல் கடந்தும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக பிறந்த நாளன்று, திருமண வருட முதல் நாளன்று, நண்பர்களால், காதலர்களால்,துணைவர்களால் தொலைபேசி எண் கொடுக்கப் பட்டு 'ஷாக்'
ட்ரீட்மென்ட் செய்யப்பட்டுப் பின் 'ஹேப்பி பர்த் டேஏஏஏஏஏஎ' என்று அலறப்படும்.

ஜாக்கிரதை, அடுத்து நீங்களாகவும் இருக்கக் கூடும். அப்படி வந்தால்
டென்ஷனாகாமல் கூலாகவே பேசவும்.

If நெக்ஸ்ட் டைம் ,
'ஃபோன் ரிங்ஸ், இட் மே பி குக்கி சிங்ஙே...ஏ பல்லே பல்லே.....' :)


Flash டிஸ்கி :
யாருங்க அது கண்ணு வச்சது, தினமும் இந்த நிகழ்ச்சியை ரசிக்கிறானே என்று.
8.30 என்பதை 9 மணிக்குப் பிறகு என்று ஆக்கி விட்டார்கள் :(

டிஸ்கி 1 :
Cool 94.7க்கு ஆசியாவிலேயே சிறந்த பண்பலை என்று மசாலா.காம்
அவார்டு கொடுத்திருக்கிறார்கள் சமீபத்தில்.
டிஸ்கி 2:
நம்ம ஆசிப் அண்ணாச்சியும் ஏதோவொரு வானொலியில்
அலை பேசினாராமே, இப்பவும் தொடர்கிறதா என்று தெரிய வில்லை.

Sunday, January 09, 2011

பொங்கல் தாத்தா

ஏதாவதொரு கவிதை எழுத வேண்டுமென‌ யோசித்து,
தலையைச் சொறிந்துப் பின் யோசித்து நாம் எழுதிய‌
கவிதைகள் ஓரிரண்டு வாசிப்பில் சலிப்புத் தட்டி விடும்.

ஆனாலும் சில நேரம் தாமாகவே சிலிர்த்துக் கிளம்பிய
வரிகள் எத்தனை முறை வாசித்தாலும் இன்பம் தரும்.

அதில் ஒன்று, சென்ற முறை பதித்த பயணங்களினூடே

மற்றொன்று இதோ இன்று

சூடு தர‌/பெற வந்து சூடு பட்ட க(வி)தை
------------

குளிர் ஜுரம் போல
நடுங்கத் தொடங்கியது தேகம்

மருந்திட்ட துணையின்
கைச்சூடு இதமாய்த் தெரியவே

முழு தேகம் முச் சூடும் பெற‌
தாகிக்கத் தொடங்கியது

இன்னும் சில நேரம்
இல்லாளை அருகில்

இருக்க‌ வைத்ததில் ..

இருந்த சூட்டையும்
இழந்ததுதான் மிச்சம்

சூடோ அல்லது மூடோ
ஏன் எல்லா ஆண்களும்
டோனாராகவே இருக்கிறோம் :)


********************************

சில நேரங்களில் சில பதிவர்களின் பதிவில் பின்னூட்டம்
இடும்போது அது கவிதையாக மலர்ந்து விடும்.

சகோ சாதிகாவின் பொங்கல் பதிவில்

ஜ‌னங்க‌ளின்
மனங்களைப் புரிந்து
ஜனவரியில்
ஜனங்களின் வரியில்
எல்லோர் வீட்டிலும்
பொங்கலைப்
பொங்க வைத்த
'பொங்கல் தாத்தா'வின்
புகழ் ஓங்குமா இல்லை வீங்குமா

*************************************

ரமீஸ் பிலாலியின் பதிவுகளில்

ராஜாவை உயர்த்தி ரஹ்மானைத் தாழ்த்திய‌ பதிவில்

சினி சித்தரைத் தூக்கும் வேளையில்
மினி சித்தரைத் தாக்கலாமோ
கனி முதிர்க்கும் தருணமிது
இனி தருவார் முக்கனி விருந்து :)

---------------------------------

பாங்கு கவிதைக்கு மறுமொழி


1400 ஆண்டுகள் பின்னோக்கிய
இரவொன்றில்
காலச் சக்கரத்தை நிறுத்தி
தொழுகையில் லயித்திருந்த வேளை
செல்பேசியின் சத்தத்தில்
சக்கரம் சுழல ஆரம்பித்து
இன்றைய தேதிக்கு
அழைத்து வந்து விட்டது :)

*********************************

வாழ்க கவிதை ; வளர்க கவிஞர்கள் :)

***********************************