Wednesday, December 29, 2010

இரண்டு விதமான‌ அப்ரோச்சும் ஆறாம் அறிவும் கூடவே நன்றியும்

நண்பர்கள் வைத்துக் கும்மியும் ஓட்டுக்களும் பெறும் இவ்வலையுலகில்
கேம்பெய்ன்,மார்க்கெட்டிங் டெக்னிக் ஏதும் செய்யாத நம்மையெல்லாம் எங்கே
கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல்
இருந்து வந்தேன். ஆனால் ஆச்சர்யம் எனது மூன்றில் இரண்டு இடுகைகள்
அடுத்த கட்டத்திற்குத் தாண்டியுள்ளன. ஓட்டுப் போட்டவங்க நல்லாயிருக்கணும்.

தமிழ்மணத்திற்கும், இதுவரை ஓட்டளித்தவர்களுக்கும் இனி ஓட்டளிக்க
இருப்பவர்களுக்கும் எனது மனமார நன்றியும் துஆக்களும்.

எனது பதிவுகள் ஆன்மீகம் பகுதியிலும், பொருளாதாரம் பகுதியிலும்
உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

அடுத்தக் கட்ட ஓட்டளிப்பிற்கான பூத் இங்கே

------------------------------------------------------

இனி பதிவுக்கு வருவோம்...

ஒரு நாட்டின் மன்னன் அன்று ஒரு அறிவிப்புச் செய்தான், அதாவது நாளை
அரண்மனைக்கு வருபவர்களுக்குப் பொற்கிழியும்,சன்மானமாமும்
தரப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அடுத்த நாள் மிக நீண்ட கியூ.
கியூவில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும் அரசரின் புன்சிரிப்பையையும்
மரியாதையையும் பார்த்த மன்னனின் மகன் தானும் போய் நின்று கொண்டான்.

அவனது முறை வந்ததும், அதுவரை புன்சிரித்து வந்த மன்னனின் முகம்
மாறியது. இங்கு வந்து நின்றதற்கானக் காரணம் கேட்டான்.

'கியூவில் நிற்பதால் தேவையானவை கிடைத்து மகிழ்ச்சியோடு திரும்பிச்
செல்லும் மக்களைப் பார்த்தவுடன் எனக்கும் ஆசை வந்தது'.

மகனின் இந்தப் பதிலைக் கேட்டுக் கோபப்படுவதா இல்லை வருத்தப் படுவதா
என்று குழம்பிய மன்னன் சொன்னான்,

'மகனே, இந்த நடைமுறை பொது மக்களுக்கானது. உனக்குரிய முறை
எதுவென்றால் உனக்கு எந்தத் தேவையாயினும் என்னிடம் நேரடியாகவே
கேட்பதுதான். அதுதான் எனக்கும் பிடித்தமானது'.

இந்தக் கதைக்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட்டு விடாதீர்கள் மக்களே :-)

இது கதையோ அல்லது உண்மையோ, நான் சொல்லப் போகும் சில
விஷயங்களுக்கு இதனை இங்கு உதாரணமாகப் பயன் படுத்தப் போகிறேன்.

இறைவன் என்னும் அரசனுக்குக் கீழுள்ள மக்களை இரண்டு விதமாகப்
பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக வாதிகள் (இளவரசன் போன்றவர்கள்)
மற்றொன்று நான்மீக வாதிகள் (பொது மக்கள்).

ஆன்மீகத்தில் நம்பிக்கையற்ற அனைவரையும் (அது முஸ்லிம்களாயினும் சரி)
நான்மீகவாதிகளில் சேர்த்துள்ளேன்.

ஆன்மீகவாதிகளில் இரு வகை, ஒருவர் சரியான இலக்கில் பயணித்து
இறைவனை அறிந்தவர்/அறிபவர். மற்றவர் ஆன்மீக வழியில் பயணப்பட்டுப்
பின் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து வழிகெட்டுப் போனவர்கள்.

ஷைத்தானின் மெயின் எதிரிகள் ஆன்மீக வாதிகள். அவர்களை வழிகெடச்
செய்வதுதான் அவனின் மிகப் பெரிய புராஜக்ட்,பிளானிங்,முயற்சி எல்லாம்.
நிற்க இது இப்படியே இருக்கட்டும்.

இறைவன் இளவரசனான ஆன்மீக வாதிகளிடம் எதிர் பார்ப்பது குழந்தைத்
தனத்தை. குழந்தை எப்படி எல்லாவற்றிற்கும் அம்மாவை அழைக்கிறதோ
அல்லது எதிர்பார்க்கிறதோ அது போல அடியார்கள் எல்லாத் தேவைகளுக்கும்
இறைவனின் பக்கம் முன்னோக்குதலையும் முடுகுதலையும் விரும்புகிறான்.

மன்னன் எங்ஙனம் இளவரசனுக்காக கஜானா அத்தனையும் திறந்து விடத்
தயாராக இருக்கிறானோ அது போல இறைவன் ஆன்மீக வாதிகளுக்காக
அத்தனையும் திறந்து தரக் காத்திருக்கிறான்.

போனில்லாமல் பேசலாம், டி.வி இல்லாமல் பார்க்கலாம், மக்களின் மனதைப்
படிக்கலாம், அடுத்து நடைபெறப் போகும் விஷயங்களை ஓரளவு விளங்கிக்
கொள்ளலாம், கனவின் விளக்கத்தை அறியலாம், நினைத்ததைப் பெறலாம்,
பிறருக்காகவும் பெற்றுத் தரலாம். ஆனால் வேடிக்கை என்னவென்றால்
உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு இறைவனைத் தவிர வேறு யாரின்
மீதும் அல்லது எதுவின் மீதும் ஆசையோ ஆர்வமோ இருக்காது. :-‍)

ஆறாம் அறிவு பற்றிய பிரணாவ் மிஸ்ட்ரியின் வீடியோ பார்த்திருப்பீர்கள்.
மவுஸ்லெஸ் ஆபரேஷனும் ஒரு பொருளை வாங்கலாமா வேண்டாமா
என்று அது தரும் சிக்னலை வைத்து முடிவு எடுப்பது இன்னும் என்னென்ன
விஷயங்கள். உண்மையில் அவரது முயற்சி வியக்க வைக்கிறது என்றாலும்
அது நான்மீக வாதிகளுக்குப் பிரயோசனம் தரும் கண்டு பிடிப்பென்றாலும் அது
பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானது. மட்டுமல்ல ஒவ்வொன்றுக்கும்
ஒரு கருவி என்று போனால் நாளை ஒவ்வொருவரும் (குப்)பைகள் தொங்கும்
மரம் போல கருவிகள் தாங்கிய மனிதனாகத் தான் அலைய வேண்டியிருக்கும்.

ஆன்மீக வாதிகளுக்கு முயற்சியின்றியே தேவைப்படும் பணம் கிடைக்கும்.
பணமின்றியே பொருள் கிடைக்கும். பொருளின்றியே தேவைகள் நிறைவேறும்.
பொதுமக்களைப் போல கஷ்டப்பட்டு உழைக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு
கண்டிஷன் அவர்கள் இளவரசனுக்குப் பின்னால் உள்ள பொறுப்பைப் போல
இறைவன் ஆன்மீகவாதிகளிடம் எதை விரும்புகிறான் என்பதை அறிந்து
அதனை நிறைவேற்ற வேண்டும்.

'அல்லாஹும்ம க்ஹிர்லீ வக்ஹ்தர்லீ (இறைவா எனக்கான‌ சிறந்ததை(நல்லதை)
நீயே தேர்ந்தெடுத்துத் தருவாயாக) என்ற துஆவே போதுமானது, அது பொருள்
வாங்குவதாய் இருந்தாலும் சரி, (ஜோசியம் பார்க்காமலேயே) சிறந்த துணை
தேடுவதாய் இருந்தாலும் சரி இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படும்
ஒரு அப்ளிகேஷன் அல்லது சப்ளிகேஷன்.

இதற்கான தேவை காசோ,பணமோ,திறமையோ அல்ல நம்பிக்கை மட்டுமே.
டிஸ்கி :

இதைப் படித்தவுடன் சரியென்று தோன்றினால் அல்லது மெலிதான புன்னகை
தோன்றினால் நீங்கள் ஆன்மீகவாதிகள். இதற்கு மாற்றமாக ஒரு ஏளனப்
புன்னகை,சிரிப்பு அல்லது கடுப்பு தோன்றினால் நீங்கள் நான்மீக வாதிகள் :)))

வஸ்ஸலாம்.

Wednesday, December 22, 2010

நாற்றம் பெற்ற மலர் போல

இந்தப் பதிவு பல் சம்பந்தப் பட்டது என்பதால் 'பல்'லாண்டு வாழ்கன்னுதான்
தலைப்பு வச்சேன் மொதல்ல. ஆமா இவருக்கு வேற வேலையில்லை,
நலம் வாழ, பல்லாண்டு வாழன்னு அறுக்குறான் மனுஷன் என்று யாரும்
பதிவப் பாக்காமப் போயிடுவாங்களோன்னு பயந்து இன்றையப் பதிவுலக
சாய்ஸ்க்கு ஏற்ற மாதிரி 'பல்ல ஒடச்சுப்புடுவேன் ஆமா' அப்படீன்னு
வச்சுப் பார்த்தேன். இருந்தாலும் மனசு கேக்காம, எப்போதும் போல
கவிதைத் தனமாவே இருக்கட்டும்னு இந்தத் தலைப்பு.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா.. வா.. வாவா.

பல்லொன்று போனால் சொல்லொன்று போகும்
அதற்கு முன்னாலே ஓ.. ஓ.. ஓது...

'ஹேப்பி நிவ் இயர்'.

பல்ல ஒடச்சுப் புடுவேன்னு ஈஸியாச் சொல்லிடுறோம், ஆனா அதைப்
பிடுங்குவதற்குள் நாம் படும் பாடு. மலைகள் எப்படி பூமியில் நாட்டப்
பட்டுள்ளதோ அதைப் போன்று பல்லின் பேஸ்மென்ட்டும் ரொம்ப
ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பூச்சி அல்லது காரை அதனை
எப்படி பலஹீனமா ஆக்கி விடுகிறதென்பது ஆச்சர்யம்தான்.

இனிப்பு போன்ற பலகாரங்கள் சாப்பிட்ட உடனேயே சிறிது வெந்நீர் குடித்து
விட்டால் பூச்சி பிடிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பல் விஷயத்தில் இன்னொரு தொந்தரவு, அதன் நாற்றம். மீன் மற்றும்
அசைவ உணவுகள் உண்ணும்போது அதன் மீதம் பற்களுக்கிடையில் தங்கி
விடுவது நாற்றத்திற்கான காரணம். உணவிற்குப்பின் பல் துலக்குவது,
பல் குத்தி சுத்தம் செய்வதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். சிலர் பேஸ்ட்
பிரஷ் ஆபிஸிற்கும் கொண்டு வந்து பல் துலக்கப் பார்த்திருக்கிறேன்.

கடல் உணவுக்கும் நாற்றத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. அது
காலைக் கடனிலும் சரி அதன் மீதத்தைக் கச்சடா(குப்பை)த் தொட்டியில்
எறியும் போதும் சரி நம் மூக்கைத் தாக்காமல் போகாது. மாதாந்திர
ருதுவின் போது பெண்கள் மீனைத் தவிர்த்தால்
'நாற்றம் (மணம்) பெற்ற மலர் போல்' திகழலாம். :-)

இதல்லாமல் சாராயம்,சிகரெட் குடிப்பவர்களுக்கும், குடலில் ப்ராப்ளம்
உள்ளவர்களுக்கும் வாய் நாற்றம் இருக்கும். வாய் நாற்றம் இல்லாமல்
பார்த்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய மதிப்பைக் கெடுத்து விடும்.
நல்ல 'மூடை' அவுட்டாக்கி விடும்.

கொடுமை என்னவென்றால் நமக்கு நாற்றம் இருக்கிறதா என்று ஊதிப்
பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நெருக்கத்தில் இருப்பவருக்குத்தான்
தெரிய வரும்.

'விக்ரோ வஜ்ரதந்தி' விளம்பரம் பார்த்திருப்பீர்கள், ஆசையாய் மணமகன்
தன் புது மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ பேச வர‌ (அண்ணல் அவளை
நோக்க) அவளோ வேறு பக்கம் தலையைத் திருப்புவாள்.

சரி வாய் நாற்றத்தை எப்படித்தான் கண்டு பிடிப்பது, ஒண்ணு கல்யாணம்
பண்ணிப் பாருங்க :‍-) (துணையை விட நம்முடைய குறையை வேறு
யாரால் கண்டு பிடிக்க முடியும்)

அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லின்னா, ஒரு ஆப்பிள் பழத்தையோ அல்லது வாழைப்பழத்தையோ ஒரு கடி கடித்த பின் மீதத்தை மோந்து பாருங்கள்,
உங்களின் 'லொள்ளு' தெரியவரும். அது போல் உமிழ்நீரை கையில்
தடவி அல்லது டைரக்டாவே கையை நக்கி மோந்து பாருங்கள்,
(சரி சுத்தத் தமிழிலேயே எழுதிவிடுகிறேன்) 'முகர்ந்து பாருங்கள்'.
உங்களின் 'ஜொள்ளு' தெரியவரும்.

அல்லது தும்மிப் பாருங்கள், சுற்றுப் புறச் சூழலையே கதறடித்து விடும்.
(இந்தப் பதிவே, நான் தொழுகையில் நிற்கும் போது ஒருவர் தும்மியதால்
வந்த வினைதான்). எனக்கும் தும்மியவருக்கும் இடையில் ஒரு அரபி.

நம் எல்லோருக்குமே ஒரு பழக்கம், யாரும் தும்மினால் 'நைசா'
தலையை வேறு பக்கம் திருப்பி விடுவோம். ஆனால் தொழுகையில்
நிற்கும் போது அப்படிச் செய்ய முடியாதே. அச்சமயம் நான் என்ன
செய்வேனென்றால் முடிந்த வரை 'தம்' கட்டிவிடுவேன். மீண்டும்
தும்மினால் என் கதி அதோ கதிதான் :-)

அப்படித்தான் அன்றும், தொழுது முடித்தவுடனேயே ஒருவர் ஒரு
தும்மு தும்மினார் பாருங்கள், நானும் முன்னெச்சரிக்கையாக
'தம்' கட்டித் திரும்பி விட்டேன். ஆனால் பக்கத்திலிருந்த அரபி
'லா ஹவ்ல வலா குவ்வத்த ..' என்று சொன்னார்.

ஆஹா! இது கோபத்தில் அரபிகள் சொல்லும் வார்த்தையல்லவா என்று
இந்தப் பக்கம் திரும்பி 'தம்'மைத் தளர்த்தினால் 'அம்..மாடி',
மயங்காத குறைதான். அவ்வளவு நாற்றம்.

சரி நாற்றத்தை எப்படி போக்குவது ? வழக்கமா தேய்ப்பதைக் கொஞ்சம்
நிறுத்தி விட்டு முரசிலிருந்து இரத்தம் வராமல் தடுக்கும் பேஸ்டை சில
காலத்திற்கு உபயோகிக்கவும். இதை விட பெட்டர், டாக்டரிடம் சென்று
பல்லைக் கிளீன் செய்வதுதான். என்ன, கொஞ்சம் .. கொஞ்சமல்ல,
நிறையவே கூசும், தலை கொஞ்சம் கிறுகிறுக்கும்.
(எத்தனை பேர் தலையைச் சுத்த வச்சிருப்பீங்க) :-)

அவ்வப்போது பயோரியா,கோபால் பல்பொடி போன்ற‌வைகளாலும்,
'மிஸ்வாக்' குச்சிகளாலும்,விரல்களாலும் பல் துலக்கிக் கொள்ளுங்கள்.

மிஸ்வாக் குச்சி ஃபிரெஷ்ஷாகக் கிடைத்தால் அதற்கு இணை வேறேதும்
கிடையாது. அதில் இருக்கும் காரத்திற்கு பூச்சியென்ன, நாற்றமென்ன
எந்தப் பேஸ்ட் கம்பெனியும் இருக்காது.

ஆனால் அதுவோ அரபிகளின் சொத்தாகி விட்டது. நம்ம நாட்டுல
இருக்கவே இருக்குது 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி'.

இவ்வளவு சொன்ன பிறகும் வாய் நாற்றத்தோட வந்து தும்முனீங்க‌ ..
'பல்ல ஒடச்சுப்புடுவேன் ஆமா' (அப்பாடா தலைப்புக்கு வந்தாச்சு) :-)

Sunday, December 12, 2010

பய‌ணத்தினூடே ...

பயணக் களைப்பு மறந்து
விமானத்தின் ஏற்றத்தையும்
இறக்கத்தையும் வியந்து
பார்க்கும் பயணிகள்.

விமானம் நிலைக்கு வந்தவுடன்
பசி ஆற்றக் காத்திருக்கும்
தாக 'சாந்தி'கள்.

கூடவே

விமான சத்தத்திலும் தம்
குஞ்சுகளின் பசிச்சத்தம்
மறவாமல் பசி தீர்க்க
போட்டி போட்டு
ஏறி இறங்கும்
பாவப்பட்ட பறவைகள்

Monday, December 06, 2010

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

உலகமே உன் வசம்தான்; போராட வேண்டிய அவசியமே இல்லை.

உலக வரைபடத்தைத் தாறுமாறாகக் கிழித்து ஒரு பள்ளி மாண்வனிடம் கொடுத்து
அதனை மீண்டும் சரியான முறையில் இணைக்குமாறு சொல்லப்பட்டபோது
முதலில் திகைத்துப் பின் சரியான முறையில் பொருத்தினான், எப்படித் தெரியுமா?.

கிழிக்கப்பட்ட ஒரு பகுதியின் பின்புறத்தில் மனித உறுப்பின் ஏதோவொரு பாகம்
தெரிய வர முதலில் மனித உருவத்தைச் சரியான முறையில் இணைத்து ஒட்டிய
பின் திருப்பினால் 'உலகம் மீண்டும் சீர் பெற்றது' :).

மனிதன் எப்படியோ உலகம் அப்படியே.
மனிதன் சீர்பெற்றால்தான் மற்றெல்லாம் சீர்பெறும். மனிதன் இந்த உலகத்தின்
உள்ளமாகும். மனிதன் திருந்த வேண்டுமென்றால் அவன் மனம் திருந்த வேண்டும்.
மனதை இயக்கும் நம்பிக்கை சரியாக வேண்டும். நம்பிக்கையில் உறுதி வேண்டும்.
உள்ளம் கெட்டுப் போன மனிதர்கள் வாழும் உலகம் குழப்பம்...அழிவு...பேரழிவுக்கு
உள்ளாகும்.

உள்ளமே உடலின் அரசாங்கத்தை ஆட்சி செய்யும் அரசனாகும். ஆசை, அரசனின்
துணைவி;அரசாங்கத்தின் ராணி. கோபம் படைத் தலைவராகும். ஆசை ராணியையோ
கோபப் படைத் தலைமையையோ அரசுக்கட்டிலில் அமர்த்தாமல் தாமும் 'குடி'முழுகிப்
போகாமல் அறிவு மந்திரியின் ஆலோசனைக் கேட்டு அன்பாகத் தாமே நடாத்தி வந்தால்
உடல் என்னும் நாடு உருப்படியாக வாழும்.

உள்ளத்தைத் திருத்துவதற்கு முன் அதன் இருப்பிடம்,தன்மை
பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஆமா மனசு எங்கேதான் இருக்கு ?

இதயம் என்பது இருதயம்தான் என்று நம்பி வந்தோம்,
இல்லை மூளைதான் என்கிறார்கள் இன்று வந்தோர்.
உறுதியாகச் சொல்ல யாரும் இல்லை சென்று வந்தோர்.

இதுவே இன்னும் சரியாகத் தெரியவில்லை, இன்னும் ஆத்மா,ஆன்மா,உயிர்,ஆவி,
கனவு,அறிவு,நுண்ணறிவு,பகுத்தறிவு என்று நமக்குள்ளே இருக்கும் ஆச்சர்யங்கள்
பற்றி எப்பொழுது தெளிவாக அறிவோமோ தெரியவில்லை.

'எவர் தம் ஆத்மாவை அறிந்தாரோ அவர்(தம்) இரட்சகனை அறிந்து விட்டார்'
என்றும்
'இறை நம்பிக்கையாளரின் உள்ளம் இறைவனின் ஆட்சிப் பீடம்'
என்றும் சொல்லப் படுகிறது.

உள்ளத்தின் சக்தியை அதன் Capacity ஐ இன்னும் நாம் உணரவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு Capacity/Limit உண்டு. இவ்வளவுதான் தாங்க முடியும் என்று.

ஆனால் உள்ளம் அப்படி கிடையாது. என்ன வேண்டுமானாலும் நினைக்க முடியும்
எங்கு வேண்டுமானாலும் துரிதமாகச் செல்ல முடியும் (மனோவேகம்). உதாரணமாக
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நான் உயிரோடு இருக்கும் வரைக்கும்
உணவளிப்பேன் என்று நினைத்துப் பாருங்கள்.

'சாரி இது டூ மச், நம்மால முடியாது'ன்னு உள்ளம் உடனே வெடித்து விடாது :)

உள்ளத்திற்கு உதாரணமாய் நிலத்தைச் சொல்லலாம் அல்லது குளத்தைச் சொல்லலாம்,
பார்வை,கேள்வி,பேச்சு,சிந்தனை ஆகிய ஆறுகளின் சங்கமம் என்றும் சொல்லலாம்.
கணிணி மொழியில் CPU வில் உள்ள control unit போல என்றும் சொல்லலாம்.

மனிதனை முன் மாதிரியாக வைத்துத்தான் கணிணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
Artificial Intelligence ஐ நோக்கி முன்னேறுவதும் மனிதனை அடிப்படையாக
வைத்துத்தான்.

உடலில் சதைத்துண்டு உண்டு அது சீர்பெற்றிருந்தால் முழு உடலும் நலம் பெறும்.
அது சீர்கெட்டுப் போனால் முழு உடம்பும் சீர்கெட்டுப் போகும். அது தான் உள்ளம்
என்று அருமை நபி(ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.

அந்த சதைத்துண்டு எதுவென்று உறுதியாகத் தெரியவில்லை. இதயமாகத்தான்
இருக்கும் என்பது எமது அபிப்ராயம், அதுதான் மனித பிறப்பின் உருவாக்கத்தில்
துடிக்கும் முதல் உறுப்பு. அதையே இன்றைக்கு மாற்றி விடுகிறார்களே
என்று சிலர் வாதிடும் போது இப்படியும் எண்ணத் தோன்றுகிறது.

தலைமைச் செயலகத்திற்கான பழைய கட்டிடத்தை இடித்துவிட்டுப் புதிய கட்டிடம்
கட்டினாலும் அங்கு மீண்டும் குடிவந்து ஆட்சி செய்யும் அரசைப் போல‌ இருதயத்தை
மாற்றினாலும் சக்தி மீண்டும் அங்கே அமர்ந்து ஆட்சி செய்கிறது.

'அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா?
(அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும்,
(நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்)
கண்கள் குருடாகவில்லை எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள்
(அகக் கண்கள்)தாம் குருடாகின்றன.' (அல் குர்ஆன் 17:46)

குர்ஆனிலும் 'நெஞ்சத்தில்' என்றுதான் வந்திருக்கு. அதனால‌ மனசு நெஞ்சுலதான்
இருக்கு. நாம் நம் எதிரில் இருக்கும் நபரிடம் 'உன்/உனது/உன்னை/உன்னிடம்'
என்று சொல்லும்போது ஆட்காட்டி விரலால் அவர் முகத்தை நோக்கிச் சுட்டுகிறோம்.
அதே சமயம் 'நான்/எனது/என்னை/என்னிடம்' என்று சொல்லும்போது மட்டும் நம்
நெஞ்சைக் குறி பார்க்கிறோமே அது ஏன் ?

'நெஞ்சுக்குள்ளே....நெஞ்சுக்குள்ளே..'