Monday, March 28, 2011

தர்காவுக்குப் போகலாமா வேண்டாமா ‍- Part II

முதல் பகுதியின் தொடர்ச்சி ...

இஸ்லாத்தில் மூன்று பள்ளிகள் புனிதமானவை 1.கஃபத்துலாஹ் (மக்கா),
2.மஸ்ஜிதுன் நபவி (மதீனா), 3.பைத்துல் முகத்தஸ் (ஜெருசலம்). அதற்காக
மற்றப் பள்ளிகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. அவை மூன்றும் முதல்
அந்தஸ்த்தில் உள்ளவை. கஃபத்துலாஹ் ஆதம் நபியால் கட்டப்பட்டு
இப்ராஹீம் (Abraham) நபியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. மதீனாப் பள்ளி
முகம்மது (ஸல்) மற்றும் அவர்களது நபித்தோழர்களால் கட்டப்பட்டது.
ஜெருசலம் பள்ளி தாவுது (David), சுலைமான் (Solomon) நபிகளால் கட்டப்பட்டது.

மற்றப் பள்ளிகள் அவ்வப்போது தொழுபவர்களின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வந்தன,
இனியும் கட்டப்படும். ஆனால் தர்காக்கள் ஏன்,யாரால் கட்டப்பட்டன என்ற விவரம்
தெரியவில்லை. இனியும் கட்டப்படாது என்றே நினைக்கிறேன். அது தொழப்படும்
பள்ளியுமல்ல, இறைவனின் ஆலயமுமல்ல மாறாக அது வெறும் அடக்கஸ்தலம்தான்.
பிறகு ஏன் மக்கள் அங்கே செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இங்கேதான்
தவ்ஹீதுவாதிகளும் தரீக்காவாதிகளும் பிரிகிறார்கள். இருவரும் பேசிக்
கொள்வதைக் கேட்போமா.

தவ்ஹீது : நீங்கள் ஏன் தர்காவுக்குச் செல்கிறீர்கள், அது பாவமாச்சே.

தரீக்கா :
பாவமென்று யார் சொன்னது, மரணத்தை நினைவூட்டுவதால் அடக்கஸ்தலம்
செல்லுமாறு நபிகளே சொல்லியிருக்கிறார்களே.

தவ்ஹீது :
நீங்களெல்லாம் அதற்காகச் செல்வதில்லை, அங்கு அடங்கி இருப்பவரிடம்
உங்கள் தேவைகளைக் கேட்கச் செல்கிறீர்கள்.

தரீக்கா :
கேட்பதால் என்ன தவறு, டாக்டரிடம் சென்று காண்பிப்பது போலத்தான் இதுவும்.

தவ்ஹீது : டாக்டர் உயிரோடு உள்ளவர் அவரோ மரணித்தவர்.

தரீக்கா :
இறை நேசர்கள் உயிரோடு இருக்கிறார்கள் மரணிக்கவில்லை என்று இறைவன்
தன் திருமறையில் கூறியிருக்கின்றானே.

தவ்ஹீது :
அது நபிமார்களைப் பற்றிச் சொன்னது. மேலும் இறைவன் யாரை நேசிக்கிறான்
என்பது அவனுக்குத் தானே தெரியும்.

தரீக்கா :
அது இன்னொரு இறைநேசருக்கும் தெரியும், அவர் முலமாக எங்களுக்கும் தெரிய வரும்.

தவ்ஹீது :
அப்படிப்பட்ட இடைத்தரகர் எங்களுக்குத் தேவையில்லை. தன்னிடமே நேரடியாகக்
கேட்குமாறு இறைவன் சொல்கிறான்.

தரீக்கா :
தந்தையிடம் நேரடியாகக் கேட்க வெட்கப்பட்டோ அல்லது பயப்பட்டோ தாய்
மூலம் கேட்கும் பிள்ளையைப் போல் நாங்கள் அவ்லியா மூலம் கேட்கிறோம்.

தவ்ஹீது :
இந்த உதாரணமெல்லாம் இறைவனுக்கு ஒத்து வராது. அவ்லியாக்கள் எல்லாம்
இறைவனுக்கு மனைவியா. நீங்கள் பகிரங்கமாக இணை வைக்கிறீர்கள். பாவிகள்.
நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர் விளங்கிக் கொள்கிறாரா அதுவும் ஒரே
சமயத்தில் எல்லோருடைய தேவைகளையும் கேட்க முடிகிறதா. நிச்சயமாக நீங்கள்
இறைவனின் தன்மைகள் அவரிடமும் இருப்பதாகக் கருதுகிறீர்கள். உங்களின் இந்த
நிலை மக்கத்துக் காபிர்களின் நிலையை ஒத்திருக்கிறது. படைத்தது யார் என்று
கேட்டால் ‘அல்லாஹ்’ என்று சொன்னார்கள், பிறகு ஏன் இந்தச் சிலைகளை
வணங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ் ஒருவனால்
எல்லாவற்றையும் செய்ய முடியாது. அதனால்தான் அவைகளிடம்
எங்கள் தேவைகளைக் கேட்கிறோம் என்று சொன்னார்கள்.

தரீக்கா :
அடப்போங்கப்பா, வயதுக்கு வராதவனுக்கு தாம்பத்ய இன்பம் எப்படித் தெரியும்.
தர்காக்கள் பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு ஷைகிடம் (சூஃபி அறிஞர்)
முரீதாக (மாணவனாக) பைஅத் (ஒப்பந்தம்) செய்து கொண்டு பயிற்சி பெற்றால்தான்
தெரிய வரும். பைஅத் சம்பந்தமான ஹதீஸ்களைப் பாருங்கள். பைஅத் பெறாமல்
மோட்சம் கிடையாது என்பதை அறிவீர்கள்.

தவ்ஹீது : பைஅத்தாம், மோட்சமாம் போங்கய்யா நீங்களும் உங்க ....

இப்படிப் போகிறது இருவருக்குமிடையேயான சம்பாஷணைகள். இன்னும் லாஜிக்கலா
கிளைக் கேள்விகளும் கிளை பதில்களும் உண்டு. நாம் என்ன முடிவுக்கு வருவது :(.

-------------------------- * * * * * -------------------------

இணை வைத்தலில் பல வகைகள் உண்டு. சூரியன், சந்திரன், நட்சத்திரம் அடங்கிய
பிரபஞ்சங்களின் மீது நம்பிக்கை வைப்பது. உயிருள்ள மிருகங்கள், பறவைகள்,
மனிதர்கள், ஜின்கள் மீது நம்பிக்கை வைப்பது. உயிரற்றவர்களின் மீதும், கற்களின்
மீதும், நாடு, அரசாங்கம், இனம், குழு, எண்ணிக்கை, படை பலம், Technology,
கல்வி, அறிவு இன்னும் தன் மீதும் நம்பிக்கை வைப்பது அனைத்தும் இணை
வைத்தலில் கொண்டு போய்ச் சேர்க்கும். இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பெரிய ஷிர்க் மற்றும் சின்ன ஷிர்க். நபியவர்களுடைய ஒரு ஹதீஸின் கருத்தாவது,

‘எனது உம்மத்து (சமுதாயம்) சிலை வணக்கம் போன்ற பெரிய ஷிர்க்கில் விழுவார்கள்
என்பதை விடச் சிறிய ஷிர்க்கில் வீழ்ந்து கிடப்பார்களே என்றுதான் அஞ்சுகிறேன்’.
குர்ஆனிலும் இது பற்றி வந்திருக்கிறது.

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித்
தவிக்கும் சமயத்தில்) எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள்
அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?.
இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக்
காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே.

நபியே!) நீர் கூறும், உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய
கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும் அல்லது
உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை
அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள்
விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி)
விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (6: 63 - 65)

மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில்
வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை
(பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே)
இணை வைக்கின்றனர். (29:65)

யோசித்துப் பார்த்தால் நம்முடைய பேச்சிலும் செயலிலும் எத்தனை ஷிர்க்குகள் செய்து
வருகிறோம். மழை, காற்று, புயல், சுனாமிகளின் போதும், சம்பாத்தியம், வாழ்வாதாரம்,
பாதுகாப்பு, எதிர்காலம் பற்றிய பேச்சு,செயல்களின் போதும் நாம் எப்படி நடந்து
கொள்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

இறைவனின் கூற்று,"அடியான் என்னைப் பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே
நானும் நடந்து கொள்கிறேன்
" (பதிவைப் புரிந்து கொள்ள இதுவொன்றே போதும்).

-------------------------- * * * * * -------------------------

ஊரில் இருக்கும்போது ஒருமுறை எனது செல்ஃபோன் தொலைந்து விட்டது. எனது
உறவினர் பெண்மணி ஒருவர், எங்களூரில் வசித்து இறந்து போன ஒரு முதியவரின்
பெயரைச் சொல்லிக் கேட்டால் தொலைந்த பொருள் கிடைத்து விடும் என்று வேண்டிக்
கொண்டார். நானோ அந்த வம்பே வேண்டாம் என்று நபியவர்கள் காட்டித் தந்த இரண்டு
ரக்அத் தொழுது துஆ செய்தேன். செல்ஃபோன் கிடைத்தது. எனக்குத் தொழுகையின்,
துஆவின் மீது நம்பிக்கை பிறந்தது. அந்த உறவினருக்கும் அவரைச் சார்ந்த
பெண்களுக்கும் மறைந்த ‘அப்பாவின்’ மேல் நம்பிக்கை உயர்ந்தது. :)

ஒருமுறை மழை பெய்த போது நபியவர்கள், 'அல்லாஹ்வின் நாட்டத்தின் படி மழை
பொழிந்தது என்று சொன்னவர்கள் இறை நம்பிக்கையை அடைந்து கொண்டார்கள்,
மாறாக குறிப்பிட்ட நட்சத்திரத்தின் நகர்வின் காரணமாக மழை பொழிந்தது என்று
சொன்னவர்கள் இறை நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்' என்று சொன்னார்கள்.
ஆக உலகத்தில் நடைபெறும் அத்தனையும் இறைவனின் விதிப்படியே நடக்கின்றன.
இந்த நிகழ்வுகளிலிருந்து என்ன நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதைத்தான் நாம்
கவனிக்க வேண்டும். இது பரீட்சைக் கூடம், பலவிதமான சோதனைகள் இருக்கும்.

ஒருமுறை ஹஜரத் அலீ அவர்கள் போரிடுவதற்காகப் புறப்பட்டார்கள். இந்த நேரத்தில்
புறப்பட்டால் அலீ தோற்றுப் போவார், ஏனென்றால் நேரம் சரியில்லை என்று ஒரு குறி
சொல்லும் ஜோதிடன் சொன்ன விஷயம் அலீ(ரலி) அவர்களிடம் சொல்லப் பட்டது.
அதற்கவர்கள் ‘மஷ்வரா (ஆலோசனை) செய்து முடிவெடுத்த நேரத்தை மாற்ற
முடியாது, தோற்றாலும் பரவாயில்லை என்று கிளம்பினார்கள். அதாவது உலக
வெற்றி தேவையில்லை, மறுமையின் வெற்றிக்கான ஈமானைப் பாதுகாப்பதுதான்
முக்கியம் என்பது இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.

கஸ்ஸாலி என்றொரு அறிஞர் சொல்கிறார், சிலர் பாம்பைப் பிடித்து அதிலிருந்து
விஷத்தை எடுத்து விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிலர் பாம்பைப்
பிடிக்கும் வித்தையைக் கற்காமலே அதில் ஈடுபடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாய்
முடியும். அது போலவே உலக வாழ்வின் தத்துவம், தாத்பரியம், விஷம் அறியாது
அதனைச் சேகரிக்க நினைப்பவர்களின் ஈமான் ஆபத்தில் இருக்கிறது. உயிர் பெரிதா
ஈமான் பெரிதா, ஈமான் பெரிதென்று நினைப்பவர்கள் நிச்சயம் ஒவ்வொரு
ஸ்டெப்பையும் கவனமாகத்தான் வைப்பார்கள்
.

மரணச் சமயத்தில் ஈமானைப் பறிப்பதற்கு ஷைத்தானின் முயற்சி கடுமையாக
இருக்கும். தவ்ஹீதுவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு
தரீக்காவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு எனும்போது
பொதுமக்களின் நிலைமையை என்ன சொல்வது. காலமெல்லாம் ஈமானுக்காகப்
பாடுபட்டவர்களும் இறையச்சமுள்ள நல்லடியார்களும் அவனின் சூழ்ச்சியிலிருந்து
பாதுகாக்கப் படுவார்கள். ஆனால் பொதுமக்களோ ‘கண்டதே காட்சி கொண்டதே
கோலம்’, என்ற அறியாமையிலும் ‘நமக்கு வேண்டியது எங்கேர்ந்து கெடச்சா என்ன’
என்ற சுயநலத்திலும் உழன்று தம் உயிரினும் மேலான ஈமானை மரணத்திற்கு
முன்பே பறிகொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

-------------------------- * * * * * -------------------------

தரீக்காவாதிகள் ‘ஷைகு’ என்ற குருநாதரின் கண்காணிப்பில் இருப்பவர்கள். குர்ஆன்,
ஹதீஸை எப்படி அணுக வேண்டும் என்ற 'மெய்ஞ்ஞானம்' குருநாதரால் போதிக்கப்
படுபவர்கள். கஸ்ஸாலி என்ற அறிஞர் (சூஃபி) தரீக்காவாதியான பின்புதான் நல்ல
இஸ்லாமியத் தவ்ஹீது கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் படைத்தார் என்றும்
தரீக்காவில் இணைவதற்கு முன் தாம் எழுதிய புத்தகங்களெல்லாம் குப்பை என்று
உணர்ந்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவருடைய வரலாறு கூறுகிறது. அவருடைய‌
தவ்ஹீதுக் கருத்துக்கள் இன்றைய தவ்ஹீதுவாதிகளால் கூட புரிந்து கொள்ள முடியாத
அளவுக்கு நுணுக்கமானதாக இருக்கும். ஆனால் அக்காலத்தில் இருந்த ஷைகுகள்
போன்று இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஷைகிடம் பைஅத் செய்வது பாதுகாப்பாய்த் தெரிந்தாலும் தவறான ஷைகைத்
தேர்ந்தெடுத்து விட்டால் அதோ கதிதான். அதுபோல நாம் தேர்ந்தெடுத்த நல்லவர்
ஷைத்தானுக்கும் நல்லவராகி விட்டால் அவ்வளவுதான், ஓட்டு மொத்தக் கூட்டமும்
ஸீதா ஜஹன்னம்தான் (நேரா நரகம்தான் :). ஆதலால் தர்காவின் தாத்பர்யம் தெரிய வேண்டுமென்றால் யாராவது நல்ல ஷைகைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்
கிடைக்காத பட்சத்தில் தவ்ஹீதுவாதிகளாக இருங்கள். குறைந்த பட்சப் பாதுகாப்பாவது
கிடைக்கும். ஈமானியப் பாதுகாப்பு வளையமின்றி அங்கு செல்வது ஆபத்தானது.

தர்கா இஸ்லாத்தின் அம்சம் என்றால் அது இஸ்லாம் செல்லுமிடமெல்லாம்
அதுவும் செல்லவேண்டும். அனால் அது இணைவைப்பாளர்கள் வாழ்ந்த,வாழும்
இந்தியத் துணைக் கண்டத்தில்தான் அதிகம் காணப படுகின்றன. ஒருவேளை
இணை வைப்பாளர்களான மனிதன் மற்றும் ஜின்களால் வைக்கப்படும் மாந்திரீகத்
தொல்லைகளை முறியடிப்பதற்காகவே இவை அமைக்கப் பட்டதாக இருக்கலாம்.
அல்லது அல்லது பிஸினெஸ்ஸுக்காக உருவானதோ இல்லை இணைவைத்தலில் ஈடுபடுத்துவற்காகவே ஷைத்தான்களால் உருவாக்கப் பட்டதோ தெரியவில்லை.

அல்லது ஒரு இஸ்லாமிய அறிஞரை எவ்வாறு நாம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து
கொள்ள‌, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள அணுகுகின்றோமோ அது போலவே
ஜின்களும் அவர்களை அணுகிப் பாடங்கள் படிக்கின்றன, நாளடைவில் அவருக்குச்
சீடராகி மனமுவந்து சேவைகள் செய்கின்றன். அந்த அறிஞர் மரணித்த பின்னும்
அவரிடத்திலே தங்கி அங்கு வரும் மக்களுக்குச் சேவை செய்கின்றனவோ ..
இன்னும் எந்த‌ மூலிகையில் என்ன நிவாரணம் உண்டு என்பதை அறிந்து
வைத்துக் கொண்டு அங்கு வரும் புதிர் நோய்களைக் கொண்ட நோயாளிகளைக்
குணப்படுத்துகின்றனவோ .. அல்லது மறைந்த‌ இறைநேசர்கள் இறைவனின்
அனுமதியுடன் தமது சேவையை இன்னும் தொடர்கிறார்களோ என்றெல்லாம்
யோசிக்கத் தோன்றுகிறது. காரணம் ஆச்சர்யத்தக்க வகையில் மருத்துவ
ஆப்பரேஷன்கள் கனவிலும் மயக்க நிலையிலும் நடைபெறுவதாக அங்கு
சென்று சுகம் பெற்ற சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

இப்படி மர்மமாகவே இருக்கும் தர்காக்களைப் பற்றி என்னைப் போன்ற ரெண்டுங்
கெட்டான்களால் என்ன எழுதி இந்தச் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.
'இங்கு போவதால் என்ன தப்பு, ஏன் போகக் கூடாது' என்று சொல்பவர்கள்தாம் தர்கா
என்றால் என்ன அங்கு ஏன் போக வேண்டும் என்பது பற்றிச் சரியாக விளக்க முடியும்.
லாஜிக்கலா எதிர்கேள்விகள்தாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய சரியான
முறையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று சொல்வதில்லை. ஆதலால்
இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

தர்காவுக்குப் போகலாம் என்று சொல்லும் நீங்கள் 'எப்படிச் சென்றால் ஈமானுக்குக்
கேடு வராது என்று அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் சொல்லித் தர வேண்டிய பொறுப்பு'
உங்களுக்கு இருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்களோ இல்லையோ அவ்லியாக்களைப் பற்றி நன்றாகவே அறிந்து
நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

"பாவம் விட்டில் பூச்சிகளாய் அங்கு வந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது
இஸ்லாமியத் தேனீக்களின் இறைவன் பற்றிய நம்பிக்கை
"


வஸ்ஸலாம்

Wednesday, March 23, 2011

தர்கா - ஒரு குவிலென்ஸ் பார்வை – Part I

இது எந்த குரூப்பையும் சாராத ஒரு சாமானியனின் புரிதல்கள் :

------------------- 'அல்லாஹ்வே மிக அறிந்தவன்' -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை
அல்லாஹ்வைத்தவிர) என்ற கலிமா தய்யிபாவின், தலையாய மந்திரத்தின்,
பிரம்ம சூத்திரத்தின் நோக்கம் அல்லது உள் அர்த்தம் என்னவென்றால்,

‘யாரைக்கொண்டும் எதுவும் நடப்பதில்லை எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான்
நடக்கின்றன. அவனன்றி எதுவும் அசைவதில்லை. படைப்பினங்கள் படைத்தவனின்
உதவியின்றி எதுவும் செய்ய இயலாது. ஆனால் படைத்தவனோ படைப்பினங்களின்
உதவியின்றி எல்லாம் செய்யும் ஆற்றல் பெற்றவன். எனவே அவன்தான்
உண்மையில் வணங்கப்படுவதற்கு உரித்தானவன்’.

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.

இந்தத் தத்துவத்தை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். இவ்வுலகம்
சோதனைக்கூடம். இந்த நம்பிக்கையைக் கெடுப்பதற்கான சம்பவங்கள் அலைகள்
போல வாழ்க்கையில் வரும் போகும். ஆனாலும் இந்த நம்பிக்கையைக் கடைசி
வரையிலும் பாதுகாத்து அவனிடம் சென்று சேர்பவர்களுக்குப் பரிசாகச் சுவனம்
காத்திருக்கிறது. இதற்கு மாறாக நம்பிக்கையைப் பறிகொடுத்து, அவனுக்கு
இணைவைத்து, அவனது விருப்பத்திற்கு மாறாக வாழ்ந்து மறைந்தவர்களுக்குக்
கடும் தண்டனை காத்திருக்கிறது (முஸ்லிமாகப் பிறந்திருந்தாலும்).

சுப்யான் என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்கள்,
‘இறைத்தூதரே, தங்களுக்குப் பின் யாரிடமும் கேட்கத் தேவைப்படாத அளவு எனக்கு
ஒரு உபதேசம் செய்யுங்கள், நான் அதைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறேன் என்று நான்
கேட்டதற்கு நபியவர்கள் சொன்னார்கள்,

அல்லாஹ்தான் என் இறைவன் என்று சொல் பின் அதன் மீது நிலைத்திரு


-------------------------- * * * * * -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ்வை மனதார மொழிந்து இறைவனை ஏற்ற சில
நொடிகளில் மரணம் வரப்பெற்றவர்கள் அல்லது மனித சஞ்சாரமற்ற காட்டிலோ
தீவிலோ மலையிலோ வாழ்ந்து கலிமாவின் தத்துவப்படி மரணித்தவர்கள்
சுலபமாகச் சுவனம் சென்றடைவார்கள்.

ஆனால் மக்களோடு மக்களாய், குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்து வரும் இறை நம்பிக்கையாளர்களுக்குப் பலவிதமான சோதனைகள் காத்திருக்கின்றன.
(அதுபோல நன்மைகளும் முன்னவர்களை விட மிக அதிகமாகக் கிடைக்கும்)
வாழ்வில் அவர்கள் சந்திக்கும் தேவைகள்,பிரச்னைகள்,நோக்கங்கள் தீருவதற்குச்
செய்யப்படும் முயற்சிகளை வைத்து அவர்களின் நம்பிக்கை பரிசோதிக்கப்படுகிறது.
எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள், எதில் செலவழிக்கிறார்கள், நோய் போன்ற
பிரச்சனைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், பாதுகாப்புக்கு யாரை நாடுகிறார்கள்
போன்ற எல்லா விஷயங்களும் கண்காணிக்கப் படுகின்றன.

"நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்)
அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள்
எண்ணிக் கொண்டார்களா ? (அல்குர்ஆன் 29:2)

‘உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்
உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள்
எண்ணுகிறீர்களா’ (அல்குர்ஆன் 2:214)


-------------------------- * * * * * ----------------------------


PANADOL உபயோகித்தோம் தலைவலி பறந்து விட்டதென்றால் அதன் மீது
நம்பிக்கை வருவது இயல்பு. அடுத்தமுறை தலைவலி வந்தால் அனிச்சையாய்
அதனைத் தேடுகிறோம். குழந்தைக்குச் சுகம் கிடைத்து விட்டால் குழந்தை
மருத்துவரின் மீது நம்பிக்கையும் அன்பும் பிறக்கிறது. பிறருக்கும் அவரிடம்
செல்லுமாறு ஆலோசனை சொல்லவாரம்பித்து விடுவோம். இதுதான் மனித இயல்பு.

இஸ்லாம் என்ன சொல்கிறது, "நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக்
குணப்படுத்துகிறான்’ (அல்குர்ஆன் 26:80). ‘நோய் நிவாரணமின்றி எந்த நோயும்
இறங்குவது கிடையாது’ (ஹதீஸ்).

உடனே நமக்குள் ‘அப்ப நாம் ஏன் டாக்டரிடம் செல்ல வேண்டும்’ என்ற ஒரு
கேள்வி பிறக்கும். பதில், ‘டாக்டரிடம் போகத்தான் வேண்டும்’. காரணம்
இறைவன் இவ்வுலகத்தைக் காரண காரியங்களைக் கொண்டு படைத்துள்ளான்.

ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் அவனது சக்தி இருக்கிறது. மருத்துவரால்
அல்லது மருந்தால் குணம் ஏற்படுவது போல் தோன்றினாலும் இறைவன்தான்
குணப்படுத்தினான் என்று விளங்கி அவனுக்கு நன்றி செலுத்தும் போது ஈமான்
என்ற நம் நம்பிக்கை வலுப்பெறுகிறது, பாதுகாக்கப் படுகிறது.

படைக்கப் பட்டவை அனைத்தும் உடல் என்றால் அவற்றின் உயிர் அவனது
கட்டளை அல்லது சக்தியாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் நல்லதும் உண்டு
கெட்டதும் உண்டு. ஒரு பொருள் நமக்கு நன்மை தருவதும் தீமை தருவதும்
அவனது நாட்டப்படி அல்லது கட்டளைப் படி தான்.

நம்முடைய கடமை படைப்பினங்களை உபயோகிக்க வேண்டும் ஆனால் நம்பிக்கை
வைக்கக் கூடாது. மேலும் உபயோகிக்குமுன் அவனிடம் ஒரு வேண்டுதல் செய்வது
அவனுக்குப் பிடித்தமானது. கம்பெனி எம்.டி யிடம் வேலையாள் அனுமதி பெற்றுச்
செல்வது போல. ‘செருப்பின் வார் அருந்தாலும் அவனிடமே கேளுங்கள்
என்று நபியவர்கள் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு வினவுகிறான்.

“(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே
நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில்
உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக
(நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே
(அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(இப்பூமியில்) நீங்கள் விதைப்பதை கவனித்தீர்களா? அதனை நீங்கள்
முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால்
நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். "நிச்சயமாக நாம் கடன்
பட்டவர்களாகி விட்டோம். "மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற
முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா ? மேகத்திலிருந்து அதை
நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால்,
அதைக் (குடிக்க முடியாத அளவுக்குக்) கசப்பானதாக ஆக்கியிருப்போம்.
(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள்
உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை
நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்குப் பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு
அவனைத் துதிப்பீராக". அல்குர்ஆன் (56 : 58-74)


-------------------------- * * * * * ----------------------------


இவ்வுலகம் பரிட்சைக் கூடம். மனிதனுக்கும் ஜின்னிற்கும் தனது இஷ்டப்படி
நல்லதையோ கெட்டதையோ ‘தேர்ந்தெடுக்கும் அதிகாரம்’ (Deciding Authority)
தரப்பட்டுள்ளது. மற்றப் படைப்பினங்கள் அனைத்தும் மனிதனுக்குச் சேவை
செய்வதற்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளன.

இவ்வுலக வாழ்வில் நாம் வளர்த்துப் பாதுகாத்த நம்பிக்கையும் சேகரித்த
செயல்களும்தான் மறுவுலகில் பரிசீலிக்கப்படவிருக்கின்றன. இறை நம்பிக்கையில்
மிக உயர்ந்தது ‘ஒரு பிரேதத்தைப் போல் இறைவனிடம் தன்னை ஒப்படைப்பது,
தனக்கென்று எந்த விருப்போ அல்லது வெறுப்போ இல்லாமல் இறை விருப்பத்திற்குத்
தன்னைத் தயார்ப்படுத்துவது.

இப்ராஹீம் நபியவர்கள் நம்ரூத் என்ற அரசனால் நெருப்பில் போடப்பட்டபோது
அங்கு வருகை புரிந்த ஜிப்ரீல் எனும் வானவர் தலைவரின் உதவியையும் மறுத்து,
‘நான் நெருப்பில் இடப்படுவது இறைவனின் விருப்பமென்றால் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்’ என்ற பதிலால் திருப்தியுற்ற இறைவன் நெருப்பையே குளிரச்
செய்தான். ஆனாலும் இதைப் பின்பற்ற எல்லோராலும் முடியாது என்பதற்காகவே
முகம்மது நபி(ஸல்) அவர்கள் சாதாரண மக்களிலிருந்து சான்றோர்வரை பின்பற்ற
ஏதுவாகப் பலவிதமானத் தீர்வுகளைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு, நபியவர்களைக் கொல்வதற்கு மக்கத்துக் குறைஷிகள் சுமார்
நூறு பேர் ஆயுதம் தரித்து அவர் வீட்டு வாசலில் காத்திருக்கும் போது இறைவனின்
நேரடி உதவியுடன் எதிரிகளின் ஊடே நடந்து தப்பித்தார்கள். அதே சமயம் அபுபக்கர்
எனும் தோழருடன் செல்லும் போது சாதாரண மனிதர்களைப் போல் மலைப் பொதும்பில்
மூன்று நாட்கள் மறைந்திருந்து தப்பித்தார்கள். நபியவர்களின் சொல்லிலும் செயலிலும் சான்றோருக்கான படிப்பினையும் சாமானியனுக்கானப் படிப்பினையும் சேர்ந்தே
மறைந்திருக்கின்றன. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் நோக்கத்தை, சாராம்சத்தைச்
சான்றோர்கள்தாம் நன்கு அறிய முடியும். சிலருக்குக் கனவின் மூலமாகவும்
அறிவிக்கப் படுகிறது. சிலர் குர்ஆன் ஓதும்போது அதன் உள் அர்த்தத்தின் மூலம்
விளங்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சான்றோர்களுக்கு முன்பு ‘சஹாபாக்கள்’
(நபித் தோழர்கள்) என்று பெயர். அதற்குப் பின் வந்தவர்களுக்கு வலிமார்கள்
(இறை நேசர்கள்) என்று பெயர்.

இறைநேசம்,இறைகாதல் இவற்றிற்காகத் தம்மை, தம் விருப்பு வெறுப்புக்களைத்
தியாகம் செய்பவர்களுக்காகத்தான் இந்த அந்தஸ்து கிடைக்கும். ‘ரிஸ்க் எடுப்பவன்
ரஸ்க் சாப்பிடுவான்’. இவர்கள் நல்ல மீனவர்களைப் போன்றவர்கள். நமக்கு மீன்
சாப்பிட விருப்பம் என்றால் ஒன்று நாம் கடலுக்குச் செல்ல வேண்டும். அதற்குப்
போதிய பயிற்சி வேண்டும். நல்ல மீன்கள் எங்கே கிடைக்கும் என்று அறிவது
மட்டுமல்லாமல் எங்கே என்னென்ன ஆபத்துக்கள் உண்டு அவற்றைச் சமாளிப்பது
எப்படி என்றும் அறிந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் நேரமோ பொறுமையோ
இல்லையென்றால் நல்ல மீனவர்களை நாடுவோம். அவர்களிடமிருந்து சில சமயம்
முத்து பவளங்கள் கூடக் கிடைக்கும் வாய்ப்புண்டு.

இதைப் போன்றுதான் இஸ்லாத்திற்காகத் தம்முடைய உயிர்,பொருள்,ஆவி,நேரம்,
பணம் கொடுக்க இயலாதவர்களும், ஞானத்தைத் தேடி அலைபவர்களும் நாடுவது
இந்தச் சான்றோர்களைத்தாம். இன்று இது போன்ற அறிஞர்கள் கிடைப்பது
குதிரைக் கொம்பாக இருப்பதால் பழைய அறிஞர்களையே கொண்டாடி வருகின்றனர்
பெரும்போலோர். இவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் சில ‘தர்காவாகக்
கொண்டாடப் படுகின்றன’. சில போலி தர்காக்களும் காசு நோக்கத்தில் உருவாக்கப்
பட்டுள்ளன. இனி தர்கா என்றால் என்ன, அங்குப் போகலாமா வேண்டாமா,
அப்படிச் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தீமைகள் என்ன என்பதை
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரப் பதிவில் பார்ப்போம். :)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


டிஸ்கி : எனது இந்தப் புரிதலில் தவறு இருந்தால் அன்பர்கள் தயை கூர்ந்து திருத்தவும்

Monday, March 21, 2011

பலூன் மேடை

காற்று ஊதப்பட்ட‌
பலூன் மேடைகளில்
குதித்துச் சறுக்கி விளையாடும்
குழந்தைகளைக் கண்டு
மனம் ஏங்கியது
நமக்கும் இது போன்று
கிடைத்திருக்கவில்லையேயென

இதுவெல்லாம் இப்ப
எம்புள்ளைக்கு
எங்கே புரியப் போகிறது
சறுக்கப் பயந்து மேலேயே
நின்று கொண்டிருக்கிறான்

கொடுத்தக் காசும்
நேரமாய்க்
கரைந்து கொண்டிருக்கிறது

'டேய் சறுக்குடா'
=========================================

அடுத்தப் பதிவு சம்பந்தமான ஒரு அறிவிப்பு
-----------------------------------------------

தோழர் பார்வையாளன் 'தர்ஹாவைப் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை'
எழுதுமாறு என்னிடம் கேட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல நிறைய பேர் ஆவலுடன்
எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும்
அளவுக்கு நான் ஒரு நல்ல எழுத்தாளனோ அல்லது தட்டச்சனோ கிடையாது.

இதுவோ ஒரு குழப்பமான சப்ஜெக்ட். ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கும்
அறிஞர்கள் எழுதினால் தெளிவாக இருக்கும். இருந்தாலும் என் மீது பிரியம்
வைத்து எதிர்பார்ப்பதனால் இன்ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவாக அதை இட
நினைத்துள்ளேன். அநேகமாக இரண்டு பதிவுகளாக இட விருப்பம்.

முஸ்லிம் அன்பர்கள் தமது கருத்துக்களை அல்லது வாதத்தை
பின்னூட்டினால் 'தீர்ப்பு' சொல்ல வசதியாயிருக்கும் :))


வஸ்ஸலாம்.

Monday, March 14, 2011

பெண் ஒன்று கண்டேன் .. பெண் அங்கு இல்லை ...

விசிட் விசாவில் வந்த மனைவியையும் குழந்தையையும் ஊருக்கு
அனுப்பி விட்டு மீண்டும் பேச்சிலர் வாழ்க்கை வாழ ஒரு பழைய கட்டிடத்தில்
ஃப்ளாட் ஓனர் தங்கும் அறையில் ஒரு பெட் ஸ்பேஸ் எடுத்துத் தங்கினேன்.

அங்கே நான் மாறும் வரை அந்த பில்டிங் முன்பு மகப்பேறு மருத்துவமனையாக‌
இருந்த விவரம் எனக்குத் தெரிந்திருக்க‌வில்லை. பொருட்களை ஒவ்வொன்றாகத்
தூக்கிக் கொண்டு முதல் மாடியில் இருக்கும் எனது அறையில் படிகளின் வழியே
சென்று வைத்துக் கொண்டிருந்தேன்.(மெஸனைன், எனவே லிஃப்ட் கிடையாது)

கொஞ்சம் வெயிட்டான பேக்கேஜைப் படிகளின் வழியே தள்ளாடித் தள்ளாடி
எடுத்துச் சென்று உள்ளே நுழைந்ததுதான் தாமதம் 'சடக்'கென்று பிடித்துக்
கொண்டது முதுகெலும்பு சங்கமிக்கும் இடுப்புப் பகுதியில்.

தொடர்ந்து ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரங்களோ ஒரு மாதிரியாய்
கோணிக்கொண்டு அலுவலகம் சென்று வந்தேன். இதை விட ரொம்ப முக்கியமானது,
அங்கு சேர்ந்த முதல் ஒரு வாரம் வரை தூங்குவதற்குக் கஷ்டப்படவில்லை,
மாறாக‌த் தூங்கி எழுந்ததும் கஷ்டப்பட்டேன்.

காரணம் கைகள் நூலிழை போல் கடிக்கப்பட்டு இருந்தன. ஒருநாள் வலது கையும்
மறு நாள் இடது கையும் அங்கங்கே கடிக்கப்பட்டு சிறிதாய் தோல் கிழிந்திருந்தது.

என்ன காரணமென்று தெரியவில்லை, மூன்றாம் நாளிலிருந்து முழுக்கை
சட்டை அணிந்து தூங்கவாரம்பித்தேன். காலையில் எழுந்து பார்த்தால்
காதுகளின் மடல் ஓரங்கள் கடிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்துக் கொஞ்சம்
பயம் வர ஆரம்பித்தது.

இந்த நாட்டில் மூட்டைப் பூச்சிகளும்,சிறிய கரப்பான் பூச்சிகளும் இல்லாத‌
வீடுகள் இல்லையெனும் அளவுக்குச் சகஜமானவை. மூட்டைப் பூச்சியால்
கடிபட்ட இடம் தெரியும் ஆனால் கரப்பான் பூச்சி கடித்துப் பார்த்ததில்லை.
ஆதலால் அங்கங்கே உலாவிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிதான்
கடித்திருக்கும் என்ற முடிவுக்கு வந்த பின் பயம் போய் விட்டது.

ஃப்ளாட் ஓனரிடம் முறையிட்ட போது, நான் எத்தனை காலமாக இங்கே
தங்கி வருகிறேன், ஒருபோதும் நான் இந்த மாதிரி கடிபட்டதில்லையே'
என்று சொன்னார். ஒருவேளை நாம் மிக இனிப்பானவனாக இருக்கிறோமோ
என்று மகிழ்ந்த‌ வேளையில் 'அய்யய்யோ, சர்க்கரை வியாதி வந்து
தொலைத்து விட்டதோ' என்ற ஐயமும் வந்து பயமுறுத்தியது.
என்றாலும் நான்கைந்து நாட்களுக்குப் பின் எல்லாம் சுமுகமாகச்
சென்றது. காரணம் 'கடி'கள் நின்று விட்டன.

பிறிதொரு நாள் படிகளில் இறங்கும் போது கால்களை காற்றில்
பறக்குமாறு தட்டி விட்ட படிகளின் மேல் பிடறி முட்ட‌ இடறி விழுந்தேன் :)

தூங்கும் போது சில வேளைகளில் எங்களின் இரு கட்டில்களுக்கு இடையில்
நிற்கும் நிலைக்கண்ணாடியிலிருந்து ஒரு பெண் என்னை கோபமாக உற்று
பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். நல்ல வேளை அப்போதே ப்ளாக்
எழுதுபவனாயிருந்தால் 'கனவில் ஒரு கோப தேவதை'ங்கற தலைப்பில்
ஒரு பதிவு வந்திருக்கும் :)

இப்படியாகச் சில மாதங்கள் ஓடி விட்டன.

ஒருநாள் ஒரு பெரியவரைச் சந்தித்தேன். எனக்கு முன்பே அறிமுகமானவர்.
சூஃபிஸம் அல்லது தரீக்கா வழியில் புலமை பெற்றவர். தமக்குத் தங்குவதற்கு
ஒரு அறை கிடைக்குமாவென விசாரித்தார். அச்சமயம் நானும் ஊருக்குப்
போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்ததால் எனது அறையில் தங்கிக்
கொள்ளுமாறு சொல்லி ஃப்ளாட் ஓனரைச் சந்திக்க வைத்து அனுமதி பெற்று
அவரைத் தங்க வைத்து விட்டு நானும் ஊருக்குச் சென்று விட்டேன்.

ஊரிலிருந்து திரும்பிய பின் எனது அறைக்குச் சென்றேன். பெரியவரும்
ஊருக்கு கேன்சலில் சென்று விட்டதாக ஃப்ளாட் ஓனர் சொன்னார். அதோடு
இன்னொன்றையும் சொன்னார்,

'பாய், பெரியவர் ஒரு தினுசான ஆளாய் இருப்பார் போல, ஒரு நாள் இரவு
திடீரென்று ஏதோ அரவம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தேன். குடியரசு
தின விழாவில் கொடியேற்றுவார்களே அது போல ஏதோ சைகை செய்து
கீழே இறக்கிக் கொண்டிருந்தார், நேர்கீழே பாட்டில் ஒன்று வைக்கப் பட்டு
இருந்தது. அவரது வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது, கடைசியில்
பெருமிதத்தோடு சொன்னார்,'எங்கிட்டப் பலிக்குமா உன் பாச்சா'.

காலையில் அவரிடம் என்னவென்று விசாரித்தேன் ஒன்றுமே
சொல்லவில்லை புன்னகைத்ததைத் தவிர. எனக்கும் அவரோடு சரியாக ஒத்துப்
போகவில்லை, எனவே எனக்கெதிராக பில்லி சூனியம் ஏதும் செய்தாரா இல்லை
ஆளே லூசா, புரியவில்லையே பாய், உங்களுக்கு ஏதாவது புரிகிறதா.

நான் சொன்னேன் 'பயப்படாதீங்க பாய், உங்களுக்கெதிரானது அல்ல,
அந்தப் புன்னகையின் மூலம் எனக்குத்தான் தகவல் சொல்லியிருக்கிறார்,

'தம்பி, நீ தங்குவதற்கு வேறு இடம் பார்த்துக்கோ' :)

எஸ்கேப்பு

Monday, March 07, 2011

வறுமையின் நிறம் சிவப்பு

அண்டை வீட்டான்
துபாயில் வேலை
குறைந்த சம்பளம் வங்கிக் கடன்
கடன்காரர் தொல்லையென‌
புலம்பி விட்டுச் சென்றதன் பின்
எனது செல்போன் ஒலித்தது

'ஏம்பா பக்கத்து வீட்டுக்காரன்
படிக்காதவன் ...
இங்கே சொத்துக்களாய்
வாங்கிப் போடுகிறான்
நீயோ படிச்ச புள்ள‌
வெவரமில்லாம இருக்கியே'

அடப்பாவி மக்கா,
இக்கரைச் சிவப்புக்கு
அக்கரைப் பச்சைதான் காரணமோ-----*-----*-----*-----நூறு திர்ஹத்திற்கு வாங்கிய
சட்டை அணிந்து வந்த அன்று

அதே நிறத்தில் அதே டிசைனில்
ஆஃபீஸ் பாயும் அணிந்திருந்தான்

நெருங்கிப் பார்த்ததில்
தரம் குறைந்திருந்தது தெரிந்தது

விலையை விசாரித்தேன்
பத்து திர்ஹம் என்றான்

அவனது சம்பளத்தை யோசித்தேன்
அதுவும் எனதை விடப் பத்து மடங்கு குறைவு

இப்படித்தான் விரலுக்கேத்த வீக்கமாய்
எல்லோருடைய பொழுதும் கழிகிறதோடிஸ்கி :
கவிதை உருவில் என்டர் தட்டி வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறேன். நறுக்கென்று
எழுதத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் டிங்கரிங் செய்து தந்தால் நலம். :)

இப்படியிருந்தா நல்லாயிருக்கும் இதைத் தவிர்த்தா நல்லாயிருக்கும்னு
புலவர் பெருமக்கள் சொல்லித்தந்தா எவ்ளோ நல்லாயிருக்கும். ஹூம் :(வஸ்ஸலாம்.

Wednesday, March 02, 2011

நீங்க எளிதில் கடத்தியா அல்ல அரிதிற் கடத்தியா

என்ன வேணுமின்னாலும் கடத்துங்க ஆனா நல்லதை மட்டும் கடத்துங்க.

ப்ளாக் எழுதுவதாயிருந்தாலும் சரி சினிமா எடுப்பதாயிருந்தாலும் சரி
அல்லது பேசுவதாயிருந்தாலும் சரி என்னுடைய இந்த எழுத்தால், பேச்சால்,
படைப்பால் ஏற்படும் விளைவுகள் என்ன, ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று
அறிந்து செய்வது நமக்கும் நல்லது நாம் சார்ந்த சமூகத்திற்கும் நல்லது.

நடப்பதை அல்லது நடந்தைத்தான் கூறுகின்றோம் என்றுதான் பறையறிவிக்கும்
பத்திரிக்கைகளும், நடுநிசி நாய்களும் மக்கள் மத்தியில் உலா வருகின்றன‌.

இன்னா நாற்பது,இனியவை நாற்பது போன்ற 'Do's and 'Dont's சொல்லப்பட்டது
ஒரு ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கிக் கட்டிக் காப்பதற்குத்தான்.

அடுத்தவனைப் பார்த்து நாம் மாறுவதை விட நம்மைப் பார்த்து அடுத்தவன்
மாறும் அளவுக்கு நாம் ஒரு மாடலாக முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

நம்மிலிருந்து என்ன வெளிப்படுமோ அதை வைத்துத்தான் கணிக்கப் படுகிறோம்.
இனி அந்த டைரக்டரைப் பார்க்கும் போதெல்லாம் நாய்கள் நினைவுக்கு வரும்.

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்று சொல்லப் படுவதுண்டு. அப்படித்தான்
இருக்கிறது கலையும் வலையும். நாளாக ஆக ஆத்ம நண்டு கொழுத்து திமிறவாரம்பிக்கிறது.

சினிமாவில் கவர்ச்சி,ஆபாசம்,குத்துப் பாட்டு மற்றும் சண்டை இருந்தால்தான் ஓடுகின்றன.
அதுபோல் பதிவுலகிலும் இவை கொண்ட பதிவுகள்தாம் பிரபலமாகின்றன். நாம் அல்லது
நம் படைப்புகள் பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கமிருந்தால் இந்தச் சகதியில் நாமும்
அகப்பட்டு விடுவோம். நம்முடைய நோக்கம் சமூகத்திற்கான சேவை என்றிருந்தால்
பிரபலம், ஓட்டு, ஹிட்ஸ் பற்றிக் கவலைப் படாமல் 'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்று தொய்வில்லாமல் தொடரும். இறுதியில் 'வாய்மையே வெல்லும்'.

அழகாகச் சொன்னார்கள் எம்பெருமானார்(ஸல்) அவர்கள்.
'நீ நல்லதிற்குச் சாவியாகவும் தீயதிற்குப் பூட்டாகவும் இரு' என்று.

நம்மிடத்தில் மின்னஞ்சலாய் வந்து சேரும் பெண் ஏஞ்சல்களின் படம் கண்டு ரசித்தோமோ
இல்லை ஏங்கிப் புசித்தோமோ இல்லை தலை கவிழ்த்துத் தவிர்த்தோமோ, உடனே தடைப்
பூட்டு போட வேண்டும் அரிதிற் கடத்தியாய், யாருக்கும் ஃபார்வர்டு செய்யாமலே.

அன்பு,ஆரோக்கியம்,சமூகம்,ஒற்றுமை,பாதுகாப்புச் செய்திகளை உடனுக்குடன்
பரவலாக்க வேண்டும் எளிதில் கடத்தியாய்.

ஈக்கள் எல்லாவற்றிலும் அமர்கின்றன. மணமோ பிணமோ சாக்கடையோ
எதுவும் பார்ப்பதில்லை. அவற்றிலிருந்து நோய்கள்தாம் பரவுகின்றன.மாறாக‌
தேனீக்கள், மலர்களோடு பாசம் உயர் மலைகளிலும் மரங்களிலும் வாசம்.
நமக்குத் தருகின்றன தேனென்னும் நோய் நிவாரண ரசம்.

நீங்கள் தேனீயாக வாழ விருப்பமா அல்லது ஈயாக நாற விருப்பமா.

தேனீயாக வாழ விரும்பினால் தீன்(நல்)வழி தேர்ந்தெடுங்கள்.

தீமைகளோடு புழங்காதீர். அவற்றின் ஆரம்பம் கவர்ச்சி முடிவு இழிவும் அழிவும்.

நன்மைகளை விரும்புங்கள், அவற்றின் ஆரம்பம் கொஞ்சம் சிரமம், ஆனால்
முடிவோ நிம்மதி,வெற்றி,சந்தோஷம்,ஆரோக்யம்,etc.,etc.டிஸ்கி :
புத்திமதி உங்களுக்கென்று நினைக்க வேண்டாம். நான் எழுதுவதை
அதிகம் பார்வையிடும் என்னை முன்னிருத்திச் சொல்லப் பட்டது.

வஸ்ஸலாம்.