Wednesday, October 20, 2010

சண்டையைத் தவிர்த்த சமயோசிதம்

அரேபியாவின் ஏதோவொரு வீட்டில் ஒருநாள் கூட்டம் கூடியிருந்தது. பயணத்தினூடே
அங்கு வந்து ஒரு பெரியவர் என்ன கூட்டம் என்று விசாரித்ததில் 'தகப்பனார் தனது
மூன்று பிள்ளைகளுக்கு பின்வருமாரு உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதாவது
சொத்தில் பாதி முதல் பிள்ளைக்கும், நாலில் ஒரு பகுதி இரண்டாவது பிள்ளைக்கும்,
மூன்றாவது பிள்ளைக்கு ஐந்தில் ஒரு பகுதியும் கொடுக்கப் பட வேண்டுமென்று
எழுதப்பட்டிருக்கிறது. எல்லாம் பிரச்னையின்றி பங்கு போட்டுக் கொடுத்தாகி விட்டது.

ஆனால் இந்த 19 குதிரைகளை மட்டும் பிரித்துக் கொடுக்க முடியவில்லை. குதிரையை வெட்டுவதற்கும் தயாரில்லை, என்ன செய்வதென்றே தெரிய வில்லை. இதனால்
மூவரும் அடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என்றனர். உடனே பெரியவர்,
'அவ்வளவுதானா, அப்ப என்னுடைய குதிரையையும் அதில் சேர்த்து விடுங்கள். இப்போ
20 குதிரைகள். முதல் பிள்ளைக்கு 10, இரண்டாவது பிள்ளைக்கு நாலில் ஒரு பகுதி 5,
மூன்றாவது பிள்ளைக்கு ஐந்தில் ஒரு பகுதி 4, ஆக மொத்தம் 19 முடிந்தது, என்னுடைய
குதிரையை எனக்குத் தந்து விடுங்கள் என்று சொல்லியவாறு நடையைக் கட்டினார்.

******************************************************************************

ஒருவன் ஒரு பெரியாரைத் திட்டிக் கொண்டிருந்தான், அவன் வலப்புறமாக வந்து
திட்டினால் அவர் இடப்புறம் திரும்பினார், அவன் இடப்புறம் வந்து திட்ட, அவர்
வலப் புறம் திரும்பினார். அவனும் கடுப்பாகி முகத்திற்கு நேராக வந்து 'ஏன்யா,
அப்பயிலிருந்து ஒன்னத் திட்டுறேனே ஒனக்குத் தெரியலயா, இல்ல திட்டுறது
ஒரைக்கலயான்னு கேட்க, பெரியவர் அழகாக பதில் சொன்னார்,
'நானும் அப்போதிலிருந்து உன்னை மன்னித்துக் கொண்டிருக்கிறேனே,
அது உனக்குத் தெரியவில்லையா?'. அடடா, இவரல்லவா மனிதர். இவர் போல்
யாவரும் இருந்தால், எத்துணை அழகும் அமைதியும் பெறும் இவ்வுலகம்.

******************************************************************************

சென்ற வாரம் நடைபெற்ற சம்பவம் இது. பள்ளியில் மக்ரிப் தொழுது விட்டு
வெளியில் வந்தேன். தெரிந்த ஒரு பையன் 'பாய் டீ சாப்பிடலாமா' எனக் கேட்க,
நான் 'வேணாந் தம்பி, இப்பத்தான் குடிச்சேன்' என்று சொல்லிவிட்டு நகர,
என்னை நோக்கி ஒரு பெங்காலி பையன் வேகமாக வந்து, கை கொடுத்த பின்
அவனை உமக்குத் தெரியுமாவெனக் கேட்க, ஆம் தெரிந்த பையன் தான் என நான்
சொல்ல, அவன் எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டான் எனச்
சொல்ல, நானும் 'அப்படியா, அவனைக் கூப்பிடு, நான் பேசி வாங்கித் தருகிறேன்'
என்று முந்தையவனின் பக்கம் திரும்ப, ஆள் எஸ்கேப்பு.

பெங்காலியும் தமிழ்ப் பையனைத் தொடர்ந்து சென்று கண்டு,பிடிக்க, அவன் கையைத்
தட்டி விட்டு ஓட, அதுவும் வேகமாக வரும் வாகனங்களைக் கூடத் துச்சமென மதித்து
ரோட்டைக் கிராஸ் செய்து ஓடுவதைப் பார்த்த எனக்குக் கோபம் வந்து நானும் துரத்த,
நான் ஓடுவதைப் பார்த்து என் நண்பனும் ஓடி வர ஒரு வழியாக அவனைப் பிடித்தோம்.

பிடித்த மாத்திரத்திலேயே நான் கேட்ட கேள்வி 'ஏண்டா ஒடுற'.
இதுவரை மரியாதையாகப் பழகிய நான் ஒருமையில் கேட்டதைச் சகிக்காத அவன்
கொஞ்சம் திகிலாகி, 'என்னது? என்னைய்யாக் கேட்டீங்க, நீங்க நம்மாளு அவன்
பெங்காலி, அவனுக்குப் போய் சப்போர்ட்டு பண்றீங்களே, இது நியாயமா?'.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. எதுக்கு ஓடுற, எவ்வளவு கொடுக்கணும் ,
எதுக்குக் கடன் வாங்குன ?. 'கடனா, இல்லண்ணே, நெட்டு போனு, அவன் கிட்ட
பேசுனேன். அதுல மீதி,அஞ்சு ரூவா கொடுக்கணும், ஆனா அவன் இருவது ரூவா
கேக்குறான். அதனால கோவத்துல நான் கொடுக்கவே கூடாதுன்னு இருந்தேன்'.

அடப்பாவிகளா, வெறும் அஞ்சு பத்துக்கு இப்படி உயிர மதிக்காம ஓட வச்சிட்டீங்களடா.
சரி, அஞ்சு ரூவாதானே, மொதல்ல அதக் கொடு, மத்ததப் பேசித் தீத்துக்கலாம்னு
சொல்லி, அவனும் அஞ்சு திர்ஹத்தைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டே
பெங்காலி சொன்னான், 'ஓக்கே, மன்னிச்சுட்டேன்'.

எனக்கோ கோபம் பெங்காலியின் மீது திரும்பி, 'டேய், இந்த சல்லிக்காசு பெறாத
விஷயத்தைப் பெருசாக்கிட்டீயே, அது மட்டுமல்ல, அஞ்சு ரூவாய்க்குப் பதிலா இவனை
இருவது ரூவாக் கேட்டு எதுக்குடா தொல்லை பண்ணினாய்'னு கத்த, பெங்காலியும் ஏதோ
சொல்ல வரும் போது, நண்பர் அவனைத் தடுத்து, என் தோள் மீது கை போட்டவாறு
கூட்டி வந்து விட்டார். பிறகு மெதுவாக அந்த உண்மையைச் சொன்னார்.

அதாவது காசு கொடுக்க வேண்டிய பையனை நான் சத்தம் போடும் நேரத்தில் இவர்
பெங்காலியிடம் 'உனக்கு எவ்வளவு தரணும்' எனக் கேட்டு இருபதையோ அல்லது பத்து திர்ஹத்தையோ கையில் தள்ளி 'உஸ்கு மாஃப் கர்தோ' (அவனை மன்னித்து விடு)
என்று சொல்லியிருக்கிறார்.

ஓ! அதுனாலதான் காட்சிகள் டக்கென்று மாறியதோ!

இந்த டெக்னிக்கு நமக்குத் தெரியாமப் போச்சே :)

அடுத்த நாள் நம்மாளைச் சந்தித்த போதும் இதைத்தான் மீண்டும் கேட்டான்.
'ஏம்பாய், நீங்க நம்மாளு, அவனுக்குப் போய் சப்போட்டு பண்ணீங்க'.
நான் சொன்னேன், 'இல்ல தம்பி, இனத்தின் மீது பாசம் இருக்க வேண்டும் தான்.
ஆனால் இனத்தைச் சார்ந்தவன் தவறு செய்யும் போது அதைத் தட்டிக் கேட்காமல்
அவனுக்கு சப்போர்ட் செய்தால் அவன் 'இனவெறி' பிடித்தவனாகிறான் என்று நம்ம
நபி சொல்லியிருக்காங்களே தெரியாதா ?

******************************************************************************

எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாலிப வயதில் நடைபெற்ற சம்பவம் ஒன்றும் நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நபியாவதற்கு முன்னொரு நாளில், இறையில்லமான கஃபத்துல்லாஹ்வைப் புனரமைத்த பின் மக்காவின் குரைஷிகள் அதில் 'ஹஜருல் அஸ்வத்'
கல்லைப் பதிப்பிக்கும் போது ஒரு பெரிய சண்டை ஏற்படும் சூழல் உண்டானது.

குரைஷிகளின் மூன்று குலத் தலைவர்களும் அந்தக் கல்லைப் பதிப்பிக்கும் வாய்ப்பு தம‌க்கே
தரப்பட வேண்டுமென்று வலியுறுத்த, நிலைமை மோசமாக, ஒருவர் சொன்னார், 'இந்தப்
பாக்கியம் யாருக்குக் கிடைக்க வேண்டுமென்பதை, இப்போது கஃபாவுக்குள் வரும் நபரே
முடிவு செய்யட்டும். இதனை ஆமோதித்த அனைவரும் ஆவலாய் கஃபாவுக்குள் நுழையும்
நபரை நோக்கி தமது பார்வையைச் செலுத்தினர்.

அங்கே வந்து கொண்டிருந்தது நமது கண்மணியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
மக்கள் அவர் மீது அன்பும் கண்ணியமும் வைத்திருந்த நேரம் அது.. அவரின் முடிவுக்குக்
கட்டுப் படுவதாக மனப் பூர்வமாக ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் செய்த தீர்ப்பு என்ன
தெரியுமா, தமது தோளில் அல்லது தலையில் இருந்த துண்டை எடுத்து கீழே வைத்து
அதன் மேல் 'ஹஜருல் அஸ்வத்' கல்லை வைக்குமாறு சொன்னார்கள். அவ்வாறு
வைக்கப் பட்டதும், துணியின் நான்கு மூலைகளில் ஆளுக்கு ஒரு மூலையைப்
பிடிக்குமாறு மூன்று தலைவர்களிடமும் சொல்ல நான்காவது மூலையைத் தாமே
பிடித்துக் கொண்டார்கள். ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டாடியே அவர்களும்
கல்லைப் பதித்தனர்.வாழ்க நபிக‌ளின் திருநாமம் ; வளர்க‌ அவர்களின் திருப்பணி.

ஆக இறைவன் நமக்குத் தந்த புத்தி சாதுர்யத்தின் உதவியால் சமுதாய
ஒற்றுமைக்குப் பாடுபடுங்கள் சகோதரர்களே.

வஸ்ஸலாம்.

18 comments:

அஹமது இர்ஷாத் said...

என்ன‌ தொட‌ர்ந்து ச‌ண்டை, ச‌மாதான‌ம், ச‌ம‌யோசித‌ம் அப்ப‌டின்னு போய்க்கிட்டே இருக்கு.. ம்ம் நீங்க‌ விவ‌ரித்த‌து நேரில் இருந்த‌ உண‌ர்வு.சுவ‌ராஸ்ய‌ம்..

அரபுத்தமிழன் said...

சமுதாயத்திற்காக ஏதாவது நல்ல கருத்தைச் சொல்லலாம்னுதான்.
அடுத்த பதிவு மொக்கை போட்டுட வேண்டியதுதான். நமக்கு கவிதை
எழுதுவதுதான் மொக்கைப் பதிவு முயற்சி. :)
நன்றி இர்ஷாத்.

அரபுத்தமிழன் said...

இந்தப் பதிவை ஆவலாய் நிறைய பேர் படிக்க வர்ர மாதிரி தெரியுது.
பெருசா இருக்குதேன்னு முழுசாப் படிக்காம போயிடாதீங்க. இது ஒரு
'சாண்ட்விச் பதிவு'. பதிவுக்கு நடுவில் சூடான சம்பவம் ஒன்று
உண்டு, வலைப்பூவில் முதல் முறையாக சென்ற வாரம் நடந்தது :)

bandhu said...

இந்த பதிவில் வரும் முதல் கதை கேனோ உபநிஷத்-ல் வரும் கதை என்று ஞாபகம்.

அரபுத்தமிழன் said...

ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் காலத்தில் படித்த சம்பவம் அது. :)
முல்லா நசீருத்தீன் சம்பவமா எனக் கூட ஐயம் வந்தது. மொத்தத்தில்
அந்த சமயோசிதம் பிடித்தது. 'கேனோ உபநிஷத்' என்றால் என்ன என்று
கொஞ்சம் சொல்லுங்களேன்.

எஸ்.கே said...

நல்லாயிருக்குங்க! சுவாரசியம் அதிகமாகுது! தொடரட்டும்!

அரபுத்தமிழன் said...

நன்றிங்க எஸ்.கே.
ரசிக்கும் மனோபாவம் இருக்கும் வரை சுவாரசியம் தொடரும்.

ஸாதிகா said...

//ஆக இறைவன் நமக்குத் தந்த புத்தி சாதுர்யத்தின் உதவியால் சமுதாய
ஒற்றுமைக்குப் பாடுபடுங்கள் சகோதரர்களே.
// கடைசியா அழகிய வரிகள் கொடுத்து சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

அரபுத்தமிழன் said...

@சாதிகா,
முதல் வருகைக்கும் முத்தான பின்னூட்டத்திற்கும் நன்றி

ஹுஸைனம்மா said...

//'ஏம்பாய், நீங்க நம்மாளு, அவனுக்குப் போய் சப்போட்டு பண்ணீங்க'. //

தெரிஞ்ச பையனையே இந்தத் துரத்து துரத்தியிருக்கீங்க!! :-( பிராது கொடுத்தவர்கிட்ட முதல்லயே ”தீர விசாரிச்சிருந்தா” இந்த மாரத்தானைத் தவிர்த்திருக்கலாமே!! வயசான காலத்துல இப்படி ஓடிவிளையாடலாமா, அதுவும் ரோட்டில? :-))

அரபுத்தமிழன் said...

:)))

இது 'எந்திர' யுகமாச்சே, ஓடலன்னாலும் நட்டு கழண்டுடும்.
'புதிய மனிதா'ன்னு பாடிப் பாருங்க உங்களுக்கும் ஓடத்தோணும் :)

அதிரை எக்ஸ்பிரஸ் said...

It is a good post keep writing

அரபுத்தமிழன் said...

ThanX Express.
ஆமா நீங்க எந்த எக்ஸ்ப்ரஸ்.
express/xpress/ekspress
பேருக்கா பஞ்சம்
Confusion why why :)

surivasu said...

நன்றக தொகுத்து எழுதறிங்க... நிறைய எதிர்பார்க்கிறேன்.

அரபுத்தமிழன் said...

வாங்க நண்பரே! மிக்க நன்றி

அரபுத்தமிழன் said...

//இந்த இந்து , முஸ்லின் விளையாட்டை நிறுத்தி விட்டு, பார்த்தால், உண்மை ஒன்றே , ஆளுக்கு ஒரு பெயர் வைத்து கொண்டு குழப்புகிறார்கள் என்பது புரியும்..//

உண்மை.

//இறைவன் ஒருவனே.. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.. அதை ஒருவர் அல்லாஹ் என சொல்லாலம்..ஒருவர் காட் எனலாம் ..இதுவெல்லாம் மொழி விளையாட்டுதான்..//

அருமை.

//இறைவன் ஒருவனே..அவன் இறைதூதர்களை அந்தந்த காலத்திற்கேற்ப , மனிதர்களுப்பேற்க அனுப்பி இருக்கிறான்.. இதில் நமக்குள் பிரிந்து கொண்டு முட்டி கொள்வது வீண் வேலை...
மாறாக, தமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பகிர்த்து கொள்வதே அனைவருக்கும் நல்லது..
அந்த நல்ல பணியை நீங்கள் செய்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்... //

அறிவிற் தெளிந்த பார்வையாளரே ! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

mohamed said...

அன்புள்ள அரபுத் தமிழன்
சண்டையும் சச்சரவும்
நன்றாஹா உள்ளது

அரபுத்தமிழன் said...

நன்றி முகம்மத், 'சபாஷ் சரியான போட்டி' ஸ்டைல்ல சொல்ற மாதிரில்ல இருக்கு :)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)