பெண்கள் படும் துயரத்தை ஒரு பெண்தான்
சரியாகச் சொல்ல முடியும்
பெண்களைப் பற்றி பொதுவாகப் பாடச்
சொல்லியிருந்தால் ஒரு புகழ்ப்பா பாடியிருக்கலாம்
ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் பற்றி
பாடச் சொன்னதால், அவர்தம் கஷ்ட நஷ்டங்களை
குவிலென்ஸ் மூலம் பார்த்த பறவைப் பார்வையிது
இதில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் பொருந்தாது
எனினும் ஏதாவது ஒன்று எல்லோருக்கும் பொருந்தும்
வீடு, மனைவி, இரவு இம்மூன்றும் அமைதி தருபவை
என்பது திருமறையின் அருள் வாக்கு
நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள் என்றும்
நபியின் மனைவிகளைப் பார்த்து குர் ஆன் கூறுகிறது.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும்
மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு,
தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில்
உறுதி குலையாமல் இருப்பவள் பெண்
வீட்டுக்குள் கிடைக்காத நிம்மதி
வெளியில் கிடைக்காது என்ற பொருள்பட
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன் என்று குறளும் சொல்கிறது
மறைகள் சொல்வது போல மாதர் தம்
மாளிகைக்குள் மறைந்திருந்தாலே
மானிடருக்குள் வம்புமில்லை தும்புமில்லை
வீட்டுக்குள் இருப்போருக்கு
வேலைகள் பல இருந்தாலும்
வெட்டியாய் சில பொழுதுகள்
வெறுமனே கழியத்தான் செய்கின்றன
தன்னிஷ்ட நேரத்தில் வேலை செய்யலாம்
படுத்துக்கொண்டே அலைபேசியில் தொலை பேசலாம்
வீடு தேடி வரும் வென்டார்ஸிடம் விலை பேசலாம்
அரட்டையும் அடிக்கலாம் குறட்டையும் விடலாம்
தலை சாய்த்து ஓய்வெடுக்கலாம் இல்லை
கலைகள் பல பார்த்து மகிழவும் செய்யலாம்
தெரியாத தேவதைகளை விட அருகில் இருக்கும்
தெரிந்த பிசாசுகளே மேல் என்று சொல்வது போல்
மாமியாரும் நார்த்தனாவும் மகளிர் மட்டும் Danger Zone தான்
எனினும் வரம்பு மீறப்படாது வசந்தங்களே மேலோங்கி நிற்கும்
ஆனால் ஒரு பெண் வெளியில் வந்து விட்டாலோ
அண்ட சராசரமே ஆட ஆரம்பித்து விடும்
கெளம்பும் போதே கெரகம் பிடித்து விடும்
ROAD CROSSING கும் EVE TEASING கும்
தொடுதலும் உடல் படுதலும்
மோத வந்து விலகிச் சென்ற வாகன
ஓட்டி திரும்பி நின்று திட்டுதலும்
வரிந்து கட்டும் வரிசையாக
பஸ்ஸில் பயணமென்றால்
பர்ஸை நினைத்து படபடப்பு
ரயிலிலே கழுத்துச் சங்கிலியை
ரகசியமாய்த் தொட்டுப் பார்த்து பரிதவிப்பு
ஆட்டோவில் சென்றால் ஆழ் மனதில் பயம்
ரோட்டோரம் செல்லும் போது அடிக்கடி பயம்
வெயில் சுட்டதும் மேனி கருக்குமோ
காற்று பட்டதும் தலைமுடி கலையுமோ
ஆடை விலகுமோ மேக்கப் தொலையுமோ
மதிய உணவை மறந்தது சரியோ
மேட்சுக்கு மேட்ச் அணிந்தது சரியோ
காட்சிக்கு ஏற்ற அணிகலன் சரியோ
சேலைக்கு ஏற்ற செருப்பு நிறம் சரியோ
இப்படி எண்ணற்ற நினைவலைகள்
வந்து தொலையும் வீதிகளில் பிச்சைக்காரர் தொல்லை
பஸ்ஸின் நெரிசலிலோ பாலியல் தொல்லை
அலுவலகம் வந்தால் அரசியல் தொல்லை
மாதாந்திர வலியை மறைக்கும் தொல்லை
மாமியார் பேச்சை நினைக்கும் தொல்லை
பசியால் குழந்தை துடிக்குதோ - இல்லை
பால் குடித்த பின் தூங்குதோ
ஸ்கூல் போகும் பிள்ளை
ஒழுங்காய்ப் படிக்குதோ - இல்லை
படிப்பது போல நடிக்குதோ
அலுவலகம் சென்ற புருஷன்
யாருடனும் போடக்கூடாதே கடலை
என்ற கவலையும் சேர்ந்து
இது போன்ற இன்னும் பல கவலைகளில்
மூழ்கும் மனம் எந்த வேலையிலும் லயிப்பதில்லை
காலையில் பூத்த புது மலர் போல
வேலைக்குச் சென்று விட்டு
மாலையில் வீடு திரும்பிய பின்பும் வீட்டு
வேலைகள் செய்யும் பெண்களுக்கு
வீட்டில் இருக்கும் பெணக்ளை விட
வேலையும் மன உளைச்சலும் அதிகமே
என்று முடிவுக்கு வந்தாலும்
சிலருக்கு வீடு நரகமாய் இருந்தால் அவர்
வெளியில் செல்வது இதமாய் இருக்கும் அப்படி
இல்லையென்றால் வீட்டில் இருப்பதே சுகம்