Tuesday, September 28, 2010

ஜின் பள்ளத்தாக்கில் இன்'ஜின்' ஓடிய அதிசயம்

'வாதியே ஜின்' (பேய் பள்ளத்தாக்கு) என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம்.
இது நம்ம‌ மக்கள்ஸ் வைத்த பெயர். சவூதி அரசாங்கம் வைத்த பெயரோ 'குலைல்'.
(குலை நடுக்கம் மறுவியதோ ? :)

மதீனாவிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில், மலைகளால் சூழப்பட்ட பகுதி. அந்தப்
பகுதியின் அதிசயம் என்னவென்றால் காரை நிறுத்தி 'நியூட்ரலில்' வைத்தால், அது
தானாக வேகமெடுத்து 120 கி.மீ. வேகத்தில் சுமார் பத்து கி.மீ. தூரம் வரை ஓடி
வேகம் படிப்படியாகக் குறைந்து பின் நின்று விடுகிறது. இத்தனைக்கும் அது
செங்குத்தான பகுதியும் அல்ல, சமதள ரோடுதான். அந்த இடத்தில் ஒரு
'ஆச்சர்யக்குறி' போர்டு வைக்கப் பட்டிருக்கிறது. அங்கேயுள்ள 'ஜின்கள்'
காரைத் தள்ளிவிடுவதாக நம்பப் படுகிறது.

உஹதில் லுஹர் தொழுதுவிட்டு அங்கு பயணமானோம். எங்களுக்கு அந்த இடம்
எதுவென்று சரியாகத் தெரியாததால் ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி 'சோதனை'
செய்து பார்த்தோம். ம்ஹூம். அது ரமலான் என்பதால் நான் சொன்னேன்,

'ஒரு வேளை ஜின்களெல்லாம் நோன்பு பிடித்து விட்டுத் தூங்குதோ என்னவோ?' :)

இப்படியாகச் செல்கையில் மெதுவாக வந்த ஒரு காரைக் கண்டோம், அவர்களும்
எங்களைப் போல் அங்கு வந்த 'ஆர்வக் கோளாறுகள்' என்பதை அறிந்து விசாரித்த
போது 'ஆச்சர்யக்குறி' போர்டிலிருந்து ஆரம்பிக்குமாறு சொன்னார்கள். அங்கே
சென்று வண்டியை 'நியூட்ரலில்' வைத்தபின் ஸ்டியரிங்கைப் பலமாகப் பிடித்துக்
கொண்டார் டிரைவிங் நண்பர். ஆஹா, மெதுவாக நகர ஆரம்பித்த வண்டி இப்போ
'ரெக்கை கட்டிப் பறந்தது'. நானும் ஜின்கள் தெரிகின்றனவா என்று பார்த்தேன்.
ம்ஹூம். வண்டியும் ஒரே சீரான வேகத்தில் சென்று ஒரு சிறிய அணை இருக்கும்
பகுதியில் வந்து நின்று விட்டது.

இப்படி வரும் ஒவ்வொரு வண்டியையும் 'வேலமெனக்கெட்டுத்' தள்ளிவிடுமா எந்த
ஜின்னும், ஒரு வேளை காந்தப் புலமாக இருக்குமோ என்னவோ. ஆனாலும் இது ஒரு
ஜாலி அனுபவம்தான். நம்ம ஊராக இருந்திருந்தால் ஒரு கோயிலோ அல்லது தர்காவோ
முளைத்து உண்டியல் வைத்து காசு பார்த்திருப்பார்கள்.ஆனால் சவூதியோ இது போன்ற
மூட நம்பிக்கைகளை ஒழிக்க நினைப்பதால், இப்பகுதியில் எந்த அறிவிப்பையும்
வைக்கவில்லை, ஆச்சர்யக்குறி பலகையைத் தவிர. அப்படிப்பட்ட ஒரு பகுதி இருப்பதே
அங்குள்ள நிறைய பேருக்குத் தெரியாது.

திரும்பி வந்து கதைக்கையில் ஒரு நண்பர் தாம் ஜின்னைப் பார்த்துள்ளதாகச் சொன்னார்.
அவர் ஒரு பெரிய வாகனத்தின் (டிரைலர்) டிரைவர். கம்பெனி பொருட்களை எடுத்துக்
கொண்டு 'தபூக்' மற்றும் 'யான்பு' போன்ற ஊர்களுக்கு அடிக்கடி சென்று வருபவர். அப்படி
ஒருநாள் நள்ளிரவில் திரும்பும் வழியில் தூக்கம் மிகைத்து ரோட்டோரம் வண்டியை
நிறுத்திவிட்டுத் தூங்கும் போது கதவு தட்டப் பட்டதை உணர்ந்து எழுந்து டார்ச் அடித்துப்
பார்த்து விட்டு யாருமில்லாததால் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்த போது வண்டி பலமாகக்
குலுங்கியது. அதிர்ந்து எழுந்த போது, வண்டியை பல பேர் சேர்ந்து உலுப்பியது போல்
இருந்தததால் வெளியே எட்டிப் பா......ர்த்தார். ஒன்றும் தெரியாததால் பயந்து போய்
இடத்தைக் காலி செய்து அடுத்து வந்த ஊரில் வண்டியை நிறுத்தி கதையைச் சொன்ன
போது ஆங்குள்ளோர் 'ஆம், அது ஜின்னோட வேலைதான், இது போல் பல பேருக்கு நேர்ந்திருக்கிறது' என்றனர். (என்னங்க, பார்த்தார்னு சொன்னீங்க, ஆனா அவர் பார்க்கவே இல்லையேன்னு கேக்க நெனக்கிறது தெரியுது, வெயிட் வெயிட், ஒரு சோடா ப்ளீஸ்).

இப்படித்தான் ஒருநாள் பயணத்தின் வழியில் மாலை மங்கும் நேரத்தில், சூரிய
அஸ்மனத்திற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன் 'கைபர்' எனும் இடத்தில்
வண்டியை நிறுத்தி அங்குள்ள கோட்டையைப் பார்த்து வரும் எண்ணத்தில் கீழிறங்கினார்.
நபி(ஸல்) காலத்தில் யூதர்கள் கைபரில்தான் வசித்தார்கள். நபியுடன் செய்த
உடன்படிக்கையை மீறியதால் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து யூதர்கள் அந்த
ஊரைக் காலிசெய்து விட்டு வேறிடம் சென்று விட்டாலும் வேறு யாரும் அங்கு சென்று
குடியேறாமல் பாழாகிப் போன இடம் அது. அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்லும்
பயணிகளுக்காக ஒரு மஸ்ஜித் ஹஜரத் அலீ (ரலி) பெயரில் கட்டப்பட்டது. அதுவும்
காடு மண்டிப் போய் சிதிலமடைந்து காணப் படுகிறது. அங்கு சென்ற நண்பர்,
கோட்டைக்குள் சென்றால் இரவாகி விடும் என்றெண்ணி பள்ளிக்குள் மட்டும் சென்று
வரும் எண்ணத்தில் உள்ளே நுழைந்து சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினார்.

அப்போது யாரோ இருப்பது போல் உணர்ந்து அனிச்சையாக ஸலாம் சொல்ல, பதிலேதும் கிடைக்காத‌தால் பார்வையை ஆளிருந்த பகுதியை நோக்கிச் செலுத்தும் போதுதான் கவனித்திருக்கிறார், அந்த ஆள் தரையில் இல்லை ... மாறாக ஒரு தூணின் உச்சியில்
சம்மணமிட்டு அமர்ந்து இவரை நோக்கி, சிவந்த பெரிய தமது கண்களை விரித்து கோபமாகப்
பார்த்த உருவத்தைக் கண்டவுடன்,முதலில் இவர் 'ஜின்'னென்று உணரவில்லை .. மாறாக,
திருடனாயிருக்கும் என்ற எண்ணமும் அதோடு தனது பாக்கெட்டில் கம்பெனியின் பணம் பதினைந்தாயிரம் ரியால் இருப்பதும் நினைவுக்கு வர நைசாகப் பள்ளியை விட்டு வெளியில்
வந்து ஓட்டம் பிடித்து மூச்சிரைக்க, வண்டிக்குள் ஏறி ஸ்டார்ட் செய்த பின் தான் போன உயிர்
திரும்ப வந்த‌தாம். வந்து கதையைச் சொல்லிக் கதைக்கும் போதுதான் 'திருடர்களெல்லாம்
கிடையாது, அங்கே ஜின்கள் உண்டென்ற விஷயம்' தெரிய வந்ததாம். இது நடந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டன. மீண்டும் நண்பர்களுடன் அங்கே சென்று பார்த்த போது, அங்கே பள்ளிக்குள்ளேயும் செல்லமுடியாதவாறு முற்செடிகளுடன் கூடிய பாதை அடைபட்டிருக்கிறது.

**************************************************************************************

'ஹயாத்துஸ் ஸ‌ஹாபா'வில் ஒரு சம்பவம் வருகிறது. இஸ்லாத்திற்கு முன் அரபியர்கள்
பயணம் செல்லும் வழியில் ஏதும் மலை சார்ந்த பள்ளத்தாக்கில் இரவு தங்குமாறு
நேரிட்டால், இவ்வாறு சத்தமாக அறிவித்து விட்டுத்தான் தங்குவார்களாம். 'இப்
பள்ளத்தாக்கின் தலைவருக்கு எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள். நாங்கள் எங்களின் பயணத்தினூடே இங்கு இரவைக் கழிக்க நேரிட்டு விட்டது. சிரமத்திற்கு மன்னிக்கவும்,
காலையில் இடத்தைக் காலி செய்து விடுவோம். அது வரை எங்களுக்கு எந்தத்
தொல்லையும் நேர விடாமல் பார்த்துக் கொள்ளவும்'. இப்படி அறிவிக்கா விட்டால்
அங்குள்ள ஜின்கள் தொல்லை கொடுக்குமாம். இப்படித்தான் ஒருநாள் மனிதர்களின் குழுத்
தலைவர் அறிவிக்கையில், இருட்டிலிருந்து சப்தம் வந்தது,

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ

"மனித‌, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து
செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால்,
(வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.(அல்குர்ஆன் 55:33)

என்ற குர்ஆன் வசனத்தைச் செவியுற்றனர். மேலும் தொடர்ந்த அச் சப்தம் 'நீங்கள் கவலைப்
படத் தேவையில்லை, இனி எங்களுடைய தொல்லைகள் இருக்காது. நாங்களெல்லாம் முஸ்லிம்களாகி விட்டோம், நீங்களும் மதீனா சென்று முகம்மத்(ஸல்) அவர்களின் கரம்
பற்றி இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுங்கள்'.

**************************************************************************************

ஓ! ஜின்களிலும் மத வேறுபாடுகள் இருக்கா என்று சிலர் யோசிப்பது தெரிகிறது. ஆம்.
அவைகளும் நம்மைப் போல்தான். ஆனால் மனிதனை விட்டு அகன்று மலை,காடு,தீவு
என்று வசிப்பவை. நாளை அவைகளுக்கும் கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம் எல்லாம் இருக்கின்றன. மனிதர்களும் ஜின்களும் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும். அதைப் பார்க்கும் இறைவனை நிராகரித்தோர், நாமும் மண்ணாகிப்
போகக் கூடாதா என்று கதறுவார்கள்.

"நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் -
மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - செயல்களை - அந்நாளில்
கண்டு கொள்வான் - மேலும் நிராகரித்தவன் 'அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப்
போயிருக்க வேண்டுமே!' என்று (பிரலாபித்துக்) கூறுவான்." (அல்குர்ஆன் 78:40)

வஸ்ஸலாம்.

12 comments:

நட்புடன் ஜமால் said...

! ஜின்களிலும் மத வேறுபாடுகள் இருக்கா என்று சிலர் யோசிப்பது ]]

உண்மையிலேயே யோசிச்சிகிட்டு தாங்க இருக்கேன் போன நொடியிலிருந்து ...

பீர் | Peer said...

நல்லா எழுதறீங்க... எப்படி கண்ல மாட்டாம இருந்தீங்க?

அரபுத்தமிழன் said...

ஜமால், உண்மையாகவா ?
(ஜின்னை வசப்படுத்தி வைத்திருக்கும் யாரிடமாவது கேட்கலாமே)

@பீர்,
//நல்லா எழுதறீங்க..//
நன்றி தலைவரே! நீங்க ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை ?

//எப்படி கண்ல மாட்டாம இருந்தீங்க?//
என்னையும் ஜின் கூட்டத்துல சேத்துட்டீங்களே :)

பீர் | Peer said...

இதோ இங்க எழுதிக்கிட்டுத்தானே இருக்கேன்.

பை தி வே, எழுதும் தளத்தை மாற்றிவிட்டேன்.

ஹுஸைனம்மா said...

//நம்ம ஊராக இருந்திருந்தால் ஒரு கோயிலோ அல்லது தர்காவோ
முளைத்து உண்டியல் வைத்து காசு பார்த்திருப்பார்கள்//

இந்தத் தெறம சவூதிக்காரவுங்களுக்கு இல்லன்னு சொல்லுங்க!!

அந்த இடத்துல அறிவியல் பூர்வமா ஏதாவது மாற்றம் இருக்கும்; இதேபோல அதிசயங்கள் பலவும் பல இடங்களில் இருப்பதாப் படிச்சுருக்கோமே!!

அப்ப்றம், பிரபல பதிவர்களெல்லாம் கமெண்டிருக்காங்க!! பிரபலமாகிட்டீங்க போல!! வாழ்த்துகள். :-)))

அரபுத்தமிழன் said...

அதான பாத்தேன், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வழக்கமா வர்ர வாடிக்கையாளரைக் காணோமேன்னு பாத்தேன். அதான் ஜின்ன அனுப்பி வச்சேன். வந்துட்டீங்க. :-)

அரபுத்தமிழன் said...

//பிரபலமாகிட்டீங்க போல!! //

அம்மாடி, பிரபலமாயிட்டா, டைப்பும் போதெல்லாம் தயக்கம் வந்து தடுக்கும்.
எப்போதும் போல ஃபரீயா வே டைப்பிட்டுப் போறேன்.:-)

Abdulcader said...

சுவாரஸ்யமான நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.

அரபுத்தமிழன் said...

//சுவாரஸ்யமான நல்ல பதிவு//
நன்றி கா.க்.கா. (காயல் பட்டண காயலாங்கடை காதர்). பேரே சும்மா அதிருது. காயலாங்கடை என்பது காயலிலிருந்து வந்ததோ. எங்களூரிலும் இக் கடை உண்டு. :-)

அரபுத்தமிழன் said...

'ஜின்' பட்டதோ இல்லை
'கண்' பட்டதோ என் பதிவுகளின் பக்கம்
இப்போதான் கொஞ்சம் நடமாட்டம் தெரியுது. இந்த நேரம் பாத்து,
ஸ்கிரீன் எல்லோருக்கும் தெரியுற மாதிரி ஆபீஸ் செட்டப்ப மாத்திப்புட்டாய்ங்களே ... :‍ (

Unknown said...

ஆஹா.. கதையெல்லாம் வித்தியாசமாத்தான் இருக்கு..

வண்டி எல்லாம் எஞ்சின் ஸ்டார்ட் பண்ணாமலே நகருதா.. இது ரொம்பப் புதிய தகவல்.. இணையத்தில் தேடிப் பார்க்கறேன்..

அரபுத்தமிழன் said...

உண்மையான அனுபவம்தான் அது. இது போல வேறு சில இடங்களிலும்
இருப்பதாகப் பிறகு அறிந்தேன்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)