Monday, July 18, 2011

ரெண்டாம் ஜாமத்துக் கனவு

(முந்தைய கனவின் தொடர்ச்சி)

கனவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இரவின் கடைசிப் பகுதியில் காணப்படும் கனவுதான்.
கனவு கண்ட நேரத்தைப் பொறுத்தும் அது பலிக்கும் நாட்கள் கணிக்கப் படுகின்றன. கனவில் இறைவனைத் தரிசிக்கலாம் (அதற்கானத் தகுதியை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில்).
நபியை, நபித்தோழரை மற்றும் நல்லோர்களையும் கனவில் காண முடியும்.
ஆனால் அது நம் கையில் இல்லை, இறைவன் அனுமதித்தாலே தவிர‌‌.

நல்லோர்கள் மட்டுமல்ல ஷைத்தான்களையும்,விலங்கினங்களையும் காண முடியும். ஜின், ஷைத்தானையோ அல்லது விலங்கினத்தையோ காண்பது நல்லதல்ல. ஆனால் அவற்றை
வெல்வது போல் கண்டால் நடக்கவிருந்த ஒரு தீமையை விட்டுத் தப்பித்தது போலாகும்.

-------------------------- * * * * * -------------------------

ஒருமுறை நண்பர்களைச் சந்திக்க துபாய் சென்றிருந்த சமயம். இரவுச் சாப்பாட்டை வழியில்
கண்ட ஒரு ரெஸ்டாரன்டில் சாப்பிட்டு விட்டு இருட்டுப் பகுதியான தொழில்பேட்டையில்
இருக்கும் அவர்களின் குடியிருப்பை நோக்கித் தனியனாகச் சென்று சேர்ந்தேன்.

அவர்களைச் சந்தித்து அளவளாவிய பின் அங்கேயே தங்கினேன். மற்றவர்கள் அவரவர்
கட்டிலில் சயனிக்க, எனக்குக் கிடைத்தது ஒரு மூலையில் தரை டிக்கெட்டு. படுக்கும்
போதே தலை சுற்றுவது போல் தெரிந்தாலும் நொடியில் உறங்கிப் போனேன்.

எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை, நடுச் சாமத்தில் திடீரென விழித்துக் கொண்டேன், கொஞ்சம் வேர்த்திருந்தது. மற்றெல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். இப்போது நினைவுக்கு வந்தது சற்றுமுன் நான் கனவில் கண்ட காட்சி. கைநகங்கள் நீண்ட,
கூரிய பற்கள் கொண்ட ஆண் மற்றும் பெண், இருவரும் கோபத்துடன் என்னை நெருங்க முயற்சிக்கும் தருணத்தில் திடுக்கிட்டு விழித்துள்ளேன். (பாவம் மூலையில் தமது
தேவைக்காக ஒதுங்கி இருந்தவர்களை டிஸ்டர்ப் செய்து விட்டேனோ :)

மாறிப் படுப்பதற்கும் மாற்று இடம் அங்கில்லாததால் வேறு வழியின்றி,
'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என்று ஓதி இடது பக்கம் மூன்று முறை
துப்பி விட்டு (நபிவழி), பின் ஆயத்துல் குர்ஸீ (குர்ஆன் 2:255) ஓதி உடம்பில் ஊதித்
தடவிய பின் மீண்டும் படுத்துக் கொண்டேன். என்ன ஆச்சர்யம், அரைமணிக்குப் பின்
தூங்கிய பொழுதில் மீண்டும் அதே காட்சி. இருவரும் என்னை நோக்கி நகர, இப்போது
என் கையில் மிகத் தடித்த கம்பு ஒன்று இருப்பதை உணர்ந்து அவைகளை நோக்கி
அடிக்க எத்தனித்தேன். அதற்குள் அவைகள் மறைந்து போயினர்...

-------------------------- * * * * * -------------------------

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின்
நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ
அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட
தவணை வரை (வாழ்வதற்காகத் திருப்பி) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும்
மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் ‍ 39:42)

-------------------------- * * * * * -------------------------

நாம் தூங்கும் போது நம்மை விட்டு எது விலகுகிறது (இறைவனால் கைப்பற்றப் படுகிறது)
என்று தெரியவில்லை. ஆன்மாவா அல்லது ஆத்மாவா அல்லது வேறெதுவுமா. தூங்கிய
பிறகு குறட்டை மற்றும் மூச்சுத்துடிப்பின் மூலம் உயிர் இருக்கிற‌து என்பது தெளிவாகத்
தெரிகிறது. பிறகு எதுதான் செல்கிறது. ஒளுவுடன் தூங்கியவர்கள் இறைவனைச் சந்தித்து
ஸஜ்தா செய்வதாகவும் மற்றவர்கள் (ஸஜ்தா செய்யாமல்) வெறுமனே சந்தித்து விட்டுத்
திரும்புவதாக அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தூங்குமுன் ஓத வேண்டிய துஆக்களில் பின்வரும் அர்த்தம் பொருந்திய துஆ ஒன்றும்
உண்டு. 'இறைவா ! நீ என் ஆத்மாவைப் பிடித்து வைத்துக் கொண்டால் அதன் மீது
இரக்கம் காட்டி கிருபை செய்வாயாக. இன்னும் அதைத் திருப்பி அனுப்புவதாக
இருந்தால் நல்லோர்களைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக
!'

அப்படிச் சென்று திரும்பி வரும்போது நாம் காணும் காட்சிகள்தாம் கனவாய்த் தெரிகிறதோ
என்றும் சிந்திக்கத் தோணுகிறது. நபியவர்கள் தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்
இன்று யாராவது கனவு கண்டீர்களா என்று தோழர்களிடம் விசாரித்து அதற்கான
பலன்களைச் சொல்லுபவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருதடவை தாம் கனவில் கண்ட
சொர்க்க, நரகக் காட்சிகளை விவரித்துள்ளார்கள்.எனவே எதிர்காலம் சம்பந்தப் பட்ட
விஷயங்கள் கூட இறைவன் அனுமதிக்கும் சிலருக்குக் கனவில் காட்டப் படுகின்றன‌.

'சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன'
என்று இறைவன் சொல்வதால் இது பற்றி இன்னும் சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

6 comments:

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

ரமலான் நல்வாழ்த்துக்கள்

அரபுத்தமிழன் said...

வஅலைக்குமுஸ்ஸலாம் சகோ
ரமலான் வாழ்த்துக்களோடு நன்றிகளும்

pichaikaaran said...

மிகவும் இன்ஃபர்மாடிவாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரார்த்தனைகள் எந்த நூலில் இருக்கின்றன

pichaikaaran said...

ஓதி விட்டு மூன்று முறை துப்புவது போன்ற வழிமுறைகள் , தொகுப்பாக நூல் எதிலும் கிடைக்குமா அல்லது நேரடியாக கற்க வேண்டுமாறைகள் , தொகுப்பாக நூல் எதிலும் கிடைக்குமா அல்லது நேரடியாக கற்க வேண்டுமா

enrenrum16 said...

உருப்படியா கனவு வர்றதே அபூர்வமாயிருக்கு... அதுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சா மண்டைதான் காயும்...ஒருவேளை அர்த்தமுள்ள கனவு வர்ற அளவுக்கு என் எண்ணங்கள் இன்னும் தேறலையோ என்னவோ..

உங்க கனவு அனுபவம் ஆச்சரியமா இருக்கு... இறைவன் என்ன அழகா உதவியிருக்கான்?! மாஷா அல்லாஹ்....

டவுட்டு: ஆன்மா வேறு ஆத்மா வேறா???

அரபுத்தமிழன் said...

//பார்வையாளன் said...
ஓதி விட்டு மூன்று முறை துப்புவது போன்ற வழிமுறைகள் , தொகுப்பாக நூல் எதிலும் கிடைக்குமா//

இதற்கு ஏன் பதிலளிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை.

புத்தகங்கள் நிறைய உண்டு. சென்னை மண்ணடி பகுதியில்
நிறைய இஸ்லாமியப் புத்தகக் கடைகள் உண்டு.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)