Wednesday, April 27, 2011

எங்கே நான் சென்று தேடுவேன்

முன் பகுதியின் தொடர்ச்சி ....

அர‌ச‌ன் எங்களை மூன்று நாட்கள் தங்க வைத்து உபசரித்தான். ஒரு நாள் இரவில்
ஆளனுப்பி எங்களை அவனிடம் அழைத்து வரச் செய்தான்.....


----------------------------------------------------------------------------

அருகில் எங்களை அமர வைத்துச் சிறிது நேரம் அளவளாவிய பின் ஆளனுப்பி ஒரு
பெட்டியைக் கொண்டு வருமாறு செய்தான். தங்க வேலைப்பாடுடன் கூடிய‌
அப்பெட்டியைத் திறந்தான். அதற்குள் பல அடுக்குகள் காணப்பட்டன. ஒவ்வொரு
அடுக்கிலும் கருப்பு மற்றும் வெள்ளைத்துணிகளால் சுற்றப்பட்ட சதுர வடிவமான‌
பொருட்கள் காணப்பட்டன. முதல் அடுக்கிலிருந்து எடுத்து கருப்பு நிற சில்க் துணியால் போர்த்தப்பட்டதைப் பிரித்த போது செந்நிறமான ஓவியம் தெரிந்தது. மிக உயரமான,
பெரிய‌ கண்கள், தாடியில்லாத‌ நீண்ட கழுத்து கொண்ட மிக அழகான ஒரு
மனிதனின் உருவம் இருந்தது. அரசன் கேட்டான் 'இது யார் தெரியுமா'.

நாங்கள் தெரியவில்லை என்று சொன்னதும், 'இவர்தான் ஆதம்'. நாங்கள் வியந்து
பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னொன்றைப் பிரித்து 'இது யார் தெரியுமா' என்று
கேட்க நாங்கள் தெரியவில்லை என்று தலையாட்டினோம். இவர்தான் நோவா, நீங்கள்
சொல்லும் நூஹ் நபி. பெரிய தலையுடன் சுருண்ட முடிகளுடன், அடர்ந்த தாடியுடன்,
சிவந்த கண்களுடன் வெண்மை நிறத்துடன் காணப்பட்டார்.

அடுத்ததை எடுத்து 'இது யார் தெரியுதா' என்று கேட்க நாங்கள் இல்லை என்று
சொன்னோம். மிக வெண்மையான தோற்றம், நீண்ட கன்னங்கள், அழகான கண்கள்,
பரந்த நெற்றி, வெள்ளை தாடி, புன்னகை முகத்துடன் காணப்பட்ட‌ உருவத்தை
'இவர்தான் ஆப்ரஹாம்' என்றான்.

அடுத்ததைப் பிரித்து 'இவர் யார் தெரியுமா' என்று எங்களிடம் நீட்டியபோது
அதிர்ச்சியும் பரவசமும் அடைந்து உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. எங்களால்
கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுதவாறே சொன்னோம்,

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இது எங்களின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்'. இதைக் கேட்டதும் அரசன் உடனே எழுந்து நின்றான்.
சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் அமர்ந்து கொண்டு கேட்டான்.

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர் நீங்கள் சொல்லும் அதே முஹம்மதுதானா' ?

'சந்தேகமில்லை அவர்களேதான், அவர்களை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது' .

ஹெர்குலிஸ் நீண்ட நேரம் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


பிறகு மீண்டும் ஒவ்வொன்றாய் எடுத்துப் பிரித்து 'இது யார் தெரியுமா' என்று
கேட்க எங்களுக்கு யாரையும் தெரிந்திருக்க வில்லை. இவர்தான் மோசஸ் மற்றும்
அவரது சகோதரர் ஆரோன் பின் இம்ரான், இவர்தான் லூத், இவர்தான் இஸ்ஸாக்,
இவர்தான் ஜேக்கோப், இவர்தான் இஸ்மவேல், உங்கள் நபியின் பாட்டனார், இவர்தான்
டேவிட், இவர்தான் சாலமன் என்று சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் இவர்தான்
மர்யமின் மகன் ஜீசஸ் என்று முடித்த பின் எங்களை நோக்கி

'கடைசியில்தான் முஹம்மது நபியின் புகைப்படத்தைக் காட்டியிருக்க வேண்டும்,
ஆனால் வரிசைக் கிரமத்தை வைத்து நீங்கள் கடைசிப் படத்தை முகம்மதின் படம்
என்று கணித்துச் சொல்வீர்களோ என்று ஐயப்பட்டதால்தான் இடையிலேயே காட்டினேன்'.

நாங்கள் கேட்டோம், 'எங்கிருந்து தங்களுக்கு இப்படங்கள் கிடைத்தன' ?

'ஆதம் இறைவனிடம் தனக்குப் பிறகு வரும் இறைத்தூதர்களைக் காண்பித்துத்
த‌ருமாறு ஆவலுடன் கெஞ்சிக் கேட்டதால் இறைவன் அவருக்கு இவ் ஓவியங்களை
அனுப்பி வைத்தான். சூரியன் அஸ்தமாகும் பகுதியில் மறைந்து கிடந்த ஆதமுடையப்
பொக்கிஷப் பேழையில் இருந்து இப் பெட்டியை துல்கர்னைன் கொண்டு வந்து
தானியேலிடம் ஒப்படைத்தார்.'

பிறகு ஹெர்குலிஸ் தொடர்ந்து,
'கவனியுங்கள், இறைவன் மீது சத்தியமாக, இந்த என்னுடைய நாட்டை விட்டு
வெளியேறி, (இஸ்லாத்தை ஏற்று), உங்களில் மிக மிகத் தாழ்ந்த ஒருவ‌னின்
அடிமையாக என்னுடைய மீதிக் காலத்தைக் கழிக்க வேண்டாமா என்றுதான்
நானும் ஆசைப்படுகிறேன்' என்று பெருமூச்செறிந்தான்.

எங்களுக்கு நிறையப் பரிசுப் பொருட்களைத் தந்து மிக்க மரியாதையுடன் அனுப்பி
வைத்தான். நாங்கள் மதீனா திரும்பி வந்து நடந்ததையெல்லாம் அமீருல் முஃமினீன்
ஹஜரத் அபூபக்கரிடம் எடுத்துச் சொன்னபோது அவர்களும் அழுதார்கள் சுற்றியிருந்தவர்கள்
அனைவரும் அழுதனர். பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்,

(இந்த) ஹெர்குலிஸ் மிக நல்ல‌வன், இவன் விஷயத்தில் அல்லாஹ் நலவை
நாடினால் இவன் (இஸ்லாத்தை) அடைந்து கொள்வான்'.

மேலும் சொன்னார்கள்,

'ரசூலுல்லாஹ் நமக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள், கிறிஸ்தவர்களும்,
யூதர்களும், நபியவர்களின் அடையாளத்தை அவர்களுக்குக் கொடுக்கப்
பட்டவைகளிலிருந்து தெரிந்து கொள்வார்கள்'.




சம்பவத்தை அறிவிப்பவர் : ஹஜரத் 'ஹிஷாம் பின் ஆஸ் அமவி (ரலி)' அவர்கள்.


டிஸ்கி: அல்லாஹ் மன்னிக்க வேண்டும். இது ஹதீஸின் நேரடித் தமிழாக்கம்
இல்லை, ஞாபகத்தில் உள்ளதை எழுதியுள்ளேன். ஹதீஸில் ஒவ்வொரு நபியைப்
பற்றியும் வர்ணனை உண்டு. அல்லாஹ்வே மிக அறிந்தவன். வஸ்ஸலாம்.

17 comments:

pichaikaaran said...

முற்றிலும் புதிய தகவல்கள் . நன்றி

அரபுத்தமிழன் said...

நன்றி தோழா.

ஹுஸைனம்மா said...

இந்த ஹெர்குலிஸ்-ம், கிரேக்க/ரோமானிய வரலாற்றீல் வரும் ஹெர்குலிஸ்-ம் வேறுவேறா?

ஹுஸைனம்மா said...

அப்புறம் என்ன ஆச்சு? மன்னன் மனம் மாறினானா?

அரபுத்தமிழன் said...

ரோமானியப் பேரரசை ஆண்டவர்கள் அரபியில் 'ஹிர்கல்' என்ற‌ழைக்கப் படுகிறார்கள். எனவே ஹெர்குலிஸ் என்பது ஒரு ஆள் கிடையாது.
அபூசுஃப்யான்(ரலி) இஸ்லாத்திற்கு வருவதற்கு முன் அவரிடம் நபியைப்
பற்றி விசாரித்ததும் ஒரு 'ஹிர்கல்'தான். அவரும் இந்தச் சம்பவத்தில்
வருபவரும் ஒருவரா என்று தெரியவில்லை.

அரபுத்தமிழன் said...

மனம் கண்டிப்பாய் மாறியிருக்கும் ஆனால் மதம் மாறினாரா (அதாவது
வெளிப்படையாய் அறிவித்தாரா) என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் சபையில் தூது வந்த சஹாபிகளைப் பார்த்து ஒரு ஹிர்கல்
'இது சத்தியமான மார்க்கம்தான்' என்று சொன்னதும் சபையில் ஒரு
சலசலப்பு எழுந்தவுடன் 'உங்களைச் சோதிப்பதற்குத்தான் அவ்வாறு
சொன்னேன் என்று மழுப்பிய வரலாறும் உண்டு. ஓப்பனாக அறிவித்தால்
தம் உயிருக்குப் பங்கம் ஏற்படும் என்று பயந்த சம்பவமும் உண்டு.

Pebble said...

Alhamdhuillah,
Worth waiting.......

VELAN said...

அன்பு நண்பருக்கு வணக்கம்.

எனது பிளாக்கில் பின்நூட்டமிட்டதற்கு நன்றி.
எனக்கு திருமணம் ஆகி விட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தகப்பனாகப் போகிறேன் . திருமனமானால் காதல் குறைந்து விடுமா என்ன. :-)

அரபுத்தமிழன் said...

Alhamdhuillah,
Worth waiting.......

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Thanks dear Pebble

அரபுத்தமிழன் said...

அன்பு வேலன் ஜீ,
//குழந்தைகளுக்கு தகப்பனாகப் போகிறேன்//

வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைக‌ள்.

//காதல் குறைந்து விடுமா என்ன //

இதை நீங்கள் அனுபவத்திலேயே கண்டிருப்பீர்களே :)


எனது கருத்து என்னவென்றால் காதல்+காமம்+பைத்தியம்
அல்லது காதல்+காமம்+வீரியம் ரெண்டும் படிப்படியாகத்
தனித்தனியாகக் கழன்று விடும்
(Rocket Technology :)

காதல் மட்டும் நிலவை அடைந்த பின் பாசமாக மாற ஆரம்பிக்கும்.

குழந்தைகள் பிறந்த பிறகு கணவன்,மனைவி,குழந்தைகள்
எனப் பாசமும் ஒருவர் மாற்றி
ஒருவர் மேல் ஓடிப் பிடித்து
விளையாடிக் கொண்டிருக்கும்.

அரபுத்தமிழன் said...

ஓ, நீங்களிட்ட பின்னூட்டம் எனது அன்றையப் பின்னூட்டத்திற்கான பதிலா.
நானும் கேள்விதான் கேட்டிருக்கிறீர்கள் என‌ அப்பாவித்தனமா 'காதல்'
பற்றி எனது கருத்தைச் சொல்லி விட்டேனே, அய்யகோ, புரட்சித் தலைவி
சகோ ஹுசைனம்மா பார்த்தால் வறுத்தெடுத்து விடுவார்களே :)

ஹுஸைனம்மா said...

//ஹுசைனம்மா பார்த்தால் வறுத்தெடுத்து விடுவார்களே//

உங்களை வறுத்துவச்சு என்னா பண்றது? ஒரு தயிர்ச்சோறு, புளிச்சோறுக்குக்கூட உதவாது!!

//நானும் கேள்விதான் கேட்டிருக்கிறீர்கள் என‌ அப்பாவித்தனமா//

யார்கிட்ட எதைப்பத்திக் கேக்கணும்னு தெரிஞ்சுதானே, ஊர்ல இருக்கவுங்களையெல்லாம் விட்டுட்டு உங்ககிட்ட வந்து கேட்டிருக்காரு. அதுவும் இறைநம்பிக்கை குறித்த இந்தப் பதிவில்!! நீங்களும் ‘விம்’ சோப் பவுடர் போட்டு விளக்காத குறையா பதிலும் கொடுத்தாச்சு. அப்புறமென்ன ”அப்பாவித்தனமா”ன்னு டயலாக்?

அரபுத்தமிழன் said...

//நீங்களும் ‘விம்’ சோப் பவுடர் போட்டு // ஹல்லோ, இப்படியா 'விம்'முறது சாரி 'கும்'முறது :)

கமெண்டில் சிரிப்பான் வேணும் ஜாக்கிரதை :)

suvanappiriyan said...

சலாம் அரபுத் தமிழன்!

//'ஆதம் இறைவனிடம் தனக்குப் பிறகு வரும் இறைத்தூதர்களைக் காண்பித்துத்
த‌ருமாறு ஆவலுடன் கெஞ்சிக் கேட்டதால் இறைவன் அவருக்கு இவ் ஓவியங்களை
அனுப்பி வைத்தான். சூரியன் அஸ்தமாகும் பகுதியில் மறைந்து கிடந்த ஆதமுடையப்
பொக்கிஷப் பேழையில் இருந்து இப் பெட்டியை துல்கர்னைன் கொண்டு வந்து
தானியேலிடம் ஒப்படைத்தார்.'//

ஹெர்குலிஸ் அவர்களிடம் கேள்விகள் கேட்டதெல்லாம் நான் ஆதாரபூர்வமான நபி மொழியில் படித்திருக்கிறேன். பலருடைய புகைப்படத்தை காட்டியதாக வரும் செயதி உண்மையானதுதானா என்று சரிபார்த்துக் கொண்டீர்களா? ஏனெனில் நான் இந்த செய்தியை இது வரை கேள்விப்படவில்லை.

எந்த நூலிலிருந்து இந்த செய்தியை எடுத்தீர்கள் என்ற விபரத்தையும் தந்தால் உதவியாக இருக்கும். நன்றி.

அரபுத்தமிழன் said...

வ அலைக்கஸ் ஸலாம் சகோ,

'கன்ஸ்' எனும் அரபி நூலில் இப்னு கதீர்,பைஹகி,ஹாகிம் என்று பார்த்த
ஞாபகம் உண்டு, இன்னும் பல இருக்கலாம். எனக்கும் புதிதாகத்
தோன்றியதால்தான் இங்கு பதிந்தேன்.

suvanappiriyan said...

//எனக்கும் புதிதாகத்
தோன்றியதால்தான் இங்கு பதிந்தேன்.//


மார்க்க விஷயங்களில் புதிதாக இருந்தாலும் அது ஆதாரபூர்வமான ஹதீஸ்தானா என்று பார்த்து விட்டே போட வேண்டும். ஏனெனில் நாம் நன்மை என்று நினைத்து ஒரு காரியத்தை செய்யப் போய் பாவத்தில் வீழ்ந்து விட வேண்டி வரும். இது பற்றி நபிகள் நாயகத்தின் எச்சரிக்கையும் இருக்கிறது. எனவே ஹதீஸ் கிடைக்கவில்லை, அல்லது ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாக இருந்தால் குறிப்பிட்ட அந்த இடத்தை நீக்கி விடுவதே நல்லது சகோ.

அரபுத்தமிழன் said...

சகோ, தஃப்ஸீர் இப்னு கதீர் (2:251),பைஹகி,ஹாகிம்
இவைகள் ஆதார நூற்கள். எனக்குப் புதியதாக இருப்பதன் காரணம் நான்
இப்போதுதான் ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்றுதான்
அர்த்தமே ஒழிய 'பித் அத்' எனும் 'புதியதல்ல'. நபி (ஸல்) அவர்களுக்குப்
பிறகு நடந்த சத்தியமான வரலாறு இது என்றே நம்புகிறேன்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)