Wednesday, March 23, 2011

தர்கா - ஒரு குவிலென்ஸ் பார்வை – Part I

இது எந்த குரூப்பையும் சாராத ஒரு சாமானியனின் புரிதல்கள் :

------------------- 'அல்லாஹ்வே மிக அறிந்தவன்' -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை
அல்லாஹ்வைத்தவிர) என்ற கலிமா தய்யிபாவின், தலையாய மந்திரத்தின்,
பிரம்ம சூத்திரத்தின் நோக்கம் அல்லது உள் அர்த்தம் என்னவென்றால்,

‘யாரைக்கொண்டும் எதுவும் நடப்பதில்லை எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான்
நடக்கின்றன. அவனன்றி எதுவும் அசைவதில்லை. படைப்பினங்கள் படைத்தவனின்
உதவியின்றி எதுவும் செய்ய இயலாது. ஆனால் படைத்தவனோ படைப்பினங்களின்
உதவியின்றி எல்லாம் செய்யும் ஆற்றல் பெற்றவன். எனவே அவன்தான்
உண்மையில் வணங்கப்படுவதற்கு உரித்தானவன்’.

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.

இந்தத் தத்துவத்தை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். இவ்வுலகம்
சோதனைக்கூடம். இந்த நம்பிக்கையைக் கெடுப்பதற்கான சம்பவங்கள் அலைகள்
போல வாழ்க்கையில் வரும் போகும். ஆனாலும் இந்த நம்பிக்கையைக் கடைசி
வரையிலும் பாதுகாத்து அவனிடம் சென்று சேர்பவர்களுக்குப் பரிசாகச் சுவனம்
காத்திருக்கிறது. இதற்கு மாறாக நம்பிக்கையைப் பறிகொடுத்து, அவனுக்கு
இணைவைத்து, அவனது விருப்பத்திற்கு மாறாக வாழ்ந்து மறைந்தவர்களுக்குக்
கடும் தண்டனை காத்திருக்கிறது (முஸ்லிமாகப் பிறந்திருந்தாலும்).

சுப்யான் என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்கள்,
‘இறைத்தூதரே, தங்களுக்குப் பின் யாரிடமும் கேட்கத் தேவைப்படாத அளவு எனக்கு
ஒரு உபதேசம் செய்யுங்கள், நான் அதைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறேன் என்று நான்
கேட்டதற்கு நபியவர்கள் சொன்னார்கள்,

அல்லாஹ்தான் என் இறைவன் என்று சொல் பின் அதன் மீது நிலைத்திரு


-------------------------- * * * * * -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ்வை மனதார மொழிந்து இறைவனை ஏற்ற சில
நொடிகளில் மரணம் வரப்பெற்றவர்கள் அல்லது மனித சஞ்சாரமற்ற காட்டிலோ
தீவிலோ மலையிலோ வாழ்ந்து கலிமாவின் தத்துவப்படி மரணித்தவர்கள்
சுலபமாகச் சுவனம் சென்றடைவார்கள்.

ஆனால் மக்களோடு மக்களாய், குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்து வரும் இறை நம்பிக்கையாளர்களுக்குப் பலவிதமான சோதனைகள் காத்திருக்கின்றன.
(அதுபோல நன்மைகளும் முன்னவர்களை விட மிக அதிகமாகக் கிடைக்கும்)
வாழ்வில் அவர்கள் சந்திக்கும் தேவைகள்,பிரச்னைகள்,நோக்கங்கள் தீருவதற்குச்
செய்யப்படும் முயற்சிகளை வைத்து அவர்களின் நம்பிக்கை பரிசோதிக்கப்படுகிறது.
எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள், எதில் செலவழிக்கிறார்கள், நோய் போன்ற
பிரச்சனைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், பாதுகாப்புக்கு யாரை நாடுகிறார்கள்
போன்ற எல்லா விஷயங்களும் கண்காணிக்கப் படுகின்றன.

"நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்)
அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள்
எண்ணிக் கொண்டார்களா ? (அல்குர்ஆன் 29:2)

‘உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்
உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள்
எண்ணுகிறீர்களா’ (அல்குர்ஆன் 2:214)


-------------------------- * * * * * ----------------------------


PANADOL உபயோகித்தோம் தலைவலி பறந்து விட்டதென்றால் அதன் மீது
நம்பிக்கை வருவது இயல்பு. அடுத்தமுறை தலைவலி வந்தால் அனிச்சையாய்
அதனைத் தேடுகிறோம். குழந்தைக்குச் சுகம் கிடைத்து விட்டால் குழந்தை
மருத்துவரின் மீது நம்பிக்கையும் அன்பும் பிறக்கிறது. பிறருக்கும் அவரிடம்
செல்லுமாறு ஆலோசனை சொல்லவாரம்பித்து விடுவோம். இதுதான் மனித இயல்பு.

இஸ்லாம் என்ன சொல்கிறது, "நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக்
குணப்படுத்துகிறான்’ (அல்குர்ஆன் 26:80). ‘நோய் நிவாரணமின்றி எந்த நோயும்
இறங்குவது கிடையாது’ (ஹதீஸ்).

உடனே நமக்குள் ‘அப்ப நாம் ஏன் டாக்டரிடம் செல்ல வேண்டும்’ என்ற ஒரு
கேள்வி பிறக்கும். பதில், ‘டாக்டரிடம் போகத்தான் வேண்டும்’. காரணம்
இறைவன் இவ்வுலகத்தைக் காரண காரியங்களைக் கொண்டு படைத்துள்ளான்.

ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் அவனது சக்தி இருக்கிறது. மருத்துவரால்
அல்லது மருந்தால் குணம் ஏற்படுவது போல் தோன்றினாலும் இறைவன்தான்
குணப்படுத்தினான் என்று விளங்கி அவனுக்கு நன்றி செலுத்தும் போது ஈமான்
என்ற நம் நம்பிக்கை வலுப்பெறுகிறது, பாதுகாக்கப் படுகிறது.

படைக்கப் பட்டவை அனைத்தும் உடல் என்றால் அவற்றின் உயிர் அவனது
கட்டளை அல்லது சக்தியாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் நல்லதும் உண்டு
கெட்டதும் உண்டு. ஒரு பொருள் நமக்கு நன்மை தருவதும் தீமை தருவதும்
அவனது நாட்டப்படி அல்லது கட்டளைப் படி தான்.

நம்முடைய கடமை படைப்பினங்களை உபயோகிக்க வேண்டும் ஆனால் நம்பிக்கை
வைக்கக் கூடாது. மேலும் உபயோகிக்குமுன் அவனிடம் ஒரு வேண்டுதல் செய்வது
அவனுக்குப் பிடித்தமானது. கம்பெனி எம்.டி யிடம் வேலையாள் அனுமதி பெற்றுச்
செல்வது போல. ‘செருப்பின் வார் அருந்தாலும் அவனிடமே கேளுங்கள்
என்று நபியவர்கள் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு வினவுகிறான்.

“(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே
நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில்
உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக
(நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே
(அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(இப்பூமியில்) நீங்கள் விதைப்பதை கவனித்தீர்களா? அதனை நீங்கள்
முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால்
நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். "நிச்சயமாக நாம் கடன்
பட்டவர்களாகி விட்டோம். "மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற
முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா ? மேகத்திலிருந்து அதை
நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால்,
அதைக் (குடிக்க முடியாத அளவுக்குக்) கசப்பானதாக ஆக்கியிருப்போம்.
(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள்
உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை
நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்குப் பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு
அவனைத் துதிப்பீராக". அல்குர்ஆன் (56 : 58-74)


-------------------------- * * * * * ----------------------------


இவ்வுலகம் பரிட்சைக் கூடம். மனிதனுக்கும் ஜின்னிற்கும் தனது இஷ்டப்படி
நல்லதையோ கெட்டதையோ ‘தேர்ந்தெடுக்கும் அதிகாரம்’ (Deciding Authority)
தரப்பட்டுள்ளது. மற்றப் படைப்பினங்கள் அனைத்தும் மனிதனுக்குச் சேவை
செய்வதற்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளன.

இவ்வுலக வாழ்வில் நாம் வளர்த்துப் பாதுகாத்த நம்பிக்கையும் சேகரித்த
செயல்களும்தான் மறுவுலகில் பரிசீலிக்கப்படவிருக்கின்றன. இறை நம்பிக்கையில்
மிக உயர்ந்தது ‘ஒரு பிரேதத்தைப் போல் இறைவனிடம் தன்னை ஒப்படைப்பது,
தனக்கென்று எந்த விருப்போ அல்லது வெறுப்போ இல்லாமல் இறை விருப்பத்திற்குத்
தன்னைத் தயார்ப்படுத்துவது.

இப்ராஹீம் நபியவர்கள் நம்ரூத் என்ற அரசனால் நெருப்பில் போடப்பட்டபோது
அங்கு வருகை புரிந்த ஜிப்ரீல் எனும் வானவர் தலைவரின் உதவியையும் மறுத்து,
‘நான் நெருப்பில் இடப்படுவது இறைவனின் விருப்பமென்றால் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்’ என்ற பதிலால் திருப்தியுற்ற இறைவன் நெருப்பையே குளிரச்
செய்தான். ஆனாலும் இதைப் பின்பற்ற எல்லோராலும் முடியாது என்பதற்காகவே
முகம்மது நபி(ஸல்) அவர்கள் சாதாரண மக்களிலிருந்து சான்றோர்வரை பின்பற்ற
ஏதுவாகப் பலவிதமானத் தீர்வுகளைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு, நபியவர்களைக் கொல்வதற்கு மக்கத்துக் குறைஷிகள் சுமார்
நூறு பேர் ஆயுதம் தரித்து அவர் வீட்டு வாசலில் காத்திருக்கும் போது இறைவனின்
நேரடி உதவியுடன் எதிரிகளின் ஊடே நடந்து தப்பித்தார்கள். அதே சமயம் அபுபக்கர்
எனும் தோழருடன் செல்லும் போது சாதாரண மனிதர்களைப் போல் மலைப் பொதும்பில்
மூன்று நாட்கள் மறைந்திருந்து தப்பித்தார்கள். நபியவர்களின் சொல்லிலும் செயலிலும் சான்றோருக்கான படிப்பினையும் சாமானியனுக்கானப் படிப்பினையும் சேர்ந்தே
மறைந்திருக்கின்றன. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் நோக்கத்தை, சாராம்சத்தைச்
சான்றோர்கள்தாம் நன்கு அறிய முடியும். சிலருக்குக் கனவின் மூலமாகவும்
அறிவிக்கப் படுகிறது. சிலர் குர்ஆன் ஓதும்போது அதன் உள் அர்த்தத்தின் மூலம்
விளங்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சான்றோர்களுக்கு முன்பு ‘சஹாபாக்கள்’
(நபித் தோழர்கள்) என்று பெயர். அதற்குப் பின் வந்தவர்களுக்கு வலிமார்கள்
(இறை நேசர்கள்) என்று பெயர்.

இறைநேசம்,இறைகாதல் இவற்றிற்காகத் தம்மை, தம் விருப்பு வெறுப்புக்களைத்
தியாகம் செய்பவர்களுக்காகத்தான் இந்த அந்தஸ்து கிடைக்கும். ‘ரிஸ்க் எடுப்பவன்
ரஸ்க் சாப்பிடுவான்’. இவர்கள் நல்ல மீனவர்களைப் போன்றவர்கள். நமக்கு மீன்
சாப்பிட விருப்பம் என்றால் ஒன்று நாம் கடலுக்குச் செல்ல வேண்டும். அதற்குப்
போதிய பயிற்சி வேண்டும். நல்ல மீன்கள் எங்கே கிடைக்கும் என்று அறிவது
மட்டுமல்லாமல் எங்கே என்னென்ன ஆபத்துக்கள் உண்டு அவற்றைச் சமாளிப்பது
எப்படி என்றும் அறிந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் நேரமோ பொறுமையோ
இல்லையென்றால் நல்ல மீனவர்களை நாடுவோம். அவர்களிடமிருந்து சில சமயம்
முத்து பவளங்கள் கூடக் கிடைக்கும் வாய்ப்புண்டு.

இதைப் போன்றுதான் இஸ்லாத்திற்காகத் தம்முடைய உயிர்,பொருள்,ஆவி,நேரம்,
பணம் கொடுக்க இயலாதவர்களும், ஞானத்தைத் தேடி அலைபவர்களும் நாடுவது
இந்தச் சான்றோர்களைத்தாம். இன்று இது போன்ற அறிஞர்கள் கிடைப்பது
குதிரைக் கொம்பாக இருப்பதால் பழைய அறிஞர்களையே கொண்டாடி வருகின்றனர்
பெரும்போலோர். இவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் சில ‘தர்காவாகக்
கொண்டாடப் படுகின்றன’. சில போலி தர்காக்களும் காசு நோக்கத்தில் உருவாக்கப்
பட்டுள்ளன. இனி தர்கா என்றால் என்ன, அங்குப் போகலாமா வேண்டாமா,
அப்படிச் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தீமைகள் என்ன என்பதை
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரப் பதிவில் பார்ப்போம். :)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


டிஸ்கி : எனது இந்தப் புரிதலில் தவறு இருந்தால் அன்பர்கள் தயை கூர்ந்து திருத்தவும்

53 comments:

சக்தி கல்வி மையம் said...

படிச்சு புரிந்துகொள்ள கடினமாயிருக்கிறது.. இன்னும் கொஞ்சம் எளிமைபடுத்துங்கள்...

அரபுத்தமிழன் said...

எனது பதிவுகளை முழுமையாகப் படிக்கிறீர்கள் என்பது தங்களின்
இந்த வேண்டுகோளின் மூலம் தெரிகிறது. ரொம்ப நன்றி சார்.
இதன் தொடர்ச்சியான அடுத்தப் பதிவு உரையாடல்களோடு மிக
எளிமையாக இருக்கும்.

Unknown said...

பயனுள்ள பதிவு.. முழுமையாகப் படிக்கல இன்னும்..

நாளைக்கு வர்றேன்.. நன்றி..

அரபுத்தமிழன் said...

நன்றி மீண்டும் வருக பாபு.

nagoreismail said...

எனக்கு நிறைய சந்தேகம் வருகிறது..
ஒவ்வொன்னா கேட்காம ஒன்னே ஒண்ணு கேட்கிறேன்..

செருப்புடைய வார் அருந்து விட்டது என்று வையுங்கள் அவனிடம் (இறைவனிடம்) கேட்காமல் செருப்பு தைப்பவரிடம் போய் நான் கேட்கிறேன் - நான் ஷிர்க் வைத்து விட்டேனா..? நான் செருப்பு தைப்பவரை அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்கி விட்டேனா? - அல்லது நான் போய் செருப்பு தைப்பவரிடம் ‘எப்படி நீங்கள் அல்லாஹ்வுடைய வேலையை செய்யலாம் என்று கேட்கலாமா?’

கேள்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.. அடுத்த பதிவில் என்ன எழுதப் போகிறீர்கள் என்று எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நான் மறுக்க போவதுமில்லை தடுக்க போவதுமில்லை..

pichaikaaran said...

மிக மிக சிறப்பான இந்த இடுகைக்கு டெம்பளேட் பின்னூட்டம் இட விரும்பவில்லை . இன்னும் சில முறைகள் படித்து விட்டு என் கருத்தை சொல்கிறேன் . ஆழமான கருத்தை எளிமையாக விளக்கி இருப்பதற்கு நன்றி. பலருக்கும் இது பயன்படும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல விரும்புகிறேன்

அரபுத்தமிழன் said...

இதுவரை தலைகாட்டாமல் இருந்து வந்த சகோ இஸ்மாயில்,
தர்காவைக் கண்டதும் தலைகாட்டியிருகிறீர்கள். நன்றி,
அடுத்தப் பதிவு வரை பொறுமை காக்கவும். :)

அரபுத்தமிழன் said...

தோழா, இதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைத்தால்
அந்தப் பங்கு கண்டிப்பாய் உங்களைச் சேரும் :)

nagoreismail said...

"தர்காவைக் கண்டதும் தலைகாட்டியிருகிறீர்கள். நன்றி, "

- நீங்க அவ்லியாவா..?!!!! (கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே!)

அரபுத்தமிழன் said...

நாம் எல்லோரும் அவ்லியாவாகத்தான் ஆசைப் படுகிறோம்.
ஆனால் அவன் ஓக்கே சொல்லணுமே :)
(சகோ பதிவை முழுமையாகப் படித்து விட்டீர்களா :)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்பதிவில் முதல் மூன்று பகுதிகள் அருமையோ அருமை. அசத்தி இருக்கிறீர்கள்...!

ஆனால்... நான்காவது பகுதி.... ஸாரி... அடிப்படையில் குழப்பமாக இருக்கிறது...!

///நாம் எல்லோரும் அவ்லியாவாகத்தான் ஆசைப் படுகிறோம். ஆனால் அவன் ஓக்கே சொல்லணுமே :)///---எனில், இந்திய தர்காவில் உள்ள 'அவுலியாக்கள்' அனைவருமே இறைவனால் ஓக்கே சொல்லப்பட்டவர்கள்தானா?

'ஆம்' எனில், அது எப்படி உங்களுக்கு தெரியும்?
{காரணம்...////இதைப் போன்றுதான் இஸ்லாத்திற்காகத் தம்முடைய உயிர்,பொருள்,ஆவி,நேரம், பணம் கொடுக்க இயலாதவர்களும், ஞானத்தைத் தேடி அலைபவர்களும் நாடுவது இந்தச் சான்றோர்களைத்தாம். இன்று இது போன்ற அறிஞர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால் பழைய அறிஞர்களையே கொண்டாடி வருகின்றனர் பெரும்போலோர். இவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் சில ‘தர்காவாகக்கொண்டாடப் படுகின்றன’////என்று சொல்லியுள்ளீர்கள்.}

'இல்லை' எனில், அதுவும் எப்படி உங்களுக்கு தெரியும்... {காரணம்...///சில போலி தர்காக்களும் காசு நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.///என்றும் சொல்லியுள்ளீர்கள்.}

அரபுத்தமிழன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம் ஆஷிக்,
//இந்திய தர்காவில் உள்ள 'அவுலியாக்கள்' அனைவருமே இறைவனால் ஓக்கே சொல்லப்பட்டவர்கள்தானா? //
அவ்லியா என்றால் தர்காவில்தான் இருக்க வேண்டுமா :)

அரபுத்தமிழன் said...

//முதல் மூன்று பகுதி ஓக்கே, நான்காவது பகுதி குழப்பம்//

கொஞ்சம் கொஞ்சமாக மலையிலிருந்து இறங்கி தர்காவை
நோக்கி வருகிறேன் சகோ :))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//அவ்லியா என்றால் தர்காவில்தான் இருக்க வேண்டுமா :)//

அப்போ தர்காவில் உள்ளவர்கள் எல்லாம் அவுலியாக்கள் இல்லையா...???????

////இவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் சில ‘தர்காவாகக்கொண்டாடப் படுகின்றன’////என்று சொல்லியுள்ளீர்களே சகோ.இப்னுழுபைர்...!

அரபுத்தமிழன் said...

//இடங்களில் சில // 'சில' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன் சகோ.

//அப்போ தர்காவில் உள்ளவர்கள் எல்லாம் அவுலியாக்கள் இல்லையா...//
என் கேள்வியைச் சரியாகப் புரியவில்லை என்று அர்த்தம்

அரபுத்தமிழன் said...

எனது கேள்வி, தர்காவில் மட்டும் அவ்லியாக்கள் இருக்க வேண்டுமா
வெளியிலே இருக்கக் கூடாதா என்பதுதான்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//'சில' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன் சகோ.//

மிக்க நன்றி சகோ.

தாங்கள் அறிந்து கொண்ட அந்த 'சில' எவை, என்று உங்களிடமிருந்தே அறிய ஆவல் சகோ.அரபுத்தமிழன்.

தயவு செய்து சொல்லுங்களேன்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///எனது கேள்வி, தர்காவில் மட்டும் அவ்லியாக்கள் இருக்க வேண்டுமா
வெளியிலே இருக்கக் கூடாதா என்பதுதான்.///---இருக்கலாம்...
இருக்கலாம்...
இருக்கலாம்....

ஆனால்,
அது உங்களுக்கும்
எனக்கும்
அந்த அவுலியாளுக்கும்,
தர்கா கட்டி உண்டியல் வைத்த பெருமக்களுக்கும்
எப்படி தெரியும்
என்பதுதான்
எனது அடிப்படை கேள்வி...
குவி லென்ஸ் கேள்வி...
சகோ.இப்னுஸுபைர்.

அரபுத்தமிழன் said...

//அந்த 'சில' எவை, என்று உங்களிடமிருந்தே அறிய ஆவல் //
மேற்சொன்ன 'சில' அடக்கஸ்தலங்கள் சான்றோர்களுடையது
என்பது எனது புரிதல்தான். அப்படித்தான் என அடித்துச் சொல்ல‌
நான் முறையாகப் பயிற்சி பெற்ற ஆன்மீக வாதி கிடையாது.

அரபுத்தமிழன் said...

//குவி லென்ஸ் கேள்வி...//

:))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///மேற்சொன்ன 'சில' அடக்கஸ்தலங்கள் சான்றோர்களுடையது
என்பது எனது புரிதல்தான்.///
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோ.அரபுத்தமிழன்.

தங்கள் புரிதலான அந்த 'சில' என்பது...
சிலவாகவும்... இருக்கலாம்...
பலவாகவும்... இருக்கலாம்...
எதுவும் இல்லாமாலும் இருக்கலாம்....
அல்லவா...?

ஆக,
"அது பற்றிய ஞானம் முழுக்க முழுக்க இறைவன் வசம் மட்டுமே..."
என்பதே எனது புரிதல்...
இதில் ஏதும் தவறு உண்டா சகோ? இருந்தால் சொல்லுங்கள்.

நன்றி:
//டிஸ்கி : எனது இந்தப் புரிதலில் தவறு இருந்தால் அன்பர்கள் தயை கூர்ந்து திருத்தவும்//
ஜ்ஸாக்கல்லாஹ் க்ஹைர்... சகோ.

அரபுத்தமிழன் said...

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை .. :)

பின்னூட்டப் புயலுக்கு நன்றி.
நம் அனைவருக்கும் இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமீன்.

Aashiq Ahamed said...

சகோதரர் ஜுபைர்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கின்றேன். தங்களுடைய கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி கொண்டு கருத்து சொல்ல விரும்புகின்றேன்.

எனினும்,

------
இன்று இது போன்ற அறிஞர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால் பழைய அறிஞர்களையே கொண்டாடி வருகின்றனர் பெரும்போலோர்.
------

என்னால் உடன்பட முடியாத கருத்துக்கள். நான் இஸ்லாத்திற்குள் வந்ததற்கு, தூய இஸ்லாத்தை போதித்த இன்றைய எண்ணற்ற அறிஞர்களே காரணம். அல்ஹம்துலில்லாஹ். அவர்கள் பலருடைய வீடியோ சொற்பொழிவுகளை பாதுகாத்து வைத்திருக்கின்றேன். ஆக, அறிஞர்கள் பற்றாக்குறை என்பதை என்னால் ஏற்கமுடியாது.

தர்காக்கள் உருவானதற்கு மக்களின் அறியாமையே காரணம் என்பது என்னுடைய கருத்து. அதுபோல இஸ்லாம் என்னும் ஓரிறை கொள்கை வரலாற்றில் தெளிவாக கற்பிக்கப்படவில்லை என்பதே தர்காக்கள் உருவானதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

எங்கள் ஊரில் 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தர்காவை உருவாக்கி இருக்க முயன்றிருந்தால் அது நடந்திருக்கலாம். ஆனால் இன்றோ அவ்வாறு செய்ய முடியாது. ஊரில் பெரிய பிரச்சனையே ஏற்பட்டு விடும். காரணம், தூய இஸ்லாம் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல், தூய இஸ்லாத்தை எடுத்து கூறும் அறிஞர்களை நம்மிடையே இறைவன் கொடுத்திருக்கின்றான் என்பதே ஆகும்.

தர்காக்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை இந்த அறிஞர்களின் அயராத பணியால் பெருமளவில் குறைந்திருக்கின்றது என்றே எண்ணுகின்றேன்.

-----
இவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் சில ‘தர்காவாகக் கொண்டாடப் படுகின்றன’. சில போலி தர்காக்களும் காசு நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
-----

தர்கா என்ற கான்செப்ட் போலி என்று நன்கு தெரிந்த நபர்கள் செய்யும் காரியமாகவே இவற்றை நான் கருதுகின்றேன்.

தர்காக்களை பற்றி பேசினாலே கோபமும், அருவெருப்பும் தான் வருகின்றது. இறைவன் தான் அந்த மக்களை காக்க வேண்டும். துவா செய்வோம், நம் முயற்சிகளை தொடர்ந்து கையாள்வோம்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

அரபுத்தமிழன் said...

ஆஹா, சகோ அருமையான தெளிவானப் பின்னூட்டம்.
வ அலைக்குமுஸ்ஸலாம். ஆனாலும் ஒரு விஷயம்
'நாளுக்கு நாள் அறிவு குறைந்து போய் ஒரு நாள் குர்ஆன்,
கல்வி, ஏன் கலிமா கூட எடுபட்டுப் போகும் என்ற ஹதீஸ்
ஞாபகத்திற்கு வருகிறது. விவரம் தேடிப் பெற முயற்சிக்கிறேன்.

//தர்காக்கள் உருவானதற்கு மக்களின் அறியாமையே காரணம் என்பது//
அடுத்தப் பதிவில் தர்காக்கள் ஏன் உருவாகின என்கிற என் கேள்விக்கு
இப்பவே பதில் சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் அவர்களின்
தர்ப்பு பதிலையும் எதிர்பார்க்கிறேன்.

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே!

/////நாம் எல்லோரும் அவ்லியாவாகத்தான் ஆசைப் படுகிறோம். ஆனால் அவன் ஓக்கே சொல்லணுமே :)///---எனில், இந்திய தர்காவில் உள்ள 'அவுலியாக்கள்' அனைவருமே இறைவனால் ஓக்கே சொல்லப்பட்டவர்கள்தானா?//

சகோ. ஆஷிக்!

நண்பர் அரபுத் தமிழன் 'நான் அவுலியா'(இறைநேசர்) என்று சொல்லியிருந்தால்தான் அவருடைய வாதத்தில் குற்றம் காண முடியும்.

“நாம் எல்லோரும் அவ்லியாவாகத்தான் ஆசைப் படுகிறோம். ஆனால் அவன் ஓக்கே சொல்லணுமே”

என்றுதான் கூறியிருக்கிறார். நானும் இறை நேசனாக ஆகத்தான் பாடுபடுகிறேன். ஆனால் இறைவன் அங்கீகரிக்க வேண்டும். நான் இறை நேசனாக ஆக ஆசைப்படுவதில் தவறில்லை. ஆசைப்பட வேண்டும்.

//- நீங்க அவ்லியாவா..?!!!! (கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே!)//

'அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.' -குர்ஆன் 39:45

அரபுத் தமிழன் தர்ஹாவிரும்பிகளின் கேலிகளை அலட்சியம் செய்து விடுங்கள்.

அரபுத்தமிழன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம் அருமை சகோ சுவனப்பிரியன்.
தங்களுக்கு இறைவன் சுவனத்தை நல்குவானாக, ஆமீன்.

என்னைச் சரியாகப் புரிந்தமைக்கு நன்றி சகோதரரே.

//தர்ஹாவிரும்பிகளின் கேலிகளை அலட்சியம் செய்து விடுங்கள்.//

வேண்டாம் சகோ, எல்லோரும் ஏதாவதொன்றில் இணைய மாட்டோமா
என்றுதான் ஆசைப் படுகிறேன். நம் எல்லோருக்கும் ஹிதாயத் நல்க‌
இறைவன் போதுமானவன்.

suvanappiriyan said...

அரபுத் தமிழன்

//எல்லோரும் ஏதாவதொன்றில் இணைய மாட்டோமா
என்றுதான் ஆசைப் படுகிறேன்//

'இறைவன் அனுமதித்த ஒன்றில் எல்லோரும் இணைய மாட்டோமா' என்று வர வேண்டும். நன்றி

அரபுத்தமிழன் said...

மிகச் சரி, நன்றி சகோ, ஜசாக்கல்லாஹு கைர்

ஹுஸைனம்மா said...

பதிவு சர்ச்சைக்குரிய விஷயட்தைக் குறித்துத்தான்; அதற்காகப் பின்னூட்டங்களிலும் இத்தனை சர்ச்சையா? முழுதாகச் சொல்லிமுடிக்கும்வரை பொறுமையுடன் இருக்கலாமே.

இதைக் கண்டால், இதுகுறித்து அறிய வேண்டிய மாற்று மதத்தினர்கள் வரத் தயங்குவார்கள்.

அரபுத்தமிழன் said...

தங்களின் அன்புக்கு நன்றி ஹுசைனம்மா.
கவலை வேண்டாம் கலவரம் நடக்க விட மாட்டேன்.

இரு தரப்பாரும் பின்னூட்டினால்தான் நடுநிலை
பார்வையாளர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

Aashiq Ahamed said...

சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-----
செருப்புடைய வார் அருந்து விட்டது என்று வையுங்கள் அவனிடம் (இறைவனிடம்) கேட்காமல் செருப்பு தைப்பவரிடம் போய் நான் கேட்கிறேன் - நான் ஷிர்க் வைத்து விட்டேனா..? நான் செருப்பு தைப்பவரை அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்கி விட்டேனா? - அல்லது நான் போய் செருப்பு தைப்பவரிடம் ‘எப்படி நீங்கள் அல்லாஹ்வுடைய வேலையை செய்யலாம் என்று கேட்கலாமா?’
------

சகோதரர் நாகூர் இஸ்மாயில் என்ன சொல்ல வருகின்றார் என்று யாராவது விளக்குங்களேன்.

ஒ, செருப்பு தைப்பதற்காக அந்த தொழிலாளியிடம் செல்கின்றோம்? இவர்கள் எதற்காக அந்த சமாதி முன் செல்கின்றனர்? இறந்து போன ஒருவர் இவர்களுக்காக என்ன செய்ய முடியும்? அல்லது உயிரோடு இருக்கும் அறிஞர்கள் தான் என்ன செய்ய முடியும்?

இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் அருளால் வந்தவை தானே?. செருப்பு தைப்பவருக்கு அந்த ஞானத்தை கொடுத்தது இறைவன் தானே? அவர் செருப்பு தைத்து கொடுத்தால் "நன்றி" என்று கூறுவீர்களா? அல்லது "தங்களது உதவிக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக என்று கூறுவீர்களா?

அல்லது, தர்காவில் இது தான் நடக்கின்றது என்று யாராவது தெளிவான விளக்கமாவது கொடுப்பார்களா? சமாதியை சுத்துவது, பூ-புஷ்பம் கொடுப்பது, பிரசாதம் வழங்குவது என்று இவை இன்னும் தர்க்காகளில் நடக்கின்றனவா?

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இணைவைப்பு உட்பட பெரும்பாவத்தில் ஈடுபடாத நம் அனைவர் மீதும் ///இறைவன் சுவனத்தை நல்குவானாக, ஆமீன்.///

முதற்கண் நான் தர்காவிற்கு எதிரானவன்... அவைகள் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானவை என்பதனால்...

ஏனெனில், ஒரு இளம்பிஞ்சு குழந்தையின் ஜனாஸா செல்லும்போது, நபி(ஸல்) அவர்களின் துணைவியார், அந்த ஜனாஸா சொர்க்கத்துக்கு செல்லக்கூடியது எனும்போது, நம் நபி(ஸல்) 'அது எப்படி உனக்குத்தெரியும்' என்றும் அந்த ஞானம் அல்லாஹ்விடம் இருப்பதாக சொல்லவில்லையா?

வேறொரு சமயம்... ஒரு சஹாபி, ஒரு நல்லோழுக்கமுடைய முஸ்லிமை 'அதோ ஒரு மூமின்' எனும்போது... "இல்லை முஸ்லிம் என்று சொல்" என்று திரும்பத்திரும்ப சொன்னது... அந்த முஸ்லிம், மூமினா என்பது அல்லாஹ்வின் ஞானம் என்பதற்காகத்தானே...?

///மேற்சொன்ன 'சில' அடக்கஸ்தலங்கள் சான்றோர்களுடையது
என்பது எனது புரிதல்தான். அப்படித்தான் என அடித்துச் சொல்ல‌
நான் முறையாகப் பயிற்சி பெற்ற ஆன்மீக வாதி கிடையாது///---"பயிற்சி பெற்ற ஆன்மிகவாதி"---நம் நபி ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை விடவா இன்னொருத்தர் இருக்க முடியும்? அவர்களுக்கே அந்த ஞானத்தை அல்லாஹ் வழங்கி இருக்க வில்லையே சகோ.இப்னு ஜுபைர்..? ஒரு சிலர் பற்றி வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த்துக்கொடுத்தால் அறிவார்கள். அவ்வளவுதானே சகோ.?


//அரபுத் தமிழன் தர்ஹாவிரும்பிகளின் கேலிகளை அலட்சியம் செய்து விடுங்கள்//

மீண்டும் சொல்கிறேன்... சகோ.அரபுத்தமிழன்... நான் தர்கா விரும்பிகளுக்கு எதிரானவன், எனக்கு அந்த பிம்பம் விழுவதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

/// ஆனாலும் இதைப் பின்பற்ற எல்லோராலும் முடியாது என்பதற்காகவே முகம்மது நபி(ஸல்) அவர்கள் சாதாரண மக்களிலிருந்து சான்றோர்வரை பின்பற்ற ஏதுவாகப் பலவிதமானத் தீர்வுகளைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள். ///---இதற்கும்...


///குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் நோக்கத்தை, சாராம்சத்தைச்சான்றோர்கள்தாம் நன்கு அறிய முடியும். சிலருக்குக் கனவின் மூலமாகவும் அறிவிக்கப் படுகிறது. சிலர் குர்ஆன் ஓதும்போது அதன் உள் அர்த்தத்தின் மூலம் விளங்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சான்றோர்களுக்கு முன்பு ‘சஹாபாக்கள்’ (நபித் தோழர்கள்) என்று பெயர். அதற்குப் பின் வந்தவர்களுக்கு வலிமார்கள் (இறை நேசர்கள்) என்று பெயர்./// ---இதற்கும்...


சரியான இஸ்லாமிய ஆதாரங்களுடன் விளக்கம் தாருங்கள் சகோ.அரபுத்தமிழன்.


ஏனெனில், இவையெல்லாம் சரியானவையா... அல்லது தவறானவையா... என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை இதன்மூலமே அறிய முடியும்.


ஏனென்றால், இப்பதிவில் இவை... 'நீங்கள் சரியாக சொல்வதா...' அல்லது 'தர்ஹா விரும்பிகளின் தவறான எண்ணங்களா' என்பதும் தெளிவு படுத்தப்படவில்லை.


நான் புயலாக உங்கள் மீது வீச வில்லை... தென்றலாக வந்து விளக்கங்கள் கேட்கிறேன்... சகோ.அரபுத்தமிழன் பிளீஸ் புரிந்து கொள்ளுங்கள்... தவறு என்றால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.

ஏனென்றால்,இல்லை என்றால் என் கேள்விகளில் உள்ள தவறு என்ன என்று கூறுங்கள். சரியாக இருந்தால் திருத்திக்கொள்கிறேன்.


நான் தர்ஹா விரும்பிகளுக்கு முற்றிலும் எதிரானவன்... எதிரானவன்... என்திரானவன்...


கட்டப்பட்ட கப்ருக்களை எல்லாம் இடித்துவிடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்கிரார்கள் அல்லவா?

அரபுத்தமிழன் said...

//சரியான இஸ்லாமிய ஆதாரங்களுடன் விளக்கம் தாருங்கள்//
சகோ ஆஷிக், //தர்ஹா விரும்பிகளின் கேள்விகளை// யாரைப்
பற்றி சகோ சுவனப்ரியன் சொன்னார் என்று தங்களுக்கு விளங்கவில்லை.
மேலும் விலாவாரியாக விளக்கும் அளவுக்கு நான் ஒரு அறிஞனும்
இல்லை. நீங்கள் புரிந்து கொள்ள ஒன்றே ஒன்று சொல்கிறேன்.
'ஸாஹிபுஸ் ஸிர்' என்று சொல்லப் பட்ட ஹஜரத் ஹுதைஃபா (ரலி), அவர்களுக்குப் போதிக்கப்பட்ட ரகசியங்கள் எந்த ஹதீஸிலும் காண
இயலாது. ஏன் ரகசியத்தை அவருக்கு மட்டும் போதிக்கிறீர்கள்
என்று யாரும் கேட்டதும் கிடையாது. நாமும் அறிந்து கொள்ள‌
முடியாது ஆனால் புரிந்து கொள்ளலாம் :)

pichaikaaran said...

விவாதம் ஆரோக்கியமான திசையில் நடப்பது மகிழ்வளிக்கிறது..

பல விஷயங்களை கற்க முடிகிறது..

அதே சமயம், தர்க்கா விரும்பிகள் அறியாமை காரணமாக தர்க்கா வழிபாட்டில் இருக்கிறார்கள் என்பது சரியான பார்வை அல்ல.. கவிஞர் அப்துல் ரகுமான் போன்ற அறிஞர்கள், இசை புயல் எ ஆர் ரகுமான் போன்ற தூய இஸ்லாம் பெருமக்கள் எல்லாம் தர்க்கா வழிப்பாட்டை ஏற்க கூடியவர்கள்..
எனவே பொத்தாம் பொதுவாக, தர்க்கா வழிபாட்டை எதிர்க்க கூடாது...

அதே சமயம் இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை நாடு நிலை பார்வையோடு எடுத்து சொல்ல வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இன்னொன்று, தர்க்கா என்பது வெறும் கட்டடம் அல்ல... அக்கு சென்றால் பலன் உண்டு என் நேரடியாக அனுபவித்தவன் நான்,, இன்றும் என் நண்பர்களுடன் செல்ல கூடியவன் நான்..

ஆனால் அறிவு பூர்வமாக விவாதம் நடக்கும் இந்த இடத்தில், உணர்ச்சி பூர்வமாந அந்த சம்பவங்களை சொல்லி விவாதத்தை திசை திருப்ப விரும்பவில்லை...
என்னை அழைத்து சென்ற நண்பர்கள், இஸ்லாம் நெறியில் இருந்து பிறழாத , நல்ல முஸ்லிம்கள் என்பதை மட்டும் சொல்லிகொள்கிறேன்..

அரபுத்தமிழன் said...

//அறியாமை காரணமாக தர்க்கா வழிபாட்டில் இருக்கிறார்கள்//
என்பது தவ்ஹீது பார்வை
//தர்க்கா விரும்பிகள் அறியாமை காரணமாக தர்க்கா வழிபாட்டில் இருக்கிறார்கள் என்பது சரியான பார்வை அல்ல.//பலன் உண்டு என் நேரடியாக அனுபவித்தவன் நான்// இது போன்றக் கருத்துக்களுக்கு அடுத்தப் பதிவு விடையளிக்கும் என்று
நம்புகிறேன் தோழா :)

pichaikaaran said...

எதுவும் செய்ய முடியும்.. இது உண்மை உண்மை உண்மை..
அதுதான் சாதாரணமான மனிதர்களுக்கும், தர்க்கா போன்ற இடங்களில் அடங்கி இருக்கும் மகான்களுக்கும் இருக்கும் வித்தியாசம்,,
இறந்து போன ஒருவர் என சொல்வது கூட சிலர் மனதை புண்படுத்த கூடும்...

இன்னொன்று, அது போன்ற மகான்களை என்னை போன்றோர் வழிபடுகிறோம்.. கை மேல் பலன் பெறுகிறோம்..

ஆனால் அங்கு வரும் இஸ்லாம் பெருமக்கள், இறைவனுக்கு நிகராக அந்த மகான்களை வைப்பதில்லை...

உடல் நலம் சரி இல்லை என டாக்டரிடம் போகிறோம்.. அதற்காக டாக்டரும் இறைவனும் ஓன்று அல்ல என்பது அவர்கள் நிலைப்பாடு..
தர்கா வழிபாட்டால் பயன் பெற்றாலும், ஒரு போதும் அவர்கள் இறைவனுக்கு நிகராக அந்த மகான்களை வைப்பதில்லை..

ஆனால் தர்க்க செல்லும் என்னை போன்றோக்கு அந்த மகான்கள்தாம் கடவுள்..

இந்த இரு தரப்பும் அங்கு செல்வதால், தர்கா செல்லாத இஸ்லாமியர்களுக்கு,அங்கு செல்லும் முஸ்லிம்கள் தவறு செய்கிறார்களோ எனும் குழப்பம் ஏற்படுகிறது..

ஆனால் அங்கு வரும் முஸ்லிம்கள் இஸ்லாமின் கொள்கைக்கு விரோதாமாக நடப்பதில்லை..

அங்கு வருபவர்களில், படித்தவர்கள், அறிஞர்கள், ஆன்மீக வாதிகளே அதிகம்..
உலக வெற்றிக்கு மட்டும் அல்ல.. ஆன்மிக வெற்றிக்கும் தர்க்கா உதவி இருக்கிறது...உதவி வருகிறது... இனியும் உதவும்...

இது இந்த அனுபவம் பெற்ற ஒரு பார்வையாளனின் கருத்து..

இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற உங்கள் நடுநிலை கருத்தை வெகு ஆவலாக அனைவரும் எதிர்பார்க்கிறோம்..

அரபுத்தமிழன் said...

//இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற உங்கள் நடுநிலை கருத்தை
வெகு ஆவலாக அனைவரும் எதிர்பார்க்கிறோம். // :)

சரியான,நிறைவானக் கருத்தை எழுதுவதற்கு இறைவா எனக்குத்
துணை புரிவாயாக. பார்வையாளன் போன்ற நல்லோரை உனது
நல்ல‌டியார்களில் ஒருவராக‌ ஏற்றுக் கொள்வாயாக, ஆமீன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.பார்வையாளன்...

//கை மேல் பலன் பெறுகிறோம்..//
//ஆனால் தர்க்க செல்லும் என்னை போன்றோக்கு அந்த மகான்கள்தாம் கடவுள்..//
//ஆனால் அங்கு வரும் முஸ்லிம்கள் இஸ்லாமின் கொள்கைக்கு விரோதாமாக நடப்பதில்லை..//

@ சகோ.பார்வையாளன்...

உங்களுக்கு பலன் கொடுக்கும் அவர்...(அந்த 'கடவுள்') ஏன் முதுமையடைந்தார்..? ஏன் நோய்வாய்ப்பட்டார்...? ஏன் இறந்தார்...? அல்லது ஏன் கொல்லப்பட்டார்..? அப்போது தன்னையே இறப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியாதவர்தானே அந்த 'கடவுள்'..? நீங்கள் கூப்பிட்டால் ஏன் அவர் பதிலளிக்கவில்லை...? அவர் உயிர் இப்போது எங்கே..? அவரால் எந்த உயிரையாவது இவ்வுலகில் உருவாக்க முடிந்ததா..? அவரையும் ஒரு பெற்றோர் தானே இவ்வுலகில்தானே பெற்றனர்..? ஆக அவர் பிறந்தாரா இல்லையா...? பிறந்தார் எனில் பெற்றவர் பெரிய ஆளா... பிறந்தவர் பெரிய ஆளா..? ஒருவேளை அந்த பெற்றோர் இல்லறத்தில் சேராதிருந்தால் இவர் பிறந்திருப்பாரா..? பலன் கொடுப்பதால்தானே மகான்..? கொடுக்கவில்லை என்றால் மகான் இல்லை என்று சொல்லிவிடுவீர்கள்தானே..? அந்த மகான் இவ்வுலகில் வாழும்போது அவருக்கு அருள்பாலித்த கடவுள் யார் என்று யோசித்ததுண்டா..? அவரே அவருக்கு அருள்பாளித்துக்கொண்டார் என்று சொல்ல வருவீர்கள் என்றால்... அதற்கு முந்தி வாழ்ந்த மக்களுக்கு யார் அருள்பாலித்தார்...? அதற்கு முந்தி 'அந்த கடவுள்' இல்லாமல் இந்த ஆண்ட சராசரங்கள் எல்லாம் எப்படி உருவாகி இயங்க ஆரம்பித்தது..?

நிஜமான பகுத்தறிவுடன் சிந்தியுங்கள்.... அப்படி மெய்யான பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் கடைசியில் ஒதுங்கும் இடம்.... இஸ்லாம்..!

"அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்" என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அத்தியாயம் 18:102 வசனத்தில்..."நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை (தம்)பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சிததப்படுத்தி வைத்திருக்கின்றோம்".

"இவ்வசனம் முஸ்லிம் அல்லாதோர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு அல்ல" என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களை நரகில் கொண்டு தள்ளவேண்டாம். முஸ்லிமான ஆண், பெண் அனைவரையும் “தர்ஹா மாயை”யை விட்டு விடுபட்டு அண்ட சராசரங்கள் அனைத்தயும் படைத்த பிறப்பும் இறப்பும் இல்லாத இறைவனை மட்டுமே பாதுகாவலனாக எடுத்து அவனிடமே தங்களின் வேண்டுதல்கள் கோரிக்கைகள் அனைத்தையும் வைக்கும்படி அவர்களுக்கு உபதேசிக்க முன்வருமாறு தங்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

nagoreismail said...

பார்வையாளனுக்கு மிக்க நன்றி.. தர்கா விரும்பி என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளக் கூடிய என் போன்ற சக முஸ்லீம் சகோதரர்களை புரிந்து கொண்டது மிகுந்த ஆச்சர்யமான செய்தி.

Aashiq Ahamed said...

சகோதரர் பார்வையாளன்,

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

தர்க்காகளுக்கு செல்லும் முஸ்லிம்கள் அங்கு சமாதியாய் இருக்கும் நல்லோர்களை கடவுளாக பார்ப்பதில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும்? டைம் பாசிற்ககாகவா? இல்லை மயிலிறகால் வருடப்படுவதற்கா? பள்ளிவாசல்களில் இருக்கும் மன அமைதியை விடவா அங்கு இவர்களுக்கு கிடைத்து விட போகின்றது?

முஸ்லிமல்லாதவர்கள் தாராளமாக பள்ளிவாசல்களுக்கு வரலாமே? அற்புதமான விசயமாயிற்ரே அது? உங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் கூறி பள்ளிவாசல்களுக்கு தாங்கள் வரலாமே?

சில முஸ்லிம்கள் தொழ வரமாட்டார்கள், ஆனால் அதே நேரத்தில் தர்காக்களுக்கு மட்டும் செல்லுவர்.

அங்கு உள்ள நல்லோர்கள் உங்களுக்கு நன்மை பயப்பதாக நீங்கள் கருதினால், சாரி, நீங்கள் உங்களை நன்றாக எடை போட வேண்டிய தருணம் இது. இது போன்ற மூட நம்பிக்கைகளை அழிக்க வந்த மார்க்கம் இஸ்லாம்...இதையெல்லாம் பார்த்து கொண்டு எங்களால் சும்மா இருக்க முடியாது...

உண்டியல் குலுக்குவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் உண்டாக்கப்பட்ட இடங்களே இந்த தர்க்காக்கள். இஸ்லாமை நன்றாக அறிந்தவர் தர்கா வழிபாட்டில் இருக்கமுடியாது (ரஹ்மான், அப்துல் ரஹ்மான் உட்பட). அப்படி தர்கா வழிபாடு சரி என்றால், வாருங்கள் வாதிப்போம். இறைவன் குர்ஆனில் கூறினானல்லவா, அழகான முறையில் விவாதியுங்கள் என்று...வாருங்கள் விவாதிப்போம், ரஹ்மான், அப்துல் ரஹ்மான் என்று யார் வேண்டுமென்ராலும் வாருங்கள். குரான் மற்றும் ஹதீஸ்கள் அடிப்படையில் வாதிப்போம் வாருங்கள்.

தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்...இஸ்லாம் என்னும் தூய மார்க்கத்தில் இது போன்ற அறியாமை நிகழ்வது கண்டு மனம் பொறுக்காமலேயே இந்த அளவு ஆதங்கபடுகின்றோம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த நிலைமை பெரிதாக மாறியிருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். பல தர்காக்கள் காற்று வாங்குகின்றன. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் எங்களின் பிரச்சாரங்களின் மூலம் இவற்றை முழுவதுமாக அழித்து விடுவோம். அந்த நம்பிக்கை அதிகவாகவே இருக்கின்றது...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

nagoreismail said...

சகோதரர் நாகூர் இஸ்மாயில் என்ன சொல்ல வருகின்றார் என்று யாராவது விளக்குங்களேன்.

- நான் சொன்னதற்கு யாராவது வந்து ஏன் விளக்கம் கொடுக்கணும்?

ஒ, செருப்பு தைப்பதற்காக அந்த தொழிலாளியிடம் செல்கின்றோம்? இவர்கள் எதற்காக அந்த சமாதி முன் செல்கின்றனர்? இறந்து போன ஒருவர் இவர்களுக்காக என்ன செய்ய முடியும்? அல்லது உயிரோடு இருக்கும் அறிஞர்கள் தான் என்ன செய்ய முடியும்
- செருப்பு தைப்பதற்காக நீங்கள் ஏன் அந்த தொழிலாளியிடம் செல்ல வேண்டும் என்பதே என் கேள்வி, இந்த கேள்வி ஏன் என்றால் செருப்புடைய வார் அருந்தாலும் இறைவனிடம் தானே கேட்க வேண்டும், அப்படி தானே ஹதீது உள்ளது, நீங்கள் தான் ஷரீயத்தில் புலியாச்சே.. அப்படியே இறைவனிடம் கேட்க வேண்டியது தானே, அல்லது இந்த ஹதீதை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
எங்க பாட்டியா மௌத்தா போயிட்டாஹா, ஆனா அவர்கள் என்னிடம் சொன்னார்கள், எதுவும் சாப்பிடும் முன்பு பிஸ்மில்லா சொல்லி தான் சாப்பிடணும் என்று. அவர்கள் மௌத்தா போயி பல வருடங்கள் ஆன பின்பும் அவர்கள் குரல் என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இறந்து விட்டார்களா அல்லது உயிரோடு இருக்கிறார்களா என்பது முக்கியமில்லை, பயன்களை பொறுத்து அமைவது இவையெல்லாம்.

இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் அருளால் வந்தவை தானே?. செருப்பு தைப்பவருக்கு அந்த ஞானத்தை கொடுத்தது இறைவன் தானே? அவர் செருப்பு தைத்து கொடுத்தால் "நன்றி" என்று கூறுவீர்களா? அல்லது "தங்களது உதவிக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக என்று கூறுவீர்களா?
- நிச்சயமாக நான் நன்றி கூறுவேன், ஏனெனில் மனிதனுக்கு நன்றி கூறாதவன் இறைவனுக்கு நன்றி கூறிய்வனாகா ஆக மாட்டான். நிச்சயமாக நான் செருப்பை தைத்தற்காக நானே கூட எனக்குட்பட்ட அந்த வேலைக்குட்பட்ட கூலியை கொடுப்பேன். ஏனெனில் வியர்வை உலரும் முன்னே நாம் தானே கூலியை கொடுக்க வேண்டும்.
ஆனாலும் இந்த கேள்வியின் பொருள் முந்தைய கருத்து பரிமாற்றத்திற்கு தொடர்பில்லாதது போல் விளங்குகிறது.

அல்லது, தர்காவில் இது தான் நடக்கின்றது என்று யாராவது தெளிவான விளக்கமாவது கொடுப்பார்களா? சமாதியை சுத்துவது, பூ-புஷ்பம் கொடுப்பது, பிரசாதம் வழங்குவது என்று இவை இன்னும் தர்க்காகளில் நடக்கின்றனவா?

nagoreismail said...

அல்லது, தர்காவில் இது தான் நடக்கின்றது என்று யாராவது தெளிவான விளக்கமாவது கொடுப்பார்களா? சமாதியை சுத்துவது, பூ-புஷ்பம் கொடுப்பது, பிரசாதம் வழங்குவது என்று இவை இன்னும் தர்க்காகளில் நடக்கின்றனவா?

- அப்போ எது தவறோ அதை மட்டும் குறிப்பாக தவறு என்று சொல்லுங்கள். அதாவது கஃபாவில் உள்ள சிலைகளை உடையுங்கள், கஃபாவையே அல்ல -

Aashiq Ahamed said...

சகோதரர் இஸ்மாயில்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

---
தர்கா விரும்பி என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளக் கூடிய என் போன்ற சக முஸ்லீம் சகோதரர்களை புரிந்து கொண்டது மிகுந்த ஆச்சர்யமான செய்தி.
----

ஒரு தர்கா விரும்பி மற்றொரு தர்கா விரும்பியை புரிந்து கொள்வதில் என்ன ஆச்சர்யமான செய்தி? இதில் தர்கா விரும்பி என்ற பெருமை வேறா?

தங்களை தவ்ஹீத் விரும்பி என்று சொல்ல வைக்காமல் தர்கா விரும்பி என்று சொல்ல வைப்பது எது? இந்த அளவு உங்கள் மனம் அறியாமையில் திளைக்க காரணம் எது? நிச்சயமாக நம் ஆருயிர் நபிகள் நாயகம்(ஸல்) காரணமில்லையே?

பள்ளிவாசல்களில் இல்லாதது தர்காக்களில் என்ன இருக்கின்றது? என்று எனக்கு விளக்குங்கள். இஸ்லாம் எளிமையான மார்க்கமல்லவா? இறை வழிபாடு எளிமையாக ஆக்கப்பட்டிருக்க அங்கு எதற்கு செல்கிறீர்கள்? அங்கு இருக்கும் சமாதி உங்களுக்கு என்ன செய்திட முடியும்?

"அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்" - நபிகள் நாயகம் (ஸல்).

இதற்கு உங்களது விளக்கம் என்ன?

தயவுக்கூர்ந்து விளக்குங்கள்..மக்களை அறியாமையில் தள்ளியது போதாதா? இந்த காலத்திலும் மூட நம்பிக்கைகளை கட்டி கொண்டு நாங்கள் அழவேண்டுமா?

விளக்குங்கள்..தயாராக இருக்கின்றோம்..குரான் சுன்னாஹ் அடிப்படையில் விளக்குங்கள்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

அரபுத்தமிழன் said...

நண்பர்களே, உங்களது பின்னூட்டங்கள் சுருக்கமாகவும் ஆரோக்கியமாகவும்
இருக்கட்டும். இன்ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவு வரும் திங்களன்று.வஸ்ஸலாம்.

Aashiq Ahamed said...

சகோதரர் இஸ்மாயில்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

குழப்பத்தை தவிர்க்க ஒன்றன் பின் ஒன்றாக வாதிப்போம் சகோதரர்...

1. "அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்"

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த கருத்து குறித்த உங்கள் எண்ணங்களை கூறுங்கள்...

சுற்றி வளைக்காமல், நேரடியாக ப்ளீஸ்..

கிண்டலாகவோ, நக்கலாகவோ இல்லாமல் இறைவன் காட்டிய வழிப்படி ஆரோக்கியமாக வாதிப்போம்...முன்னர் தவறாக ஏதும் கூறியிருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்.

ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

அரபுத்தமிழன் said...

சகாக்கள் ஆஷிக்குகளின் கேள்வி (தர்கா)'ஆஷிக்'களால் இன்னும்
பதிலளிக்கப் படாமல் தொக்கி நிற்கிறது. நான் நினைத்தேன், கடந்த‌
இரண்டு நாட்களில் எனது மெயில் பாக்ஸ், விவாதங்களால் நிரம்பி
இருக்கும் என்று, ம்ஹூம், ஒரு மெயில் கூட இல்லை :(

pichaikaaran said...

"ம்ஹூம், ஒரு மெயில் கூட இல்லை :("

அதற்கு காரணம் , அனுப்பும் கருத்துக்கள் வெளியிடப்பட இரண்டு நாட்கள் ஆகும் என்பதால்தான்..
வாதங்கள் அணி வகுக்க காத்து இருக்கின்றன.. தயாராக இருங்கள்

pichaikaaran said...

முன்னர் தவறாக ஏதும் கூறியிருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்.”

சகோதரரே... நீங்கள் சொன்னதில் ஒரு வார்த்தை கூட தவறு கிடையாது... உங்கள் நோக்கம் உயர்ந்தது என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது..

ஆனால் உங்கள் புரிதலில் தவறு இருக்கிறது.

***********************

”பள்ளிவாசல்களில் இல்லாதது தர்காக்களில் என்ன இருக்கின்றது?”

பள்ளிவாசல் உயர்ந்ததா , தர்க்கா உயர்ந்ததா என்று விவாதம் நடப்பதுபோல நினைத்து கொண்டு இப்படி கேட்டு இருக்கிறீர்கள்..

இந்த ஒப்பீடு தவறு... தர்க்கா செல்லும் முஸ்லீம்கள் யாரும் இப்படி கனவில் கூட நினைப்பதில்லை..

************************
”அங்கு இருக்கும் சமாதி உங்களுக்கு என்ன செய்திட முடியும்?”
பல நன்மைகளை செய்திருக்கிறது என்பதுதான் வரலாறு..

ஒருவர் குடும்பத்தினர் மேல் தீய சக்திகளை ஏவி விட்டு விட்டனர் எதிரிகள்.. சாப்பிட உட்கார்ந்தால், சாப்பாடு முழிதும் முடி ( மயிர் ) ஆகி விடும்... கடைசியில் தர்க்கா வழிபாடு அவர்களை காப்பாற்றியது.. இன்று அந்த குடும்பம் முஸ்லீம் குடும்பமாக மாறி, அந்த மார்க்க வழிமுரைகளை கடை பிடித்து வாழ்கிரது...

2 நானே நேரடியாக பலன் பெற்று இருக்கிறேன்

என்னை பொறுத்தவரை அந்த மகான்களை தெய்வமாக நினைத்து வழிபடுகிறேன். இதை டைப் செய்யும்போது கூட அந்த மகான்கள் என் அருகில் இருப்பது பார்ப்பது போல உணர்கிறேன்

*************
ஆனால் அந்த மகான்கள் தம்மை கடவுளாக சொல்லிக்கொனடதே இல்லை.. அல்லா மேரா மாலிக்.. நான் பிச்சைக்காரனை விட தாழந்தவன் என்றுதான் சொல்லி வந்து இருக்கிறார்கள்..

************

அந்த மகான்களிடம் பயன் பெற்ற முஸ்லீம் நண்பர்களை நான் அறிவேன்..

ஆனால் அந்த நண்பர்கள் எந்த நிலையிலும் அந்த மகான்களை தெய்வன் என்று சொன்னதும் இல்லை.. இறைவனுக்கு இணையாக சொன்னதும் இல்லை..

இரைவனை யாருடன் ஒப்பிடவே முடியாது.. ஒரு டாகடர் நம் உயிரை காப்பாற்றுகிறார் என்றால் , அதுவும்கூட கடவுளின் செயல் என்பது அவர்கள் நிலை

pichaikaaran said...

1 தர்க்காவினால் பலன் உண்டா இல்லையா என்பதில் விவாதம் தேவையே இல்லை... பலன் அனுபவித்தவர்கள் கோடிக்கணக்கில் உண்டு..

2.பள்ளிவாசலில் இல்லாதது , தர்க்காவில் என்ன இருக்கிரது என்ற கேள்வியும் தேவை இல்லை...

அப்படி யாரும் சொல்லவில்லை..

3. இந்த வழிமுறை குறித்து இஸ்லாமிய நூல்கள் என்ன சொல்கின்றன என்பதே கேள்வி.. எனவே சான்றோர்கள், பெருமக்கள் சொன்ன அடிப்படையில் விவாதம் நடத்துமாறு கேட்டு கொள்கிறேன்

pichaikaaran said...

”பல தர்காக்கள் காற்று வாங்குகின்றன”

சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் க்வீன்ஸ் ரோட்டில் ஒரு தர்க்கா சென்று இருந்தேன்... சிலர் மட்டும் இருப்பார்கள்.. அனைவரும் நண்பருக்கு தெரியும் என்பதால் தேவையான விளக்கங்கள் அளிப்பார்கள்.

அதே தர்க்காவிற்கு சமீபத்தில் சென்றேன். போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் அளவுக்கு கூட்டம்...

அரபுத்தமிழன் said...

//அனுப்பும் கருத்துக்கள் வெளியிடப்பட இரண்டு நாட்கள் ஆகும் என்பதால்தான்..//
தோழர் பார்வையாளனுக்கு மனம் கனிந்த நன்றிகள்.
வெள்ளி சனிகளில் பதிலளிக்கவியாலாது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.
மற்றபடி பின்னூட்ட வாசலைத் திறந்தே வைத்திருக்கிறேன்.

அரபுத்தமிழன் said...

//ஒருவர் குடும்பத்தினர் மேல் தீய சக்திகளை ஏவி விட்டு விட்டனர் எதிரிகள்//
இது பற்றிச் சுருக்கமாக நானும் எழுதி இருக்கிறேன்.
இ.அ. நாளை மீதிப்பகுதியை வெளியிடுகிறேன்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)