Monday, July 18, 2011

ரெண்டாம் ஜாமத்துக் கனவு

(முந்தைய கனவின் தொடர்ச்சி)

கனவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இரவின் கடைசிப் பகுதியில் காணப்படும் கனவுதான்.
கனவு கண்ட நேரத்தைப் பொறுத்தும் அது பலிக்கும் நாட்கள் கணிக்கப் படுகின்றன. கனவில் இறைவனைத் தரிசிக்கலாம் (அதற்கானத் தகுதியை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில்).
நபியை, நபித்தோழரை மற்றும் நல்லோர்களையும் கனவில் காண முடியும்.
ஆனால் அது நம் கையில் இல்லை, இறைவன் அனுமதித்தாலே தவிர‌‌.

நல்லோர்கள் மட்டுமல்ல ஷைத்தான்களையும்,விலங்கினங்களையும் காண முடியும். ஜின், ஷைத்தானையோ அல்லது விலங்கினத்தையோ காண்பது நல்லதல்ல. ஆனால் அவற்றை
வெல்வது போல் கண்டால் நடக்கவிருந்த ஒரு தீமையை விட்டுத் தப்பித்தது போலாகும்.

-------------------------- * * * * * -------------------------

ஒருமுறை நண்பர்களைச் சந்திக்க துபாய் சென்றிருந்த சமயம். இரவுச் சாப்பாட்டை வழியில்
கண்ட ஒரு ரெஸ்டாரன்டில் சாப்பிட்டு விட்டு இருட்டுப் பகுதியான தொழில்பேட்டையில்
இருக்கும் அவர்களின் குடியிருப்பை நோக்கித் தனியனாகச் சென்று சேர்ந்தேன்.

அவர்களைச் சந்தித்து அளவளாவிய பின் அங்கேயே தங்கினேன். மற்றவர்கள் அவரவர்
கட்டிலில் சயனிக்க, எனக்குக் கிடைத்தது ஒரு மூலையில் தரை டிக்கெட்டு. படுக்கும்
போதே தலை சுற்றுவது போல் தெரிந்தாலும் நொடியில் உறங்கிப் போனேன்.

எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை, நடுச் சாமத்தில் திடீரென விழித்துக் கொண்டேன், கொஞ்சம் வேர்த்திருந்தது. மற்றெல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். இப்போது நினைவுக்கு வந்தது சற்றுமுன் நான் கனவில் கண்ட காட்சி. கைநகங்கள் நீண்ட,
கூரிய பற்கள் கொண்ட ஆண் மற்றும் பெண், இருவரும் கோபத்துடன் என்னை நெருங்க முயற்சிக்கும் தருணத்தில் திடுக்கிட்டு விழித்துள்ளேன். (பாவம் மூலையில் தமது
தேவைக்காக ஒதுங்கி இருந்தவர்களை டிஸ்டர்ப் செய்து விட்டேனோ :)

மாறிப் படுப்பதற்கும் மாற்று இடம் அங்கில்லாததால் வேறு வழியின்றி,
'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என்று ஓதி இடது பக்கம் மூன்று முறை
துப்பி விட்டு (நபிவழி), பின் ஆயத்துல் குர்ஸீ (குர்ஆன் 2:255) ஓதி உடம்பில் ஊதித்
தடவிய பின் மீண்டும் படுத்துக் கொண்டேன். என்ன ஆச்சர்யம், அரைமணிக்குப் பின்
தூங்கிய பொழுதில் மீண்டும் அதே காட்சி. இருவரும் என்னை நோக்கி நகர, இப்போது
என் கையில் மிகத் தடித்த கம்பு ஒன்று இருப்பதை உணர்ந்து அவைகளை நோக்கி
அடிக்க எத்தனித்தேன். அதற்குள் அவைகள் மறைந்து போயினர்...

-------------------------- * * * * * -------------------------

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின்
நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ
அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட
தவணை வரை (வாழ்வதற்காகத் திருப்பி) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும்
மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் ‍ 39:42)

-------------------------- * * * * * -------------------------

நாம் தூங்கும் போது நம்மை விட்டு எது விலகுகிறது (இறைவனால் கைப்பற்றப் படுகிறது)
என்று தெரியவில்லை. ஆன்மாவா அல்லது ஆத்மாவா அல்லது வேறெதுவுமா. தூங்கிய
பிறகு குறட்டை மற்றும் மூச்சுத்துடிப்பின் மூலம் உயிர் இருக்கிற‌து என்பது தெளிவாகத்
தெரிகிறது. பிறகு எதுதான் செல்கிறது. ஒளுவுடன் தூங்கியவர்கள் இறைவனைச் சந்தித்து
ஸஜ்தா செய்வதாகவும் மற்றவர்கள் (ஸஜ்தா செய்யாமல்) வெறுமனே சந்தித்து விட்டுத்
திரும்புவதாக அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தூங்குமுன் ஓத வேண்டிய துஆக்களில் பின்வரும் அர்த்தம் பொருந்திய துஆ ஒன்றும்
உண்டு. 'இறைவா ! நீ என் ஆத்மாவைப் பிடித்து வைத்துக் கொண்டால் அதன் மீது
இரக்கம் காட்டி கிருபை செய்வாயாக. இன்னும் அதைத் திருப்பி அனுப்புவதாக
இருந்தால் நல்லோர்களைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக
!'

அப்படிச் சென்று திரும்பி வரும்போது நாம் காணும் காட்சிகள்தாம் கனவாய்த் தெரிகிறதோ
என்றும் சிந்திக்கத் தோணுகிறது. நபியவர்கள் தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்
இன்று யாராவது கனவு கண்டீர்களா என்று தோழர்களிடம் விசாரித்து அதற்கான
பலன்களைச் சொல்லுபவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருதடவை தாம் கனவில் கண்ட
சொர்க்க, நரகக் காட்சிகளை விவரித்துள்ளார்கள்.எனவே எதிர்காலம் சம்பந்தப் பட்ட
விஷயங்கள் கூட இறைவன் அனுமதிக்கும் சிலருக்குக் கனவில் காட்டப் படுகின்றன‌.

'சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன'
என்று இறைவன் சொல்வதால் இது பற்றி இன்னும் சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

Monday, July 11, 2011

கற்பனைக் காற்றில் கடை பரப்பி விற்பனை

வேலை கைவிட்டுப் போகலாம்
எனத் தெரிந்ததால்..

வியாபாரம் செய்யலாம் என இருக்கிறேன்
ஒரு நல்ல பிசினெஸ் ஐடியா கொடு என‌
நண்பனிடம் விசாரித்தேன்

வியாபாரம் எதுவாய் இருந்தாலும்
விற்பனைப் பொருள் கடையை விட்டு
உடனுக்குடன் காலியாகும்
பொருளைத் தேர்ந்தெடு என்றான்

மனைவியிடம் கேட்டதில்
ஜவுளிக்கடை என்றாள்
நல்லவேளை நகைக்கடை
ஞாபகம் வரவில்லை

குழந்தைகளிடம் விசாரித்தேன்
புத்தகக் கடை,ஸ்டேஷனரி,டாய்ஸ் கடை
என்று ஆவலாய் அடுக்கினார்கள்

எனக்குப் பிடித்ததோ
வாசனைத்திரவியம்

எல்லோருமே அவரவர்க்குப்
பிடித்ததைத்தான் பகிர்ந்தோமே
ஒழிய ஒருவரும்
கஸ்டமருக்குப் பிடிப்பதைப் பற்றி
யோசிக்கவில்லை

ஏது, எங்களின் ஆர்வத்தைப் பார்த்தால்
விற்பனைப் பொருள் ..

கடைக்கு வரும் முன்பே
காலியாகி விடும் போல் தெரிகிறதே :)
:)

Monday, July 04, 2011

பிரபல திரட்டிகளை முந்திய பிரபல பதிவர்கள்

தோழர் பிரபாகர் (http://prabhawineshop.blogspot.com/)

தோழர் பார்வையாளன் (http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com/)

பதிவர்கள் (http://pathivargal.blogspot.com/)

சகோ சாதிகா (http://shadiqah.blogspot.com/2011/06/blog-post_08.html)

ஆகிய நால்வருக்கும் நன்றியோ நன்றிகள்.

காரணம், கடந்த மாதத்தில் நான் எழுதியது ஒரு பதிவுதான், ஆனாலும்
மேலே குறிப்பிட்ட நண்பர்களின் வலைப்பூ மூலமாக இங்கே வந்து போனவர்களின்
எண்ணிக்கை பின்வருமாறு

தோழர் பிரபாகர் ‍(121)
அன்பு பதிவர்கள் (56)
தோழர் பார்வையாளன் (41)
தமிழ்மணம் (26)
சகோ.சாதிகா (12)

நானே சும்மாயிருந்தாலும் என்னை இப்படி உசுப்பேத்துபவர்களை என்ன‌ செய்வது.
இப்போதைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் எழுத வரும்போது
இவர்களை கவனித்துக் கொள்கிறேன் (கிர்ர்ர்.... :))


அன்புத் தோழர்களே உங்களின் அன்புக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.


வஸ்ஸலாம்.