Monday, March 14, 2011

பெண் ஒன்று கண்டேன் .. பெண் அங்கு இல்லை ...

விசிட் விசாவில் வந்த மனைவியையும் குழந்தையையும் ஊருக்கு
அனுப்பி விட்டு மீண்டும் பேச்சிலர் வாழ்க்கை வாழ ஒரு பழைய கட்டிடத்தில்
ஃப்ளாட் ஓனர் தங்கும் அறையில் ஒரு பெட் ஸ்பேஸ் எடுத்துத் தங்கினேன்.

அங்கே நான் மாறும் வரை அந்த பில்டிங் முன்பு மகப்பேறு மருத்துவமனையாக‌
இருந்த விவரம் எனக்குத் தெரிந்திருக்க‌வில்லை. பொருட்களை ஒவ்வொன்றாகத்
தூக்கிக் கொண்டு முதல் மாடியில் இருக்கும் எனது அறையில் படிகளின் வழியே
சென்று வைத்துக் கொண்டிருந்தேன்.(மெஸனைன், எனவே லிஃப்ட் கிடையாது)

கொஞ்சம் வெயிட்டான பேக்கேஜைப் படிகளின் வழியே தள்ளாடித் தள்ளாடி
எடுத்துச் சென்று உள்ளே நுழைந்ததுதான் தாமதம் 'சடக்'கென்று பிடித்துக்
கொண்டது முதுகெலும்பு சங்கமிக்கும் இடுப்புப் பகுதியில்.

தொடர்ந்து ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரங்களோ ஒரு மாதிரியாய்
கோணிக்கொண்டு அலுவலகம் சென்று வந்தேன். இதை விட ரொம்ப முக்கியமானது,
அங்கு சேர்ந்த முதல் ஒரு வாரம் வரை தூங்குவதற்குக் கஷ்டப்படவில்லை,
மாறாக‌த் தூங்கி எழுந்ததும் கஷ்டப்பட்டேன்.

காரணம் கைகள் நூலிழை போல் கடிக்கப்பட்டு இருந்தன. ஒருநாள் வலது கையும்
மறு நாள் இடது கையும் அங்கங்கே கடிக்கப்பட்டு சிறிதாய் தோல் கிழிந்திருந்தது.

என்ன காரணமென்று தெரியவில்லை, மூன்றாம் நாளிலிருந்து முழுக்கை
சட்டை அணிந்து தூங்கவாரம்பித்தேன். காலையில் எழுந்து பார்த்தால்
காதுகளின் மடல் ஓரங்கள் கடிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்துக் கொஞ்சம்
பயம் வர ஆரம்பித்தது.

இந்த நாட்டில் மூட்டைப் பூச்சிகளும்,சிறிய கரப்பான் பூச்சிகளும் இல்லாத‌
வீடுகள் இல்லையெனும் அளவுக்குச் சகஜமானவை. மூட்டைப் பூச்சியால்
கடிபட்ட இடம் தெரியும் ஆனால் கரப்பான் பூச்சி கடித்துப் பார்த்ததில்லை.
ஆதலால் அங்கங்கே உலாவிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிதான்
கடித்திருக்கும் என்ற முடிவுக்கு வந்த பின் பயம் போய் விட்டது.

ஃப்ளாட் ஓனரிடம் முறையிட்ட போது, நான் எத்தனை காலமாக இங்கே
தங்கி வருகிறேன், ஒருபோதும் நான் இந்த மாதிரி கடிபட்டதில்லையே'
என்று சொன்னார். ஒருவேளை நாம் மிக இனிப்பானவனாக இருக்கிறோமோ
என்று மகிழ்ந்த‌ வேளையில் 'அய்யய்யோ, சர்க்கரை வியாதி வந்து
தொலைத்து விட்டதோ' என்ற ஐயமும் வந்து பயமுறுத்தியது.
என்றாலும் நான்கைந்து நாட்களுக்குப் பின் எல்லாம் சுமுகமாகச்
சென்றது. காரணம் 'கடி'கள் நின்று விட்டன.

பிறிதொரு நாள் படிகளில் இறங்கும் போது கால்களை காற்றில்
பறக்குமாறு தட்டி விட்ட படிகளின் மேல் பிடறி முட்ட‌ இடறி விழுந்தேன் :)

தூங்கும் போது சில வேளைகளில் எங்களின் இரு கட்டில்களுக்கு இடையில்
நிற்கும் நிலைக்கண்ணாடியிலிருந்து ஒரு பெண் என்னை கோபமாக உற்று
பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். நல்ல வேளை அப்போதே ப்ளாக்
எழுதுபவனாயிருந்தால் 'கனவில் ஒரு கோப தேவதை'ங்கற தலைப்பில்
ஒரு பதிவு வந்திருக்கும் :)

இப்படியாகச் சில மாதங்கள் ஓடி விட்டன.

ஒருநாள் ஒரு பெரியவரைச் சந்தித்தேன். எனக்கு முன்பே அறிமுகமானவர்.
சூஃபிஸம் அல்லது தரீக்கா வழியில் புலமை பெற்றவர். தமக்குத் தங்குவதற்கு
ஒரு அறை கிடைக்குமாவென விசாரித்தார். அச்சமயம் நானும் ஊருக்குப்
போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்ததால் எனது அறையில் தங்கிக்
கொள்ளுமாறு சொல்லி ஃப்ளாட் ஓனரைச் சந்திக்க வைத்து அனுமதி பெற்று
அவரைத் தங்க வைத்து விட்டு நானும் ஊருக்குச் சென்று விட்டேன்.

ஊரிலிருந்து திரும்பிய பின் எனது அறைக்குச் சென்றேன். பெரியவரும்
ஊருக்கு கேன்சலில் சென்று விட்டதாக ஃப்ளாட் ஓனர் சொன்னார். அதோடு
இன்னொன்றையும் சொன்னார்,

'பாய், பெரியவர் ஒரு தினுசான ஆளாய் இருப்பார் போல, ஒரு நாள் இரவு
திடீரென்று ஏதோ அரவம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தேன். குடியரசு
தின விழாவில் கொடியேற்றுவார்களே அது போல ஏதோ சைகை செய்து
கீழே இறக்கிக் கொண்டிருந்தார், நேர்கீழே பாட்டில் ஒன்று வைக்கப் பட்டு
இருந்தது. அவரது வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது, கடைசியில்
பெருமிதத்தோடு சொன்னார்,'எங்கிட்டப் பலிக்குமா உன் பாச்சா'.

காலையில் அவரிடம் என்னவென்று விசாரித்தேன் ஒன்றுமே
சொல்லவில்லை புன்னகைத்ததைத் தவிர. எனக்கும் அவரோடு சரியாக ஒத்துப்
போகவில்லை, எனவே எனக்கெதிராக பில்லி சூனியம் ஏதும் செய்தாரா இல்லை
ஆளே லூசா, புரியவில்லையே பாய், உங்களுக்கு ஏதாவது புரிகிறதா.

நான் சொன்னேன் 'பயப்படாதீங்க பாய், உங்களுக்கெதிரானது அல்ல,
அந்தப் புன்னகையின் மூலம் எனக்குத்தான் தகவல் சொல்லியிருக்கிறார்,

'தம்பி, நீ தங்குவதற்கு வேறு இடம் பார்த்துக்கோ' :)

எஸ்கேப்பு

18 comments:

FARHAN said...

என்னங்க இப்படி பீதிய கிளப்பி விட்டுடீங்க நாங்களும் வெளிநாட்டுல தினி பிளட்டுல தானே இருக்கோம் இப்ப என்ன பண்ணலாம்

அரபுத்தமிழன் said...

புன்னகைதான் பதில் :))
நன்றி ஃபர்ஹான்.

pichaikaaran said...

மிகவும் சுவையாக இருந்தது..

அதே நேரத்தில் " சூஃபிஸம் அல்லது தரீக்கா வழி" யை பற்றி இஸ்லாமின் அதிகார பூர்வ நிலைப்பாடு என்ன என்ற குழப்பத்தை அதிகப்படுத்தி விட்டது, இந்த இடுகை

pichaikaaran said...

dont try to escape with one line answere,,,

we need detailed answere with examples , case studties and verses from authorised books

அரபுத்தமிழன் said...

தோழரே, தங்களின் அன்புக் கட்டளைக்குச் சிரிப்பான் உண்டா இல்லையா :)

உங்கள் விருப்பப் பதிவில் இதற்கான பதிலை இன்ஷா அல்லாஹ்
எழுதுகிறேன். அடுத்தப் பதிவு அல்லது அதற்கடுத்து, அதுவரை
பொறுமை காக்கவும்.

pichaikaaran said...

சிரிப்பான் உண்டா இல்லையா"

:-) :-) :-)

"அடுத்தப் பதிவு அல்லது அதற்கடுத்து, அதுவரை
பொறுமை காக்கவும்"

not only me... many others also , who are interested in spiritual matters, waiting eagerly

அரபுத்தமிழன் said...

//many others also , who are interested in spiritual matters, waiting eagerly//
நன்றாகத் தெரிந்தவர்கள் இது பற்றிப் பேசுவதில்லை, இந்த
விஷயத்தில் நான் ஒரு ஆர்வக் கோளாறு என்பதால் அங்கங்கே
கேட்டுத் தெரிந்ததை எழுதுவேன் இ.அ.

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் நானும் தனியாதான்யா இருக்கேன் அவ்வ்வ்வ்வ்வ் இனி தூக்கம் வருமா..?

அரபுத்தமிழன் said...

:)))

தனியாவா, ஒரு கும்மி கோஷ்டியோடவல்லவா இருக்கீங்க.
பயப்படாதீங்க, கலவரம்,ஊரடங்கு உள்ள எடத்துக்குலாம்
இவுக வரமாட்டாங்க.

அரபுத்தமிழன் said...

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்.
(புடிச்சு உள்ள போட்டுற வேண்டியதுதான்) :))

ஹலோ, என்னாச்சு, வேறெதையும் பாத்தீங்களோ ?

ஹுஸைனம்மா said...

ஓ, மகப்பேறில் இறந்த பெண் ஆவியாக உலவுகிறது, அதைப் பாட்டிலில் (அலாவுதீன் பூதம் போல) பிடித்து அடைத்துவிட்டார் அந்தப் பெரியவர், அப்படித்தானே?

ஆமா, அந்தப் பேய் முதல் நாலு நாள் மட்டும் உங்களைக் கடிச்சுட்டு, அப்புறம் ஏன் விட்டுடுச்சு? அந்த ஃப்ளாட் ஓனரை ஏன் கடிக்கவேயில்லை? அவர் ரத்தமும் டேஸ்டாயில்லியோ உங்களதைப் போல? இல்லை வேறு குரூப் ரத்தமா?

ஒரு பி.டி.சாமி உருவாகிறார்???

:-)))))))))

அரபுத்தமிழன் said...

புனைவில்லை,புரட்டில்லை உண்மையன்றி வேறில்லை யுவர் ஆனர்.
அப்பெரியவரை மீண்டும் சந்திக்க வேண்டுமே இறைவா, சந்தித்து
உண்மையை உறுதி செய்து நான் பி.டி.சாமியா இல்லை பீத்தாத ஞானியா
என்று இந்தப் பாருலகிற்கு நிரூபிக்க வேண்டுமே இறைவா :))

VELU.G said...

என்ன பாஸ் இது உங்களைக் கடிச்சது யாருன்னு கடைசி வரை சொல்லவே இல்லையே?

அரபுத்தமிழன் said...

கடித்தது யாரோ ... தெரியலையே ..
தினம் தினம் பார்த்தேன் ... புரியலையே :)

பாஸ், தெரிஞ்சா சொல்லிருக்க மாட்டேனா, அப் பெரியவரை
மீண்டும் காண நேரிட்டால் கண்டிப்பாய் அது பற்றி விசாரிப்பேன்.

Unknown said...

என்னங்க.. திகில் கதையெல்லாம் சொல்றீங்க..

கடைசி ஒரு லைனில் மிரட்டிட்டீங்களே.. :-)

அரபுத்தமிழன் said...

புதுசாவா சொல்றேன். இதற்கு முன் ஜின் பள்ளத்தாக்கு எழுதினேனே படிக்கலையா. இதுவெல்லாம் வாழ்வின் ஒரு அங்கம்தான் பாபு.

Unknown said...

உங்க ஏரியாலதான் இன்னும் இருக்கேன்.. :-)..

ஜின் பள்ளத்தாக்கா?.. அதையும் படிச்சுடறேன்..

அரபுத்தமிழன் said...

புரியுது புரியுது நானும் பின் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கிறேன் :)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)