Thursday, October 28, 2010

'மைன்ட் யுவர் பிசினெஸ்'

'எச்சொல் யார்யார் செவி சேர்ப்பினும்
அச்சொல்லில் தேன் சேர்ப்பதறிவு'

புத்திமதி சொல்லப் படும் போது பிடிக்கலன்னா, 'ஓ(ன்) வேலயப் பாத்துக்கிட்டு
போய்யா'ன்னு புரியிற மாதிரி தமிழ்ல சொல்லாம, நாகரிகமா,ஸ்டைலா
வெள்ளக்காரன் மாதிரி நம்ம மக்கள்ஸ் இப்படி சொன்னது ஒரு கா..ல..ம்.

இப்பல்லாம் அட்வைஸ் எங்க கிடைச்சாலும் பிடிக்காட்டிக் கூட காது கொடுத்து
கேட்பது மட்டுமல்ல தன்னுடைய கருத்தையும் அங்கே பதிவிக்க நினைக்கும்
பிளாக்கர் காலம் இது.

சென்ற உம்ராவின் போது எனக்கும் நண்பனுக்குமிடையில் நடைபெற்ற உரையாடல்.
கஃபாவை வலம் வருவதற்காகச் சென்ற நேரமது.கீழே ஆண்களும் பெண்களும் கலந்த
கடுமையான‌ கூட்டமாக இருந்ததால் மாடியில் தவாஃப் செய்ய நேரிட்டது.

மாடியில் தவாஃப் செய்யும்போது அங்கங்கே பெண்கள் பகுதியைக் கடக்க நேரிடும்
போது பெண்களின் பேச்சுக்குரலும், ஓதும் சப்தமும் அதிகமாகக் கேட்டது.
அப்போது நண்பன் கேட்டான்,

'சத்தத்துக்கு என்னா அரபியில‌'

'சவ்த்'னு சொல்வாங்க, எதுக்கு கேக்குற?

இல்ல, இங்க பெண்கள் சத்தம் அதிகமா இருக்கு, சத்தம் போடாதீங்கன்னு
அரபியில‌ சொல்லத்தான். 'south maafee'னு சொல்லவா ?

'south maafee'ன்னா 'சத்தமேயில்லை(இன்னும் நல்லா சத்த‌ம் போடுங்க)ன்னு அர்த்தம்'.

பின்ன எப்படி கேட்கிறது, 'சவ்த் லேஷ்' (ஏன் சத்தம்) என்று கேட்கவா அல்லது
'சவ்த் மா இரீது' (சத்தம் தேவையில்லை) என்று சொல்லலாமா ?

எனக்கும் சரியான சொல்லாடல் தெரியாததால், இங்க பாரு டைரக்டா சொல்றதா
இருந்தா, 'உஸ்குத்' (வாய மூடு)ன்னு சொல்லலாம், ஆனா அடுத்த நிமிஷம்
செருப்போ அல்லது போலிஸோ பறந்து வரும், எதுக்கு வம்ப வெலைக்கு வாங்குறே.

இல்லப்பா, யாராவது சொன்னாத்தானே, அவங்களுக்கும் புரியும்.

இங்க பாரு, இந்த மாதிரி சொல்றதுக்குன்னே 'முதவ்வா'க்களை அரசாங்கம் வச்சிருக்கு.
இது அவங்க வேலை. மாத்திரமல்ல, சட்டம் கொண்டு அல்லது சாட்டை கொண்டு
தகாதவைகளைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையதல்ல, மாறாக‌ அது இஸ்லாமிய
அரசாங்கத்தின் கடமை. தனி மனிதனுக்கு, அவனுக்குக் கீழுள்ளவர்களைச் சத்தம்
போட்டுத் திருத்த அனுமதி உண்டு. இருந்தாலும் மென்மையான முறையில்
செய்யப்படும் அறிவுரைகள் தாம் நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். காரணம்
'மென்மையில் பரக்கத்(அபிவிருத்தி) இருக்கிறது'.

உன் பேச்சு எடுபட வேண்டுமென்றால், 'இறைவனின் இல்லத்தில் சத்தமிடாமல்
இருப்பவருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக' என்கிற தொனியில்
உன் உபதேசம் இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தனி மனிதனிலிருந்து அரசாங்கம் வரைக்கும் ஒவ்வொருவரும்
எப்படி நடக்க வேண்டும் என்று காட்டித் தந்திருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள்.

ஒரு முறை நபியின் மீது கடும் வெறுப்பு கொண்ட நிராகரிப்பாளர் ஒருவர், நபியை
ஒரு முறை பார்த்து விடும் எண்ணத்தில் மதீனா நோக்கி வந்தார்.வரும் வழியில்,
இருவர் சத்தமாக உரையாடுவதைக் கண்டு என்னவென்று அறிய எட்டிப் பார்த்தார்.
ஒருவர் ஏதோ விற்றுக் கொண்டிருக்க இன்னொருவர் வாங்குவதற்காகப் பேரம்
பேசிக் கொண்டிருந்தார்.

இவர் எட்டிப் பார்க்கும் நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, 'இந்தாளைக்
கண்டிப்பவர் யாருமில்லையா' என வாங்குபவர் போவோர் வருவோரிடம் முறையிட,
நபியைக் காண வந்தவர், 'அநியாயம் செய்யும் இந்த விற்பனையாளன்தான் நபியாக
இருக்கும்' என்று கணித்து அவரோடு சண்டையிட நினைக்கும் சமயத்தில், மிக
அழகான ஒருவர் அவ்விருவரை நோக்கி நெருங்குவதைக் கவனித்தார்.

அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'யாரசூலுல்லாஹ், இந்த ஆள் அநியாய விலை
சொல்கிறான்' என்று புகார் செய்ய, வியாபாரியை நபியென்று தவறாக எண்ணியவர்,
இப்போது நபி என்ன செய்யப் போகிறார் என்றரிய அருகில் வந்து கவனிக்கலானார்.
நபி சொன்னார்கள்,

'நல்ல பண்போடு வியாபாரம் செய்பவர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'நல்ல பண்போடு பொருளை வாங்குபவ‌ர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'விற்பவரும் திருப்தி அடைந்து வாங்குபவரும் திருப்தி அடையும்
வியாபாரம்தான் மிகச் சிறந்த (பரக்கத்துகள் பொருந்திய) வியாபாரம்
'.

வந்தவர் அசந்து விட்டார். இவ்வளவு சிம்பிளா,மென்மையாய்,அன்பாய்
எவ்வளவு பெறுமதியான விஷயத்தைச் சொல்லி விட்டார். யாரையும் கண்டிக்க
வில்லை, ஆனால் இருவரையும் ஒற்றுமைப் படுத்தி விட்டது அல்லாமல் மனித
சமுதாயத்திற்கே 'நல்ல வியாபார உத்தி'யைக் கற்றுத் தந்து விட்டாரே,
இவரல்லவா மனிதர் என்றவாறு நபியின் கை பற்றி மன்னிப்புக் கேட்டு
இஸ்லாத்தைத் தழுவினார் (ஹயாத்துஸ்ஸஹாபா).

(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

Monday, October 25, 2010

தூசி தட்டிச் சில கவிதைகள்

தமிழ்மண வானில் இன்று கவிதா நட்சத்திரத்தன்று கவிதையைப் பத்தி எழுதலன்னா, கவிதையார்வலர்கள் கோவிச்சுக்குவாங்க இல்லையா, அதனால‌ இந்தப் பதிவு.

சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதுதான் நாம் சாகசங்கள் புரிவதும் நமக்குள் ஒரு
சக்தி இருப்பது தெரிவதும் சாத்தியமாகிறது. இன்று தமிழ் வலைப்பூக்களின்
காரணத்தால் தமிழை மறக்காமல் 'தமிழோடு உறவாடி'ப் பொழுது போக்க முடிகிறது.

ஆனால் அன்று,

'இரவுத் தாரகை நிலாவே நீ
பகலில் வந்தால் என்னவோ
உன்னைக் கண்டால் சூரியனைக் காணோம்
சூரியனைக் கண்டால் உன்னைக் காணோம்
என்ன இருவரும் கண்ணா மூச்சி ஆடுகிறீர்களா' :)

இதுதாங்க நா வாழ்க்கையிலேயே முதன்முதலா எழுதுன கவிதை. ஸ்கூல்ல நடத்துன
கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக எழுதுனது. 'இயற்கை எழில்' தலைப்பில்
எழுதிய கவிதையின் தொடக்க வரிகள். அன்று முதல் பரிசும் கெடச்சதனால ஒரு
கவிஞன் உருவானான். :)

அதன் பிறகு சில குழுமங்கள் நடத்திய கவிதைப் போட்டிக்காக சில கவிதைகள்
எழுதி 'கவிஞன்'கிற நெனப்ப தக்க வச்சதுண்டு. அதில் ஒன்று 'தட்ஸ் தமிழில்'
கூட‌ வெளிவந்தது.

கவிதைகளில் 'ஹைக்கூ' வகை ரொம்பப் பிடிக்கும் என்பதால் அது மாதிரி எழுதிப்
பார்த்ததுண்டு. அவைகளில் சில,


வீட்டிற்குள் சண்டை
அங்கும் சாதிப் பிரச்னை
ஆண்சாதிக்கும் பெண்சாதிக்கும்

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

கத்தியின்றி ரத்தமின்றி
உள்குத்தும் உள்காயமும்
தமிழ் வலைப்பதிவர்கள்'

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

வறண்ட பிரதேசத்திலிருந்து
ஒரு வற்றாத ஜீவ நதி
இதயம் பிழிந்த கண்ணீர்


அதையேன் கேட்குறீங்க, 'வெண்பா' கூட முயற்சித்ததுண்டு.

கிட்டப் பார்வைக்கு எந்த லென்ஸ் என்பதைப் பரீட்சையில் ஞாபகம் வைப்பதற்காக
'கிட்டப்பா குழியில் விழுந்தார்' என்று ஸ்கூல்ல‌ சொல்லித் தந்தார்கள். அதையே
'வெண்பா'வாக எழுத நினைத்து,

எட்டப்பர் எழுதிக் குவித்த ஏட்டிலே
கிட்டப்பர் குழிவிழுந்தார் காண்

என்று எழுதியதுண்டு.

'இதெல்லாம் வெண்பா வா ...ன்னு' புலவர்கள் வையக்கூடாது.
ஒரு முயற்சிதான், பிறகு அதைத் தொட(ர)வில்லை. 'ஹைக்கூ' வகை
முயற்சிகள்தாம் இன்றும் தொடர்கிறது.

ஹைக்கூவில் மிக மிகப் பிடித்தது, கவிக்கோ எழுதிய,

கல்லின் மீது பூவை எறிந்து
பூஜை செய்து வந்த மக்கள் அன்று
ஒரு பூவின் மீது கல்லை எறிந்தார்கள்.

தாயிப் நகர சம்பவத்தை ஒரு சில வார்த்தைகளில் என்ன அழகாய்ப்
படம் பிடிக்கிறார் பாருங்கள்.

இடையில் சில வருடங்கள் வெறுமனே ஓடிவிட்டன.
இன்று கவிதை,கட்டுரை மூலம் உங்களுடனே. நாளை எப்படியோ.

இன்னும் எழுதலாம்தான் (கவிதையைச் சொல்லவில்லை, கவிதை பற்றி
எழுதுவதைச் சொன்னேன்).ஆனால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது.
இது பற்றி இன்னும் படிக்க நினைப்பவர்கள் இதற்கு முன் நான் எழுதியதையும்
படித்துப் பாருங்கள். இதை விட சுவாரசியமாய் இருக்கும். அது,
'நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை'

Wednesday, October 20, 2010

சண்டையைத் தவிர்த்த சமயோசிதம்

அரேபியாவின் ஏதோவொரு வீட்டில் ஒருநாள் கூட்டம் கூடியிருந்தது. பயணத்தினூடே
அங்கு வந்து ஒரு பெரியவர் என்ன கூட்டம் என்று விசாரித்ததில் 'தகப்பனார் தனது
மூன்று பிள்ளைகளுக்கு பின்வருமாரு உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதாவது
சொத்தில் பாதி முதல் பிள்ளைக்கும், நாலில் ஒரு பகுதி இரண்டாவது பிள்ளைக்கும்,
மூன்றாவது பிள்ளைக்கு ஐந்தில் ஒரு பகுதியும் கொடுக்கப் பட வேண்டுமென்று
எழுதப்பட்டிருக்கிறது. எல்லாம் பிரச்னையின்றி பங்கு போட்டுக் கொடுத்தாகி விட்டது.

ஆனால் இந்த 19 குதிரைகளை மட்டும் பிரித்துக் கொடுக்க முடியவில்லை. குதிரையை வெட்டுவதற்கும் தயாரில்லை, என்ன செய்வதென்றே தெரிய வில்லை. இதனால்
மூவரும் அடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என்றனர். உடனே பெரியவர்,
'அவ்வளவுதானா, அப்ப என்னுடைய குதிரையையும் அதில் சேர்த்து விடுங்கள். இப்போ
20 குதிரைகள். முதல் பிள்ளைக்கு 10, இரண்டாவது பிள்ளைக்கு நாலில் ஒரு பகுதி 5,
மூன்றாவது பிள்ளைக்கு ஐந்தில் ஒரு பகுதி 4, ஆக மொத்தம் 19 முடிந்தது, என்னுடைய
குதிரையை எனக்குத் தந்து விடுங்கள் என்று சொல்லியவாறு நடையைக் கட்டினார்.

******************************************************************************

ஒருவன் ஒரு பெரியாரைத் திட்டிக் கொண்டிருந்தான், அவன் வலப்புறமாக வந்து
திட்டினால் அவர் இடப்புறம் திரும்பினார், அவன் இடப்புறம் வந்து திட்ட, அவர்
வலப் புறம் திரும்பினார். அவனும் கடுப்பாகி முகத்திற்கு நேராக வந்து 'ஏன்யா,
அப்பயிலிருந்து ஒன்னத் திட்டுறேனே ஒனக்குத் தெரியலயா, இல்ல திட்டுறது
ஒரைக்கலயான்னு கேட்க, பெரியவர் அழகாக பதில் சொன்னார்,
'நானும் அப்போதிலிருந்து உன்னை மன்னித்துக் கொண்டிருக்கிறேனே,
அது உனக்குத் தெரியவில்லையா?'. அடடா, இவரல்லவா மனிதர். இவர் போல்
யாவரும் இருந்தால், எத்துணை அழகும் அமைதியும் பெறும் இவ்வுலகம்.

******************************************************************************

சென்ற வாரம் நடைபெற்ற சம்பவம் இது. பள்ளியில் மக்ரிப் தொழுது விட்டு
வெளியில் வந்தேன். தெரிந்த ஒரு பையன் 'பாய் டீ சாப்பிடலாமா' எனக் கேட்க,
நான் 'வேணாந் தம்பி, இப்பத்தான் குடிச்சேன்' என்று சொல்லிவிட்டு நகர,
என்னை நோக்கி ஒரு பெங்காலி பையன் வேகமாக வந்து, கை கொடுத்த பின்
அவனை உமக்குத் தெரியுமாவெனக் கேட்க, ஆம் தெரிந்த பையன் தான் என நான்
சொல்ல, அவன் எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டான் எனச்
சொல்ல, நானும் 'அப்படியா, அவனைக் கூப்பிடு, நான் பேசி வாங்கித் தருகிறேன்'
என்று முந்தையவனின் பக்கம் திரும்ப, ஆள் எஸ்கேப்பு.

பெங்காலியும் தமிழ்ப் பையனைத் தொடர்ந்து சென்று கண்டு,பிடிக்க, அவன் கையைத்
தட்டி விட்டு ஓட, அதுவும் வேகமாக வரும் வாகனங்களைக் கூடத் துச்சமென மதித்து
ரோட்டைக் கிராஸ் செய்து ஓடுவதைப் பார்த்த எனக்குக் கோபம் வந்து நானும் துரத்த,
நான் ஓடுவதைப் பார்த்து என் நண்பனும் ஓடி வர ஒரு வழியாக அவனைப் பிடித்தோம்.

பிடித்த மாத்திரத்திலேயே நான் கேட்ட கேள்வி 'ஏண்டா ஒடுற'.
இதுவரை மரியாதையாகப் பழகிய நான் ஒருமையில் கேட்டதைச் சகிக்காத அவன்
கொஞ்சம் திகிலாகி, 'என்னது? என்னைய்யாக் கேட்டீங்க, நீங்க நம்மாளு அவன்
பெங்காலி, அவனுக்குப் போய் சப்போர்ட்டு பண்றீங்களே, இது நியாயமா?'.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. எதுக்கு ஓடுற, எவ்வளவு கொடுக்கணும் ,
எதுக்குக் கடன் வாங்குன ?. 'கடனா, இல்லண்ணே, நெட்டு போனு, அவன் கிட்ட
பேசுனேன். அதுல மீதி,அஞ்சு ரூவா கொடுக்கணும், ஆனா அவன் இருவது ரூவா
கேக்குறான். அதனால கோவத்துல நான் கொடுக்கவே கூடாதுன்னு இருந்தேன்'.

அடப்பாவிகளா, வெறும் அஞ்சு பத்துக்கு இப்படி உயிர மதிக்காம ஓட வச்சிட்டீங்களடா.
சரி, அஞ்சு ரூவாதானே, மொதல்ல அதக் கொடு, மத்ததப் பேசித் தீத்துக்கலாம்னு
சொல்லி, அவனும் அஞ்சு திர்ஹத்தைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டே
பெங்காலி சொன்னான், 'ஓக்கே, மன்னிச்சுட்டேன்'.

எனக்கோ கோபம் பெங்காலியின் மீது திரும்பி, 'டேய், இந்த சல்லிக்காசு பெறாத
விஷயத்தைப் பெருசாக்கிட்டீயே, அது மட்டுமல்ல, அஞ்சு ரூவாய்க்குப் பதிலா இவனை
இருவது ரூவாக் கேட்டு எதுக்குடா தொல்லை பண்ணினாய்'னு கத்த, பெங்காலியும் ஏதோ
சொல்ல வரும் போது, நண்பர் அவனைத் தடுத்து, என் தோள் மீது கை போட்டவாறு
கூட்டி வந்து விட்டார். பிறகு மெதுவாக அந்த உண்மையைச் சொன்னார்.

அதாவது காசு கொடுக்க வேண்டிய பையனை நான் சத்தம் போடும் நேரத்தில் இவர்
பெங்காலியிடம் 'உனக்கு எவ்வளவு தரணும்' எனக் கேட்டு இருபதையோ அல்லது பத்து திர்ஹத்தையோ கையில் தள்ளி 'உஸ்கு மாஃப் கர்தோ' (அவனை மன்னித்து விடு)
என்று சொல்லியிருக்கிறார்.

ஓ! அதுனாலதான் காட்சிகள் டக்கென்று மாறியதோ!

இந்த டெக்னிக்கு நமக்குத் தெரியாமப் போச்சே :)

அடுத்த நாள் நம்மாளைச் சந்தித்த போதும் இதைத்தான் மீண்டும் கேட்டான்.
'ஏம்பாய், நீங்க நம்மாளு, அவனுக்குப் போய் சப்போட்டு பண்ணீங்க'.
நான் சொன்னேன், 'இல்ல தம்பி, இனத்தின் மீது பாசம் இருக்க வேண்டும் தான்.
ஆனால் இனத்தைச் சார்ந்தவன் தவறு செய்யும் போது அதைத் தட்டிக் கேட்காமல்
அவனுக்கு சப்போர்ட் செய்தால் அவன் 'இனவெறி' பிடித்தவனாகிறான் என்று நம்ம
நபி சொல்லியிருக்காங்களே தெரியாதா ?

******************************************************************************

எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாலிப வயதில் நடைபெற்ற சம்பவம் ஒன்றும் நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நபியாவதற்கு முன்னொரு நாளில், இறையில்லமான கஃபத்துல்லாஹ்வைப் புனரமைத்த பின் மக்காவின் குரைஷிகள் அதில் 'ஹஜருல் அஸ்வத்'
கல்லைப் பதிப்பிக்கும் போது ஒரு பெரிய சண்டை ஏற்படும் சூழல் உண்டானது.

குரைஷிகளின் மூன்று குலத் தலைவர்களும் அந்தக் கல்லைப் பதிப்பிக்கும் வாய்ப்பு தம‌க்கே
தரப்பட வேண்டுமென்று வலியுறுத்த, நிலைமை மோசமாக, ஒருவர் சொன்னார், 'இந்தப்
பாக்கியம் யாருக்குக் கிடைக்க வேண்டுமென்பதை, இப்போது கஃபாவுக்குள் வரும் நபரே
முடிவு செய்யட்டும். இதனை ஆமோதித்த அனைவரும் ஆவலாய் கஃபாவுக்குள் நுழையும்
நபரை நோக்கி தமது பார்வையைச் செலுத்தினர்.

அங்கே வந்து கொண்டிருந்தது நமது கண்மணியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
மக்கள் அவர் மீது அன்பும் கண்ணியமும் வைத்திருந்த நேரம் அது.. அவரின் முடிவுக்குக்
கட்டுப் படுவதாக மனப் பூர்வமாக ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் செய்த தீர்ப்பு என்ன
தெரியுமா, தமது தோளில் அல்லது தலையில் இருந்த துண்டை எடுத்து கீழே வைத்து
அதன் மேல் 'ஹஜருல் அஸ்வத்' கல்லை வைக்குமாறு சொன்னார்கள். அவ்வாறு
வைக்கப் பட்டதும், துணியின் நான்கு மூலைகளில் ஆளுக்கு ஒரு மூலையைப்
பிடிக்குமாறு மூன்று தலைவர்களிடமும் சொல்ல நான்காவது மூலையைத் தாமே
பிடித்துக் கொண்டார்கள். ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டாடியே அவர்களும்
கல்லைப் பதித்தனர்.வாழ்க நபிக‌ளின் திருநாமம் ; வளர்க‌ அவர்களின் திருப்பணி.

ஆக இறைவன் நமக்குத் தந்த புத்தி சாதுர்யத்தின் உதவியால் சமுதாய
ஒற்றுமைக்குப் பாடுபடுங்கள் சகோதரர்களே.

வஸ்ஸலாம்.

Monday, October 18, 2010

சமாதானம் செய்து வைக்கும் வல்லமை தாராயோ இறைவா

ஒரு மனிதனைக் காப்பாற்றுவது முழு மனித சமுதாயத்தைக் காப்பதற்குச் சமம்.
ஒரு மனிதனைக் கொலை செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொல்வதற்குச் சமம்.
புத்தியோ சக்தியோ அது இந்த மனித சமுதாயத்திற்காகப் பயன்படவில்லையெனில்
அதனால் என்ன பிரயோஜனம். இறைவன் நமக்குத் தந்த திறமைகளை வைத்து உலக
ஒற்றுமைக்கு ஏதாவது செய்ய வேண்டும் தோழர்களே!.

கொஞ்சம் அன்பும் கொஞ்சம் சமயோசிதமும் கொஞ்சம் நகைச்சுவை உணர்வும்
இருந்தால் போதும் சண்டையை விலக்கி சமரசம் ஏற்படுத்தவோ அல்லது கோபத்தின்
கடுமையைக் குறைக்கவோ முடியும்.

'சண்டையைத் தவிர்த்த நகைச்சுவை உணர்வு' என்ற தலைப்பில் ஜாலியாக எழுத
ஆரம்பித்து இப்போ கொஞ்சம் சீரியஸ்னெஸ்ஸும் கலந்துடுச்சு.

மொதல்ல நகைச்சுவை எப்படி தடுத்த‌தென்று பார்க்கலாம்.

தமிழகத்தின் ஏதோவொரு ஓட்டலில்,வழக்கமாக வரும் வாடிக்கையாளர் அன்று
பசியோடு வந்து,'சர்வர், சூடா ஏதாவது கொண்டு வா' எனக்கேட்க,கேட்டவர் மீது
என்ன கோபமோ, சர்வரும் சூடான நெருப்புக் கங்குகளைத் தட்டில் ஏந்தி வர,
வந்த கோபத்தை அடக்கி, பந்தாவாக பீடியை அதில் பற்ற வைத்து வெளியில் வந்த
கதை எல்லோருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அது போன்று, சண்டை வராமல்
தடுக்க நகைச்சுவை உணர்வு ரொம்ப அவசியம்.

சென்னை பேச்சிலர் குடியிருப்பில், நாங்கள் தங்கியிருந்த காலம். ஒருநாள்,
எங்களிடையே இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டு ஒருவன் மற்றவனைத் திட்ட,
திட்டப்பட்டவன் (அபூ), திட்டியவனை நோக்கி, 'மவனே! அழகாயிருக்கியேன்னு
சும்மா விடுறேன்னு' சொல்ல, அதற்கு அவன் புன்னகைக்க, முடிவு சுபம்.

இன்னொரு நாள், காலைக்கடனை நிறைவேற்ற, கியூவில் நின்றோம். சுகப் பிரசவம்
முடிந்து வெளியில் அபூ வந்தவுடன், எனக்கு முன் நின்றவன் உள்ளே சென்றவுடனேயே
திரும்பி 'டேய் அபூ, ஒழுங்கா தண்ணி ஊத்துனா என்னடா'ன்னு சத்தம் போட,
அபூ சொன்னான் கூலா, 'ம்ஹூம், என்னை விட்டுப் போன எதப் பத்தியும் நான்
கண்டுக்கிறதே இல்லை'. :), எல்லோரும் சிரித்ததில் நெலமை கூல்.

அபுதாபி பெங்காலி டீக்கடையில், நானும் மற்ற இரு நண்பர்களும் டீ குடித்துக்
கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரில் ஒரு பாகிஸ்தானி பட்டானும் அமர்ந்திருந்தார்.
அச்சமயம் நண்பருக்கு போன் வந்தது. பேசிய பிறகு செல்போனை சட்டைப் பாக்கெட்டில்
வைப்பதைப் பார்த்த பட்டான் சொன்னார்,

'உதர் நை ரக்கோ, ஓ தில் கு கராப் கரேகா (அங்க வக்காதே,அது இதயத்தைப் பாதிக்கும்)'

பொதுவாக பட்டானின் பேச்சு கொஞ்சம் அழுத்தமாக இருக்கும். இதைக் கேட்டவுடன்
நண்பரின் முகத்தில் கோபத்தின் ரேகை படர, இதை கவனித்த நான் பட்டானைப் பார்த்துச் சொன்னேன், 'ஆப்கே பாக்கெட்மே ஜோ பைசா ஹே,உஸ்கு பி உதர் நஹீ ரக்னா,கியூன்கே
பைசா பி தில்கு கராப் கர்த்தாஹே'(உம்முடைய பாக்கெட்டிலே பைசா வைக்கப் பட்டிருக்கே,
அதையும் அங்கே வைக்க வேண்டாம், ஏனென்றால் பைசாவும் மனச கெடுக்கும் சமாச்சாரம்)

இதைக்கேட்டு கடையிலிருந்தோர் சிரிக்க, பட்டானும் பைசாவைப் பற்றி ஜாலியாக
விவரிக்க, நண்பர்களாகி வெளியே வந்தோம். ஆதலால் சகோதரர்களே, நகைச்சுவை
அன்பை வளர்க்கட்டும். சத்தமாகப் பிரியும் காற்றும் கூட‌ சகல‌ இறுக்கத்தையும் கலகலக்க வைக்கும்தான் ஆனால் அது அன்பை வளர்க்காது :-)))

அடுத்து, சமயோசிதம் எப்படி சண்டையைத் தவிர்த்தது என அடுத்த பதிவில் பார்ப்போம்.

Monday, October 11, 2010

திருவள்ளுவர் நபியா இல்லை கவிஞரா

‍‍‍
இது ஒரு ஆராய்ச்சிப் பதிவல்ல மாறாக ஒரு எண்ணவோட்டப் பதிவு.
மனிதர்கள் வாழ்ந்த எல்லாப் பகுதிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக தீர்க்கதரிசிகள்
அனுப்பப் பட்டுள்ளனர் என்பது இஸ்லாம் கூறும் உண்மை. இந்தியப் பகுதியின் மிகப்
பெரிய நபியாக 'மஹா நுவு' என்றழைக்கப்பட்ட நூஹ்(அலை) என்பது தெரிய வருகிறது.
இது பழைய வேதப் புத்தகங்கள் என அழைக்கப் படும் ரிக்,சாம‌,யஜூர் மற்றும் அதர்வண வேதங்களில் காணப்படும் 'வெள்ளப் பிரளயம்', பைபிள் மற்றும் குர்ஆனிலும் விவரிக்கப் பட்டுள்ளதன் மூலம் கிடைத்த ஒரு அனுமானம்.

பழைய வேதப் புத்தகங்களை 'சுஹுபுகள் (ஏடுகள்)' எனவும், மூசா (Moses),தாவூது (David),
ஈசா (Jesus),முகம்மது (அலை) நபிகளுக்குக்குக் கொடுக்கப் பட்டவை நான்கு வேதப் புத்தகங்களாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இவை பற்றிய ஆராய்ச்சிப் புத்தகங்கள்
'அபூ ஆசியா' போன்றோரால் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. எனினும் இந்தப் பதிவு எழுதத் தூண்டியது, இயல்பான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரரான 'இதயம் பேத்துகின்ற'
பதிவர் ஜவஹரின் முயற்சியில் உருவான 'உருப்படு' புத்தக அறிமுகப் பதிவுக்குக் கொடுக்கப் பட்ட தலைப்பு ஏற்படுத்திய சிந்தனை.

ஒழுக்க நெறி கருத்துக்களுக்காகவும் சீரிய சிந்தனைகளுக்காகவும் திருவள்ளுவரையும்,
புத்தரையும் நபியாகக் கருதுவோரும் மறுப்பவரும் நம்மிடமுண்டு. பள்ளிக்கூடங்களில்
மனப்பாடம் செய்த குறள்கள் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ சினிமாப் பாடல்களில்
வந்தவை மட்டும் சரியாக நினைவில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான்,
'பல்லாண்டு வாழ்க' வில் வரும் 'ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்' பாடலின் ஆரம்ப வரிகள்,

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்'
'என்பும் உரியர் பிறர்க்கு'

'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
'மெய்வருத்தக் கூலி தரும்'

திருவள்ளுவரை நபியாகக் கருதிய நான், 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
என்ற வரியைச் சிந்தித்த போது 'தெய்வத்தால் கூட செய்ய முடியாத காரியத்தை ஒரு
மனிதனின் முயற்சி செய்து விடும் என்ற அர்த்தம் தொனித்ததால் 'நிச்சய‌மாக இவர்
நபியாக இருக்க முடியாது' என்ற முடிவுக்கு வந்தேன். பின்னொருநாளில் இந்தக்
குறளுக்கு யாரோ ஒருவர் இப்படி கருத்துரை எழுதியிருந்த‌தைப் படித்த போது
'அட இது நல்லாருக்கே' எனத் தோணியது.

"தெய்வத்தின் விதியில் இவனால் முடியாது என்று எழுதப்பட்டு இருந்தாலும்,
இறையிடம் அழுது பிரலாபித்து விதியை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்",

இக் கருத்து நம் ஹதீஸ்களில் காணப்படும்,

'தர்மம் தலை காக்கும்' (சதகா ரத்துல் பலா)
'பிரார்த்தனை விதியை மாற்றும்' (துஆ ரத்துல் களா)

கருத்துக்களுக்கு ஒட்டி வருவதால் மேற்கண்ட குறளின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு வந்தது.
மேலும் 'அகர முதல‌ எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' எனும் குறளில் வரும்
ஆதி பகவன் என்பது ஆதம் நபியைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. எனவே திருவள்ளுவர்,
நபியாக இருக்கலாம் அல்லது 'வேதங்களை'த் தொகுத்த வியாச முனிவரைப் போல் ஒரு
அறிஞராக இருக்கலாம் அல்லது நல்ல கருத்துகளைத் தொகுத்து வெண்பா வடிவில் வழங்கிய கவிஞராக இருக்கலாம் அல்லது ... அல்லது ..... அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

'அபூ ஆசியா'வின் புத்தகத்தில் படித்த ஞாபகம், குர் ஆனில் 'துல் கிஃப்ல்' என்ற நபியின்
பெயர் வருகிறது. லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களில் வெறும் 25 நபிமார்கள் பெயர்
குர்ஆனில் வருகிறது, அவற்றுள் ஒன்று 'துல் கிஃப்ல்'. கபிலைச் சார்ந்தவர் என்று பொருள்.
இது 'கபில'வஸ்துவைச் சார்ந்த புத்தரைக் குறிப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆக இவர்கள் நபிமார்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை
(தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்). என்றாலும் தசாவதாரி சொன்னது மாதிரி,

'நபியாக இருந்தால் நன்றாயிருக்கும்' :)

Wednesday, October 06, 2010

'உவ்வே' கூட 'வாவ்' எனத் தெரிய‌

பதிவுலகில் சினிமா மற்றும் பதிவுலக சண்டை/சவுண்டு பதிவுகளுக்கு அடுத்ததாக
நகைச்சுவைப் பதிவுகள் அதிகம் பார்வையிடப் படுகின்றன. த‌ம் பதிவுகள் எல்லோராலும்
படிக்கப்பட வேண்டும் என்றுதான் யாவரும் விரும்புவர். என்றாலும் நகைச்சுவை
எல்லோருக்கும் வருவதல்லவே. நமக்கு சிரிப்பை வரவழைக்கும் எந்தவொரு விஷயமும்
அடுத்தவருக்கும் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்றைய உலகம்
அப்படி. முன்பெல்லாம் மரத்தடிகள் மற்றும் திண்ணைகள்தாம் உரத்து சிரிக்க வைக்கும்
இடமாக இருந்து வந்தன. இன்றோ தட்டினால் திறக்குது நகைச்சுவைக்கென்றே
தனி உலகம்,தனி CD,வீடியோ மற்றும் பதிவுகள்.

நகைச்சுவைப் பதிவுகளில் Copy/paste,Forwarded,SMS ஜோக்குகள்தாம் அதிகம் எனினும்
குசும்பன் போன்ற ஒரு சிலரின் 'கலாய்த்தல்'கள் மற்றும் குசும்புகள் ரசிக்க வைப்பவை.
அந்த அளவுக்கெல்லாம் நம்மால் சிரிக்க வைக்க முடியாது. ஏதோ அனுபவங்களைச்
சுவை படச் சொல்ல விழைகிறேன். அது கொஞ்சமா புன்னகைக்கவும் கொஞ்சமா
'புத்தி'க்கவும் வைத்தாலே போதும், புண்ணியமாப் போகும் இந்த பொல்லாப் பதிவுலகத்துல.


எங்க ஸ்கூல் வாத்தியார் சொன்ன 'கப்'பர் சிங் ஜோக்கை முதலில் சொல்கிறேன். அவர்
தமது நண்பர் தர்பார் சிங் வீட்டுக்குப் போயிருந்தப்ப 'நம்பர் டூ' வந்ததால் நண்பர் வீட்டு டாய்லெட்டுக்குள் சென்றார். அங்கே வெஸ்டர்ன் டைப் கக்கூஸை முதன் முதலாய்ப்
பார்த்ததால் எப்படி 'நம்பர் டூ' போவதென்று அறியாமல் முழித்திருக்கிறார். பின்னே
ஏதேதோ யோசனை செய்து விட்டு 'பிளாஸ்டிக் ஜக்கிலே' ஏந்தி ஜன்னலுக்கு வெளியே
எறிவது (!?!) என்று முடிவு பண்ணி... கடைசியில் எறிந்தே விட்டார். பிறகு என்னாச்சு
தெரியுமா ? ..... Jug மட்டும் ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்தது :-)

'சீச்சி' எறிதலில் தோல்வியுற்ற சிங் வேற வழியின்றி நண்பரை அழைக்குமாறு ஆகி விட்டது.
அவரும் உள்ளே வந்து பார்த்து அசந்து விட்டார். அழைத்தவரோ ஆடிப் போனார். நண்பரும் 'சிங்'கமல்லவா, 'வாரே! வாஹ் ஜி' என்று கர்ஜித்து கை கொடுத்த பின் கேட்டார்,

'எப்படியப்பா 'BAT MAN' போல சுவற்றின் மேலேறி 'Shit' டினாய் ?!



இந்தப் பதிவு மேற்கண்ட சிரிப்பைச் சொல்ல வேண்டியதற்காகவ‌ல்ல, இது போன்ற
ஒரு சம்பவம் எனக்கும் ஏற்பட இருந்து தப்பித்ததைச் சொல்வதற்காகத்தான்.


சென்ற மாதம் உம்ராவுக்காக மதீனா சென்றிருந்தேன் அல்லவா, அப்போது ஒரு நண்பரைக்
காண அவர் தங்குமிடம் செல்ல வேண்டி வந்தது. அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது
'இயற்கை அழைப்பின் அறிகுறி' தெரியவர, அங்குள்ள டாய்லட்டிற்குள் நுழைந்தேன்.
டாய்லட் நம்மூர் டைப்புதான் என்றாலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அதாவது தண்ணீர் தெரியக்கூடிய வட்டப்பகுதி பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தது. ஆஹா ஒன் வே டிராபிக்
மூடப்பட்டுக் கிடக்கே, ஏதும் மராமத்துப் பணி நடைபெறுதோவென நினைத்து நாமளும்
ஒன்வே மட்டும் திறந்து விட்டுத் திரும்பியாச்சு. அவரிடமும் அது பற்றிக் கேட்க வில்லை.


மற்றொரு நாள் இன்னொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றால், அங்கேயும் அதே நிலை.
ஒரு வேளை பிளாஸ்டிக் கப்பை வெளியே எடுத்து வைத்து விட்டு, உட்காறனுமோ ?
'அடடா! இப்ப என்ன செய்யுறது ? நம்ம கப்பர்சிங்கின் நிலமை நமக்கும் வந்திடக்
கூடாதேங்கற கவலை வந்ததால், வெளியே வந்து நண்பரிடம் ரூட்டு கேட்க, அவரும்,
ஏதோவொரு பைக் விளம்பரத்துல வருமே அது மாதிரி 'நோ ப்ராப்ளம், Do it as usual
வழக்கம் போல போங்கன்னு சொல்ல , உள்ளே சென்று தயங்கித் தயங்கி பரிசோதித்துப்
பார்த்தால், 'வாவ், போவதே தெரியவில்லை, லஞ்சம் பெறுபவரின் கை போல ஆங்கே
கொஞ்சமும் மிஞ்சவில்லை போங்க. நண்பரிடம் விசாரித்ததில் பிளாஸ்டிக் கப்பின் மேல் மூடிக்கடியில் spring இருக்கிறதாம். என்னா டெக்னிக்கு :‍-)

இது போல் வேறு எங்கும் பார்த்ததில்லை, நம்மூர்களிலும் இது போன்று இருந்தால்
நல்லாயிருக்குமே என்ற எண்ணம் வந்தது, கூடவே பயமும். ஏன் தெரியுமா, வேறென்ன,
எல்லோர் வீட்டிலிருந்தும் டி.வி. விளம்பர சத்தம் இப்படியல்லவா கேட்கும்,

"பொத் பொத்தென்று விழுந்ததெல்லாம் மாயமாய்ப் போனதே"
"மத்த மத்த கம்பெனிகள் மயங்கி மயங்கி நின்றனவே" :-)



டிஸ்கி :

படிச்சுட்டு 'மொத்து மொத்து'ன்னு மொத்த நெனக்கிறவங்க மைனஸ் ஓட்டையும்,
ஓட்டைக் 'குத்து குத்து'ன்னு குத்த நெனக்கிறவங்க ப்ளஸ் ஓட்டையும், ஏதாவது பேச நெனக்கிறவங்க பின்னூட்டமும் போடுங்க. அப்பத்தான் நான் எழுதுறது எப்படீன்னு தெரியும்.

(இ.அ. அடுத்த வார பதிவில் சந்திப்போம்)