Monday, June 28, 2010

மாத்தி யோசி, நல்லவிதமாய்

திரவியம் தேடி வெளியூர் செல்லுமுன் குருவிடம் ஆசி பெறச் சென்ற
சிஷ்யனிடம், சிறிது நேரம் தோட்டத்தில் சென்று அமர்ந்து விட்டு வருமாரு
பணித்தார். சில மணி நேரம் கழித்து சிஷ்யனை அழைத்து விசாரித்தார்.

'குருவே,குறிப்பை அறிந்து கொண்டேன்; நான் பயணம் செல்ல வில்லை'.

'பொறு சிஷ்யா, அப்படி அங்கு என்னதான் கண்டாய் ? '

'கண் தெரியாத ஒரு குருட்டுப் பாம்பிற்கு உணவு கொண்டு வந்த
வண்ணமாய் இருந்த ஒரு பறவையைப் பார்த்தேன். இறைவனின்
கருணையை எண்ணி என் கண்கள் கலங்கின. பாம்பிற்கே பழம்
வார்க்கும் இறைவன் எனக்கும் வழங்காமலா போய்விடுவான்
என்ற ஞானம் கிடைத்தது,அதனால் செல்வம் சேகரிக்கச் செல்லும்
எண்ணத்தைக் கைவிட்டேன்'.

இதற்கு குரு சொன்ன பதில் ரொம்ப முக்கியமானது.

குருட்டுப் பாம்பாய் இருக்க ஏன் ஆசைப்படுகிறாய். மாத்தி யோசி நண்பா,
குருவியாக இருப்பதில் பெருமிதம் கொள். உனக்காக மட்டும் சம்பாதிக்க
எண்ணாமல் உன்னைச் சார்ந்தவர்களுக்கும், உடல் நலிவுற்றவர்களுக்கும்
சேர்த்துச் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செல்வாயாக ; சென்று வென்று
வருவாயாக. இறைவனருள் எப்போதும் உனக்கு உண்டு.

வியந்தவாறு நன்றி கூறி விடைபெற்றான் சிஷ்யன்.

===============================================

நம்ம மக்கள்ஸே இப்படித்தான், தனக்குத் தோதாக எதையும் எடுத்துக்
கொள்வது அல்லது தோதாக வளைத்துக் கொள்வது.

ஒரு முறை 'குடியின் கெடுதி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக்
கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. SPIRIT அல்லது சாராயம் இருந்த
பாட்டிலுக்குள் ஒரு சில புழுக்கள் போடப்பட்டு, சில வினாடிகளில்
அப்புழுக்கள் துடிதுடித்து இறப்பதையும் காட்டப்பட்டு 'குடிப்பதால் சாவைச்
சந்திக்க நேரிடும்' என்றும் விளக்கப்பட்டது.

அப்போது கூட்டத்திலிருந்த 'குடிமகன்' ஒருவர் எழுந்து, 'ஏன் இப்படி
இருக்கக்கூடாது ? குடிப்பதால் வயிற்றினுள் தொல்லை கொடுக்கும்
புழு பூச்சிகளை அழிக்கலாமே ?

யே யப்பா என்னமா யோசிக்கிறாய்ங்க. :-)

===============================================

தத்து பித்துவம் அல்லது நகைத்துவம் ஒன்று
-----------------------------------------

"கடவுளை மற : மனிதனை நினை" என்று அன்று சொன்னவர்களுக்கு

இன்று

"தமிழை மற : தமிழனை நினை" என்று நினைவூட்டப்படுது பேஷ் பேஷ்

Wednesday, June 23, 2010

கண்டதும், கேட்டதும்

புரியாத பிரியம் ...
பிரியும் போது தான் புரியும்

* * * * * *

உதயக் குளியல் உத்தமம்
மதியக் குளியல் மத்யமம்
அந்திக் குளியல் அனத்தம்

* * * * * *

சுத்தம் சோறு போடும்
*அசுத்தம்* நாற்றம் தரும்

(* இந்த இடத்தில் எதுகை/மோனை விரும்பினால்
இலகுவாக‌ எதுவேணாலும் போட்டுக்கவும்)


* * * * * *

சயின்ஸ் கருத்தும்
சாக்கடை திறப்பும்
ச‌ட்டென‌
மூக்கில் விரல் வைக்க
வைத்தாலும்

சரித்திரத்தில்
சாகா வரம் பெற்றது
சமுத்திரத்தில் கலக்காத‌
சங்கதிகள்தாம்

* * * * * *

டிஸ்கி :
பிரபலம் ஆகா வரைக்கும் நல்ல வசதிதான் ;
இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருக்கலாம் :‍-)

Sunday, June 20, 2010

ஆக்டிவ் வாய்ஸும் பாஸ்ஸிவ் வாய்ஸும் சில பொச‌ஸிவ்னெஸ்ஸும்

என்னாங்கப்பூ ? கடுப்பு நீங்க தடுப்பூசி போட வலையுலகம் வந்தால்
வலையும் சேர்ந்து கடுப்பேத்துது. வியாழக்கிழமை ப்ளாக்கர் திறக்கல,
ஜீமெயில் திறக்கல, தமிழ்மணமோ எப்ப திறந்தாலும் கடந்த வாரப்
பக்கத்தையே இன்னும் காட்டுது, நம்ம கடைக்கு வெள்ளி சனி லீவு வேறயா,
கை அரிச்சு கவுஜை வேற எழுதியாச்சு என்ன செய்றது, சரி பரவாயில்ல,
ஆறிப் போனதை மீண்டும் சூடாக்கிக் கொட்டியிருக்கிறேன்.
தைரியமிருந்தா படிச்சுக்கோங்க.
(கடுப்பு ட்ரான்ஸ்ஃபர் ஆகி அங்கே வந்து விட்டால் கம்பெனி பொறுப்பல்ல)


* * * * *



ஆண் அவளை நோக்கினான்
அவள் நிலம் நோக்கினாள்

நகை புன்னகை
இருந்தால் ரிப்பீட்டு
இல்லையென்றால் ரிஜக்டு

அவன் அவளை மணந்தான்

அல்லது

அவள் அவனை மணந்தாள்

நகை புன்னகை இல்லையெனில்
புகை அல்லது பகை

ஆண் அவளை நோக்கினான்
அவளோ நிலம் நோக்கினாள்
சதுர அடி கணக்கில்

சாதா நிலத்தையும்
சஞ்சீவி மலை போல்
பெயர்த்துத் தரவில்லையெனில்
பொல பொல வெனப் பெய்யும் மழை

அவர்களைப் போல் இல்லை
இருந்தால்
உயரமில்லை
இருந்தால்
நுனிநாக்கில் சக்கரையில்லை
இருந்தால்
ஏதோ இல்லை

சே ஒரே தொல்லை

செய்வினை செயப்பாட்டு வினை
இரண்டும் எப்படி சமமாகும்

என்ன செய்ய..

எழுத்தறிவித்தது மட்டுமல்ல
இலக்கணம் வகுத்ததும் இறைவன் தான்

பொறுமை கடலினும் பெரிது.

Monday, June 14, 2010

பயணிகள் கவனத்திற்கு

விமானப் பயணிகள் என்று தலைப்பிட்டிருக்கலாம்தான், என்றாலும்
அனேகர் வீடுகளிலோ அல்லது சொந்தத்திலோ யாராவது விமானத்தில்
பயணிப்பவர்கள் இருப்பதால் அனைவருக்கும் விவரம் புரியட்டுமே.

* * * * * * *

சென்னையிலிருந்து அமீரகத்திற்கு எமிரேட்ஸில் வரும்போது அமீரகம்
செல்பவர்களுக்கு லக்கேஜ் 30+10 எனவும் யு.எஸ் செல்பவர்களுக்கு 44+7
எனவும் அனுமதிக்கப் பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதுவும் யு.எஸ்
லக்கேஜ் ஒரு Bag 22 அல்லது 23க்கு மிகாமல் இருக்க வேண்டுமென்பதில்
கண்டிப்பாக இருந்தார்கள்.

இது தெரியாமல் அதிகமாகக் கொண்டு வந்தவர்கள், சில பிரியமான
பொருட்களை இழக்க வேண்டியிருந்தது, 22+22 என்று சமமாகக் கட்டிக்
கொண்டு வராமல் ஒன்று பெரிய Bag லும் இன்னொன்று சிறிய Bag லும்
கொண்டு வந்தவர்கள் இரண்டையும் சமமாக்க மிக சிரமப் பட்டார்கள்.

* * * * * * *

வளைகுடா நாடுகளில் கோடை விடுமுறை ஜூலையில் ஆரம்பிப்பதால்,
விமானக் கட்டணம் ஜூனிலேயே டேக் ஆப் ஆயிடும் என்பது தெரிந்த
விசயம்தான் எனினும் தற்போது இன்னொரு அதிர்ச்சியும் அறிமுகப் படுத்த
இருக்கிறார்கள் (முன்பே வந்து விட்டதா என்று தெரியவில்லை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்). லக்கேஜ் வெயிட் 40+10 என்று இருந்ததை சீசன்
சமயத்தில் 30+7 ஆகக் குறைக்க இருக்கிறார்கள். எத்தனை பேருக்குத் தெரியும்
என்று தெரியவில்லை, பழைய நினைப்பிலே வருபவர்கள்,பாவம் பத்து
கிலோவுக்குக் குறையாமல் பணம் கட்ட வேண்டி வரும்.

* * * * * * *

பயணக்காரன் அரைப் பைத்தியக்காரன் என்பார்கள். விமானத்தில்
அமர்ந்தவுடன் அவனை ஆசுவாசப்படுத்துவது விமானப் பணிப்பெண்களின்
அன்பான உபசரிப்புகள்தாம். இன்று Budget Airlines என்கிற பேரிலே
Hospitality ஐச் சிதைத்து விட்டார்கள். Cost Cutting என்ற பேரிலே இந்த
மாதிரி ஐடியா கொடுப்பது ஆசியாக் கண்டத்தைச் சார்ந்தவர்கள்தாம். :-)

Customer Care,Value for Customer,Guarantee,Warranty,Utility,Hospitality
போன்றவற்றைச் செயல்படுத்தியவர்கள் மேற்குலகைச் சேர்ந்தவர்கள்.


* * * * * * *


Hospitality என்பது இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. Hospital களே
மாறிவிட்ட போது வேறு எங்கு எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் முன்பு
எல்லா விமானத்திலும் ஒரு மரபாகப் பேணப்பட்ட விசயம் இது.
Air Lanka ல் முன்பு கிடைத்து வந்தது. தற்போது Qatar Airways,Emirates
பரவாயில்லை என்று தெரிகிறது.

* * * * * * *

சென்ற முறை, என் இருக்கைக்கு முன்னால் இருந்தவர்,தனக்கு வசதியாக‌
இருக்கையை நன்றாகச் சாய்ந்து கொள்ளுமளவு பின்னுக்குத் தள்ளியதால்
என் முகத்திற்கு நேராகத் துருத்திக் கொண்டிருந்தது. நான் அவரிடம்
'சிரமமாக இருக்கிறது, கொஞ்சம் முன் இழுத்துக் கொள்ளுங்கள்' என்று
சொன்னதற்கு, முடியாது என்பதாக தலையாட்டி விட்டு 'சிரமமாயிருந்தால்
நீரும் இது போல் உம்முடைய இருக்கையைப் பின்னுக்குத் தள்ளிக்
கொள்ளவும்' என்றவுடன், நானோ பின்னுள்ளவரை சங்கடப்படுத்த
விரும்பாமல் சும்மாவே இருந்து விட்டேன்.

அடுத்து வந்தது பிரச்னை,நான் இருந்தது நடு இருக்கை, விண்டோ
பக்கத்தில் உள்ளவருக்கு வந்ததே ஆத்திரம் சே மூத்திரம், எழுந்து
அனுமதி கேட்டார். எனக்கு இடது பக்கத்தில் இருந்தவர் தூக்கத்தில்
இருந்ததால் எங்களிருவரையும் தாண்டிப் போகுமாறு அனுமதியளித்தாலும்
அவரைப் போக விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது முன்னிருக்கை. இப்போ
மூத்திரக்காரர் முன்னிருக்கைக்காரரை எழுப்ப, அவரோ என்னைப் பின்னுக்குப்
போகுமாறு சைகை செய்ய,எனக்குள் இருந்த புரூஸ்லீ தலை தூக்கி பிறகு
ஜாக்கி சானாக மாறி ஒரு வழியாக இருவரும் அட்ஜஸ்ட் செய்து
மேக தூதரை தூறலாய் வருஷிக்க அனுப்பி வைத்தோம்.


ஏன் ஏன் இப்படி இருக்கிறோம் ? விட்டுக்கொடுத்தல் மட்டும்
இல்லையென்றால் பயணம் மட்டுமல்ல ; வாழ்வே நரமாகி விடும்.

* * * * * * *

பதிவர்களும் வாசகர்களும் தங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும்
பகிர்ந்து கொண்டால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Thursday, June 10, 2010

ஆடியில் தெரிவது அகமா புறமா ?

காலை,

அலுவலக சகா : என்ன சார், வீட்ல பிரச்னையா ?
நான் : இல்லையே !!
சகா : பின்ன ஏன் சோகமா இருக்கீங்க‌ ?
நான் : ! ? !

------------------------------------------------------------------
மாலை,

நண்பன் : ஏம்பா கோபமா ! யார் மேலே ?
நான் : சே சே அப்படியெல்லாம் இல்லை !
நண்பன் : இல்லையே, உன் முகம் சொல்லுதே .
நான் : ! ? !


------------------------------------------------------------------
வீடு திரும்பிய பின்,

மனைவி : ஏன் இப்படி கடுகடுவென்று இருக்கீங்க
(மனதுக்குள் : எப்பப் பாரு மூஞ்சி, சிடுமூஞ்சியாவே இருக்கு)
நான் : ம். ஒண்ணுமில்லை. (மனதுக்குள் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
மனைவி : வெளியிலே இப்படி இருந்துக்குங்க, வீட்டுல கொஞ்சம்
'சிரித்த முகமும் சீதேவித் தனமுமா' இருங்களேன்.
நான் : அடிங்.. , ஆமா வெளிலே ஏன் அப்படி இருக்கணும் ?
மனைவி : அதுவா, அப்பத்தான் மற்றப் பொண்ணுங்க யாரும் உங்க‌
கிட்ட வரமாட்டாங்க :-)
நான் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........

------------------------------------------------------------------

உடனே கண்ணாடிக்கு முன் நின்று முகம் பார்த்தேன்.

டேய்! என்னாங்கடா எல்லோரும் என்னைப் போய் இப்படிச் சொல்றீங்க ..
அழகான முகத்தைப் போய் 'சிடுசிடுவென்று இருப்பதாகச் சொல்றாங்களே, (பொய்யோ,பொறைமையோ யார் கண்டா)
ஹூம், நாமும் சினிமாவில் நடித்திருந்தால் ஒரு Successful Hero வாக
வலம் வந்திருக்கலாம் ...

இப்படியாக எண்ணம் பயணிக்கையில் ஒரு சிறு பொறி தட்டியது ..

ஆம், கண்ணாடியில் நான் என் முகம் பார்க்க வில்லை, மாறாக
என்னையே பார்க்கிறேன். அதாவது தன்னை விரும்பாதவர் யாரும்
இருக்க முடியாது. தான் விரும்பும் 'தன்னை'ப் பார்க்கும் போது
மலர்ந்திருக்கும் முகம் (காதலன்/காதலி தவிர்த்து) வேறு யாரைப்
பார்த்தாலும் கவிழ்ந்து கொள்கிறதே ஏன் ?

அதனாலே மக்கா!

உங்க முகம் அழகா இருக்கணுமா ?

உள்ளத்தை அன்பால் நிரப்புங்கள்.

பிறரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


"மனம் என்னும் மேடை மேலே முகம் கொண்டு ஆடுது ... "

Monday, June 07, 2010

வேற்றுமையில் ஒற்றுமை

எந்தவொரு தன்மையும் அல்லது செயலும், 'Butterfly Effect' போல
அல்லது கல்லெறியப்பட்ட குளத்தில் அதிர்வலைகள் ஏற்படுவது போல
வாழ்க்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஓரு நல்ல
செயல் இன்னொரு நல்ல செயலுடன் இணைக்கப் பட்டுள்ளது. ஒரு தீய வினை
இன்னொரு தீய வினையுடன் தொடர்பில் இருக்கிறது. எதைத் தொடுகிறோமோ
அதனுடன் தொடர்புள்ள இன்னொன்றும் பின் தொடர்கிறது.

எல்லா விஷயங்களிலும் இரண்டு தன்மைதான் இருக்கும். ஒன்று நல்லது
இன்னொன்று கெட்டது. நன்மையான செயல்களின் முடிவு நன்மையாகவே
அமையும். தீய செயல்களின் முடிவு, அச் செயல்களின் தன்மைக்கேற்ப‌
தீமையாகவோ கொடூர ஆபத்தாகவோ முடியும்.


* * * * *

நன்மை பயப்பதில் 'ஒற்றுமை'க்குப் பெரிய பங்கு உண்டு.

நாம் அனைவரும் 'ஒரு தாய் மக்கள் மட்டுமல்ல' ஒரே தந்தையின்
பிள்ளைகள் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. நமக்குள் பிரிவினை
ஏற்பட்டது, பின்வரும்

1. இடம் (நாடு/மாநிலம்/ஊர்/வீடு)
2. இனம் (நிறம்/மதம்/சாதி)
3. மொழி
4. அறிவு (கொள்கை)
5. அந்தஸ்து (பணம்/பட்டம்/பதவி)

போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் இருக்கலாம்.

இடம்,நிறம் போன்றவை பிறப்பால் ஏற்பட்டவை.இதில் நமது திறமை
என்று எதுவும் கிடையாது, இதில் பெருமை காண்பவன் முட்டாள்
எனும் போது 'வெறி' கொள்பவனை என்ன சொல்வது.

'இனவெறி' பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது 'தன் இனத்தின்
மீது பாசம் கொள்வது இனவெறி ஆகாது, ஆனால் தவறு செய்தவன் தன்
இனத்தைச் சார்ந்தவன் என்பதால் அவனைத் தண்டிக்காது, துணை போவது
இனவெறியாகும் என்று சொன்னார்கள்.

மொழி,அறிவு,அந்தஸ்து போன்றவற்றை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாம்.

இவையன்றி மனிதனை இணைக்கக் கூடிய பாசமும் நேசமும் கூட அவன்
தனித்தனி குழுவாகப் பிரியக் காரணமாகின்றன.இன்னும் எத்தனையோ
சின்னச் சின்ன விஷயங்களும் பெரிய சண்டை சச்சரவுகளுக்குக்
காரணமாகின்றன, சிறு பொறி அல்லது சிறு உரசல்தான் பெரும்
நெருப்புக்குக் காரணமாகின்றன. அதனைக் காட்டுத்தீ போல பரவத்
துணை போகின்றன 'வசவு'களும்,'வதந்தி'களும்.

ஒற்றுமை, மிகக் கடினமான ஒன்றுதான். ஆனால் அதன் பலன் மற்றும்
பலம் நாம் அறிந்ததை விட அறியாதது அதிகம்.எல்லா நல்ல
விஷயங்களும் சுலபமாகக் கிடைப்பதில்லையே, சில சமயம் முயன்று
திருவினையானதாலும் பல சமயம் போராடியும் கிடைக்கப் பெறுகின்றன.

ஒற்றுமை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் துவங்க வேண்டும். கண‌வன் மனைவி
ஒற்றுமை வீட்டிற்கும் ஏன் நாட்டிற்கும் மிக இன்றியமையாதது.அனைத்து
உறவுகளுக்கும் அடிப்படையானது. எனவேதான் நபியவர்கள் பகர்ந்தார்கள்,
'ஷைத்தான்கள் தாம் செய்த அல்லது சாதித்த விஷயங்களை தினமும்
தலைவனிடம் சென்று எடுத்துரைத்து 'சபாஷ்' அல்லது ஆலோசனை
பெறுவார்கள். அவற்றில் தலைவன் மிக மகிழ்வது 'கண‌வன்
மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிளவின் செய்தியறிந்துதான்.

ஒற்றுமை ஏற்பட எல்லாம் ஒரே 'நிறத்தவராகவோ' அல்லது
'நிறமற்றவராகவோ' மாற வேண்டிய அவசியமில்லை. மாறாக‌,

'மனிதரில் இத்தனை நிறங்களா'வென்று ஆச்சர்யமும் ஆதங்கமும் படாமல்

'வேற்றுமையிலும் ஒற்றுமை' காண முயலவேண்டும்.

'ஜன கண மன அதி நாயக ஜயஹே ..'

அதற்காக‌

மனம் பண்படுத்தப் பட வேண்டும், பக்குவம் பெற வேண்டும்.

அதற்கான விடா முயற்சியும் விட்டுக் கொடுத்தலும் அவசியம்.



* * * * *


டிஸ்கி மனம் : ம்ஹூம்.

" சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "

புத்திமதியும் பஞ்ச் டயலாக்கும் ரொம்ப லேசுங்ணா ;
அதன்படி நடக்குற கஷ்டம் எனக்குல்ல தெரியும் :-)


* * * * *