Monday, May 31, 2010

நற்'சிம்' கார்டும் நம்பகமான நெட்வொர்க்கும்

நற்சிம் ?, நல்ல சிம் கார்டைச் சொன்னேன் :-)

ஓரிடத்திற்கு செல் பேச வேண்டும். அதற்கு செல்பேசியும் சிம் கார்டும்
தேவை அல்லவா ! பேசுவதற்கு முன் சார்ஜ் இருக்கா இல்லையா என்று
சோதித்தபின் தேவைப்பட்டால் சார்ஜ் செய்து கொள்வோம்.

பிறகும் பேச முடியவில்லை என்றால் நெட்வொர்க்கைச் சரிபார்ப்போம்.
இதற்குப் பிறகும் பேச முடியவில்லையென்றால் நம் கணக்கில் போதிய
பைசா இருக்கா என்று பார்த்து அதையும் நிரப்பிக் கொள்வோம்.

இப்போ லைன் கிளியர்.

அது போலத்தான் இறைவனோடு பேசுவதற்கு 'கல்பு' என்னும்
செல்லுக்குள் 'இறை நம்பிக்கை' என்ற சிம் கார்டு வேண்டும். அதனை
அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். அதாவது சார்ஜ் செய்ய வேண்டும்.
(உங்கள் ஈமானைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்-நபிமொழி).

பிறகு நெட்வொர்க்,

நமக்கும் இறைவனுக்குமிடையில் நல்லிணைப்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். (மன் அஸ்லஹ பய்னஹூ வ பய்னல்லாஹ் ‍-
யார் தமக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் தொடர்பைச் ச‌ரி செய்து
கொள்கிறார்களோ அவருக்கும் மற்ற படைப்பினங்களுக்குமிடையில்
சுமுகமான பிணைப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்-நபிமொழி)

பிறகு அக்கவுண்டில் பைசா Top Up , தொழுகை,தர்மம் மற்றும்
நற்கருமங்களைச் செய்து அனுப்பி வைத்த பின் பேசும் பேச்சுக்கு,
கேட்கும் தேவைக்கு ஒரு 'கெத்து' இருக்கும்.



"நம்பினார் கெடுவதில்லை ; நான்கு மறை தீர்ப்பு இது"

"கேளுங்கள் தரப்படும் : தட்டுங்கள் திறக்கப் படும்."

"கேட்பது நம் கடமை ; கொடுப்பது அவன் உரிமை"


ஆனா கேட்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் சரிபார்த்துக்
கொள்ளுங்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.


வஸ்ஸலாம்.
------------

Sunday, May 30, 2010

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை (இளகிய மனது No Please )

வல்லவன் வகுத்த வாய்க்கால் வரப்பின்
வேலியில் சிறு துளையிட்டு
வந்த‌தைக் கொண்டு
புல் எனும் ஆயுத்தத்தைத் தயார் செய்து
வல்லவனாகும் வல்லமை தாராயோ இறைவா







கூரிய நாவின் நவீன 'நவி'மொழி தாங்கி
விழுங்கியவன் வீரன் என்பது 'நபிமொழி'


டிஸ்கி : தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் (பதிவினால்) சுட்ட வடு

Tuesday, May 18, 2010

பூட்டனின் மாறாத விதியும் புனைவாக சில‌ நிஜங்களும்

ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு வீட்டை அமைத்தார். சிலரோடு
செல்லப் பிராணிகளையும் அவ்வீட்டில் குடியிருக்க வைத்து ஏதோ
ஒரு நோக்கத்திற்காக தான் மட்டும் தனியாக தூரத்திலிருந்து கொண்டு
அவ்வீட்டைக் கண்காணிக்கலானார். அவ்வப்போது அறிவுரை மற்றும்
அறவுரை தாங்கிய கடிதங்களைத் தூதுவர் மூலம் அனுப்பி வைத்தார்.
அவற்றில் சில‌ ஆங்காங்கு எழுதி வைக்கப் பட்டன.


" தர்மம் தலை காக்கும் "

" நீ வாழ பிறரைக் கெடுக்காதே "

"பிறர்கின்னா முற்பகல் செய்யின் ; தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"

"மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால்
கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின,
(தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள்
செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்)
அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.(அல்குர்ஆன் 30:41)"


* * * * *


எல்லோரும் ஒரு நாள் நகரத்திற்குத் திரும்ப வேண்டும், அங்கே கோர்ட்,கேஸ்,தண்டனை,பரிசளிப்பு உண்டு என்றாலும் தற்காலிகமாக
இங்கே வசிப்பதற்கான விதிகளும் எச்சரிக்கைகளும் விதிக்கப் பட்ட
நோக்கம் பிரச்னைகளில்லாத சுமுகமான வாழ்விற்காகவும்தான்.


வீட்டினரோ வீட்டு மிருகங்களோ காட்டிற்குள் செல்ல முடியாதவாறு
ஒரு வேலியிடப்பட்டது. அவ்வேலி எல்லோருக்கும் பொருந்தாது.
எனவே அவரவருக்குப் பொருந்தும் படியான வேலிகளை ஒன்றன் பின்
ஒன்றாக அமைக்கப் பட்டது.





அதே சமயம் காட்டிலிருந்து ஆபத்தான எதுவும் வந்து விடக்கூடாதென்று
கடைசி வேலி மிகக் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்க‌
கரண்ட் ஷாக் வைத்து அமைக்கப் பட்டது.





வேலிகளின் மறு பெயர் பிரச்னைகள். அவற்றிற்கு சுகக்குறைவு,தடை,தவிப்பு,எரிச்சல்,பசி,பட்டினி,பஞ்சம்,கஷ்டம்,
துன்பம்,சோகம்,வலி,வேதனை எனப் பெயரிடப்பட்டாலும்
கடைசி வேலியின் பெயர் 'ஆபத்து'.

"மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டு பெரிய
வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே
(இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச்
செய்வோம். (அல்குர்ஆன் 32:21)"


* * * * *


எல்லா வலிகளுக்கும் ஒரு காரணம் உண்டு. வலிக்கான காரணத்தைக்
கண்டறியாமல் வலிகள் மரத்துப் போகும் அளவுக்கு தோல் தடித்து
மனம் தொலைத்து 'வேலி தாண்டிய வெள்ளாடு' போல் போய்க்
கொண்டே இருந்தவர்களின் முடிவு மோசமாகவே இருந்தது.

'பட்டு'த் திருந்தியவர்களும் படும் முன்னே
'திரும்பி'யவர்களும் பிழைத்துக் கொண்டார்கள்.


காலச்சக்கரம் வடிவமைத்து வைத்தாற் போலவே சுழன்றது.
இந்நிலையில் வீட்டிலிருந்தோர் பலவாறாகப் பிரிந்தனர்.
தமக்குள் எல்லைகள் வகுத்துக் கொண்டனர்.


1)
அறவுரைகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தோர்

2)
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம்
கிடையாது என்று தன்னிச்சையாக இஷ்டப்படி வாழ்ந்தோர்

3)
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம்
கிடையாது என்றாலும் மனசாட்சியின் படி வாழ்ந்தோர்

4)
அறவுரைகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தோரை எள்ளி
நகையாடி அவர்களுக்கு அடிக்கடி ஊறு விளைவித்து
வாழ்ந்தோர்

5)
அறவுரைகளை மதித்தாலும் எச்சரிக்கைகளை
அலட்சியப்படுத்தி மனோ இச்சையின் வழிப்பட்டு
வாழ்ந்தோர்

6)
யாரால் அனுப்பப் பட்டோம் எதற்காக அனுப்பப் பட்டோம்
என்பது தெரியாமல் கதைகளையும் கற்பனைகளையும்
'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்று
அப்பாவித்தனமாகவும் அடாவடித் தனமாகவும் வாழ்ந்தோர்.


இவர்களுக்குள்

அடிக்கடி தகறாறு நிகழ்ந்து கொண்டிருந்த‌து,

'புனைவு நிஜமாகும் வரை'.

Sunday, May 16, 2010

உடுக்கை இழந்தவன் கை போல ..

எளிமையாய் ஒரு 'கதை' சொல்லப் போறேன் என்று
போன பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா.

ஆனால் 'வி'தி விளையாடி, கழன்று வந்து கதைக்குள்
புகுந்து கொண்டு க(வி)தை யாயிற்று, என் செய்வது !


* * * * *






காற்றடித்த பொழுதில்
பிரிகிறோமே மீண்டும்
சந்திக்க முடியுமாவெனத்
தேம்பிய என் மீது

தெம்பாக ஏறி அமர்ந்த‌
மண்ணாங்கட்டீ ...

மழை பொழிந்தால் என்ன ?

உன்னைக் கரைய விடாமல்
காக்கும் 'அரச'
இலையுடனல்லவா
உன் நட்பும்
இன்ன பிறவும்..

Thursday, May 13, 2010

சிலருக்கு அட்வைஸ்னா ரொம்பப் பிடிக்குமாமே

" கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் "

என்ற நாமக்கல்லாரின் வரிகள் இன்று வரை மனதில் இருக்கக் காரணம்
அதன் எளிமையான, புரியும் படியான வார்த்தைகளும் அது சொல்லும்
மென்மையான கருத்தும். எளிமையும் மென்மையும் ஒரு பெரிய
சக்தியை உள்ளடக்கி இருக்கிறது.

'எளிமையும்,மென்மையும்' இறை நம்பிக்கையாளனின் பண்புகள்
என்று எம் பெருமானார் (ஸல்) பகர்ந்திருக்கிறார்கள்.


உர்தூ அல்லது ஹிந்தி மொழியில் சொல்வார்கள்,

'சோட்டா பன்கர் கஹீ(ன்)பி ரஹ்சக்தா ஹே, பல்கே
படா பன்கர் அப்னே கர்மே பி ரஹ்னா முஷ்கில் ஹே'

( சிறியோனாக எங்கும் இருந்து விடலாம் எளிதில் ; ஆனால்
வலியோன் நினைப்பில் தம் வீட்டில் கூட வசிப்பது கடினம் )



பார்வை,கேள்வி,பேச்சு/எழுத்துக்களின் மூலம் சிந்தனை தூண்டப்பெற்று
உள்ளத்தில் பதிவாகிச் செயலாக உருவெடுத்து அதுவே பழக்கமாகிப்
படிப்படியாகப் பண்பாகப் பரிணமளிக்கிறது. அப் பண்புதான் இப் பூவுலகில்
சக வாசிகளோடு சமத்துவ சகோதரத்தோடு சமத்தாகவோ அல்லது சண்டைக்
கோழியாகவோ வாழ வழி வகுக்கிறது. (அப்பாடி..?)

எளிமையைப் பத்தி சொல்றதுக்கே கடினமாகத்தான் எழுத வருது.

என்ன சொல்ல வர்ரேண்ணா,

1) பண்பு ரொம்ப ரொம்ப‌ முக்கியம். அது கிடைக்கணும்னா,

எண்ணமும் எழுத்தும் பண்பென்னும் இலக்கை நோக்கியப் பயணமாக இருக்க வேண்டும்.

2) இப்பத்தான் முதல் வரிக்கு வருகிறேன்.

சமூக நலக் கருத்துக்களைத் ஏந்தி நாம் எழுதும் கவிதையோ அல்லது கட்டுரையோ

(பாராட்டைப் பெறும் நோக்கமில்லாமல்)

எளிமையாகவும் மென்மையாகவும் அமைந்தால் எல்லோரையும் எளிதில்
சென்றடையும் பயனுள்ள,பயிராகும் முறையில் .


டிஸ்கி : அடுத்த பதிவு எளிமையான முறையில் 'கதை' ஒண்ணு சொல்லப் போறேன்.
அதற்கான முன்னோட்டம்தான் இது. பின்னூட்டத்துல தாக்கிறாதீங்கப்பூ :-)

Monday, May 10, 2010

அபிஷ் two தருணங்கள்

இரண்டு முறை வானொலி நிலையம் சென்ற அனுபவம்
உண்டு. ஒன்று வினாடி வினாவில் கலந்து கொள்ள
இன்னொன்று வானொலி நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக.

இரண்டுமே மாணவப் பருவத்தில் நடந்தவை.
S.S.L.C.க்கு ஒரு வருடம் முன்பும் ஒரு வருடம் பின்பும்.
இரண்டு தடவையும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி
பெற்றவர்கள் மட்டும் அழைத்துச் செல்லப் பட்டோம்.

முதல் முறை நீண்ட பஸ் பிரயாணம். வாந்தி மற்றும்
களைப்போடு சென்று சேர்ந்தாலும் உற்சாகத்தில்
இவை எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

நாடக்த்தில் எனக்கு கதாநாயகன் வேடம்.
அதாவது சுதந்திரத்திற்காகப் போராடி மடியும்
'மாவீர மன்னன்' பாத்திரம்.

ஆனால் இது போன்ற‌ அரிதான இடங்களுக்குச்
செல்லும் அளவுக்கு அன்று எனக்கிருந்த ஆடைகளில்
எதுவும் பிடிக்காததால் நண்பன் ஒருவனிடமிருந்து
வாங்கி அணிந்து சென்றிருந்தேன்.

நாடகம் முடிந்த பிறகு அதனைப் பதிவு செய்தவர்
என்னைத் தனியாக அழைத்து,

'பேரு பெத்த பேரு, டப்பு கிப்பு லேது'
போன்றதொரு தொனியில்,

'ஏம்பா, வேடமோ சுதந்திரப் போராட்டத்
தியாகியின் வேடம் ஆனால் நீ அணிந்திருப்பதோ
அன்னிய தேசத்து ஆடை , இது எப்பூடி....? '

என்ற போது அது வரை இருந்த நாடக வீரம்
கரைந்து அசடாக வழிந்தது.

* * * * *

இரண்டாவது முறை வழிந்த அசடு
-------------------------------

இந்த முறை வினாடி வினா நிகழ்ச்சி. நாங்கள்
வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டோம்.

கேள்வி கேட்கப்பட்ட பின் ஒவ்வொருவரும்
மைக்கின் கிட்டத்தில் வந்து பதிலைச் சொல்ல
வேண்டும்.பதில் தெரியா விட்டால் 'தெரிய வில்லை'
என்று மைக்கில் சொல்ல வேண்டும்.

எனக்கென்னவோ தெரியவில்லை என்று சொல்வது
பிடிக்கவில்லை. அதற்கேற்றார் போல எல்லாவற்றிற்கும்
சரியான பதிலைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

ஒரு கட்டத்தில் பிரம்மபுத்திரா நதி எங்கிருந்து
புறப்படுகிறது என்ற கேள்வி. எல்லோரும்
தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு
வருகிறார்கள். எனக்கோ கேள்விக்கு பதில் உறுதியாக
ஞாபக‌த்திற்கு வரவில்லையென்றாலும் 'ம','ச','ர'
என்னும் மூன்றெழுக்களும் மின்னி மின்னி மறைந்தன.

எனது முறை வந்தவுடன் டென்ஷனுடன் கலந்து
வெளி வந்த பதில் 'மரோசரித்ரா'.

எல்லோருக்கும் ஷாக்.

மைக் அணைக்கப் பட்டு, விளக்கு எரிந்தது.
பதிவறையில் எல்லோரும் சிரித்தது தெரிந்தது.

எங்களைக் கேள்வி கேட்டவரும் சிரித்து
'எலே! அது ஒரு மலையாளப் படம் டோய்'.

அசடு வழிந்து சிரித்து சமாளித்துச் சொன்னேன்

'ஆங் Sorry, அது மானசரோவர்'.

வினாடி வினா பதிவு தொடர்ந்தது.

--------------------------------

இதுல ஒரு கொடுமை என்னன்னா, முதல் முறையாக வானொலி நிலையம்
சென்று நடித்த நாடகத்தைக் கேட்பதற்கு வீட்டில் ரேடியோ கிடையாது.

இரண்டாம் முறை, வினாடி வினா நிகழ்ச்சி கேட்க ரேடியோ இருந்தது,
ஆனா கரண்டு போய்டுச்சு. :-)


--------------------------------

டிஸ்கி: என்ன மக்கள்ஸ் ! கொஞ்சமேனும் புன்னகைப் பூ பூத்ததா ?
செல்லமாகத் திட்டப் பட்டதாக உணர்ந்ததால் இந்தத் தலைப்பூ.

நல்லாயிருங்கப்பூ :-)

Sunday, May 09, 2010

குற்றத் தீவிலிருந்து வராத கடிதம்

என்னதான் கூடு விட்டு கூடு பாய்ந்து யோசித்தாலும்
துயரத்தையே உணவாக உண்ணும் ச‌மூகத்தின்
சோகத்தை வார்த்தைகளில் வசப்படுத்த முடியவில்லை.

எழுத்தினால் ஏதோ அவர்களின் நினைவைச் சிறிது
நேரம் தருவிக்க முடிந்தாலும் சுயநல அலைகள்
அடுத்தடுத்து வந்து பறித்துச் சென்று விடுகின்றன
சமூகக் கடமையைச் சாதித்து விட்ட திருப்தியைக்
கால்களில் திணித்து விட்டு.

என்றாலும் என்றோ எழுத‌ப்பட்ட‌

'சமத்துவபுரம் ; ஆனால் இங்கேயும் மலம்
அள்ளுபவர்கள் அதே குப்பனும் சுப்பனும்தான்'

என்ற சமூகக் கோப வரிகளும்,

'நானும் பாபர் மசூதியும் ஒன்று ; எல்லோரும்
எங்களை இடிக்கத்தான் விரும்புகிறார்கள்.
யாரும் கட்ட நினைப்பதில்லை'

என்ற முதிர் கன்னியின் கோப வரிகளும்

இன்றும் மனதில் தங்கி ஏதோ செய்கின்றன.


அதனைப் போன்று

'என் எழுத்தும் எழுந்து ஏதாவது செய்யாதா'

என்று எழ/எழுத‌ முயற்சித்துக் கீழே விழுந்த கவிதை.


* * * * *

குற்றத் தீவிலிருந்து
----------------------

குவாண்டனாமோ பேய் ..
மற்றுமுள்ள‌ எல்லாக்
கொலைகாரக் கூடங்களிலும்

உயிர் வதை மற்றும் சாவு
மட்டுமே அறியும்
சித்ரவதைத் தீவுகளிலும்

மனிதம் காயடிக்கப் பட்டது
கண்டும் காணா
அக்கறைய‌ற்ற‌
அக்கரைச் சொந்தங்களே

எங்கள் நிலையைச் சிறிது நேரம்
நெஞ்சில் ஏந்தித்தான் பாருங்களேன்..

கொஞ்சம் கொஞ்சமாக‌
கொத்து கொத்தாக‌
உயிர் எடுக்க விரும்பும்
கொலைகாரர் கூட்டத்துடன்
கண் மூடப்பட்ட வாழ்க்கை

குளிர் நடுக்கத்திலும் குலை நடுக்கத்திலும்
நொடித்துளிகள் ஒவ்வொன்றும்
இரத்தத்துளிகளாய் ..

மாதங்கள் மறந்து போயின
சொந்தங்கள் சோர்ந்து போயினர்

உயிர் எடுக்கும்
மலக்குல் மவுத்
அடிக்கடி வந்து போகும்
அரவம் கேட்டு
துடித்துப் போகின்றன
உள்ளங்கள்

அவமானமும்
பலஹீனமும் தவிர
எதையும் காணாத‌
எங்களின்
ஏக்கங்களையும்
கனவுகளையும்

உறக்கத்தில் இருக்கும்
உங்களிடம்
எப்படிச் சொல்லிப்
புரிய வைப்பது

இப்படிக்கு

வல்லூறுகளின்
தோட்டத்துக் காவலில்

நியாயத் தீர்ப்பு நாளை
மட்டும் நம்பி
எதிர் நோக்கிக்
காத்திருக்கும்

நீங்கள் மறந்து போன‌
உங்கள் சொந்தங்கள்.

Thursday, May 06, 2010

நான் கவிஞனுமில்லை .. நல்ல ரசிகனுமில்லை..

எந்தவொரு விஷயத்தையும் வளவள வென்று எழுதுவதை விட நறுக்கென்று
அல்லது நச்சென்று சொல்வதற்கு 'கவிதை' வலிமை மிக்கது என்பது என் கருத்து.
(நீங்க என்ன சொல்றீங்க).

ஒரு காலத்தில் மரபுக்கவிதையா புதுக்கவிதையா என்ற விவாதங்கள் மட்டும்
இருந்தது போய் இப்போது எதுதான் கவிதை என்பது குழப்பமாயிருக்கிறது.

நண்பர்களிடத்தில் அரட்டையின் போது சினிமாப் பாடல்கள் தாம் சிறந்த கவிதை போல்
சிலாகிக்கப் பட்டன. கண்ணதாசன்,பட்டுக்கோட்டையாருக்குப் பிறகு வாலி,வைரமுத்துவின்
வரிகளும் அதன் பின்,

'எதுகை,மோனை,தொடை' தட்டி எழுதிய ராஜேந்தரின் பாடல்களும் விவரிக்கப்பட்டன.
இப்போது 'டீஆர் ' என்றாலே டெரராகிப் போன‌து மட்டுமல்ல‌ அவர் போல் எழுதினாலே பரிகசிக்க‌ப்படுகிறது :-)

கவிதை பற்றி எழுதும் போது கவிதை விற்பன்னர்கள், 'எழுத்தில் காட்சியைப் பதிவு செய்ய' வேண்டுமென்றும் ஹைக்கூ போன்ற கவிதைகளின் கடைசி வரியில் ஒரு 'அதிர்வு' இருக்க வேண்டும் என்கிறார்கள். பின் நவீனத்துவ பதி/கவிஞர்களின் கவிதைகள் 'கனத்தை'க் கொண்டிருந்தாலும் நினைவில் வைப்பது கடினமாயிருக்கிறது.


சில நகைச்சுவைக் கவிதைகள் நினைவை விட்டு நீங்காதவை (கீழே வருகின்ற இந்த இரண்டு கவிதைகளை எழுதிய விகடகவிகள் யார் என்பதை அறிய விரும்புகிறேன் :‍-) கலக்கல்ஸ் )


* * * * *

1.
மணப்பதால்,
மாலையிடுவதால்
மஞ்சத்தில் அல்லது கட்டிலில் பயன்படுவதால்
கட்டையெனப் படுவதால் - சமயத்தில்
கடத்தப் படுவதால்
தரம் பல உள்ளதால்
அனுமதியில்லாமல் 'வைத்திருப்பது'
சட்டப்படி குற்றம் என்பதால்
உரசினால் மட்டுமே பலன் பெற முடியும் என்பதால்
உயர் சந்தனமும் பெண்ணும் ஒப்பென்றுணர்!

* * * * *

2.
கூட்ட நெரிசல்; குழைவாய் நெருங்கியே
பாட்டத்தைத் தேய்த்திடும் பாவியே! -நாட்டமுடன்
அஞ்சா துரசும் அசுரனே! உன்னுடைய
சுஞ்சாவை வெட்ட அவா!

* * * * *



பொதுக் கழிவறைகளில் எழுதப்படும் அசிங்கமான வார்த்தைகளுக்கு மாற்றாக (!?!)
அங்கே வரும் வாடிக்கையாளர்களின் எழுத்துத்திறனை 'வெளி'க் கொணர :-) இது
போன்ற நகைச்சுவையுடன் கூடிய, பின்வரும் 'கக்கூஸ் கவிதைகள்' எழுத நினைத்து
முடியாமல் போனதுண்டு. இன்று இதனைப் பொது'வெளி'யில் எழுத‌ தைரியம் தந்தது
திரு மாதவராஜ் அவர்களின் இந்தப் பதிவு , நன்றி மாதவ் ஜீ.


" இங்கே கழுவப் படும் சப்தம் வெளியில் காத்திருப்போருக்கு இன்பம் "

* * * * *

"அசுத்தமாய் மிதப்பது கண்டு அங்கலாய்க்க வேண்டாம்
என்னை விட்டுச் சென்ற எதுவொன்றைப் பற்றியும்
என்னிடத்தில் அக்கறை இல்லை "

* * * * *

(எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக)
----------------------------

வரையின்றி உறையின்றி செய்யப்படும்
எச்சில்/எச்சிலை உறவால்தான் வருது
எய்ட்ஸ் என்னும் எமலோகப் பி(ரா)ணி


* * * * *



இப்போது என்னுடைய கேள்வி 'எந்த மாதிரி கவிதைக்கு ஆயுள் அதிகம்'.

நகுலன்/மனுஷ்ய புத்திரன் போல் அதிர்வு ஏற்படுத்தும் சமூக நல கவிதைகளா அல்லது கட்டுடைக்கப்பட்ட, பின்னவீன‌த்துவக் கவிதைகளா அல்லது மேலே குறிப்பிடப்பட்ட‌து
போன்ற‌ நகைச்சுவைக் கவிதைகளா அல்லது பெரும்பாலான‌ பெண் கவிஞர்களின் 'குறி'
சொல்லும் கவிதைகளா அல்லது வேறேதுமா.

கவிதை பயிலும் மாணவனாய்க் கேட்கிறேன் வேறொன்றும் உள்குத்தில்லை பராபரமே :-)

நீங்க என்னதான் சொன்னாலும் கீழே உள்ளதை மட்டும் தவிர்க்கவே முடியாது.

(இன்று ஒரு PENN தட்டச்சிய கவிதையைப் படிக்க நேரிட்டதாலும் அதற்கு
மக்கள்ஸ் ஆஹோ ஓஹோ என்றதாலும் தோன்றிய தத்துவம்)

'பெண் பேசும் எம் மொழியும் அழகு பெண் எழுதும் எதுவும் கவிதை
பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்ணுக்கும் அழகென்றே பேர்
என்பார் அப்பெண் தன் மனைவியாய் இல்லாத‌ பட்சத்தில்'.

Wednesday, May 05, 2010

எவரெடி உலகம் ஏன் எதற்கு ?

ஆன்ம உலகில் அலைந்து திரிந்தேன்
அவனிட்ட கட்டளையால்
அவணி பக்கம் தலைகாட்ட‌
அதோ உடம்பென்னும் குதிரை ரெடி

ஆறு மாதம் காத்திருந்து
அடுத்தடுத்து முழுமை பெற‌
அன்னதானக் கொடியும் ரெடி

தாயிடமிருந்து குதித்ததுமே
தொப்புள் கொடி துண்டிப்பால்
வீறிட்ட சோகம் காய்வதற்குள்
தாய்ப்பால் ரெடி

தாய்ப்பாலும் மறுக்கப் பட்டு
தரையிலே கிடத்தப் பட்டால்
தட்டேந்தி சோறூட்ட‌
தாயாதிகள் ரெடி

எழுந்து நடக்கையிலே
தாமாகவே உண்டு உடுத்திப்
பழகியதன் பின்
த‌மக்குக் கீழ் உள்ளோருக்கும்
திரவியம் தேட திசைகள் ரெடி

அடித்துப் பிடித்து
ஆலாய்ப் பறந்து
அனுபவித்து முடித்து
அடுத்த கட்டம்
தாவுவதற்குள்
தாவு தீருவதற்குள்
சாவும் சங்கும் ரெடி

இதெல்லாம்
பரிணாம வளர்ச்சியா
இல்லை படைத்தவனின்
பரிவுக்கு சாட்சியா

சொல்லுங்களேன்

Monday, May 03, 2010

ஏ.ஆர். ரஹ்மானுடன் நானும் சில மணித்துளி மனப் போராட்டமும்

சூபிஸம் பற்றிய ஆர்வமும் நல்ல அபிப்ராயமும் என்னிடத்தில் உண்டு.
ஒருமுறை டெல்லி சென்றிருந்த சமயம் ஹஜரத் நிஜாமுத்தீன் தர்காவுக்குப்
பக்கத்தில் உள்ள பள்ளி வாச‌லில் அதிகாலைத் தொழுகையை
நிறைவேற்றிவிட்டு அமர்ந்திருந்தேன். அப்பொழுது சுமார் ஐந்தரை அடி உயர,
கழுத்தில் சுருள் கேசம் புரள ஒருவர் பள்ளிக்குள் நுழைவதைக் கண்டேன்.
எங்கேயோ பார்த்த ஞாபகம் என்றெண்ணி அருகில் சென்றேன்.

அங்கே அண்ணனை அழகியக் கண்ணனை ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டேன்.

லவ்லி பெர்சனாலிட்டி. 'நீங்க ரஹ்மான்தானே' என்றதற்கு
ஆச்சர்யத்தோடும் சிறிது புன்னகையோடும் ஆமோதித்தார்.
ஆச்சர்யத்திற்குக் காரணம் ஆஸ்காரில் அவரால் மொழியப்பட்ட தமிழ்.
ஆம் அந்த சூழ‌லில் நான் மட்டும்தான் 'தமிழன்'.


'நீங்க எப்படி இங்க, டெல்லியில் ?!' என்றேன்.

'வந்தே மாதரம் ஷூட்டிங் விஷயமா டெல்லி வந்தேன், அதோடு ஹஜரத்
நிஜாமுத்தீன் தர்கா வந்தேன்' என்ற பின் என்னைப் பற்றியும் கொஞ்சம்
விசாரித்து விட்டுத் தொழுவதற்காக பள்ளிக்குள் சென்று விட்டார்.

எனக்கோ சந்தோஷமும் ரஹ்மான் வந்த விஷயத்தை யாரிடம் சொல்வது
என்ற தவிப்பும், ஏனென்றால் அவரைப் பற்றித் தெரிந்தவர் அப்போது அங்கு
யாரும் இல்லை, ஒரிவருவரிடம் சொல்லியும் பார்த்தேன், ம்ஹூம்.

பள்ளியின் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டு அவர் தொழுவதை
ரசித்தேன். தொழுது விட்டு சிறிது நேரம் திக்ரு தியானத்தில் அமர்ந்திருந்தார்.
எனக்குள் ஒரு போராட்டம் துவங்கியது.


* * * * *


சிறு வயதிலிருந்தே இசை,சினிமா ஆசை தலை தூக்கி வந்திருக்கிறது.
மிக நன்றாகப் பாடுவதால் அவ்வப்போது பலரும் சொல்லியிருக்கிறார்கள்,
சினிமாவில் பாடச் சொல்லி. இது நல்ல சந்தர்ப்பம், இதோ ரஹ்மானே
முன்னால் இருக்கிறார். கோல்டன் சான்ஸ். மிஸ் பண்ணாதே. இந்த வாய்ப்பு
எப்போதும் கிட்டாது.‍‍ - இது ஒரு மனசு.


'வேணாம், விட்டுரு, இறை வழியில் ஈடுபட ஆசைப்பட்டு, மீண்டும்
உலக ஆசைகளில் சிக்கி வீணாப் போயிடாதே' என்று அறிவுறுத்தியது
இன்னொரு மனசு.


இரண்டுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருக்கும் போது ரஹ்மான் எழுவது
தெரிந்தது. எனக்குள் இறை மனசுவின் கை ஓங்கியதால் அவரை விட்டுத்
தூரம் செல்ல முடிவெடுத்து நகரும் போது கவனித்தேன்,

அவர் என்னைத் தேடுவதை...


* * * * *


என்னைத் தேடுவது தெரிந்தவுடன் அவரை நோக்கி கையசைத்தேன்.
என்னருகில் அவரே வந்து (எளிமை) 'வந்தே மாதரம்' விஷயமாக
நிறைய வேலைகள் இருப்பதால் அவசரமாகக் கிளம்புகிறேன் என்றவாறு
விடை பெற்று சென்று விட்டார். நான் புன்னகையுடன் விடை கொடுத்து
விட்டு அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேனே ஒழிய வாசல்
வரை சென்று வழியனுப்பி வைக்க மறந்து விட்டேனா அல்லது இறை
மனசு மறுத்து விட்டதா என்று தெரியவில்லை.

(இன்று வரை அந்த வருத்தம் இருக்கிறது).


அவரை ஒரு சகாவாக‌ எண்ணாமல் கலையாகக் கொண்டாடப்படும்
கலாச்சார சீர்கேட்டில் உழலும் ஒரு அன்னியனாக நினைத்து விலகியது
அன்றிருந்த என்னுடைய தவறான அணுகுமுறை.

உண்மையில் ரஹ்மான் ஈஸ் க்ரேட்.

இன்று வரை சினிமாத் துறையில் இருப்பவர்களில் தனது
மனிதம்/புனிதம்/கற்பு/ஒழுக்கம் இத்யாதிகள் கெடாது காத்துக்
கொண்டவர்களில் ரஹ்மான் ஒரு துருவ நட்சத்திரம்.

இசை பட வாழும் ரஹ்மானே " வாழிய நின் புகழும் கொற்றமும் ".

Sunday, May 02, 2010

நல்லா இருங்கப்பூ

வலையுலகம் பரிச்சயமான சமயம் முன்னணி வீரர்களாய்

களத்தில் ஆடிக்கொண்டிருந்தவர்களில் நான் ரசித்த பதிவர்கள்

பால பாரதி,லக்கி லுக்,ஆசிப் மீரான், ஓசை செல்லா,

செந்தழல் ரவி, 'முயல்' ரத்னேஷ் மற்றும் குசும்பன்.

இவர்களில் மதிப்பிற்குரிய ரத்னேஷ் அவர்கள் இப்போதெல்லாம்

எழுதுவ‌தில்லை போல் தெரிகிறது (சார் எங்கே/எப்படி இருக்கீங்க?).

செல்லா தான் ஒரு இணைய நாடோடி என்று 'ஓசை'

விட்டுச் சென்று விட்டார். எனக்குப் பிடித்த முக்கனிகளில்

(ஆசிப் மா, பாலா பலா, லக்கி வாழை) லக்கி மட்டும்

அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார். மற்றிருவரும் எப்போதாவதுதான்

'தல' காட்டுகிறார்கள். மற்றபடி ரவியும் குசும்பனும் வழக்கம் போல

சூடான இடுகைகளில் (அ) சூடான ஓட்டுக்களில்.

இதுவரை பாடியது 'பழைய புராணம்'. இன்றோ அடேங்கப்பா,

எத்தனையெத்தனை திறன் மிகு பதிவுகள்/பதிவர்கள்.

அனைவரையும் ரசிக்கத்தான் நேரமில்லை.

'கடை மாறி கடல் ஆனது போல்

மடை திறந்த‌ மலையுச்சி வெள்ளம் போல்

வலையெல்லாம் பதிவுகள் மயம்'.

மதம் பிடிப்பதேன் மார்க்க பந்துக்கு

சிக்னல்கள் மூன்று
செய் செய்யாதே மற்றும்
இடைப்பட்ட பாதகமில்லா
வாழ்வின் விருப்பங்கள்

அரசு எதுவாயினும்
அரசாங்கம் அவசியமே
அன்றே கொல்ல அன்று
ஒழுங்கு காக்கப்பட வேணுமே என்று

நிறக்குருடும்
பிடித்த கலர்க் கண்ணாடி
வழி பார்வையும்தாம்
மனிதம் போற்றும் மார்க்கத்தையும்
மதம் பிடிக்க வைத்தன

யானைக்கு மதம் பிடித்தாலும்
யானையே வேண்டாமென்பதில்லை

மதத்தை வெறுப்போம் - அரச‌
ஆணையை வரவேற்போமே