Tuesday, October 23, 2007

பூதம் எனது நண்பன்

'பூதம் எனது நண்பன்' என்கிற ஒரு படம்,
சிறு வயதில் பார்த்த ஞாபகம்.நாயகன்/நாயகி
தெரியவில்லை. கதாநாயகன் விளையாட்டுப்
போட்டிகளில் முதலாவதாக வருவதற்கு பூதம்
உதவி செய்யும் ஒரு சில காட்சிகள் ஞாபகத்தில்
இருக்கின்றன.சினிமாவிலும் சரி கதைகளிலும் சரி
இப்படிப்பட்ட பூதங்கள் கண்ணாடி பாட்டில்களில்
அடைக்கப் பட்டிருக்கும். மனிதனோ விலங்கோ
தவறுதலாய் திறக்கப் போய் அவை வெளியே வந்து
நன்மை அல்லது தீமை செய்வதாகக் காட்டுவார்கள்.

தமிழில், நன்மை செய்பவைகளை 'பூதம்' என்றும்
அட்டூழியம் புரிபவைகளை 'பேய்,பிசாசு' என்றும்
அழைக்கிறோம். இவற்றை பற்றி இஸ்லாத்தில் 'ஜின்'
என்று குறிப்பிடப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் நன்மை
செய்பவைகளை 'நல்ல ஜின்' என்றும் தீமை
செய்பவைகளை 'கெட்ட ஜின்' என்றும் அழைக்கிறோம்.

எப்படி மனிதர்கள் மண் அல்லது SILICA வினால்
ஆனவர்களோ அது போல் இந்த ஜின் இனத்தவர்
நெருப்பு மற்றும் புகையினால் ஆனவர்கள்.
('என்ஜின்' என்ற வார்த்தை இதனால்தான்
உருவானதோ என்னவோ ?) :-)

இவைகளின் தோற்றம் பயங்கரமாக இருக்கும்.
நினைத்த தோற்றத்தில் மாறும் திறமை அல்லது
தன்மை இவைகளுக்கு உண்டு. இவற்றை அடக்கி
வேலை வாங்கும் திறமை மனிதர்களில் வெகு
சிலரிடம் உண்டு. சாத்தான் அல்லது ஷைத்தான்
இந்த இனத்தைச் சார்ந்தவன்தான்.

இந்தப் பதிவு எழுதும் எண்ணம் ஏன் ஏற்பட்டதென்றால்,
சில நாட்களுக்கு முன் சாத்தான் சம்பந்தமாக
ஓசை செல்லா கருத்து கேட்க சுப்பையா வாத்தியார்

'சாத்தான்' என்பதெல்லாம் கிடையாது என்று
சொல்லியிருந்தார். 'சாத்தானை' அடக்க இறைவனால்
முடியாதா ? என்ற கேள்விக்கான பதிலென்று நினைக்கிறேன்.

அப்படியல்ல, ஒவ்வொரு டைரக்டரும் தமது படத்தில்
'வில்லன்' கேரக்டரை வைத்திருப்பார்கள். அதுபோல்
சாத்தானுக்கு சந்தர்ப்பம் கொடுத்த இறைவன் கையில்
சாட்டையையும் வைத்திருக்கிறான்.
சமயம் வரும் போது சகலத்திற்கும் பதில் கிடைக்கும்.

இன்பம்/துன்பம், இறப்பு/பிறப்பு, இரவு/பகல்,
சுவர்க்கம்/நரகம் என எல்லாவற்றையும் இரட்டையாகப்
படைத்த இறைவன் நல்ல சக்தி / தீய சக்தியைப்
படைத்து தனது கற்பனைப் படி நடாத்துகிறான்.

கதா பாத்திரங்களை நம்பி ஏமாந்து போகாமல்
டைரக்டரான இறைவனின் திறமைகளை உணர்ந்து,
அவனைப் புகழ்ந்து, அவனது எண்ணத்தைப் புரிந்து
வாழ்பவர்களுக்கே 'சுவனம்' என்னும் 'விருது'.

அவனை நம்புபவர்களும் சரி நம்பாதவர்களும் சரி,
CLIMAX வரை பொறுத்துக் கொள்ளவும்.

Sunday, October 21, 2007

ஒற்றுமை தேடி

மனிதனைப் பிரிப்பது எது

1. இடம் (நாடு/மாநிலம்/ஊர்/வீடு)
2. இனம் (நிறம்/மதம்/சாதி)
3. மொழி
4. அறிவு (கொள்கை)
5. அந்தஸ்து (பணம்/பட்டம்/பதவி)

(இன்னும் வேறேதும் இருந்தால் பின்னூட்டமிடலாம்).

இவற்றில் சில தவிர்க்க முடியாதவை

உதாரணமாக இடம்,நிறம் போன்ற பிறப்பால் ஏற்பட்டவை.
இதில் நமது திறமை இல்லை. இதில் பெருமை காண்பவன்
முட்டாள் எனும் போது 'வெறி' கொள்பவனை என்ன சொல்வது.

மற்றவை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாம். ஆனால்
படித்தவர்கள் கூட பிடிவாதம் பிடிக்கிறார்களே என்ன செய்வது.

இவையன்றி மனிதனை இணைக்கக் கூடிய பாசமும் நேசமும் கூட
அவன் தனித்தனி குழுவாகப் பிரியக் காரணமாகின்றன.

அப்போ ஒற்றுமை ஏற்பட என்னதான் வழி ?

Monday, October 15, 2007

தனித்திரு விழித்திரு பசித்திரு


இதைப் படிக்கும் போது இதனைச் சொன்ன
மகான்களின் பெயர் ஞாபகம் வருவதற்குப்
பதிலாக இதனை வலைப்பூ தலைப்பில் கொண்ட
பதிவரின் ஞாபகம் தான் வருகிறது !
(என்ன தவம் செய்தனையோ ?)

நம் உடலையும் மனத்தையும் பக்குவப்படுத்துவதற்கு
இம் மூன்றும் அவசியம். இறைவன் முஸ்லிம்களுக்கு
மிகக் கிருபை செய்திருக்கிறான் ரமலான் என்னும்
மாதத்தைத் தந்து.

இம்மாதத்தில் முஸ்லிம்களுக்கு இம்மூன்றின் பயிற்சி
கிடைக்கிறது. அது மட்டுமல்ல பொறுமை,இறையச்சம்,
பசியுணர்தல்,ஏழ்மை நிலை உணர்தல் இன்ன பிற
பண்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

If you lost your money : nothing is lost
If you lost your health : something is lost
If you lost your characteristic : everything is lost

என்று சொல்லப்படுவதுண்டு. ஆக ஒவ்வொருவருக்கும்
பணம் காசை விட கேரக்டர்தான் முக்கியம்.
பணம் சம்பாதிக்க படாத பாடுபடும் நாம் என்றாவது
பண்பு' பெற பாடு பட்டதுண்டா ?


நோன்பு வைத்திருக்கும் ஒருவர் தனித்து இருக்கிறார்.
நோன்பு திறப்பதற்கான உணவு பதார்த்தங்கள்
தயாரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
பசிக்கவும் செய்கிறது. ஆனால் சாப்பிடுவதில்லை.
யாரும்தான் பார்க்க வில்லையே சிறிது சாப்பிட்டால்
என்னவாகி விடும் என்று கூட யோசிப்பதில்லை
காரணம் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற
உணர்வுதான் அவரை அப்படி கட்டிப் போட்டிருக்கிறது.

இதற்குத்தான் 'இறையச்சம்' என்பார்கள். இந்த
இறையச்சம் ஒருவருக்கு வாய்த்து விட்டால் அவர்
எல்லாப் பாவங்களையும் விட்டுத் தப்பித்து விடுவார்.

நோன்பு வைத்தவருக்கு இரண்டு சந்தோஷங்கள்
என்பதாக இஸ்லாம் கூறுகிறது.ஒன்று நோன்பு திறக்கும்
போது மற்றொன்று இறைவனைச் சந்திக்கும் போது.

நோன்பு பிடிக்காமல் நோன்பு திறப்பவர்களோடு சேர்ந்து
உண்டு பாருங்கள் அவ்வளவு சந்தோஷம் கிடைக்காது
(அது குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிக்கும் அரசியல்
வியாதிகளுக்கு ஓட்டு வேண்டுமென்றால் கிடைக்கலாம்
ஆனால் நோன்பு திறக்கும் சந்தோஷம் மட்டும் கிடைக்காது)

நோன்பு திறக்கும் போது சந்தோஷம் உண்மையில்
நோன்பு பிடித்தவர்களுக்கே

அனைத்து சகோதர நோன்பாளிகளுக்கும் எனது
நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Wednesday, October 03, 2007

சலிப்பு

கழிவறைக்குள் செல்லும் வரை
கவலையில்லை - அதென்னவோ
சென்றவுடன் கால் சட்டை
கழற்றக் கூட அவகாசமில்லை.

கைகளில் மிளகாய்த் தூள்
கழுவுவதற்குக் கொஞ்ச தூரம்
செல்லணும் - அதென்னவோ
கண் நமைச்சல் வந்து சேருது

கை எட்டும் தூரத்தில் இல்லை
முதுகின் நடுப்பகுதி -
அதென்னவோ அங்குதான்
அரிப்பாய் அரிக்கிறது

கால் கடுக்க நின்று கடுப்பாகி
அடுத்த வரிசைக்குச் சென்றால்
அதென்னவோ அப்போது பார்த்து நாம்
முன் நின்ற கியூ வேகமாக் முன்னேறுது

அவசரமாய் போன் செய்ய
அடுத்தடுத்து எங்கேஜ் டோன்
அதென்னவோ ஆத்திரத்தில்
டயல் செய்த ராங் நம்பர் மட்டும்
அடிச்ச வுடனேயே கெடச்சுடுது

தாய் எனும் தனிப்பிறவி

தாய் எனும் கதா பாத்திரத்தால்தான்
பெண்மைக்கு விருது கிடைக்கிறது.

அண்ணன் தம்பி அக்கா தங்கை ஆகிய
அனைத்து உறவுகளுக்கும் தாய்தான் மையக்கரு

தாயே !
பல் வலியிலிருந்து பல வலிகளையும்
'படிக்குற புள்ள' எனக்குத் தெரிந்தால்
படிப்பு போகுமுன்னு பொத்தி வைத்'தாய்'

உந்தன் அருமை எனக்குத் தாரம்
வந்த பின் தான் தெரிந்தது
ஒவ்வொரு சிறு வலிக்கும் அவள் என்னைப்
'படுத்திய பாட்டை'ப் பார்த்து

பெற்ற பிள்ளைகளுக்காக நீ பட்ட
பேறு கால அவஸ்தைகள் ஒன்று கூட
எனக்கு ஞாபகமில்லை - தாயே
உந்தன் அருமை எனக்கும் பிள்ளைகள்
பிறந்த பின் தான் தெரிந்தது - ஒவ்வொரு
மாதமும் என் மனைவி 'பட்ட பாட்டை'ப் பார்த்து.

தாயே நீ ஒரு தனிப்பிறவி

ஒன்றே போதும் நன்றாய் வாழ.

இரை தேடுதலின் ஓட்டத்தில்
இறைவனை மறந்து விட்டோம்
நரை முடி கண்ட பின்னும் - அந்த
நாயனின் ஞாபகம் வருவதில்லையே


எரியும் இரண்டு நெருப்பையும் (Hydrogen)
எரிவதைத் தூண்டும் ஒரு காற்றையும் ( Oxygen)
இணைத்துப் படைத்தான் இறைவன்
எரிவதை அணைக்கும் தண்ணீராக (H2O)


தூண்கள் இல்லா வானம் அமைத்து
தூசிகளோ பாசிகளோ படராமல் காத்து
அடித்த பெயிண்டும் அப்படியே இருக்க
அண்ட சராசரங்கள் அனைத்தும் - அடடா
அவனது கைவண்ணமே


புள்ளிக்குள் செல்களை
செல்லுக்குள் உயிர்களை
புகுத்தியிருக்கும் விந்தையை
புத்தியுள்ள யாரும்
எண்ணிப் பாராமல் இருக்க முடியாது


தனிமங்களுக்கு தனித் தனியே
நம்பர் கொடுத்தது நாம்தான் - ஆனால்
புரோட்டான்களும் எலெக்ட்ரான்களும்
யார் சொல்லி அவற்றினுள்
சண்டையிடாமல் தங்கியுள்ளன


அரசன் முதல் ஆண்டி வரை
அனைவருமே அடிமைகள் தான்.
ஆண்டவனுக்கு அடிமைப்பட
ஆசைப்படு - இல்லையென்றால்
ஆளாளுக்கு அடிமைப் படுத்தி விடுவார்கள்.


ஒன்றே போதும் நன்றாய் வாழ.

தோற்றுவாய்



அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ் !

எல்லா உலகும் ஏகமாய் ஆளும்
வல்லோன் தனக்கே வான் புகழ் அல்லாஹ் !

அடியார்க்கு அருளும் அன்பாளன் நீயே
முடிவான நாளின் முதலோனே அல்லாஹ் !

உன்னையே நாங்கள் உவந்தேத்துகின்றோம்
உன்னிடத்தன்றோ உதவியும் அல்லாஹ் !

நன்னெறி மீதே நடத்துவாய் எம்மை
நின்னருள் நேயர் நெறியினில் அல்லாஹ் !

நின் கோபம் கண்டோர் நெறி விட்டகன்றோர்
செல் நெறி தன்னில் செலுத்தாதே அல்லாஹ் !

- ஆமீன்